கணக்கு! சிறுகதை

கணக்கு!

காலை பத்துமணி வாக்கில் அந்த சிமெண்ட் கடையில் அத்தனை கூட்டமிருக்கும் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை! கடை நண்பருடையதுதான். பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் சிறு கடையாக துவக்கி இரண்டே வருடத்தில்  கொஞ்சம் பெரிய கடையாக உயர்த்தி இருக்கிறார். நாலைந்து நபர்கள் கூட்டி பெருக்க ஓர் பெண்மணி என்று கடையில் பணியில் இருந்தார்கள்.

    நகரில் மட்டுமல்ல கிராமங்களில் கூட எழும்பும் அடுக்குமாடி வீடுகளின் அதிகரிப்பால் அவருக்கு நல்ல வருமானம்தான். “ என்ன ஜகதீசா! காலையிலேயே பிஸியா இருக்க போலிருக்கே! நான் போயிட்டு அப்புறமா வரட்டுமா?” என்றேன்.

   அதெல்லாம் ஒண்ணுமில்லை “ ராமநாதா! இதோ வியாபாரம் முடிஞ்சதும். காலை வேளையிலே கட்டுமான பணிக்கு வருவாங்க இல்லை! அதனால கொஞ்சம் சூடுபிடிச்சிருக்கும் இன்னும் ஒரு அரைமணி நேரம் அப்புறம் சும்மாத்தான் இருப்பேன்!”

      அங்கிருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்தேன். சிமெண்ட் மூட்டைகளை குட்டியானை எனப்படும் வண்டிகளில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள் பணியாளர்கள். ஜகதீசன் கணக்கு வழக்குகளில் கில்லாடி! கடன் கொடுத்தாலும் அதை திரும்ப பெறுவதில் ஓர் கண்டிப்பு இருக்கும். விற்கும் பொருளும் தரமானது. பணியாளர்களுக்கும் நல்ல சம்பளம் தந்து இருந்ததால் விசுவாசமாக உழைத்தனர்.

     நாமும் ஓய்வு பெற்று வெட்டியாக பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறோம்!  கொஞ்சமாவது யோசித்து எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. கடையில் கூட்டம் குறைந்தது. லாரிகளில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை இறக்கிய லோட் மேன் ஒருவர் வந்து  “முதலாளி…!  மூட்டையெல்லாம் இறக்கியாச்சு!  கூலி கொடுத்தீங்கன்னா…!”

       “ஏம்பா! நீதான் ஏற்கனவே நிறைய முன்பணம் வாங்கிட்டிருக்கியே! இப்ப ஒண்ணும் இல்லே ..!”

      ” தீபாளி வருது முதலாளி! முன்பணம் கொடுத்ததை அப்புறம் பிடிச்சுக்குங்க! இப்ப கொடுத்துருங்க..! “

      ” எனக்கு மட்டும் தீவாளி இல்லையா? இப்படியே எல்லோருக்கும் கொடுத்துட்டு இருந்தா நான் கடையை இழுத்து மூடிட்டு போவ வேண்டியதுதான். வேணும்னா ஒரு ஐம்பது ரூபா வாங்கிட்டு இடத்தை காலி பண்ணு…!”

       “அவன் சரிங்க முதலாளி.. அப்புறம் உங்க இஷ்டம்” என்றான் தலையை சொரிந்துகொண்டு..   “சரிசரி! இந்தா நூறு… ஏற்கனவே ஆயிரம் வாங்கி இருக்கே.. ஞாபகம் இருக்கா…”

      “இருக்கு முதலாளி! ”அவன் கிளம்பினான்.

     கொஞ்ச நேரம் கழித்து  கடையை கூட்டி பெருக்கும் அஞ்சலை வந்து நின்றாள்.  “ஐயா…! தீபாவளி பண்டிகை! பசங்களுக்கு துணி மணி எடுக்கணும்.. ஸ்கூல் பீஸ் வேற கட்டணும் முன்பணமா ஏதாவது கொடுத்தா நல்லா இருக்கும் “ என்றாள்.

      “சரி முழு சம்பளத்தையும் அட்வான்ஸா கொடுத்திடறேன்! உன் பசங்களுக்கு துணி மணி எடுத்துக்க தனியா ஓர் ஆயிரம் கொடுத்திடறேன் போதுமா?”

      “ நீங்க நல்லா இருப்பீங்க முதலாளி!” அந்த பெண் கை கூப்பினாள்.

 அவள் சென்றதும் கேட்டேன்.  “ஏண்டா ஜகதீசா! கொஞ்ச நேரம் முன்னாடி அந்த லோடு மேனுக்கு ஆயிரம் கணக்கு பார்த்தே… இந்த வேலைக்கார பெண்ணுக்கு உடனே தூக்கிக் கொடுக்கிறே? “

    “இதுல ஒரு கணக்கு இருக்குடா? உனக்கு புரியாது…!”

   “பொண்ணுன்றதாலே இளகிப் போயிருச்சா…!” குதர்க்கமாய் கேட்டேன்.

   “ச்சீச்சீ! வாயை கழுவுடா! அந்த லோடுமேன் மொடாக் குடியன்! தீபாவளிக்குன்னு கேட்டு பணத்தை முழுசும் வாங்கி குடிச்சுருவான்! வீட்டுக்கு பைசா தரமாட்டான். அதனால பணத்தை முழுசா தரலை! மொத்தமா தராவிட்டா சத்தம் போடுவான் வேற கடைக்கு போவான். அதனால அவன் குடிக்கிறதுக்கு மட்டும் பணம் கொடுத்தேன். மீதி பணம் அவன் வீட்டுக்கு போயிரும்.”

   ”இந்த பொண்ணு அப்படி இல்லே! முழு சம்பளம் வாங்கிட்டா இன்னும் கவனமா வேலை செய்வா? தான் படிக்காவிட்டாலும் தன் பிள்ளையை படிக்க வைக்கிறா? அதுக்கு ஏதோ என்னால முடிஞ்ச உதவி! பணம் வாங்கிட்டோமேன்னு நிக்காம வேலைக்கு வருவா ஏமாத்தமாட்டா? இங்க பணம் குடும்பத்துக்கு போவுது! அதனாலே கொடுக்கிறேன்! அங்க குடிக்கு போவுது! அதனால தடுக்கறேன்! அவ்வளவுதான்! ”

   அவரது தெளிவான பதிலில் பிரமித்து நின்றேன் நான்.

(தங்க மங்கை மாத இதழில் பிரசுரமான கதை)

சாபம்!       ஒருபக்க கதை          

சாபம்!       ஒருபக்க கதை                     நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

கணவனை இழந்த விமலா, இருக்கும்  ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டை, கத்தரி, தக்காளி என்று கொஞ்சம் கொஞ்சம் பயிரிட்டு இருந்தாள்.

        வெயிலில் செடிகள் வாடும்போது, பக்கத்துக் கழனிக்காரரிடம் கெஞ்சி, வாரம் இரண்டு நாள் நீர் பாய்ச்சினாள். இயற்கை உரங்களையே போட்டாள்.

           ‘காயெல்லாம் தளதளன்னு பசுமையாத்தான் இருக்கு… ஆனாலும் நல்ல விலைக்குப் போகலையே?’ – விமலா வருத்தப்பட்டாள்.  

           “ஏம்மா!காய்கறியெல்லாம் அருமையா இருக்கே! என் கடைக்கு மொத்தமா கொடுத்திடறியா?” – 

பக்கத்து ஊர் சூப்பர் மார்க்கெட் முதலாளியின் கேள்வியால் விமலாவுக்கு ஒரே மகிழ்ச்சி.  ‘இனி தெருத்தெருவா  சுத்த வேணாம். ஒரே இடத்தில் மொத்தமா வித்துடலாம்’ –  

“சரிங்க ஐயா! “ என்று ஒப்புக்கொண்டாள். 

           “நம்ம வேனை அனுப்பி வைக்கறேன்! ஏத்தி விட்டுடு. கடைக்கு வந்து பணத்தை வாங்கிக்க “ என்றபடி முதலாளி சென்றுவிட்டார்.

            மாலையில் அந்த சூப்பர் மார்க்கெட் போய்ப்  பார்த்த விமலாவுக்குப் பகீரென்றது. 

          “அண்ணே! தண்ணி தெளிச்சு வைச்சாலும் எப்படியும் வாடி  வதங்கிடும்! இங்கே எப்படிண்ணே எல்லா காயும் புத்தம் புதுசா இருக்கு?”

              “மருந்து தெளிச்சு,  பாலிஷ் போட்டு, பாலித்தீன் கவர்ல வைச்சிருக்கோமே! ஒரு வாரம் ஆனாலும் வதங்காது!”

            “ஐயோ! சாப்பிடறவங்களுக்குப்  பாதிப்பு வராதா?”

              “வரத்தான் செய்யும்! அதைப்பத்தி  நமக்கென்ன? நாளையிலிருந்து  வேன் வரதுக்குள்ளே சீக்கிரமா காயெல்லாம் பறிச்சு வைச்சிடும்மா”

          “இல்லேண்ணே! நான் என் புள்ளைங்க மாதிரி பாத்துப் பாத்து வளர்த்த காய்கறிங்க! இப்படி மருந்து தெளிச்சு, சாப்பிடறவங்க  வயெறெரிஞ்சு சாபம் விடலாமா? மொத்தமா விற்கலைன்னாலும்  பரவாயில்ல… நாளையிலிருந்து வேன் அனுப்பாதீங்க! “

              லாபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சாபத்தைப் பற்றி கவலைப்படும் விமலாவை வியப்புடன் பார்த்தார், கடைச் சிப்பந்தி.         

      ———————————

காயத்ரி

ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி

காயத்ரி

————-

“சுக்லாம்பரதரம் …..சொல்லுங்கோ..”

என்று அந்த காவேரி ஆற்றங்கரையில் ஆவணி அவிட்டத்திற்கு வந்திருப்பவர்களைப் பார்த்து, இயந்திர கதியில் சொல்லிக் கொண்டிருந்தான், நாராயணன்…

பிடிப்பில்லாமல்..மனத்தில் லயிப்பில்லாமல் அவன் சொன்ன வார்த்தைகளை மந்திரங்களாக நினைத்து, பின்னால் பயபக்தியுடன் சொல்லிக் கொண்டு இருந்தது, அந்த கூட்டம்.

காரணம் இல்லாமல் இல்லை..உணர்ச்சி வசப் பட்டுக் கொண்டு, கண்களில் நீர் கசிந்துருகி..பதம் பிரித்து..அர்த்தத்துடன் ஒவ்வொரு வேத மந்த்ர உச்சாடனையையும் ஸ்பஷ்டமாக..உற்சாகத்துடன், சொல்லிக் கொண்டிருந்த நாணா இன்று இல்லை..

செத்துப் போயிட்டான்..இவன் வேறு யாரோ..வெளி நாட்டில் சொல்வாளே..ரூபாவா..ரோபோவா..ஏதோ ஒண்ணு அதைப் போல எந்திர மனுஷன் தான் இதோ இங்க நின்னுண்டு சொல்லிண்டு இருக்கானே இவன்.

வாய் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், கண்கள் வந்திருந்த தலைகளை எண்ணிக் கொண்டிருந்தது…மனசோ…தலைக்கு முக்கால் ரூபாய் என்று கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தது!

யாருக்காக சேர்க்கப் போகிறான், நாணா? உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு, இந்த உலகில் ஒட்டிக் கொண்டிருப்பது அவனுடைய அம்மா தான்..

அம்மாவிற்கு அவன் மேல் அபிரிமிதமான பாசம்…ஆஸ்த்மாவிற்கு அவள் மேல் பாசம்..குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என்கிறது..

மனசுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறானே..தட்சணை..அது அம்மாவை சந்தோஷப் படுத்தாது..இவன் வாய் கொள்ளாம கூப்பிடறதே போறும்..அதுவே ஆனந்தம் அந்த ஜீவனுக்கு!

….இதோ இங்க நிக்கறாளே..இவாளைப் போல கார்த்தால பத்து மணிக்கு ஆஃபீசிற்குப் போய் ..அரட்டை அடிச்சுட்டு..சாயங்காலம் ..புதுசாய் குளிச்சவன் போல ’பளிச்’னு ஆத்துக்கு ஓடோடி வராளே..அது மாதிரி இல்லையேன்னு தான் ஏக்கமா இருக்கும்..அதுக்கென்ன பண்றது? வைதீகன் தர்ப்பக் கட்டையை தூக்கிண்டு தான் போகணும்..டை கட்டிண்டு, ஆஃபீசுக்குப் போக முடியுமா?

குடுமியோடு, டையை கற்பனை செய்து பார்த்தான்..கவிந்து கொண்டிருந்த துக்கத்திலும்..மின்னல் கீற்றாக சிரிப்பு மலர்ந்தது, மனதிற்குள்…

‘சூர்யஸ்ய….மாமன்ஸ்ய ..’ மனம் சூரியனை நினைக்க வில்லை..சந்திராவை நினைத்துக் கொண்டிருந்தது!

அவனைப் போலத் தான் அவளும்! ஆனா, ஒரு வித்யாசம்..அவ அம்மா நாலு ஆத்துக்கு உபகாரம் பண்ணக் கிளம்பிடுவா..ஏதாவது விசேஷம்னா,

அங்க கனகத்து மாமியோட சமையல் தான் மணக்கும்!

கனகத்து மாமி, தம் பொண்ணு சந்திராவையும் ஒத்தாசைக்குக் கூட்டிண்டு போவா..அந்த காலத்தில..கல்லிடைக் குறிச்சி மாதிரி வட்டமா, பெரிய ஆத்துக் கூடத்தில எல்லாரும் ஊர் வம்பு பேசிண்டும்…அப்பளாத்துக்கு வட்டு இட்டுண்டும் இருக்கும் போது தான் ஒரு நாள் நாணாவின் கவனத்தைக் கவர்ந்தாள் சந்திரா.

தாழ்வாரத்தில..வெயில் வந்தா மணி பன்னிரெண்டு என்று தெரியும்..தெரிஞ்சுண்டும், வாசல் வழியாப் போற நாணாவை சந்திரா எதுக்குக் கூப்பிடணும்?

’இந்தாங்கோ… நாணு சாஸ்திரிகள் வாள்! மணி என்ன ஆறது..சித்த சொல்லுங்கோ?’

கண்களில் குறும்பு மின்ன அவள் அன்று கேட்டதை நினைத்துக் கொள்கிறான், நாணா..

அவனை யாரும் நாணு சாஸ்திரிகள் என்று கூப்பிட மாட்டா..அதுக்காக ‘டேய் நாணுன்னும் கூப்பிடறது கிடையாது..கும்ப கோணம் ராஜா வேத பாடசாலையில படிச்ச பையன்கிற மரியாதை அவனிடம் ஒட்டிண்டு இருக்கும்!

’ விசாலாட்சி அம்பா சமேத விஸ்வ நாத ஸ்வாமி சன்னிதெள…

அகிலாண்டேஸ்வரி அம்பா சமேத ஜம்புகேஸ்வர ஸ்வாமி சன்னிதெள..

சுகுந்த குந்தளாம்பா அம்பா சமேத மாத்ருபூதேஸ்வர ஸ்வாமி சன்னிதெள..’

‘…..சமையல் காரா ஆத்திலே பொறந்ததே ஈரேழு ஜன்மத்துக்கும் போறும்..

தர்ப்பைப் பிடிக்கிற வாத்யாருக்குவேற நான் வாக்கப் படணுமா நான்? நன்னா கதை சொன்னே போ!..எனக்கு வரப் போற ஆம்ப்டையான் சின்ன வேலையில இருந்தாலும் டெய்லி ஆஃபீஸ் போயிண்டு வந்துண்டு இருக்கணும் அதான் என் ஆசை!”

’மளுக்’கென்று நாணாவின் மூன்று மாத ஆசையை, முருங்கைக் காயை ஒடிக்கிறார்போல ஒடித்துப் போட்டு விட்டு ’ஸ்டைலா’க நடந்து சென்று விட்டாள் அந்த சந்திரா!

‘அதான் என் ஆசை..அதான் என் ஆசை..’ சினிமால சொல்றாப்பல ஏதோ ஒண்ணு, மனசுல படீர்..படீர்னு வந்து அடிச்சது நாணாவுக்கு..வாயில ‘அதான்

என் ஆசை’ன்னு அவனை மீறி வரப் பார்க்கவே, சட்னு ‘ஆனந்த வல்லி அம்பா சமேத நாக நாத ஸ்வாமி சன்னிதெள’ன்னு ஒரு வழியா சமாளிச்சுண்டுட்டான்..

தேவதைகளுக்கு அர்க்யம் விட்டுக் கொண்டிருந்தார்கள், எல்லாரும்..

முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு!

நாணா கரையில் நின்று கொண்டு மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தான்..

‘…ச்சே..என்ன பொழைப்பு இது..ஒவ்வொருத்தன் எவ்வளவு அமெரிக்கையா இருக்கான்..இந்த காலத்திலும், நாம காயத்ரியை கட்டிண்டு

மாரடிக்கணும்னு தலையில எழுதியிருக்கே..என்ன பண்றது?…’

இதான் கடைசீ ஆவணி அவிட்டம்..தலையை ‘க்ராப்’ வைச்சுண்டு இன்னும் பத்து நாள்ள பட்டணத்தைப் பார்க்க ஓடிப் போக வேண்டியது தான்

வாசு ஏதோ ஆட்டோ ஓட்டறானாம்..ஏதாவது ஒரு ஒர்க்‌ஷாப்ல க்ளீனர் வேலையாவது வாங்கித் தர மாட்டானா…! அப்புறமா கொஞ்சம் காசு சேர்த்துண்டு இப்ப என்னடி சொல்றேன்னு சந்திராவைப் பார்த்து நாலு கேள்வி கேட்கணும்..

“சொல்லுங்கோ..ஓம் பூர்ப்புவஸ்ஸரஹா..தத்ஸ விதுர்வரேண்யம்…….”

அவன் சொல்லிக் கொண்டே போக, எல்லாரும் கோரஸாகச் சொன்னார்கள்.

நாராயணன் ஸ்ரத்தையா மந்திரம் சொல்லிண்டு இருக்கான்… நாம பண்ணி வைக்கிற கடைசி ஆவணி அவிட்டம் என்று கூட இருக்கலாம்!

நாணா என்ன நாணா..பட்டணம் போனதுக்கப்புறம் க்ராப்..மீசை எல்லாம்

வைச்சுண்டு நம்பளைப் பார்த்தாலே’டிப்டாப்’பாக இருக்கணும்…எல்லாரும்

மிஸ்டர் நாராயணன் சார் இருக்காரான்னு கூப்பிடணும்….கலர்,கலரா சட்டைப்

போட்டுக்கணும்..பேண்ட் போட்டுக்கணும்……

எல்லாரும் ஒருவரை ஒருவர் நமஸ்காரம் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்..புதுசா யாரோ ஒருத்தர் நாணா பக்கம் வந்தார்..அவருடன் கூட

கோடி ஆத்து சீனு!

” …. நாணா, இவர் நம்மூருக்கு புதுசா வந்திருக்கார்..டெல்லியில பெரிய புரஃபஸராயிருந்து ரிடையர்ட் ஆனாராம்..உன்னோட பேசணும்னு ஆசைப் படறார்..” என்றான் சீனு..

” நமஸ்காரம்”

“ நமஸ்காரம்”

கை கூப்பியவர் அப்படியே அவன் கையை வாத்ஸல்யமாகப் பிடித்துக் கொண்டார்.

“இந்த இருபது வயசுல அதுஅதுகள் ’ஸ்டெப்’ வைச்சுண்டு..சிகரெட் குடிச்சுண்டு அலையறதுகள்..பழசை மறக்காம உங்களைப் போல சில பேர் இப்படி இருக்கறதுனால தான் நாட்டில மழை கொஞ்சமாவது பெய்யறது….

சும்மா சொல்லக் கூடாது..மந்திரங்கள் எல்லாம் ஸ்வர சுத்தமா நன்னா

சொல்றேள்.. நானும் டில்லியில பார்த்திருக்கேனே..என் பர்ஸ் மேல தான் நாட்டம் எல்லார்க்கும்…ஒண்ணும் தெரியாது..ஆனா, பெரிசா தர்ப்ப்பக் கட்டை தூக்கிண்டு வந்துடும், சாஸ்திரிகள்னு…”

சொல்லிச் சொல்லி மாய்ந்து போனவர், அவனது கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார்… நாணாவிற்கு மனது நெகிழ்ந்து போய் விட்டது அப்படியே!

”ஆச்சார்ய தேவோ பவ…. என்று தெரியாமலா சொன்னார்கள்…இத்துனூண்டு வயசுல இவ்வளவு ஞானத்தைப் பார்த்தது இல்ல…தீர்க்காயுஸா இருக்கணும்…”

நாணாவிற்கு பெருமை தாங்க முடியவில்லை..

குடுமியை முடிந்து கொண்டான்..

கணீரென மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தான்..

அப்படி மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்த போது, கிரஹணம் ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் விலக ஆரம்பித்தது, மனதுக்குள்ளிருந்து.

’சந்திர’ கிரஹணமாய்த் தான் இருக்க வேண்டும் அது!

(சித்திரம்: லக்ஷ்மி நாராயணன்

பம்பரம்! சிறுகதை

பம்பரம்

பரிவை சே.குமார்.

ம்பர சீசன் தொடங்கியதில் இருந்து ஆளாளுக்கு மதி கடையில் இருந்து பம்பரம் வாங்கி வந்து சாட்டையில் சுற்றி கோவில் தரையில் கிர்ரெண்று சுற்றினார்கள். மேலும் சிலரோ அதை லாவகமாக கையில் எடுத்து அடுத்தவரின் கையில் விட்டுச் சந்தோஷப்பட்டனர். ஒரு சிலர் பம்பரம் வாங்கிக் கொடுக்க முடியாது என அம்மாக்கள் பிடித்த அடத்தின் காரணமாக நல்ல வைரம் பாய்ந்த கருவைக் கட்டையை வெட்டி அழகாக செதுக்கி ஆணி அடித்து பம்பரம் ஆக்கியிருந்தார்கள். மேலத்தெரு முத்துசாமியின் நாலு வயசு சந்தோஷூக்கு இப்போ கடையில் தலைமீது ஆணி வைத்து அதில் சாட்டை கட்டி புதிதாக வந்திருக்கும் பம்பரத்தை வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அவனும் கிர்ரெண்ற சப்தத்துடன் சுத்தப பழகிவிட்டான். அவனோட அக்கா பத்து வயசு பாமா லாவகமாச் சுத்தி அவனைக் குஷிப்படுத்தினாள். அதுவும் சாட்டையில் தொங்கியபடி சுற்றுவது அழகாகத்தான் இருக்கு.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்ற முத்து மனசுக்குள் அப்பத்தாவைக் கருவிக் கொண்டான். எல்லாரும் பம்பரம் வாங்கி சுத்துறானுங்க…. இந்தக் கெழவி பம்பரம்தான் வாங்கித் தர விடலை. கட்டையில செஞ்சு தாறேன்னு சொன்ன சோலைப் பயலயுமில்ல திட்டிப்புடுச்சு… வெளங்காத கெழவி…. கட்டையில போக… 

ஏய் முத்து தள்ளி நில்லுடா… பம்பரம் குத்தும் போது சும்மா ரெங்கிக்கிட்டு வரும்… மண்டைகிண்டையில சொட்டுன்னு வந்து அடிச்சிப்புடும்….” கத்தினான் சேகர்.

ஆமா இங்கிட்டுத்தான் வருது… சும்மா சுத்துடா.. மொட்டக்கட்ட அடிக்கப்போறே… அதுக்கு உதாரு விடுறே…” பம்பரம் இல்லாத கடுப்பில் திரும்பி எகிறினான் முத்து.

எனக்கென்னப்பா நா சொல்லிட்டேன்… அப்புறம் உன் இஷ்டம்…” என்றபடி பம்பரத்தை சாட்டையால் சுற்றி ஆணியின் நுனியை நாக்கால் எச்சில்படுத்தி நாக்கைத் துருத்தி காலைத் தூக்கி வட்டத்துக்குள் இருந்த பம்பரத்தின் மீது குத்தினான்.

டேய் சோல… எனக்கொரு பம்பரஞ் செஞ்சுதாடா…” மும்மரமாக பம்பரம் சுற்றுவதில் இருந்த சோலையிடம் கெஞ்சலாகக் கேட்டான்.

அட போடாங்… உங்க அப்பத்தா சோத்தை திங்கிறியா பீயைத் திங்கிறியான்னு கேக்குது… வேண்டாம்ப்பா… உனக்கு நாஞ் செஞ்சுதரமாட்டேன்…”

“….” பதில் சொல்லாமால் வட்டத்துக்குள் குத்தி ர்ர்ர்ரென்ற சத்தத்துடன் வெளியே சீறி சுற்றிய முருகனின் சிவப்புக் கலர் பம்பரத்தையே பார்க்க, அவன் பார்ப்பதைப் பார்த்த முருகன் சாட்டையை பம்பரத்தைச் சுற்றி முடிச்சுப் போல் போட்டு ஒரு கையால் டக்கென்று மேலே தூக்கிவிட்டு லாவகமாக கையில் வாங்கி சுத்தவிட்டான்.

டேய் அதை எங்கையில விடுறா…” வெட்கத்தை விட்டுக் கேட்டான்.

டேய் இங்க பாருங்கடா… தொத்தப்பயலுக்கு பம்பரம் கையில சுத்தணுமாம்… நீ விடாதேடா…” என்று சொன்ன இளங்கோவிடம் “சும்மா இருடா” என்ற முருகன் அவனது கையில் விட்டான். கிர்ரெண்று கையில் சுற்றும் போது உச்சந்தலை வரை சில்லிப்பாய் இருந்தது. அடக்க முடியாத சிரிப்பு அவனுக்கு வந்தது.

டேய் முத்து… அடேய் இங்க வாறியா… வரவா…?” அப்பத்தாவின் குரல் கேட்டதும் கடுப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.

வீட்டுக்குப் போனதும் வாசலில் நின்ற அப்பத்தா, “அவனுக பம்பரம் குத்துற இடத்துல நிக்காதேன்னு எத்தனை தடவ உனக்குச் சொல்லியிருக்கேன்… ஒரு நேரம் போல ஒரு நேரமிருக்காது. அது பாட்டுக்கு படாத இடத்துல பட்டுட்டா என்ன பண்றது.?” கத்தினாள்.

சும்மா போப்பத்தா… பம்பரந்தான் வாங்கித் தரமாட்டீங்க… பாக்கக்கூடக் கூடாதா?”

எனக்கென்னப்பா உங்கப்பன் வரும்போது உங்காத்தாக்கிட்ட சொல்லி வாங்கிட்டு வரச்சொல்லுங்க….”

நா அப்பாக்கிட்ட சொல்லி வாங்கியாரச் சொல்லுறேன்….” என்றபடி உள்ளே சென்றான்.

றுநாள்…

முத்து நா உனக்கு என்னோட செவப்புப் பம்பரத்தைத் தரவாடா?” முருகன் அவனிடம் கேட்டான்.

போடா… நீ சும்மா சொல்லி என்னைய வெறுப்பேத்துவே…”

இல்லடா நெஜம்மாத்தான்… நான் புதுசா பம்பரம் வாங்கப்போறேன்… இதைத் தாறேன்…” என்றான்.

எப்போ?”

மத்தியானம் வரும்போது புதுசு வாங்கிட்டு வந்திருவேன்… சாயந்தரம் உனக்குத் தாறேன்…”

உண்மையாவா?”

எங்க அம்மா மேல ஆணையா”

சரி குடு பாக்குறேன்…”

இந்தா…”

வாங்கி எல்லாப் பக்கமும் பார்த்தவன் இடமில்லாமல் ஆக்கர் போட்டிருப்பதைப் பார்த்ததும் “என்னடா இம்புட்டு ஆக்கர் இருக்கு…” முகத்தைச் சுருக்கினான்.

ஆமா வெளாடும் போது தோத்தா ஆக்கர்தானே போடுவாங்க… பிரியாத்தானே தாரேன்னு சொன்னே… புதுசா வாங்கிக் கொடுப்பாக…”

இல்லடா சும்மா கேட்டேன்… நல்லாத்தான் இருக்கு…”

வேணாம்ன்னா விடு… வேற யாருக்காச்சும் கொடுக்கிறேன்….”

இல்லடா… எனக்கே கொடுடா… இனிமே இதுல ஆக்கர் விழுகாம பாத்துக்கிறேன்…”

உனக்கு ரொம்ப திமிருடா… வெளாட்டுன்னு வந்தா ஆக்கர் வாங்கம இருக்க முடியாது… உன்னய முதல்ல சேக்குறானுங்களான்னு பாரு….”

மாலை பம்பரம் சுற்றத் தயாரானபோது…

டேய் நானும் வாரேன்டா..” என்றபடி வந்து நின்றான் முத்து.

டேய் இங்க பாருங்கடா தொத்தப்பய ஆட்டைக்கு வாராணாமுடா… உங்கிட்ட ஏதுடா பம்பரம்… உங்கப்பத்தா வாங்கிக் கொடுத்துச்சா…” ஏளனமாக கேட்டான் சேகர்

இல்ல முருகன் கொடுத்தான்… எங்கப்பா இந்த வாரம் வரும்போது புது பம்பரம் வாங்கிட்டு வாறேன்னு சொல்லியிருக்காக…”

ப்ப்பூ….என எல்லாருமாக சிரித்தார்கள்.

எதுக்குடா சிரிக்கிறீங்க…?”

புதுசா வாங்கி என்ன பண்ணப்போறே… உனக்கு பம்பரமே குத்தத் தெரியாது… முதல்ல இதுல பழகு அப்புறம் பாப்போம்…” தான் என்னவோ பம்பரம் சுற்றுவதில் சாம்பியன் என்பது போல சோலை பேசினான்.

எதுக்குடா இவனுக்கிட்ட கொடுத்தே… ஆக்கர் வாங்கிறதுக்காவது வச்சிருக்கலாமுல்ல…” மெதுவாக கீறிவிட்டான் இளங்கோ

அட பொயிட்டுப் போகுதுடா…. பாவம் சுத்திட்டுப் போறான்…”

சரிடா… உனக்கு மூணு சான்ஸ் தாரேன்… இந்த வட்டத்துக்குள்ள இருக்க என்னோட பம்பரத்து மேல ஒரு தடவையாச்சும் ஆணி பதியிற மாதிரி குத்திடு… அப்புறம் உன்னைய ஆட்டையில சேத்துக்கிறோம்…” முத்துக்கு போட்டி வைத்தான் சேகர்.

சரிடா… வையி….” தயாரானான் முத்து

டேய் எதுக்குடா தேவையில்லாம… அவனையும் ஆட்டையில சேத்து அவனோட பம்பரத்தை உடைப்போம்…” என்றான் சோலை.

இவன் முதல்ல வட்டத்துக்குள்ள சுத்துறானான்னு பாப்போம்… சும்மா இருங்கடா…”

சாட்டையை சுற்றும் போது நிற்காமல் சுத்திக் கொண்டே வர எல்லாரும் சிரித்தார்கள்.

ஒரு வழியாக சுற்றி ஓங்கிக் குத்த முதல் குத்து வட்டத்துக்குள் விழுந்தாலும் மொட்டைக் கட்டையாக மண்ணில் சுற்றிச் செல்ல “மொதக்குத்து மொட்டக்குத்து…” என்று எல்லாரும் ஒன்றாகக் கத்தினார்கள்.

இந்த முறை எப்படியும் ஆக்கர் போட்டே ஆகணும் என்ற முனைப்புடன் குத்த இந்த முறை பம்பரம் சாட்டை நுனியில் தொங்கியது.

அடேய் இனி இவன் ஜெம்மத்துக்கும் நம்ம கூட ஆட முடியாது…. முருகன் வச்சிருக்கும் போது எப்புடி ரெங்குன பம்பரம் தொத்த கைக்குப் போனதும் தொத்தலாகிப் போச்சுடா…” சிரித்தான் இளங்கோ.

என்னடா தொத்த… நோத்தாவா எனக்குப் பேரு வச்சா… மூத்தரக்குண்டி…” என்று பதிலுக்கு சிலுப்பினான்.

டேய் மூத்தரக்குண்டியின்னு சொன்னே மூக்கைப் பேத்துருவேன்…” இளங்கோ எகிறினான்.

இருடா… இன்னும் ஒரு குத்து… அவன் குத்தலைன்னா நாம அவனைக் குத்துவோம்…” என்று இளங்கோவை சமாதானப்படுத்தினான் சேகர்.

மாரி… இந்தக் குத்துல பம்பரம் வெளியாகணும்..என்று மனசுக்குள் சாமி கும்பிடும்போது “அடேய் அவனுக்கிட்ட எவன்டா பம்பரத்தைக் கொடுத்தது… எங்களுக்கு வாங்கித் தரத்தெரியாமயா இருக்கோம்… நீங்கதான் சொல்பேச்சுக் கேக்கலைன்னா அவனையும் ஏண்டா கெடுக்கிறீங்க… யாருமேலயாவது பட்டு சண்டைக்கு வந்துட்டா… இப்பக் கொடுத்துட்டு வாரியா வரவாடா” என்று அவனது அப்பத்தா கத்தியபடி வர…

தொத்த தோக்கப்போறான்… ரெடியா இருங்க…. அவனை வெளுக்கிறதுக்கு…” என்று சேகர் சொல்ல, “ஏய்… ஏய்…” என எல்லாரும் கோரஸாகக் கத்த….

பம்பரத்தை நாக்கால் எச்சில் பண்ணி கண்ணை மூடி கையை ஓங்கும் போது அப்பத்தாவும்  சுற்றி நின்று சிரிப்பவர்களும் ஒரு முறை வர கண்ணைத் திறந்து ஓங்கிக் குத்தினான்.

சரியான குத்து… துள்ளியமாய் வீசிய வீச்சு…. சேகரின் பம்பரத்தில் பச்சக் என்று குத்த…. அந்த வேகமான குத்து கொடுத்த தாக்கத்தில் சேகரின் பம்பரம் ரெண்டாக உடைந்து சிதற…

குத்திய வேகத்தில் வாடிவாசல் காளை போல முத்துவின் பம்பரம் எகிறி அவர்களை நோக்கி வந்த பாட்டியின் நெற்றியை சொட்டென்று தாக்க…

அய்யோ… யாரையோ பம்பரத்தால அடிக்கப் போறான்னு பாத்த கடைசியா எம்மண்டைய உடைச்சிட்டானே… வா உங்காத்தாக்கிட்ட சொல்லி உனக்குப் பூஜை போடச் சொல்றேன்… பம்பரமா வேணும் பம்பரம்… உங்கப்பனுக்கிட்ட சொல்லி மசுர வாங்கிட்டு வரச்சொல்லுறேன்…” என்று கத்தியபடி நெற்றியைத் தடவ…

அப்பா பம்பரம் வாங்கித் தருவாரா மாட்டாரா என்பது இப்போது முக்கியமில்லை… கேலி பேசியவர்களின் முகத்தில் கரி பூசிய சந்தோஷத்தில் “யாருக்கிட்ட இனி எங்கிட்ட மோதுனா… பம்பரத்தை சில்லாத்தான் பொறக்கணும்…” என கத்திவிட்டு அப்பத்தாவைத் தாக்கி எகிறிய பம்பரத்தை எடுத்துக் கொண்டு “பாத்து வரக்கூடாதா அப்பத்தா…. நல்லவேளை படாத இடத்துல பட்டிருந்தா சங்குதான்…” என்று எகத்தாளமாகச் சொல்லிவிட்டு “ம்.. வேற யாருடா வைக்கிறா… வச்சிப் பாருங்கடா….” என்று சவால் விட்டான் தொத்தலான முத்து.

-‘பரிவைசே.குமார்.

மனமோகன விலாஸ்! பகுதி 8

சாய்ரேணு சங்கர்

மனமோகன விலாஸ்! பகுதி 8

8 – க்ளைமேக்ஸ் நிறைவுப் பகுதி

8.1

தன்யாவின் கூரிய பார்வை அந்த ஹால் முழுவதும் துழாவியது. பின் திருப்தியடைந்தவளாக, மென்மையாகத் தன் பேச்சை ஆரம்பித்தாள்.

“மிகமிகச் சுவாரஸ்யமான வழக்கு இது. நாடக உலகோடு சம்பந்தப்பட்ட இந்த வழக்கில், எத்தனையோ நாடகத்தனமான நிகழ்வுகள்! திடீரென்று மேலிருந்து சுத்தி விழுவது, மேடையிலேயே ஒருவர் மயங்கி விழுவது, இன்னும் ஏதேதோ… எல்லாம் சரியான க்யூவில் கச்சிதமாக நடைபெற்றன.

“இவையெல்லாம் ஏன் நடந்தன என்ற கேள்விக்கு எங்களுக்கு இரண்டுவிதமான பதில்கள் அகப்பட்டன. ஒன்று, நேரடியாகச் சிசுபாலன் என்ற கேரக்டர் மீது கோபம் – அதாவது ஒரு உளவியல் பிரச்சனை. மற்றொன்று – வாரிசுப் பிரச்சனை, அதனால் செண்பகராமனைப் பழிவாங்க முயற்சி.

“வெளிப்படையாக இரண்டு புதுமுகங்கள் இந்தப் பதில்களுக்குப் பொருந்துவார்கள்போல் காணப்பட்டார்கள். ஒன்று செந்தில்குமார், மற்றொன்று நரேந்திரன். செந்தில்குமாருக்கு சிசுபாலன் கேரக்டரில் யாரும் நடித்துவிடக் கூடாது என்ற எண்ணம் வரலாம். அதோடு அவருக்குச் செண்பகராமன் மீதும் கோபம் இருக்கலாம். நரேந்திரன் பற்றிச் சொல்லப்பட்டது, அவர் செண்பகராமனின் மகனாக இருக்கலாம், எனவே அவரைப் பழிவாங்க இவ்வாறு செய்கிறார் என்ற கருத்துத் தோன்றியது.

“ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் வாரிசுகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேற்சொன்னவர்களைத் தவிர ஸ்ரீஹரி இருக்கிறார். அவர் நாடகக் குழுவின் செல்லப்பிள்ளை. இன்னொரு முக்கியமான வாரிசை நாம் எல்லோருமே மறந்துவிட்டோம் – ஸாம்மி. அவள் நடிப்புத்துறை வாரிசு அல்ல, நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளப் போகிறவள். இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு இனிய ரொமான்ஸ் மலர்வதை நாங்கள் புரிந்துகொண்டோம். மனமோகன விலாஸ் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாடகம் நடத்த அடுத்த வாரிசுகள் வந்துவிட்டார்கள் என்று புரிந்தது.

“இன்னும் சில விஷயங்கள் இந்த வாரிசு மேட்டரில் சொல்ல வேண்டும், அதற்குப் பிறகு வருகிறேன்.

“ஒரு நாடகத்தனமாக பிரச்சனை, அதற்கு இரண்டு நாடகத்தனமான காரணங்கள். Look beyond the scenery and grease paint என்பார்கள் ஆங்கிலத்தில். இந்த நாடகத்தனத்தை எல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், என்ன உண்மை புலனாகிறது? எந்த ரிசல்ட்க்காக இவை செய்யப்பட்டன?

“செண்பகராமனைப் பழிவாங்க என்ற காரணம் ரப்பிஷ். அதற்குச் செண்பகராமனையே நேரடியாகத் தாக்கலாம். அப்புறம் இந்தச் சிசுபாலன் காம்ப்ளக்ஸ் – அதுவும் நாடகத்தனமாகத் தென்பட்டது. ஆனந்தன் போன்ற ஒரு நபரைத் தூண்டிவிடவும், சந்தேகத்தைப் பலர்மீது திருப்பவும்தான் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

“இந்த… சம்பவங்கள்… தொடர்ந்து நடந்திருந்தால் எதில் கொண்டுபோய் விடும் என்று சிந்தித்துப் பாருங்கள், உங்களுக்கு மொத்தக் கதையும் புரிந்துவிடும்…”

“என்ன சொல்றீங்க, ஒண்ணும் புரியலையே” என்றார் சூரி.

“சூரி அண்ணா, கொஞ்சம் யோசிங்க. இப்படியே ஒவ்வொரு ஆபத்தா வந்துட்டிருந்தா, ஆர்ட்டிஸ்ட்கள் பயந்துடுவாங்க. நாடகமே வேண்டாம்னு சொந்த ஊருக்குப் போயிடுவாங்க, இல்லையா?”

“நாங்க சென்னையில் நாடகம் நடத்தக் கூடாதுங்கறதுக்காகவா இவ்வளவு பெரிய சதி?” என்றார் செண்பகராமன் வியப்புடன்.

“இல்லை சார், நீங்க எங்கே போனாலும் இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கும். அப்போ நீங்க என்ன செய்வீங்க? போலீசைக் கூப்பிடுவீங்களா?”

“எதுக்கு வம்பு? பத்திரிகைகளில் அடிபட்டு என் மானந்தான் போகும். அதுக்குப் பேசாம நாடகக் குழுவைக் கலைச்சிடலாம். ஏதோ இத்தனைநாள் நல்லா நடத்தியாச்சு. இனிமே சேஃப்டிதான் முக்கியம்” என்றார் செண்பகராமன்.

“அதான்… அதை எதிர்பார்த்துத்தான் இந்தப் பெரிய சதி நடத்தப்பட்டது” என்றாள் தன்யா புன்சிரித்தவாறே.

செண்பகராமன் யோசித்தார். “அதனால யாருக்கு என்ன லாபம்?” என்று கேட்டார் சூரி, அங்கிருந்த அனைவரின் குரலாக.

தன்யா உடனே விஷயத்திற்கு வந்திருக்கலாம், அவள் ஒரு லெக்சர் கொடுக்க ஆரம்பித்தாள்.

“ஸைக்காலஜி ஆஃப் க்ரைம். அகதா கிரிஸ்டி தன் கதைகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு ஃப்ரேஸ் இது. அதாவது, ஒரு குற்றத்தின் குணாதிசயத்தைக் கொண்டே குற்றவாளியின் குணாதிசயத்தை அறியலாம், அதைக் கொண்டு குற்றவாளி யார் என்று அறியலாம் என்பது அவர் தத்துவம்.

“இந்தக் குற்றத்தின் குணாதிசயங்கள் என்ன? முதல் குணாதிசயம், குற்றவாளி தானாக எதையும் செய்பவர் அல்ல. ஷேக்ஸ்பியரின் இயகோ கதாபாத்திரம் போல, பிறரைத் தூண்டித் தன் காரியத்தை நடத்துபவர்.

“மனமோகன விலாஸை முடக்க, அதன் நாடகங்களை நடக்காது செய்யவேண்டும் என்ற எண்ணம் சிறிதுகாலமாகவே குற்றவாளி மனதில் இருந்திருக்க வேண்டும். ஆனால் செந்தில்குமாரின் வரவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிசுபாலன் வேடமிடுபவரை மிரட்டுவதாக ஒரு திட்டம் உருவாகியிருக்கிறது பாருங்கள்! ஒரே நேரத்தில் ஆனந்தன், செந்தில்குமார் இருவரையும் சந்தேகப்பட வைக்கும் ஒரு திட்டம்! குற்றவாளி மிக நுட்பமான அறிவுள்ளவர் என்று இதன்மூலம் தெரிகிறதல்லவா? காலத்திற்குத் தகுந்தாற் போன்று தன் திட்டங்களை வேகமாக மாற்றிக் கொள்ளவும் வல்லவர்.

“அதற்கு இன்னொரு உதாரணம் நரேந்திரனின் வருகை. நரேந்திரன் செண்பகராமனின் மகனாக இருக்கலாம் என்பதை வைத்து, சந்தேகம் அவர்மீதும் படரும்படிப் பார்த்துக் கொண்டார் குற்றவாளி! இந்த வதந்தியையே அவர்தான் பரப்பினார் என்று நான் சந்தேகிக்கிறேன். ஏனென்றால் குற்றவாளி அனுப்பிய எச்சரிக்கைக் கடிதத்தில் “விவேகானந்தர்” என்ற பெயர் இருந்தது. அவர் முதலில் ஆனந்தனைக் குறிப்பதற்காக அதை எழுதியிருக்கலாம். அதன்பிறகு நரேந்திரன் வந்ததும், சௌகரியமாக அது நரேந்திரனைக் குறிக்கலாம் என்ற சந்தேகத்தையும் உண்டாக்கினார்!

“நெக்ஸ்ட், தர்ஷினி சொன்னது. குற்றவாளி சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பவர், அல்லது அவர் நடிகரே அல்ல!

“குற்றவாளிக்கு ஏதோ காரணத்திற்காக மனமோகன விலாஸை முடக்க வேண்டும், அல்லது கலைக்க வேண்டும். நடிகர்கள் இல்லாமல் நாடகக் குழு ஏது? எனவே அவர் நடிகர்களை மிரட்ட ஆரம்பிக்கிறார். தான் அதை நேரடியாகச் செய்யாமல், ஆனந்தனைத் தூண்டி, சிசுபாலன் ஒரு கெட்டவனான அத்தை பிள்ளை என்ற எண்ணைத்தைப் பதித்து, அவன் கோபத்தைக் கிளறி, அவர் சொன்னபடி அவனைச் செய்ய வைக்கிறார். ஆனந்தன் சுத்தியை எறிகிறான். சுத்தி அங்கிருந்தவர்களில் ஒருவரைக் காயப்படுத்துகிறது.

“தன் நோக்கம் சிசுபால வதம் என்று ஒரு கடிதம் வைக்கிறார். அதில் ஆனந்தனை மறைமுகமாகக் குறிக்கிறார். பிறகு நரேந்திரனின் வருகை. அவனைக் குறித்து ஒரு வதந்தியைப் பரப்புகிறார்.

“சிசுபால நடிகரையும் வீழ்த்துகிறார், ஒரு பிரமாதமான ஐடியா மூலம். அது எவ்வாறு செய்யப்பட்டது என்பதைச் சரியாக ஊகித்தது தர்ஷினிதான். அவளே அதை விளக்கட்டும்” என்ற தன்யா, வாட்டர் பாட்டிலைக் கையிலெடுத்துக் கொண்டாள்.

தர்ஷினி மீண்டும் எழுந்தாள். “ஆனந்தன் ட்ரேயில் பல டம்ப்ளர்களை வைத்துக் கொண்டுவருகிறான். அதில் எந்த டம்ப்ளர் யாரிடம் போகும் என்று சொல்ல முடியாது. கூட்டத்தில் விஷத்தைக் கலக்கவும் முடியாது. எனவே குற்றவாளி முதலிலேயே செண்பகராமனுக்காக வைக்கப்பட்டிருந்த ஃப்ளாஸ்கில் விஷத்தைக் கலக்கி வைத்துவிடுகிறார். டீ வழங்கும் நேரத்தில், ஆனந்தனிடம் செண்பகராமனுடைய கோப்பையில் எல்லோருக்கும் வழங்கப்படும் டீயை விடச் சொல்கிறார். ஒரு டம்ப்ளரில் விஷம் கலந்த டீயை விடச் சொல்லி, அந்த டம்ப்ளரை வெற்றிவேலருக்குக் கொடுக்கச் சொல்கிறார். என்ன நடக்கிறது, எதற்காகச் சொல்கிறார் என்றெல்லாம் புரியாத அப்பாவி ஆனந்தன், செண்பகராமனுடைய டீயை, அதாவது விஷங்கலந்த டீயைக் கவனமாக வெற்றிவேலரிடம் கொடுக்கிறான்” என்றாள்.

ஆமாம், அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் – அங்கிருந்தோரின் சிந்தனை ஓடியது.

“வெற்றிவேலருக்கு வந்த ஆபத்திற்குப் பிறகு, எல்லோருக்கும் பயம் வந்தது. நாடகம் நடத்த வேண்டாம், ஊருக்குப் போய்விடுவோம் என்று பேச ஆரம்பித்தார்கள். அதற்கு வலுகொடுக்கவே நடராஜன் ஐயாவின் சுண்ணாம்பில் விஷம் கலக்கப்பட்டது, சூரி அண்ணாவின் அறையில் ஃபேன் கீழே விழுமாறு செய்யப்பட்டது. இவை நடந்திருந்தால் நாடகம் நடந்திருக்காது. போலீஸ் கேஸாகியிருக்கும். குழுவைக் கலைக்க வேண்டியும் வந்துவிடும்.

“இறையருளால் இந்த ஆபத்துகள் தடுக்கப்பட்டன. என்றாலும் செண்பகராமன் மனம் குன்றிப் போனார். குழுவைக் கலைத்துவிடலாமா என்று அவர் யோசித்தபோது, நாங்கள் அவருக்கு ஒரு ஆலோசனை சொன்னோம். கடைசியாக ஒரே ஒரு ஷோ நடத்தப்படும், அதன்பிறகு நாடகக் குழு விற்கப்படும் என்பதாக அவரை அறிவிக்கச் சொன்னோம்.

“இந்த யோசனையின் ஒரு பலன், நாடகம் நன்றாக நடந்தது, ஒரு தடங்கலும் வரவில்லை. ஆனால் செண்பகராமனுக்கே ஆபத்து வந்தது, செந்தில்குமாரால்! அதாவது, செந்தில்குமார் அவர் அப்பாவைக் கொன்றது செண்பகராமன்தான் என்று தூண்டி விடப்பட்டார்!

“ஆக, குற்றவாளி தங்கமுத்துவின் மரணத்தின்போது குழுவில் இருந்தவர். தங்கமுத்துவும் செண்பகராமனும் சண்டைக்குப்பின் சந்தித்தார்கள், செண்பகராமன் தங்கமுத்துவிற்கு ஏதோ அருந்தக் கொடுத்தார் என்பது தெரிந்தவர்.

“சுருக்கமாகச் சொன்னால், குற்றவாளி இந்தக் குழுவில் நீண்ட நாட்களாக இருப்பவர், சிறந்த அறிவாளி, படைப்புத் திறன் உடையவர், ஆனால் தன் படைப்புகளைப் பிறரைக் கொண்டு பிரகாசிக்கச் செய்பவர். திட்டங்களை வேகமாகப் படைக்கவும், தேவைக்குத் தகுந்தபடி மின்னல் வேகத்தில் அவற்றை மாற்றவும் இயன்றவர். குழுவின் உள் விவரங்கள் அறிந்தவர். ஆனந்தனின் கதை தெரிந்தவர்.”

தன்யா நிறுத்தினாள். எல்லோருக்கும் மெய்சிலிர்த்தது.

“இன்னும் சுருக்கமாகச் சொன்னால்… கதாசிரியர் கலையரசு!” என்று அறிவித்தாள் தன்யா.

8.2

எல்லோருமே திடுக்கிட்டார்கள். அலையலையாகப் பரவிய அதிர்ச்சி ஓயுமுன் கலையரசு எழுந்தார். ஜோல்னா பைக்குள் கைவிட்டுத் துப்பாக்கியை எடுத்தார். எல்லோரும் பதறப் பதறப் பின்பக்கமாக நகர்ந்து அறையைவிட்டு வெளியே போய்த் தப்பிக்க முயன்றார்.

அவரைக் கிடுக்கிப் பிடியாகப் பிடித்து நிறுத்தினான் கவனமாகத் தன்யாவால் அறைவாசலில் நிறுத்தப்பட்டிருந்த அச்யுத்.

8.3

“கலையரசு, நீங்களா? இந்தக் குழுவோட முதுகெலும்பா இருக்கறவரா? ஏன் கலையரசு, ஏன் இப்படிச் செய்தீங்க?” என்று செண்பகராமன் வருத்தத்துடன் கேட்டார்.

கலையரசு பதிலளிக்கவில்லை. நேர்ப்பார்வை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

“இந்த நாடகக் குழு தற்போது போடுகிற நாடகங்கள் எல்லாமே கலையரசு எழுதியது. தன்னுடைய ப்ரெயின்-சைல்டை அவரே அழிக்க நினைப்பாரா?” என்று கேட்டார் சூரி.

“என்ன அழிக்கறது, சூரி அண்ணா? அவருடைய நாடகங்கள் எல்லாமே குறைந்தது 500 ஷோ பார்த்தாச்சு. சாக்லேட் கிருஷ்ணா போல் சமீபத்தில் 1000 ஷோவை எட்டிய நாடகம் கிருஷ்ண லீலை. அவை எல்லாம் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடிச்சாச்சு. இனி இன்னொரு நன்மைக்காக மனமோகன விலாஸ் கலைக்கப்பட்டால், அது அவருக்குப் பெரிய நஷ்டமில்லையே!” என்றாள் தன்யா.

“மனமோகன விலாஸ் முடங்குவதால் இவருக்கு என்ன நன்மை?”

“அங்கேதான் நான் சொன்ன வாரிசு மேட்டர் வரது! அதற்கு முன்னால் கலையரசுவை நாங்க எப்படி அடையாளம் கண்டுகொண்டோம் என்பதை விளக்கிடறேன். அகதா க்ரிஸ்டியுடைய இன்னொரு உத்தி – கான்வர்சேஷன்! அதாவது, வழக்கு பற்றி விசாரித்தலைத் தவிர, சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பது! அதன்மூலம் தன்னையறியாமல் அவர்கள் ஏதாவது சொல்வார்கள். அது வழக்கோடு சம்பந்தப்பட்டதாக இல்லாவிடினும் வேறு விதத்தில் பெரிய உதவி செய்யும்.

“அப்படித்தான் நாங்கள் எல்லோரிடமும் பேசிக் கொண்டே இருந்தோம். அதற்கு நரேந்திரன் மிக உதவியாக இருந்தார். அவர் யார்? செண்பகராமனுடைய மகனா? அவருடைய நோக்கம் என்ன? தந்தையோடு இணைவதா அல்லது தந்தையைப் பழிவாங்குவதா? இந்த விஷயங்களைக் கொண்டு ஒரு உரையாடலை யாரோடும் எங்களால் தொடங்க முடிந்தது. அப்போதுதான் இரண்டு உரையாடல்களில் இருந்த முரணைக் கவனித்தோம். இல்லையேல், நாங்கள் கலையரசுவைச் சந்தேகப்பட்டிருக்கவே முடியாது. மறுபடி மறுபடி செந்தில்குமார், ஆனந்தன், நரேந்திரன், ஸ்ரீஹரி என்றுதான் சுற்றிக் கொண்டிருந்திருப்போம்.

“சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் குழுவிலிருந்து விலகப் போவதாகச் சொன்ன அன்று, செண்பகராமன் ஒரு வாக்கியம் சொன்னார் – ‘சென்னையில் இந்த ஷோ வெற்றிகரமா நடந்தா, முதன்முறையா ஒரு சரித்திர நாடகம் அரங்கேற்றம் பண்றதா இருந்தேன்.’ அதுவே கலையரசுகிட்டப் பேசியபோது ‘ஆசையா புராணம் தவிர வேறு ஒரு துறையில் நாடகம் எழுதினேன். அதை வேண்டாம்னுட்டாங்க.’ வேண்டாம் என்று சொல்லக்கூடியவர் செண்பகராமன்தான். ஆனால் அவரோ அதை நடத்தப் போவதாகச் சொல்கிறார்!

“இதில் யார் சொல்வது உண்மை? செண்பகராமன் பொய் சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் ஒருவேளை அதை அவர் ரகசியமாக வைத்திருந்தாரோ? எதற்காக? எழுத்தாளரிடம் கூடவா ரகசியம்? அவரிடம் நிச்சயம் சொல்லியிருப்பாரே!

“ஒரு முக்கியத் தடயம் எங்களுக்கு அதே உரையாடலில் புலப்பட்டது. அதாவது கலையரசுவின் மகன், சினிமாக் கதாசிரியர் என்ற விவரம். அவருடைய கதை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரால் வாங்கப்பட்டிருக்கிறது என்ற விவரம்.

“நாங்கள் உடனே எங்கள் அலுவலகத்திற்குப் போய்க் கலையரசுவின் மகனைப் பற்றி விசாரித்தோம். சரியான தொடக்கம் கிடைக்காமல் தவிக்கும் கதாசிரியர் அவர் என்று அறிந்துகொண்டோம். வெகுசில படங்களுக்கே கதை எழுதியிருக்கிறார், அவைகளும் தோல்விப் படங்கள்.

“அப்போதுதான் அந்தத் தயாரிப்பாளரின் அறிமுகம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அவரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். பெரிய பட்ஜெட்டில் வெற்றிப் படங்களை எடுப்பவர் அவர். அவரிடம் அகஸ்மாஸ்தாகத் தன் அப்பாவின் புதுக்கதையைத் தன் கதையாக ஒன்லைன் சொல்லப் போக, அவருக்கு அது உடனே பிடித்துவிட்டது! உடனே இருபது லட்ச ரூபாய் அட்வான்ஸ் தந்து கதையைத் தனக்குப் புக் செய்துகொண்டுவிட்டார் தயாரிப்பாளர். கதை ஸ்க்ரிப்ட் முழுவதும் கைக்கு வந்ததும் முப்பது லட்சம் என்றும், படம் எடுத்து முடிந்ததும் இன்னொரு ஐம்பது லட்சம் என்றும், மேலும் லாபத்திலும் பங்கு தருவதாகவும் ஒப்புக்கொண்டார்.

“இதை அறிந்த கலையரசு நடுங்கினார். அந்தக் கதை மனமோகன விலாஸின் ப்ராப்பர்ட்டி ஆயிற்றே! என்னதான் திரைக்கதையின் மாற்றம் செய்தாலும், செண்பகராமனுக்கு நிச்சயம் தெரிந்துவிடும். அவர் தயாரிப்பாளர்மீது கேஸ் போடுவார். அப்புறம் கலையரசுவின் மகனின் எதிர்காலம்? முதன்முறையாக அவருக்குக் கிடைத்திருக்கும் பெரிய ப்ரேக் ஆயிற்றே இது? ஆயிரங்களில் யோசித்துக் கொண்டிருந்தவர்கள் முதன்முறையாகக் கோடியில் யோசிக்க வைத்த சந்தர்ப்பத்தை விட்டுக்கொடுக்கலாமா?

“யோசித்தார். அந்தக் கதை, செண்பகராமனின் சொந்தச் சொத்தல்ல, மனமோகன விலாஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. அதைக் கலைத்துவிட்டால், கேஸ் போட வாதியே இருக்க மாட்டார்கள். செண்பகராமனுக்கு ஊறு ஏற்படுத்தினால், நிறுவனம் அவர் மகள் கைக்குப் போகும். அவளோடு இப்போது ஸ்ரீஹரி வேறு இணைந்திருக்கிறான். நிச்சயம் சும்மா விடமாட்டார்கள்.

“சில விபத்துகளை ஏற்படுத்தி, நடிகர்களைப் பயமுறுத்தி, நாடகத்தை நடத்த விடாமல் செய்து, குழுவைக் கலைத்துவிட அவர் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தபோது, செந்தில்குமாரும் நரேந்திரனும் வந்து சேர்ந்தார்கள். அவருடைய கலையுள்ளத்திற்கு நல்ல தீனி கிடைத்தது. ஒரு ‘சிசுபாலக் கொலைகாரனை’ உருவாக்கினார். தந்தையைப் பழிவாங்கத் துடிக்கும் மகன், தந்தைக்காகப் பழிவாங்கத் துடிக்கும் மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களை ஏற்படுத்தினார். தவிர ஆனந்தன் – அவர் என்ன சொன்னாலும் செய்யக்கூடியவன், மனநிலை சரியில்லாதவன். அதனால் எல்லோரும் இது செண்பகராமனைக் குறிவைத்து அல்லது சிசுபால நடிகர்களைக் குறிவைத்துச் செய்யப்படுகிறது என்று நினைத்தார்கள். கலையரசுவின் நோக்கத்தை யாரும் அறியவில்லை.”

“அப்போ செந்தில்குமாரைத் தூண்டிச் செண்பகராமனைக் கொல்லப் பார்த்தது?”

“அவரை வெளிக்கொணர்வதற்காக நாங்கள் குழு விற்கப்பட்டுவிடும் என்று அறிவிக்கச் சொன்னோம். விற்றுவிட்டால் அவருடைய நாடகம் நாரதர் மன்றத்தின் சொத்தாகிவிடும். பேக் டு ஸ்கொயர் ஏ! அதனால்தான் அதைத் தவிர்க்கச் செந்தில்குமாரை அவர் அப்பாவைக் கொன்றது செண்பகராமன் தான் என்று அவர் நம்பும்படிச் சொல்லியிருக்கிறார். இங்கே நடந்த எல்லா பேச்சுகளையும் எல்லா நிகழ்வுகளையும் கலையரசு அறிந்திருக்கிறார்! அவர் நடிகரல்ல, ஒத்திகை போன்ற கமிட்மெண்ட்கள் அவருக்கு இல்லை. எனவே அவரால் எல்லா இடமும் சுற்றிவர முடிந்திருக்கிறது, எல்லோரோடும் பேச முடிந்திருக்கிறது.”

தன்யா பேசி முடித்தாள்.

“பணம்! கேவலம் பணத்துக்காகவா…”

செண்பகராமனை முடிக்கவிடாமல் கீச்சென்று கத்தினார் கலையரசு. “கேவலம் பணமா? என் படைப்பை வெச்சு நீ எவ்வளவு சம்பாதிச்சிருக்க? ஒவ்வொரு ஊரிலும் வீடு – பெரிய வீடு, சின்ன வீடுன்னு வாங்கிக் குவிச்சிருக்க! எனக்கு இப்போதான் கதைக்கு ஐம்பதாயிரம்னு ஒப்புக்கொண்டிருக்க. எப்போ பார்த்தாலும் நான் ஏமாந்துக்கிட்டே இருக்கணும், நீ மாடிமாடியா கட்டிட்டே போகணும்! என் படைப்புக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கும்போது, நான் அதை வேண்டாம்னு சொல்லிடணும், இல்ல?” என்று சீறினார்.

“உங்க மகனுக்கில்ல வாய்ப்புக் கிடைச்சிருக்கு?” என்றார் சூரி.

“நான் வேற, என் மகன் வேறயா?” என்றார் கலையரசு.

எல்லோரும் மௌனமானார்கள். அதற்குமேல் யாராலும் எதுவும் பேச முடியவில்லை.

8.4

அச்யுத் கலையரசுவைப் போலீசில் ஒப்படைக்க அழைத்துச் சென்றதும் ஸாம்மி மெதுவாக தன்யாவிடம் வந்தாள். “ரொம்ப நன்றி தன்யா, தர்ஷினி! அருமையா வழக்கைத் தெளிவுபடுத்திட்டீங்க. மனமோகன விலாஸையும் காப்பாற்றிட்டீங்க. இன்னும் அது நூறாண்டு நடக்கும், நடத்துவோம்” என்றாள்.

தன்யாவும் தர்ஷினியும் குறும்பாகச் சிரித்தார்கள். ஸாம்மி கன்னம் சிவந்தாள். வேகமாகப் பேச ஆரம்பித்தாள். “இன்னும் ஒரு விஷயம் தெளிவுபடுத்தலையே! இவர், இந்த நரேந்திரன், யார்? எனக்கு அண்ணன் தானா?” என்று கேட்கும்போதே அது உண்மையாக இருக்காதா என்ற ஏக்கம் அவள் குரலில் ஒலித்தது.

கேட்ட ஸாம்மியையும் ஆர்வமாகப் பார்த்த செண்பகராமனையும் நோக்கினாள் தன்யா. “சாரி. இவர் சிவகாமுவின் மகனல்ல. அது கலையரசுவால் கிளப்பிவிடப்பட்ட வதந்தி!”

“அப்போ இவரு கோயில் கமிட்டிக்காரரோட சொந்தக்காரர்தானா?” என்றார் செண்பகராமன்.

“இல்லை, இவரும் வேஷதாரிதான். எல்லாரையும் செமத்தியா ஏமாத்திட்ட ஒரு ஃப்ராட்! தடுப்பூசி போட்டுட்டு ஓய்வு எடுக்கிறார்னு நாங்க நினைச்சிட்டிருக்கும்போதே, இங்கே விபத்துகளைத் தவிர்க்கவும் விவரங்களை அறியவும் வந்து சேர்ந்தவர். இந்த வழக்கு விவேகானந்தரின் நினைவுநாளான ஜூலை நான்கன்று ஆரம்பித்ததால் நரேந்திரன்னு புனைப்பெயர் வெச்சுக்கிட்டார்” என்றாள் தன்யா புன்னகையும் சீற்றமுமாய்.

“என்ன? அப்படின்னா இவர்…”

“எங்க நிறுவனத்தோட தலைவர், சிறந்த துப்பறிவாளர், சுத்தப் போக்கிரி, சுருக்கமா சொன்னா…”

“தர்மா!”

(நிறைவுற்றது)

மனமோகனவிலாஸ்! பகுதி 7

சாய்ரேணு சங்கர்

மனமோகனவிலாஸ்! பகுதி 7

7 க்ளைமேக்ஸ் – முதல் பகுதி

7.1

“செந்தில்குமார்!” என்று அலறினார் செண்பகராமன். கத்தியைத் தடுக்கத் தன்னையறியாமல் கையை வீசியபோது, சிறு மேஜைமீது வைக்கப்பட்டிருந்த டம்ப்ளரும் தண்ணீர்ச் செம்பும் சிதறின.

ஒரு விநாடி கழிந்தபின்தான் அவன் பின்னால் அச்யுத் நிற்பதையும், அவன் பிடியில் செந்தில்குமார் திணறிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். அதே நேரம் அரவம் கேட்டு அறைக்கு ஓடிவந்த ஸாம்மி “என்னப்பா, என்ன ஆச்சு?” என்று பதட்டமாய்க் கேட்டவள் செந்தில்குமாரையும் அவன் கையில் கத்தியையும் கண்டவள் ஒரு அடி பின்வாங்கினாள்.

“நாம சின்ன ஹாலுக்குப் போயிடலாமா? தன்யா மேடம், தர்ஷினி மேடம் ரெண்டுபேரும் அங்கே காத்திருக்காங்க” என்றான் அச்யுத், தினம்தினம் ஒரு கத்தியுடன் கூடிவனைச் சந்திப்பவனைப் போல.

ஹாலில் தன்யாவும் தர்ஷினியும் அமர்ந்திருந்தார்கள். நரேந்திரனும் ஸ்ரீஹரியும் இவர்களோடு உள்ளே நுழைந்தார்கள். அருகிலே உள்ள அறைகளில் இருப்பவர்களான சூரியும் கலையரசும் ஓடி வந்தார்கள். இன்னும் ஒருவர் இருவராய் ட்ரூப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளே வர ஆரம்பித்தார்கள்.

அறையில் இருபது பேருக்குமேல் கூடிவிட்டதைக் கண்டதும்தான் செண்பகராமன் சுயநினைவுக்கு வந்தார். “ஏன் எல்லாரும் கூடி வந்திருக்கீங்க? ஒண்ணும் பெரிசா நடந்துடலை. எல்லாரும் போய் நிம்மதியா தூங்குங்க. காலையில் பேசிக்கலாம்” என்றார் கனவிலிருந்து விழித்தவரைப் போல.

“அ… அவன் கையில் கத்தி” என்று நடுங்கினார் சூரி.

“என்ன நடக்குதுன்னு சொல்லிடுங்க ஐயா. எங்களுக்கு விஷயம் தெரியாமத் தூக்கம் வராது” என்றார்கள் விவேகவாணி ராதாம்மா.

செண்பகராமன் தவித்து மௌனமானார். எல்லாருடைய பார்வையும் செந்தில்குமார்மீது விழுந்து அங்கிருந்து நழுவித் தன்யா, தர்ஷினி மீது நிலைத்தன.

அங்கு இத்தனை நேரம் நடந்ததைக் கவனிக்காமல் செந்தில்குமாரையே உற்று நோக்கிக் கொண்டிருந்த தன்யா, இப்போது மெதுவாக எழுந்தாள். மெதுவான குரலில் அவனிடம் பேசலானாள். “செந்தில்குமார்! உங்களைப் பற்றி நாங்க எவ்வளவு மேன்மையா நினைச்சிருந்தோம். கடைசியில் நீங்களும் ஒரு வேஷதாரின்னு நிரூபிச்சுட்டீங்களே!” என்றாள்.

“நீங்க செண்பகராமனுக்குக் கொடுத்த பெனஃபிட் ஆஃப் டவுட் எல்லாம் நாடகந்தானா? அவரைப் பழிவாங்கத்தான் ட்ரூப்புக்குள்ள வந்தீங்களா?” என்று கேட்டாள் தர்ஷினி.

“பேத்தாதீங்க!” என்று அலறினான் செந்தில்குமார். “என் அப்பாவைக் கொன்னவனை நான் உயிரோடு விட்டு வெச்சிருக்கணுமா? என்னை என்ன பேடின்னு நினைச்சிட்டீங்களா?” என்று கத்தினான்.

“அப்போ இத்தனைநாள் அமைதியானவர் மாதிரி நடிச்சிருக்கீங்க!” என்றாள் தன்யா.

“மறுபடி, மறுபடி வேஷதாரி, நடிக்கறேன்னெல்லாம் சொல்லாதீங்க! இத்தனை நாள் உண்மையிலேயே நான் அமைதியா இருந்தேன். காரணம், செண்பகராமன் ஐயாவைப் பார்த்தா என் அப்பாவைக் கொன்னவர் மாதிரித் தெரியல. உண்மை தெரிகிறவரை அவரை நான் குற்றவாளியா நினைச்சிடக் கூடாதுன்னு கவனமா இருந்தேன். இன்ன்றைக்குத்தான் உண்மை தெரிஞ்சது. அதுக்கு அப்புறமும்…”

“உண்மை தெரிஞ்சதா? எப்படித் தெரிஞ்சது? யார் சொன்னாங்க? என்ன உண்மை?” தன்யாவின் சரமாரியான கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் ஒரு நாற்காலியில் தொப்பென்று அமர்ந்து தலையை மார்பை நோக்கித் தொங்கப் போட்டுக் கொண்டான்.

தன்யா ஒரு விநாடி அவனை உற்றுப் பார்த்தாள். பிறகு மறுபடியும் அறையின் மையத்திற்கு வந்துசேர்ந்தாள்.

7.2

அந்த வீட்டில் எல்லோரும் கூடிப் பேசுவதற்கு ஒரு பெரிய ஹால் இருந்தது. கோயில் கமிட்டிக்காரர்களோடு சந்திப்பு, நாடகம் குறித்த சர்ச்சைகள் எல்லாம் அங்குதான் நடைபெறும்.

வீட்டின் பின்புறத்திற்கு அருகில் இருந்தது “சின்ன ஹால்” என்று குழுவினர் குறித்த அந்தச் சற்றுப் பெரிதான அறை. அது அங்கத்தினர்கள் ஓய்வாக அமர்ந்து பேசப் பயன்படுத்தப்பட்டது. நாடகம் நடக்கும் நேரத்தில் அதுவே ஒப்பனை செய்யப்படும் க்ரீன் ரூம். அங்கிருந்து வீட்டின் பின்புறம் வழியே வெளியே சென்று நாடக மேடையை அடைந்துவிடலாம். பொதுவாக நாலைந்து பேருக்குமேல் அந்த அறையில் இருக்க மாட்டார்கள் என்றாலும் எப்போதும் கலகலப்பாக இருக்கும் அறை அது.

இப்போது சின்ன ஹாலில் பலர் கூடியிருந்தார்கள். ஆனால் ஒரு கசகசப்பான மௌனம் நிலவியது.

தர்ஷினி எழுந்தாள். “Begin at the beginning என்பார்கள். இந்த வழக்கின், இந்த மிகக் குழப்பமான வழக்கின் அடிப்படை என்னவென்றால், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நடந்த தங்கமுத்துவின் மரணம்தான்! எனவே அதை முதலில் விளக்கிவிட்டால், பின் முன்னே போகிற வழி தெளிவாகத் தெரியும், செந்தில்குமாரின் குழப்பங்களும் தீரும்” என்றாள். பின் செண்பகராமன் பக்கம் திரும்பினாள்.

“இங்கே இருப்பவங்க சொன்னதிலிருந்து நாங்க அந்தச் சம்பவத்தை கன்ஸ்ட்ரக்ட் பண்ணியதைச் சுருக்கமாகச் சொல்றேன். அதாவது, தங்கமுத்து இறப்பதற்குச் சில நாட்கள் முன்பிலிருந்து, வெகுநாட்களாக நெருங்கிய நண்பர்களாயிருந்த செண்பகராமன் சாருக்கும் தனுஷ் தங்கமுத்துவுக்கும் இடையில் மனக்கசப்பு தோன்றிவிட்டது. அதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்ததில், தனக்குக் கொடுக்கப்படும் சம்பளம் குறைவு என்று தங்கமுத்து எண்ணியதாகவும், நாடகக் கம்பெனியில் தன்னைப் பங்குதாரராகச் செண்பகராமன் அறிவிக்க வேண்டுமென்றும், அவருக்குப் பிற்காலம் அது தங்கமுத்துவையே வந்து சேர வேண்டும் என்று சொன்னதாகவும் தெரிந்துகொண்டோம்.

“செண்பகராமன் மறுத்தார். அவர் அடிமனதில் தன் மகளையோ, அல்லது மகளை மணக்கும் மாப்பிள்ளையையோ நாடகக் கம்பெனியில் பங்குதாரராக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அவருடைய குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை அவருடைய குடும்பத்திலேயே இருந்துவிட்ட நாடகக் கம்பெனியின் நிர்வாகத்தைத் தங்கமுத்துவிடம் வழங்க அவருக்கு மனம் வரவில்லை.

“ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த தங்கவேலு, செண்பகராமன் அவர் மகளைத் தனக்கு திருமணம் செய்து வைத்துவிடுமாறு வற்புறுத்தினான். அப்போது தன்னைப் பங்குதாரராக்கச் செண்பகராமன் தயங்க வேண்டியதில்லை என்றும் கூறினான்.

“செண்பகராமன் வெடித்தார். ஒருநாள் அவருக்கும் தங்கமுத்துவுக்கு பெரிய மோதல் நிகழ்ந்தது. அன்றிரவு நாடக மேடையிலேயே தங்கமுத்து உயிர் துறந்தான். செண்பகராமனுக்குத் தெரிந்த டாக்டர் வந்து பார்த்துவிட்டு, மாரடைப்பால் உயிர்போனதாகச் சான்றிதழ் கொடுத்தார்.

“ஆனால் தங்கமுத்துவுடைய மரணத்தில் செண்பகராமனுக்கு ஏதோ பங்கிருக்கிறது என்ற வதந்தி ட்ரூப்பில் பரவியிருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்றும் உண்மையில் அன்று என்ன நடந்தது என்பதையும் செண்பகராமன் சார், நீங்கதான் தெளிவுபடுத்தணும்” – தர்ஷினி பேச்சை முடித்தாள்.

செண்பகராமன் எங்கோ வெறித்தார். “என் தப்பு! என் தப்புத்தான் எல்லாம்! செந்தில்குமார்! உன் அப்பாவைக் கொன்னது நான் தான்ப்பா! அதுக்காக என்னை நீ கொன்னாலும் எனக்குக் கவலையில்லை.

“இந்தப் பெண் சொன்னது எல்லாமே சரி. தங்கமுத்து என்னை வாட்டி எடுத்தான். சாந்தமதியை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி வற்புறுத்தினான். இல்லேன்னா என் இளமைக்காலத் தவறுகளை எல்லாம் என் வீட்டில் சொல்லி என் குடும்பத்தை நிம்மதியே இல்லாம ஆக்கிடுவேன்னு மிரட்டினான். அவன் செத்த அன்னிக்கு, எங்க சொந்த ஊரில் பதினைந்து ரௌடிகளை ஏற்பாடு பண்ணியிருக்கறதாகவும், அவனுக்குப் பார்ட்னர்ஷிப் கொடுக்கவும் சாந்தமதியைக் கட்டிக் கொடுக்கவும் சம்மதிக்காட்டா, நாடகம் முடிஞ்சதும் அவங்களுக்கெல்லாம் ஸிக்னல் கொடுத்து என் பெண்ணைக் கடத்திட்டு வரச் சொல்வேன்னும் மிரட்டினான்.

“நான் என்ன செய்வேன்? போலீஸில் சொன்னா என் தவறுகள் வெட்ட வெளிச்சம் ஆகிடும். அதனால் இன்றைக்கு இந்தக் கடத்தல் நடக்காம தடுத்துட்டா, அப்புறம் தங்கமுத்துவைப் பேசியோ மிரட்டியோ சமாளிச்சுக்கலாம்னு முடிவு செய்து, அவனுக்கு செடட்டிவ் மாத்திரைகள், தூக்க மருந்துன்னு நாம பொதுவா சொல்றது, டீயில் கலந்து கொடுத்தேன். அதைப் பார்த்தவங்க, நான் அவனுக்கு ஏதோ விஷம் வெச்சுட்டேன்னு நினைச்சிட்டாங்க!

“நாடகம் முடிஞ்சதும் தங்கமுத்து தூங்கிடுவான்ன்னு நினைச்சேன். அவன் ஒரேடியா தூங்கிட்டான்! ஏற்கெனவே அவனுக்கு இதயநோய் இருந்திருக்கணும், செடட்டிவ் சாப்பிட்டதும் இதயம் தாங்காம, மாரடைப்பு வந்து இதயம் நின்னுடுச்சு.

“தம்பி, செந்தில்குமார், சத்தியமா சொல்றேன்! உன் அப்பாவைக் கொல்லணும்னு நான் நினைக்கலைப்பா! ஆனா அவனைக் கொன்னது நான்தான்! அந்தப் பாவம்தான் என்னை இப்படித் துரத்தித் துரத்தி அடிக்குது!” என்று வருத்தத்துடன் உரைத்தார் செண்பகராமன்.

செந்தில்குமார் பேசவில்லை. ஆனால் அவன் கண்ணிலிருந்து கண்ணீர் பெருகியது. மௌனமாகக் குலுங்கி அழுதான்.

இரண்டு நிமிஷங்கள் அவனை அழவிட்டுவிட்டு, தர்ஷினி மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள். “ஆக, தங்கமுத்து இறந்தார். அதன்பின் நாடகங்களே நடக்கவில்லை. பின்னர் அது மீண்டும் தொடங்கும் நேரத்தில் சில அசம்பாவிதங்கள் ஆரம்பித்தன. அவை சிசுபாலன் என்ற கேரக்டரை ஒட்டி நடந்தன. அதனால் இந்தச் சம்பவங்கள் தங்கமுத்து மரணத்தோடு சம்பந்தப்பட்டவை என நாங்கள் நினைத்தோம். அப்படிச் செய்யக் கூடியவர் செந்தில்குமார் ஒருவர்தான்.”

“ஐயையோ! சத்தியமா அந்த விபத்தெல்லாம் நான் செய்ததில்லீங்க! இல்லிங்க!” என்றான் செந்தில்குமார், சட்டென்று நிமிர்ந்து. தர்ஷினி அவனைக் கையமர்த்திவிட்டுத் தொடர்ந்தாள்.

“அவர் வந்தபிறகுதான் இவையெல்லாம் நடந்தன என்றாலும் அவர் இதைச் செய்திருக்க மாட்டார் என்பதற்கு எங்களுக்குப் பல சமிக்ஞைகள் தெரிந்தன. பலராமனாக நடித்த ராஜா என்பவர் காயம்பட்ட அன்று, செந்தில்குமாரும் சீனில் இருந்திருக்கிறார்! அவர் வேறொருவரைத் தூண்டிச் செய்ய வைத்தாலும் தான் வராத ஒரு சீனில் சுத்தியைக் கீழே போடுமாறு சொல்ல மாட்டாரா?

“இதைச் செய்வது ஒரு வேளை நாடகத்தில் நடிக்காத, அல்லது சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பவர் என்றும் எங்களுக்குத் தோன்றியது. அப்போதுதான் ஆனந்தன் எங்கள் சந்தேக வலையில் விழுந்தான்.

“ஆனந்தன் மிகத் துல்லியமாக எங்கள் சந்தேகத்திற்குப் பொருந்திப் போனான். ஏனெனில் அவன் சற்று மனநிலை சரியில்லாதவன், நாடக மேடையில் அதிகம் தோன்றாதவன், தச்சு வேலைகளில் உதவுபவன். ஆனால் அவனுக்குச் சிசுபாலன்மீது என்ன கோபம்? ஏன் சிசுபாலன்களைப் பழிவாங்க வேண்டும்?

“இதற்குப் பதில் எங்களுக்கு ஆச்சரியமாக நரேந்திரனிடமிருந்து கிடைத்தது. அதாவது, ஆனந்தன் அத்தை பிள்ளையால் பாதிக்கப்பட்டவன். சிசுபாலனும் கிருஷ்ணனுக்குக் கஷ்டம் கொடுக்கும் அத்தை பிள்ளை. சைக்கலாஜிகலாக இந்த கேரக்டர்மீது அவனுக்குக் கோபம் இருக்க சான்ஸ் இருக்கிறது என்று உணர்ந்தோம். அப்படிப்பட்ட தூண்டுதல்கள் ஏதும் இல்லையெனில், ஆனந்தன் இப்படியெல்லாம் செய்பவனே அல்ல. அவன் லாஜிக்கலாகச் சிந்திக்கத் தெரியாதவனாயினும், மிக மிக நல்லவன்.

“ஆனந்தன்தான் இந்தச் செயல்களைச் செய்கிறான் என்று நரேந்திரனிடம் பேசும் முன்னரே நாங்கள் முடிவு செய்துவிட்டோம். நரேந்திரன் அதற்கு வலு சேர்த்தார். ஆனால் அத்துடன் எங்கள் தேடல் முடிவடைந்து விடாதே. கிருஷ்ண லீலா நாடகம் சில ஆண்டுகளாகவே மனமோகன விலாஸால் போடப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் சிசுபாலன்மீது கோபம் வராத ஆனந்தனுக்கு இப்போது எப்படி வந்தது? இன் அதர் வர்ட்ஸ், யார் அவனைத் தூண்டியது? யாருக்காக அவன் இப்படியெல்லாம் செய்கிறான்? யார் அவனுக்கு டீயில் கலக்க விஷம் கொடுத்தது? யார் சுண்ணாம்பு டப்பாவில் விஷம் கலந்தது?

“பாவம், ஆனந்தன். அவனிடம் யார் என்ன சொன்னாலும் அவனுக்கு ஆளை மறந்துவிடும், சொன்ன விஷயம் மட்டும்தான் நினைவிருக்கும், எனவே அவனைக் கேட்டும் பயனில்லை.

“எப்படியாயினும் ஆனந்தன் ஒரு கருவி மாத்திரமே. அவனை வைத்துக்கொண்டு தன் காரியத்தை நடத்திக் கொள்வது வேறொரு நபர். மிகக் கெட்டிக்காரரான, சூக்ஷ்மமான புத்தியை உடையவரான அந்த நபர் யாரென்று இனித் தன்யா விளக்குவாள்” என்று சொல்லி அமர்ந்தாள் தர்ஷினி.

எல்லோருடைய கண்களும் தன்யாவை நோக்கின.

தன்யா எழுந்தாள்.

(நிறைவுப் பகுதி தொடரும்)

மனமோகனவிலாஸ்!  6

மனமோகனவிலாஸ்!  6

சாய்ரேணு சங்கர்

6

6.1

எல்லோரும் பிரமித்து நின்றார்கள்.

என்னவோ ஏதோ என்று பலர் ஹாலுக்குள் ஓடி வந்தார்கள். செண்பகராமனும் கலையரசுவும்கூட வந்தார்கள்.

ஆனந்தன் என்ன நடக்கிறது என்றே புரியாதவன்போல, வரிசையாக எல்லோருக்கும் டீ கொடுத்தான். எல்லோரும் மயக்கத்தில் இருப்பவர்கள்போல் டீயை வாங்கிக் கொண்டார்கள்.

கலையரசு திடீரென்று “யாரும் டீயைக் குடிக்காதீங்க” என்று கத்தினார். “இந்தப் படுபாவிதான் அன்னிக்கு டீ கொண்டுவந்தான். நம்ம வெற்றிவேலர் அதைக் குடிச்சு மயங்கி விழுந்தவரு, இன்னும் எழுந்திருக்கல. இவன் பாவம் பாவம்னு நினைச்சு, நம்மதான் பாவமா போயிட்டோம். யாரும் குடிக்காதீங்க! இவன் கையால இனிமே ஒரு துரும்புகூட வாங்கக் கூடாது” என்றார்.

“பொறுமையா இருங்க, கலையரசு ஐயா” என்றாள் தன்யா. “ஆனந்தா, இங்கே வா” என்றாள். ஒரு டம்ளரை அவனிடம் கொடுத்து “குடி” என்றாள்.

ஆனந்தன் தயங்கினான். “சும்மா குடி” என்றதும் பயந்துகொண்டே குடித்தான். எல்லோரும் ஆனந்தனையே உற்றுப் பார்த்தார்கள்.

ஐந்து நிமிடம் அமைதியாகக் கழிந்தது. ஆனந்தன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு நின்றான்.

“இந்த டீயில் எந்த விஷமும் இல்லேன்னு இப்போ எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும். தாராளமா குடிக்கலாம்” என்றாள் தன்யா. ஆனால் யாரும் டீயைக் குடிக்கவில்லை. மீண்டும் ஆனந்தனின் ட்ரேயிலேயே வைத்துவிட்டு ஒவ்வொருவராக வெளியேறினார்கள்.

“பாவம் ஆனந்தன், அப்பாவி. அவன் ஏதும் தப்புச் செய்திருப்பான்னு எனக்குத் தோணல” என்றார் சூரி.

“அவனா செய்யமாட்டான், யாரும் சொல்லிக் குடுத்துச் செய்திருக்கலாமே” என்றான் நரேந்திரன். தன்யா அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“அதையும் இப்ப விசாரிச்சுடுவோம்” என்றாள். “ஆனந்தா, சூரி ரூமில் இருந்த ஃபேனை நீதானே லூஸ் பண்ணின? ஃபேனை நீதானே கழட்டின?” என்று மறுபடி கேட்டாள் அவன் விழிப்பதைக் கண்டதும்.

“ஆமாங்க” என்றான் ஆனந்தன்.

“ஏன் அப்படிப் பண்ணின?”

“பண்ணச் சொன்னாங்க!”

6.2

“மனவளர்ச்சி குன்றியவன்னு சொல்றாங்க, என்ன அழுத்தம் பார்த்தீங்களா? கடைசிவரையில் யார் பண்ணச் சொன்னாங்கன்னு சொல்லவே இல்லையே அவன்!” என்றான் செந்தில்குமார்.

அந்த ஹாலில் அப்போது தன்யா, தர்ஷினி, செந்தில்குமார் மட்டுமே இருந்தனர்.

“எல்லோரும் எல்லாத்தையும் சொல்லிடறாங்களா?” என்றாள் தன்யா. “இப்போ நீங்களே இருக்கீங்க, உங்க மனதிலுள்ள ரகசியங்கள் எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா?”

“என்ன சொல்றீங்க? நான் எதை மறைச்சேன்?”

“மிஸ்டர் செந்தில்குமார், உங்க அப்பா இறந்துபோகும்போது அவருக்கு அப்படி ஒண்ணும் வயசாகல. உங்க அப்பா இறந்ததற்கும் செண்பகராமனுக்கும் சம்பந்தம் இருக்குன்னு எல்லோருமே பேசறாங்க. ஆனா உங்களுக்கு அவர்மேல கோபம் வரலை. அவர்கிட்டயே வேலைக்குச் சேர்ந்திருக்கீங்க, அமைதியா இருக்கீங்க…” என்று தன்யா சொல்லிவரும்போதே இடைமறித்தான் செந்தில்குமார்.

“…அதாவது, நல்லவனா இருந்தா தப்புங்கறீங்க! இதோ பாருங்க மேடம். நான் உங்களுக்கு என் கடந்தகால நிகழ்ச்சி ஒண்ணைச் சொன்னா உங்களுக்கு என் ரியாக்ஷன் புரியும்…” என்றவன் தொண்டையை ஒருமுறை கனைத்துவிட்டுக் கொண்டான். தொடர்ந்தான் – “காலேஜ் ஃபைனல் இயர் படிக்கறப்போ, எங்க காலேஜில் சந்தியா செல்வின்னு ஒரு பொண்ணு படிச்சா. காலேஜ் காம்பெடிஷனில் ப்யூட்டி க்வீனா செலக்ட் ஆனா. அவ பின்னாடி சுத்தாத காலேஜ் பசங்களே கிடையாது, நான் உட்பட. ஒரு சமயம் நான் அவளை வழிமறிச்சுக் கிண்டல் பண்ணினேன். அவ வேகமா ஓடினா. அப்போ எங்க காலேஜைச் சேர்ந்த வேறு ஒரு ஸ்டூடண்ட் அவ லவ்வை ரிஜக்ட் பண்ணின கோபத்தில் அவ மேல ஆசிட் பல்பை வீசிட்டான். ஒரு சில துளிகள்தான் அவ மேல பட்டது. பெரிய காயம் எதுவும் படல, ஆனா…”

தன்யாவுக்கும் தர்ஷினிக்கும் அடுத்து என்ன வருகிறது என்று புரிந்தது.

“நீங்க கெஸ் பண்ணிட்டீங்க, ஆசிட் வீசின பழி என்மேல் விழுந்தது. அந்தப் பெண்ணுக்குப் பாதிப்பு எதுவும் இல்லைங்கறதால, என்னை காலேஜிலிருந்து டிஸ்மிஸ் பண்றதோட நிறுத்திக்கிட்டாங்க. போலீஸ் கம்ப்ளெயிண்ட் எல்லாம் கொடுக்கல…

“இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு பாடமா இருக்கணும்னு முடிவு பண்ணினேன். நிரூபிக்கப்படாம யார் மேலயும் குற்றம் சாட்டி அவங்களை வெறுக்கக் கூடாதுன்னு பாடம் கத்துக்கிட்டேன். செண்பகராமனுக்கும் என் அப்பா மரணத்திற்கும் சம்பந்தம் இருக்குன்னு எனக்கு நிச்சயமா தெரிஞ்சா அது வேற, ஆனா அதுவரை அவருக்கு… ஏதோ நீதிமன்றத்தில் சொல்வாங்களே… ஆங், சந்தேகத்தின் பலன்… அதை அளிக்கறதுன்னு முடிவு செய்திருக்கேன்.”

சின்ன மௌனம்.

தன்யாவும் தர்ஷினியும் எழுந்து நின்றார்கள். “சல்யூட், செந்தில்குமார்” என்றார்கள்.

6.3

தன்யாவும் தர்ஷினியும் நரேந்திரனைச் சந்தேகப் பார்வையால் நனைத்தார்கள்.

“மேடம் வரச் சொன்னதா…” என்றான் நரேந்திரன்.

“வாங்க, உட்காருங்க நரேந்திரன்” என்றாள் தன்யா.

“வணக்கம்” என்றான் நரேந்திரன்.

“உங்களுக்கும் ஆனந்தனுக்கும் பழக்கம் எப்படி?” என்று உடனே விஷயத்துக்கு வந்தாள் தன்யா.

“நல்ல பழக்கம், நான் என்ன சொன்னாலும் அவன் கேட்பான், நான்தான் விஷம் வைக்கச் சொன்னேன், நான்தான் ஃபேனை லூஸ் பண்ணி வைக்கச் சொன்னேன், இப்படியெல்லாம் நீங்க இதற்குள்ள முடிவுக்கு வந்திருப்பீங்க, அப்புறம் பேச என்ன இருக்கு? வேணும்னா என்னை அரெஸ்ட் பண்ணலாம்” என்றான் நரேந்திரன்.

“இப்படியெல்லாம் நீங்க செய்ய மோட்டிவ் என்ன, நரேந்திரன்?” என்றாள் தர்ஷினி மெதுவாக.

நரேந்திரன் அவள் பக்கம் திரும்பினான்.

“அதுவும் இதுக்குள்ள தெரிஞ்சிக்கிட்டிருப்பீங்களே, நான் ஜிகினா சிவகாமுவோட மகன்னு பேச்சு உலாவுது, அது காரணமா இருக்கலாம்.”

“இதையெல்லாம் நீங்க ஒத்துக்கறீங்களா?”

“நான் ஏன் ஒத்துக்கணும்? ப்ரூவ் பண்ண வேண்டியது உங்க வேலை. இவ்வளவு பேசறீங்க, எனக்குச் சிசுபாலன் மேல என்ன கோபம்? அதைப் பற்றி நீங்க எதுவும் பேசவேயில்லை. ஒரு ஆளுக்குச் சரியான மோட்டிவ் இருக்கு, அதைப் பற்றியும் நீங்க பேசலை.”

“என்ன சொல்றீங்க?”

“ஆனந்தன். அவனைப் பற்றிதான் சொல்றேன். இவன் உண்மையில் பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளை. இவன் அப்பா இறந்துட்டாரு. இவனுடைய அம்மாவையும் இவனையும் இவனோட அத்தை பிள்ளை வீட்டை விட்டே துரத்திட்டான். இவன் இங்கே டீ ஆத்திக்கிட்டும் ஸ்க்ரீன் தள்ளிக்கிட்டும் இருக்கும்போது அவன் அங்கே ராஜபோக வாழ்க்கை வாழறான்.”

“ஐ ஸீ. ரொம்பப் பாவம்” என்றாள் தன்யா. “ஆனா அதுக்கும் இங்க நடக்கறதுக்கும்…”

“என்னங்க இவ்வளவு ஸ்லோவா இருக்கீங்க? சிசுபாலன் கிருஷ்ணனோட அத்தை பிள்ளை, இது தெரியாதா உங்களுக்கு?”

தன்யாவும் தர்ஷினியும் ஏககாலத்தில் எழுந்து நின்றார்கள்.

“நரேந்திரன், செந்தில்குமார் எல்லோருடைய கோபமும் செண்பகராமன் மீதுதான் இருக்கும், சிசுபாலன்மீது இருக்காது. ஏன் இதையெல்லாம் நான் செய்யணும், தலையைச் சுற்றி மூக்கைத் தொட? யாருக்குச் சிசுபாலன்மீது கோபம்னு பார்ப்பீங்களா…. அதை விட்டுட்டு…”

நரேந்திரன் கேலிப் புன்னகையுடன் எழுந்து போனான்.

“திமிர் பிடிச்ச ராஸ்கல்” என்றாள் தன்யா.

6.4

“கலையரசு ஐயா, ஓப்பனா கேட்கிறேன். நரேந்திரன் செண்பகராமனோட மகனா?” என்றாள் தன்யா.

“தெரியலைம்மா. அப்படின்னு ஒரு வதந்தி உலாவுது, அவ்வளவுதான். ஏன், ஆனந்தன்கூடச் செண்பகராமனோட மகன்னு சொல்றவங்க உண்டு” என்றார் கலையரசு.

“என்னதிது புது வம்பு? ஸ்ரீஹரி பற்றிச் சொல்லுங்க.”

“ஸ்ரீஹரி எங்க ட்ரூப்போட செல்லப் பிள்ளை. எங்க ஹீரோ சந்தானம் சார் மகன். நல்ல பையன்மா, அவன் மேல சந்தேகப்படாதீங்க” என்றார் கலையரசு.

“ஒரே வாரிசுகள் பற்றிய பேச்சா இருக்கு. உங்க பிள்ளைங்க என்ன செய்யறாங்க?” என்றாள் தர்ஷினி சிரித்தவாறே.

“எனக்கு ஒரே பிள்ளை. அவன் சினிமா கதாசிரியரா இருக்கான். அவனுடைய கதையைத் தெலுங்கு ப்ரொட்யூசர் வாங்கிக்கறதா சொல்லியிருக்கார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப் போறார்” என்றார் கலையரசு பெருமையாக.

“சூரி சார் பசங்க?”

“அவருக்கு ரெண்டு பொண்ணு. படிக்கறாங்க. நடராஜன் ஐயா பையன் டீவி சீரியல்களில் நடிக்கிறான்.”

“நாடகத்திற்கு இவங்கள்ளாம் வரலியா?”

“இது என்ன வாழ்க்கைம்மா? நாங்கள்ளாம் இதிலேயே பழகிட்டோம், ஆனா இந்தக்காலக் குழந்தைகளுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. இங்கே சுதந்திரம் கிடையாது. புதுசுபுதுசா எதுவும் முயற்சி செய்ய முடியாது. சொன்ன டயலாக்கையே சொல்லிட்டிருக்க வேண்டியதுதான்.

“இப்போ என்னையே எடுத்துக்குங்க. புராண நாடகம் எழுதறதுதான் என்னோட வேலை. நம்ம ட்ரூப்ல அதைத்தவிர வேறெதுவும் போட மாட்டாங்க. ஆசையா வேறொரு துறையில் நாடகம் எழுதினேன். அதை வேண்டாம்னுட்டாங்க. இருக்கறதிலே அப்பப்போ கொஞ்சம் மாற்றம் பண்ணித்தரச் சொல்லுவாங்க. புது நாடகம் போட்டாதான் எனக்கு வேலை வரும். ஆனா செண்பகராமன் ஐயா அப்பப்போ மாற்றங்கள் செய்துக்கிட்டே இருப்பாரு. வசனம் பழமையா இருக்க விடமாட்டாரு. புதிய பாடல்கள் சேர்ப்பாரு. இளைஞர்களுக்குப் பிடிக்கறதுக்காக ஏதாவது செய்துட்டே இருப்பாரு.

“இருந்தாலும் இன்றைய தலைமுறைக்கு நாடகத்துறை பிடிக்கறது கஷ்டந்தான். ஸ்ரீஹரி, செந்தில்குமார் மாதிரி அபூர்வ விதிவிலக்குகளும் உண்டு” என்று முடித்தார் கலையரசு.

6.5

“ஸாம்மி, நாங்க ஆஃபீஸ் போயிட்டு வந்துடறோம்” என்றாள் தன்யா.

“என்ன தன்யா, இப்போ கிளம்பறீங்க? சாயந்திரம் நாடகம் இருக்கு, தெரியுமில்ல?” என்றாள் ஸாம்மி.

“பயப்பட வேண்டாம், எங்க ஏஜன்சி அச்யுத்தை இங்கே விட்டுட்டுப் போறோம். அவன் எல்லார் மேலும், குறிப்பா ஆனந்தன் மேல, ஒரு கண் வெச்சிப்பான். உங்க வேலையாகத்தான் போகிறோம். வேலை முடிஞ்சதும் எப்படியாவது நாடகம் ஆரம்பிக்கறதுக்குள்ள வந்துடறோம்” என்றாள் தன்யா.

“ஸாம்மி, ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டோம். உன் அப்பாவைக் கூப்பிடு” என்றாள் தர்ஷினி.

6.6

செண்பகராமன் அன்று முழுவதும் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டேயிருந்தார். ஒருமுறை எல்லோரையும் கூப்பிட்டுப் பேசினார்.

“நீங்க எல்லோரும் எத்தனையோ கஷ்டத்தில் என் கூட நின்னிருக்கீங்க. இது யாரும் எதிர்பாராத, பெரிய கஷ்டமா வந்துட்டது. உங்க எல்லார் கிட்டயும் கெஞ்சிக் கேட்டுக்கறேன். இன்றைக்கு ஒருநாள் நாடகத்தை நடத்திக் கொடுத்துடுங்க. அடுத்தடுத்த நாட்களுக்கு அவங்க வேற ஏற்பாடு பண்ணிக்கறதா சொல்லிட்டாங்க. இன்று மட்டும் ஷோ நடக்கட்டும். இந்தச் செண்பகராமன் வாக்குத் தவறினேன்னு இருக்கக் கூடாது.

“இன்றைய ஷோவுக்கு அப்புறம் நம்ம ட்ரூப் பெயர், ஸ்க்ரிப்ட் எல்லாத்தையும் நான் சென்னையில் பெரிய நாடகக் கம்பெனி இருக்காங்களே – நாரதர் நாடக மன்றம் – அவங்களுக்கு வித்துடப் போறேன். நம்ம நடிகர்களே இந்த நாடகங்களைத் தொடர்ந்து நடிக்கணும்னு அவங்க விரும்பறாங்க. விருப்பம் இருக்கறவங்க போய்ச் சேர்ந்துக்கலாம்.

“நான் பண்ணின பாவம், என் கடைசிமூச்சு போகற வரைக்கும் நான் நம்ம நாடகக் கம்பெனியை நடத்தணும்னு ஆசைப்பட்டேன், நடக்காது போலிருக்கு. அம்பாள் சன்னிதிலதான் நம்ம மனமோகன விலாஸ் சபா ஆரம்பிச்சதுன்னு என் தாத்தா சொல்வார். அங்கியே அது முடியட்டும். நூறாண்டு கண்ட நாடக சபா என்ற பெருமை அதுக்கு இருக்கு, அது மறையாது!”

பலர் இதைக் கேட்டுக் கண்ணீர் விட்டார்கள். செண்பகராமனை மனதை மாற்றிக் கொள்ளச் சொல்லி மன்றாடினார்கள்.

“இல்லை, வெற்று வீம்பைவிட நம்ம மெம்பர்களோட உயிர் பெரிசு. இங்கே என்ன நடக்குதுன்னே புரியலை. நான் எடுத்திருக்கற முடிவுதான் சரி” என்றார் செண்பகராமன்.

கடைசிநேர ஒத்திகைகள் நடந்தன. மாலை நான்கு மணிக்குக் கிருஷ்ண லீலையும் ஏழு மணிக்குத் தேவி லீலையும் நடைபெற்றன. ஏழு மணிக்குள் தன்யாவும் தர்ஷினியும் வந்துவிட்டார்கள். நாடகங்கள் எந்தத் தடங்கலுமின்றி நடந்து முடிந்தன. இதுதான் கடைசி ஷோ என்ற எண்ணத்திலோ என்னவோ எல்லோரும் கோர்வையாக, ஒருவருக்கொருவர் ஆதரவாக, அற்புதமாக நடித்தார்கள். கோயில் கமிட்டிக்காரர்கள் தங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தபோது செண்பகராமன் கண்கள் நிறைந்துவிட்டது.

செண்பகராமன் நிறைந்த மனத்தோடு அன்று படுக்கைக்குச் சென்றார். நிம்மதியாக உறங்கினார்.

இரவு இரண்டு மணிக்கு ஏதோ அரவம் கேட்டு விழித்தார். அவருக்கு நேர் எதிரே கையில் கத்தியோடு ஒரு உருவம்!

“யாரது?” என்று விளக்கைப் போட்டார்.

செந்தில்குமார்!

(தொடரும்)

86. சிறுகதை

86…   நந்து சுந்து

86

பாய்ஸ் ரீ யூனியன் இருக்கு. வர்ரியா?” என்றான் நண்பன் பிரபு.

பாய்ஸ் ரீ யூனியனா? கேர்ள்ஸ் கிடையாதா?” என்றேன்.

கேர்ள்ஸும் உண்டு

சரி. அப்போ வர்ரேன்

கும்பகோணத்தில் பள்ளியில் படித்த காலம் நினைவுக்கு வந்தது. Wait. நீ சேலத்தில் தானே படிச்சே? என்று கூவ வேண்டாம்.

கும்பகோணம் என்று தான் flash back ல் எழுத வேண்டும். Tourism map ல் பார்த்தால் கூட கும்பகோணத்தைப் பற்றி the most preferred flash back destination என்று தான் போட்டிருக்கும்.

ஒரு தடவை ஸ்கூலை போய் பாத்துட்டு வரலாமா?” என்று கேட்டான் பிரபு.

இருவரும் ஸ்கூலுக்கு போனோம்.

வாசலில் ஒரு செக்யூரிட்டி இருந்தார். 35 வயது இருக்கும்.

என்னடா நாம படிச்சப்ப இருந்த செக்யூரிட்டி தசரத ராஜ் இன்னும் இளமையா இருக்காருஎன்றேன்.

நான் தசரதராஜ் மகன் ராமராஜ். இப்போ நான் தான் இங்கே செக்யூரிடி

அப்பா எங்கே?”

போய் சேந்துட்டாரு..இப்போ சொர்க்கத்துல செக்யூரிட்டியா இருக்காரு

சொர்க்கமே என்றாலும் நம்மூரு செக்யூரிட்டி போல வருமா? ஏன் அவசரப்பட்டுப் போனார்

நாங்க ஸ்கூலுக்கு உள்ளே போய் பாக்கலாமா?”

இப்போ பசங்களுக்கு tik tok  time. பிஸியா இருப்பாங்க. நீங்க நாலு மணிக்கு மேல வாங்க

நான்கு மணிக்கு ஸ்கூல் உள்ளே போனோம். உள்ளே கால் எடுத்து வைத்ததும் ஜில்லென்று உணர்ந்தேன்.

டேய்..தேங்கியிருந்த தண்ணீல காலை வைச்சிட்டே..எடுஎன்றான் பிரபு.

நாங்கள் படித்த 10 C செக்ஷனுக்கு போனோம்.

இரண்டாவது வரிசை பெஞ்சில் போய் அமர்ந்தேன்.

இந்த பெஞ்சுல தான்டா எப்பவுமே உக்காந்துகிட்டு இருப்போம் …”

தப்பா சொல்றே. இந்த பெஞ்சுல தான் எப்பவும் நின்னுகிட்டு இருப்போம்

வாத்தியார் பாடம் நடத்தும் போது சீரியசாக டிஸ்கஸ் செய்து கொண்டிருப்போம். முன் பெஞ்ச் கேர்ள்ஸ்  கூந்தலில் இயற்கையாகவே பேன் உண்டா என்று விவாதித்துக் கொண்டிருப்போம்.

இதன் பலனாக எங்களை பெஞ்ச் மேல் நிற்கச் சொல்வார் வாத்தியார்.

கற்றலின் நிற்றல் நன்று என்று நாங்களும் ஏறி நிற்போம். Ariel view ல் பார்க்கும் போது கனகா கடலை மிட்டாய் சாப்பிடுவது தெரியும்.

சுந்தரி நமக்கு முன்னால பெஞ்சுல தான் உக்காந்திருப்பாஎன்ற பிரபு என்னையே பார்த்தான். சுந்தரி என்ற பெயரைக் கேட்டதும் ஒரு vibration உண்டானது. போன் vibration mode ல் ரிங் ஆனது.

நீ யாருக்கும் தெரியாம சுந்தரியை மூனு வருஷம் லவ் பண்ணே. எனக்குத் தெரியும்என்றான் பிரபு.

ஆம். ஒரு நாள் Black board ல் கூடராம் லவ்ஸ் சுந்தரிஎன்று யாரோ எழுதியிருந்தார்கள்

சுந்தரியின் முழுப் பெயர் கே.பி. சுந்தராம்பாள். கே.பி.எஸ் பாடல்களை அப்படியே பாடுவாள்.

வாத்தியார் சில சமயம் அவளைக் கூப்பிட்டு பாடச் சொல்லுவார்.

அவளும்சென்று வா மகனேசென்று வா..’ என்று பாடுவாள். வகுப்பில் இருக்கும் மாணவர்கள் எல்லாம் வெளியே சென்று விடுவார்கள்.

கே.பி.எஸ்ஸின் எல்லா பாட்டையும் சுந்தரி பாடினாலும்வெண்ணீர் அணிந்ததென்ன…’ பாட்டை மட்டும் பாடவே மாட்டாள்.

நான் எவ்வளவோ முறை கேட்டும் அவள் பாடவில்லை.

ஒரு முறை மன்த்லி டெஸ்ட் போது காப்பி அடிக்க அவளிடம் ஆன்ஸர் பேப்பர் கேட்டேன். அவள் கொடுக்கவில்லை. கோபத்தில் நான்கு அடிஷனல் ஷீட் வாங்கி 32 பக்கம் வெத்து பேப்பராக கட்டிக் கொடுத்தேன்

ஒரு வாரம் அவளுடன் பேசவில்லை. அவளும் பேசவில்லை. பிறகு நான் பேசப் போன போது ஒதுங்கிப் போனாள்.

இரண்டு வாரம் அழுதேன்.

மூன்றாவது வாரத்தில் சிரித்தாள். ஒரு வார்த்தை பேசினாள்.

பழம் நீயப்பா…’ என்று பாடி என்னுடன் பழம் விட்டாள்.

நாங்கள் இருவரும் லவ் செய்வது அவர்கள் வீட்டுக்கு தெரிந்து விட்டது.

அவ்வளவு தான். அவர்கள் அப்பா ஒரு பாடி கார்ட் மாதிரி அவளுடன் ஸ்கூலுக்கு வர ஆரம்பித்தார்.

காலை முதல் மாலை வரை ஸ்கூலில் வேப்ப மரத்தடியில் வெட்டியாக நின்று கொண்டிருப்பார். பால்காரர் பெரிய பால் கேனை சைக்கிள் பின் பக்கம் கட்டி வைத்து கொண்டு போவது போல சுந்தரியை சைக்கிளில் கட்டி வைத்து  கூட்டிப் போவார்.

சுந்தரியின் அப்பா தினமும் ஸ்கூலில் வந்து காத்திருந்ததில் ஒரு விபரீதம் நிகழ்ந்தது. சமூக நூல் டீச்சருக்கு அவர் நூல் விடுவதாக வதந்தி கிளம்பியது.

Toilet wall ல் இது பற்றி status update போட்டார்கள்.

அவமானம் தாங்காமல் சுந்தரியை இழுத்துக் கொண்டு வேறு ஊருக்கு போய் விட்டார் அவளின் அப்பா.அதன் பிறகு சுந்தரியை நான் பார்க்கவில்லை.

கண் மூடி அமர்ந்திருந்தேன்.

சுந்தரி இப்போ எங்கே இருக்கா?”

உகாண்டால இருக்கா..”

கேட்டதும் நான் செம காண்டுல இருந்தேன். என்னை ஏமாற்றி விட்டு போய் விட்டாளே..

சுந்தரி மீட்டுக்கு வர்ராளா?”

ஆமா..வர்ரா…”

கேட்டதும் காதில் இன்பப் பேன் வந்து பாய்ந்தது.

“Alumi meet எந்த ஹோட்டல்ல வைச்சிருக்கு?”

“Aluminium godown . ஹோட்டல்ல வைக்கறதுக்கு பட்ஜெட் உதைக்குது

சந்திப்பு நிகழும் நாள். பின்னால் போய் தனியாக அமர்ந்திருந்தேன். வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன். சுந்தரி எப்போது வருவாள்?

Description: Image may contain: 1 person

அதோசுந்தரி வந்து விட்டாள்.

வெள்ளை சூடிதார் போட்டிருந்தாள்.

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பேசுடா…” என்றான் பிரபு.

சூடிதார் நல்ல வெள்ளையா இருக்கு. பொன்வண்டு சோப் உகாண்டால கூட கிடைக்குமா? ” என்றேன்.

சிரித்தாள். 86 ல் சிரித்த அதே சிரிப்பு

சுந்தரி இப்போ ஒரு பாட்டு பாடு..” என்றார்கள் அனைவரும்.

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்..’ என கே.பி.எஸ் பாட்டை பாடினாள். நான் என்  தொப்பையை பார்த்துக் கொண்டேன்.

சுந்தரி தனியாக வந்தாள்.

இப்பவாவது வெண்ணீர் அணிந்ததென்ன பாட்டை பாடக் கூடாதா?” என்று கேட்டேன்.

என்னைக்குமே பாட மாட்டேன். அதுக்கு பின்னால ஒரு சோக கதை இருக்கு. எங்க அம்மா வெந்நீர் அடுப்பு பத்த வைக்கறப்ப விபத்துல எரிஞ்சு செத்து போயிட்டாங்க. அதுலேந்து வீட்ல வெந்நீரே கிடையாது. காபி டிகாஷன் கூட பச்சைத் தண்ணீல தான் போடுவோம். அன்னைக்கு தான் வெண்ணீர் அணிந்ததென்ன பாட்டு பாடறதை நிறுத்தினேன்

ஸாரி. வெந்நீர் பின்னால ஒரு கண்ணீர் கதை இருக்கறது எனக்கு தெரியாதுசிறிது நேரம் வெந்நீர் ஆறட்டும் என்று காத்திருந்தேன்.

சொல்லுஉனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

இல்லை

ஏன்?”

இருபது வருஷம் முன்னால அப்பா எனக்கு மாப்பிள்ளை பாத்தாரு. செட்டில் ஆயிடுச்சு. ஆனா இன்னும் மண்டபம் கிடைக்கல்லேஉனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என்றாள்.

Description: Image may contain: 1 personஎனக்கும் 20 வருஷம் முன்னால பொண்ணு பாத்தாச்சு..ஆனா கல்யாணம் பண்ணி வைக்க  சாஸ்திரிகள் கிடைக்கல்லே..எல்லா சாஸ்திரிகளும் பிஸி

அப்படியா?”

ஆமா..இவ்வளவுக்கும் அது சாஸ்திரிகளோட பொண்ணு தான்

சுந்தரி விரக்தியாக சிரித்தாள்.

திடீரென நான் கேட்டேன்.

நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா என்ன? மண்டபம் கூட வேணாம். எனக்குத் தெரிஞ்ச போலீஸ் ஸ்டேஷன் ஒன்னு இருக்கு. நல்லா நடத்தி வைப்பாங்க..”

நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணமா? அது முடியாதுஎன்றாள்.”ஏன்?”

அங்கே யார் வந்திருக்காங்கன்னு பாரு..”

பார்த்தேன்.

அவளின் அப்பா நின்று கொண்டிருந்தார்.

அந்த வார்த்தைகள்

அந்த வார்த்தைகள்

*********************

மரு.வெங்கட்ராமன் -கோபி

——————————————————————

‘எப்படியும் நீ சம்மதிச்சுடுவே நு எனக்குத் தெரியும்.மிலிட்டரியிலே இருக்கார்னாலே,நிறைய பேர்மாப்பிள்ளையே வேண்டாம்பாங்க. ஆனா, உன் வீட்டில நீ என்.சி.சி டிரஸ்ல இருந்த போட்டோவைப் பார்த்தவுடன் மனசு நிம்மதியாச்சு.”

முதலிரவில் ராமுவின்வெளிப்படையான பேச்சினால், அவள்

வியப்படைந்தாள்.

“என்னோட தாத்தா காவல்துறை.அம்மாவும் போலீஸ்.

அதனாலே எனக்கும் அந்த ஆசை உண்டு.

என்.சி.சி ல சேர்ந்தேன்.எதேனும் பாதுகாப்புத் துறையிலதான் சேரனும் ஆசை.ஆனா கண்ணிலே பட்ட அடியானாலே எலிஜிபிலிட்டி இல்லாமப் போயிடுச்சு… ஏக்கம் மனசில இருக்கத்தான் இருக்கு.உங்களைப் பத்தி கேட்டவுடன் மனசு நிறைஞ்சு போச்சு.”

அவளுடைய பேச்சைக் கேட்டு அவனும் உணர்ச்சி வசப்பட, அவன் தந்த டம்ளரில் மீதம் இருந்த பாலை அவள் பருகினாள்.

“உங்க வீட்லே உன்னோட தாத்தா,அம்மா எல்லோரும்

போலீஸ்ல இருந்தாங்க. உனக்கு அதில் ஒரு ஆர்வம் நிச்சயம் சின்ன வயசிலிருந்தே இருந்திருக்கும்ல”.

அவளும்,தனது ஆசைகள் முழுவதும் அன்றே சொல்லிவிடவேண்டும் என்பது போல் பேசினாள். தன் கைகளுடன் பிணைந்திருந்த ராமுவின்

விரல்களை நெட்டிப் பிடித்து இழுத்தாள்.

“எனக்கு அந்த என்.சி.சி.காம்ப்பை மறக்கவே முடியாது.

நல்ல மழை வேற, நாங்க தங்கி இருந்த ஊரலே.எல்லோரும் டென்ட்ல ஒண்டிட்டிருந்தோம்மா! அப்ப….”

“இந்த மன்மத ராஜா கனவிலே வந்தாரா?” அவன் குறுக்கிட, அவளோ “ நான் அந்த மாதிரி கனவெல்லாம் கண்டதேயில்லை.வீட்ல உங்களைப் பாத்து, நிச்சயம் ஆனவுடன்தான் கனவு காண ஆரம்ப்பிச்சேன்.” என முடித்தாள்.

“வெளிப்படையா பேசற நீ…ஐ லவ் யு”

“கதைக்கு வருவோம். அப்ப மழையிலே ஒரு பீபளாங் குட்டி…” ராமு விழிக்க, அவள் தொடர்ந்தாள்.

“ஆட்டுக்குட்டிகளை, எங்க அப்பா,எங்களுக்கு கதை சொல்லும் போது அப்படித்தான் சொல்வாரு. இரண்டு குட்டிங்க வழி தவறி அங்க வந்திருக்கும் போல… குளிர்ல நடுங்கிட்டு இருந்தன. அதுகளை அழைச்சுட்டு வர நான் அங்க போன போது மின்னல் தாக்கி…நல்ல வேளை,கண் நரம்பு முழுசும் பாதிக்கல. வலது கண்ல கொஞ்சம் பாதிப்பு. இல்லேன்னா போலீஸ்லையாவது சேரந்திருப்பேன்”.

ராமு பேச்சைத் திசை திருப்பினான் “நீயாவது

ஆசைப்பட்ட. ஆனா,என் கதை தெரியுமா?. நான் இருக்கறதில்லையே மோசமான ஸ்டூடண்ட். அப்பா செல்லம்…பணமும் இருந்துச்சா!. கண்டதே கோலம் நு சுத்திக்கிட்டு இருந்தேன். நான் உருப்படணுமே எல்லோரும் பயந்தாங்க. ஸ்போர்ட்ஸ்ல மட்டும் இன்டெரெஸ்ட் இருந்ததினாலே நோ கெட்ட பழக்கம் …ஆனா அதுலையும் பேர் சொல்ற மாதிரி இல்லை.”

அவளும் “அடுத்து சொல்லுங்கோன்னா” என்றாள்.

“ஐயர் பாஷை தெரியுமா?”வியந்து கேட்டான் ராமு.

“காலேஜ் முடிக்கிற வரைக்கும் பக்கத்து ஆத்து உமாதான்

என் உயிர்த் தோழி.அவா ஆத்து சமையலும் எனக்குத் தெரியும்.”

“எங்க வீட்டு அஷ்டவதானி!” ராமு அவளை இழுத்து அணைத்தான்.

நழுவிய அவள், பொய்க் கோபத்துடன் “முழுக் கதையும்

சொல்லுங்க. உங்களை முழுசும் புரிஞ்சக்கணுமில்ல.”

அவள் பேசினாள்.

“பொறுப்பில்லாம சுத்தறான். கல்யாணம் பண்ணி வைச்சுடலாமா நு பேரண்ட்ஸ் நினைச்சாங்க. தாத்தா மட்டும் எதிர்ப்பு. ‘என் பேரனை பத்தி தெரியும். அவன் பிரமாதமா வருவான் ‘ அப்படின்னு சொல்லி என்னைத் திருத்தப் பாத்தார். நானா ….என் இஷ்டம் தான்

முக்கியம் இருந்தேன்.அப்ப.. இப்படியே பேசி பொழுதை

கழிக்கணுமா?” அவன் பரிதாபமாக கேட்க, அவள் சிரிப்பு அவனை கிறங்க வைத்தது.

“எனக்கும் என் தாத்தா ஞாபகம் வந்துடுச்சு. முழுசும் சொல்லிடறேன். படிப்பிலே சுமார்னாலும் ஃபுட் பாலில் பயங்கர ஆர்வம். ஸ்போர்ட்ஸ்ல தோத்துட்டா பயங்கர கோபம் வரும்.அந்த டீம் மேட்ஸ் கூட சண்டை போட்டா, யாரு வருவாங்க?. நண்பர்களும் குறைய ஆரம்பிக்க…தாத்தாவுக்கும் கவலை. தோட்டத்தோட சேர்ந்த வீடா! மூனு நாய்கள்

வளர்த்தேன். நான் தான் சாப்பாடு போடணும். இதுக்காவது வீட்டிற்கு வரணும் இல்ல. மூனையும் உட்கார வைச்சு சோறு, இல்ல மட்டன், பாலு நு வைப்பேன். அதுகளும் என்னோட அப்படி ஒரு அட்டாச்மென்டோட பழக… ஒரு நாள் டாபிங்கற நாய் இறந்திடுச்சு. எங்க அம்மா அசதியிலே தோட்டத்தில் தூங்கற போது, அங்க வந்த விஷப்பாம்போட சண்டை போட்டதில், அது கடிச்சு எங்க டாபி போயிடுச்சு. இல்லைன்னா அம்மாவை பாம்பு கடிச்சிருக்கும். நான் ரொம்ப டல் அடிச்சுப் போயிட்டேன்”.

உணர்ச்சிவசப்பட்ட ராமு சிறிது நேரம் அமைதியாக இருந்தான். காதலுடன் அவனைப் பார்த்தாள்.

“தாத்தாதான் சொன்னாரு. பிறந்ததுக்கு தன்னோட

கடைமையை டாபி முடிச்சுடுச்சு. பிறந்த எல்லோருக்கும்

ஒரு கடமை இருக்கும். உனக்கும் சேத்துத்தான் சொல்றேன். அந்த வார்த்தைகள் என் மனசை மாத்திடுச்சு.

நம்ம நாட்டுக்காக, நானும் மிலிட்டரியில சேர்ந்தேன்.

ஹவில்தார் லெவல் வரைக்கும் முன்னுக்கு வந்துட்டேன்”.

“எதிரிகளுடன் நடந்த போரில் வீரமரணம் எய்திய ஹவில்தார் ராமுவிற்கு வழங்கப்படுகின்ற ‘பரம வீர சக்ரா’ விருதைப் பெற அவர் மனைவியை அழைக்கின்றோம்” என்ற அழைப்பைக் கேட்டு தன் கனவிலிருந்து மீண்ட அவள், மேடையை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

மன்மோகனவிலாஸ்! 5

சாய்ரேணு சங்கர்

மனமோகனவிலாஸ்! 5

5

5.1

“என்னை மன்னிச்சுடுங்க நடராஜன் ஐயா! நடந்த சம்பவத்துக்காக நான் ரொம்ப வருத்தப்படறேன். இப்போதெல்லாம் நம்ம ட்ரூப்ல என்ன நடக்கறதுன்னு எனக்கே தெரியல” என்றார் செண்பகராமன்.

“என்ன ஐயா நீங்க போய் மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு. நீங்க என்ன செய்வீங்க?” என்றார் நடராஜன். சொன்னாரே தவிர, அவருக்குக் கைகால்களெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன. சூடாக ஒரு கப் காப்பி தருவதாகச் சொன்னதையும் பதறி மறுத்துவிட்டார்.

ஆனந்தன் என்ன நடக்கிறது என்றே புரியாமல் நின்றுகொண்டிருந்தான். “ஐயாவைக் கைத்தாங்கலா அழைச்சுட்டுப் போய் அவர் அறையில் விட்டுட்டு வா” என்றாள் தன்யா.

“நான் விட்டுட்டு வரேன்” என்றார் அங்கிருந்த சூரி. அவர் திரும்பி வரும்வரை எல்லோரும் மௌனமாகக் காத்திருந்தார்கள்.

“ஆனந்தா! என்னடா இதெல்லாம்?” என்று செண்பகராமனே ஆரம்பித்தார்.

“ஐயோ! எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஒண்ணும் தெரியாதுங்க” என்று தீனமாய் அலறினான் ஆனந்தன்.

“அவருக்குச் சுண்ணாம்பு எங்கேருந்து எடுத்துட்டு போனே?” என்றார் சூரி.

“ஐயா அறையிலிருந்துதான்” என்று செண்பகராமன் அறையிலிருந்த பெரிய சுண்ணாம்பு டப்பாவைக் காட்டினான் ஆனந்தன்.

தன்யா அதைத் திறந்து பார்த்தாள். அதில் ஏதும் விஷம் கலந்திருப்பதாகத் தெரியவில்லை.

“இதிலிருந்து சுண்ணாம்பு எடுத்ததும் அதில் ஏதோ கலந்திருக்கே! என்ன கலந்தே சொல்லு!” என்று உறுமினார் சூரி, தன்யாவின் முகபாவத்தைப் புரிந்து கொண்டவராக.

“இல்லீங்க, இல்லீங்க” என்று அலறினான் ஆனந்தன். “நான் நடராஜ ஐயாவோட சுண்ணாம்பு டப்பாவை எடுத்துட்டு இந்த அறைக்கு வந்தேன். அப்போ யாரோ என்னைக் கூப்பிட்டாங்க. டப்பாவை வெச்சுட்டு வெளியே போய்ப் பார்த்தேன், யாரையும் காணோம். திரும்ப உள்ளே வந்தபோது டப்பாவில் யாரோ ஏற்கெனவே சுண்ணாம்பு அடைச்சு வெச்சிருந்தாங்க. அதை எடுத்து வந்திட்டேன்” என்றான்.

“அவர் காலையிலேயே சுண்ணாம்பு கேட்டுட்டாராமே, ஏன் அப்போ கொண்டு போன?” என்றாள் தர்ஷினி.

“மறந்துட்டன். ஐயாவுக்குச் சுண்ணாம்பு கொண்டு போடான்னு யாரோ சொன்னாங்க. சூரி ஐயான்னு நினைக்கறேன்… கொண்டு போனேன். அப்போ கலையரசு ஐயாவும் நரேந்திரன் ஐயாவும் பேசிட்டிருந்தாங்க. அவங்க என்னைக் கூப்பிட்டு ஏதோ கேட்டாங்க, அதனால் கொஞ்சம் நின்னேன். அப்புறம் சுண்ணாம்பைக் கொடுத்தேன்” என்றான் ஆனந்தன்.

தன்யா சற்று யோசித்தாள். பிறகு “அங்கே நடராஜன் தன் அறையில் தனியாவா இருக்காரு?” என்று கேட்டாள்.

“இல்லை, ஸ்ரீஹரியைத் துணைக்கு வெச்சிருக்கேன்” என்றார் சூரி.

“ஸாம்மி, நீ அங்கே போய் இரு. ஒரு பத்து நிமிஷத்தில் ஸ்ரீஹரியை இங்கே அனுப்பு” என்றாள் தன்யா.

ஸாம்மி அங்கிருந்த எல்லோரையுமே ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள்.

சின்ன மௌனம்.

“நான் சொல்லல அவனிடம் எதுவும்” என்றார் சூரி.

“அவனுக்கு எதுவுமே பத்து நிமிஷத்துக்குமேல் நினைவிருக்காது” என்றார் செண்பகராமன்.

“சார், உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றாள் தன்யா.

“நீங்க சாந்தமதியை வெளியே அனுப்பும்போதே புரிஞ்சுக்கிட்டேன்” என்றார் செண்பகராமன். “உட்கார் சூரி” என்று எழுந்து வெளியே போகப் போன சூரியைத் தடுத்தார். “இதில் ரகசியம் ஒண்ணும் இல்லை. என் வீட்டில் யாருக்கும் எதுவும் தெரியாதே தவிர இங்கே எல்லாருக்கும் தெரியும். ஆமா, ஜிகினா சிவகாமுவோடு எனக்குத் தொடர்பு இருந்தது. ஆனா இரண்டு வருஷத்தில் அவ ட்ரூப்பைவிட்டு வெளியே போயிட்டா.”

“ஏன்?” என்று கேட்டாள் தர்ஷினி.

“என்னுடைய… அலட்சியப் போக்குன்னு வெச்சுக்கலாம்” என்றார் செண்பகராமன் குன்றியவராய்.

“சரி. இப்போ அவங்க எங்கேன்னு உங்களுக்குத் தெரியுமா? அவங்களுக்குக் குழந்தைங்க யாராவது இருக்காங்களா?”

“இரண்டு கேள்விக்கும் பதில் ‘நோ’ தான். அந்த இரண்டு வருஷத்திற்கப்புறம் சிவகாமுவை நான் பார்க்கவே இல்லை. சொல்லப் போனா அவளை மறந்தே போயிட்டேன். அவளுக்குக் குழந்தை எதுவும் பிறந்ததான்னு எனக்குத் தெரியாது” என்றார் செண்பகராமன்.

சூரி “ஐயா…” என்று ஆரம்பித்தார். என்ன நினைத்தாரோ, நிறுத்திவிட்டார். அப்போது பார்த்து ஸ்ரீஹரி உள்ளே வந்தது காரணமாய் இருக்கலாம்.

“எப்படி இருக்காரு நடராஜன் ஐயா?” என்றார் சூரி.

“தூங்கறார்” என்றான் ஸ்ரீஹரி. “சார், நம்ம ட்ரூப்பில் உள்ள சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் உங்களைப் பார்க்கணும்னு விரும்பறாங்க. ஹாலில் கூடியிருக்காங்க” என்றான்.

“சூரி, நீயும் அவனும் ஹாலுக்குப் போங்க. இதோ வந்திடறேன்” என்றார் செண்பகராமன்.

இருவரும் வெளியேறியதும் “வேற ஏதாவது கேட்கணுமாம்மா?” என்றார் செண்பகராமன். நடராஜன் காப்பாற்றப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு அவருக்கு இவர்கள்மீது நம்பிக்கை வந்திருக்க வேண்டும்.

“சார், சிவகாமுவோட பையன் இங்கே ட்ரூப்பில் ஜாயின் பண்ணியிருக்கறதா ஒரு ரூமர். அதைச் சொல்ல வரும்போதுதான் நடராஜனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது… அது…”

“இங்கே பத்துப் பேருக்குமேல் அந்த ஏஜ் க்ரூப்ல இருக்காங்க. யாருன்னு நான் என்னத்தைக் கண்டேன்? அது நிச்சயமா ஸ்ரீஹரியோ, செந்தில்குமாரோ இல்ல, அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்” என்ற செண்பகராமன் ஒரு பெருமூச்சுடன் எழுந்துகொண்டார். “எத்தனைக் கனவுகளோட இங்கே வந்தேன்! இங்கே நாடகம் மறுபடி நல்லா நடத்த முடிஞ்சதுன்னா, புது நாடகம், முதன்முறையா ஒரு சரித்திர நாடகம், பிரம்மாண்டமா நடத்தணும்னெல்லாம் நினைச்சிருந்தேன். இப்போ இந்த நாடகத்தையே நடத்த முடியாது போலிருக்கு…” வெளியே சென்றுவிட்டார்.

“தன்யா…” என்றாள் தர்ஷினி.

“இன்னும் சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் இரண்டொரு பேர், சூரி, கலையரசு இவர்களை இண்டர்வியூ பண்ணணும். அப்புறம், இந்த ட்ராமாவின் மிக முக்கியமான கேரக்டர்கள் – ஸ்ரீஹரி, செந்தில்குமார், நரேந்திரன்… இவர்கள் எல்லோரையும் சந்தித்த பிறகுதான் ஒரு அபிப்ராயத்திற்கு வர முடியும்” என்றாள் தன்யா.

5.2

மறுநாள்.

முதலில் சூரியின் அறைக்குச் சென்றார்கள் தன்யாவும் தர்ஷினியும். அவருடையது இரட்டை அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. முன்னால் ஒரு மேஜை போட்டப்பட்டு நாலைந்து நாற்காலிகள், பைல்களோடு ஆபீஸ் அறையாகக் காட்சியளித்தது. ஒரு மரத்திரைக்குப் பின்னால் படுக்கை காணப்பட்டது.

தன்யாவும் தர்ஷினியும் நாற்காலியில் அமர்ந்து காத்திருந்தார்கள். அரைமணி நேரம் கழித்தே வந்து சேர்ந்தார் சூரி. “சாரி, இவ்வளவு நேரம் ஆகும்னு எதிர்பார்க்கல” என்றார்.

“பரவாயில்லை சார். முக்கியமான மீட்டிங் என்றால் அப்படித்தான்” என்றாள் தன்யா.

“முக்கியம்தான்” என்றார் சூரி. “நேற்றும் இதே பேச்சுதான் நடந்தது. நடராஜன் தாக்கப்பட்டதில் சீனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்குப் பயம் வந்திடுச்சு. ஊருக்குப் போயிடலாமான்னு ஆரம்பிச்சுட்டாங்க” என்றார்.

“அடடா” என்றாள் தன்யா. “அப்புறம் ஒண்ணும் அசம்பாவிதம் நடக்கலியே?”

“இல்லை. செண்பகராமன் இன்னும் ரெண்டுநாள் பார்க்கலாமுன்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டார். அப்படி இல்லேன்னா, ஊருக்குப் போகறது மட்டுமில்ல, குழுவையே கலைச்சுடறேன்னு சொல்லிட்டார். பாவம், அவருக்கு வருத்தம், நம்ம குழுவைச் சேர்ந்தவங்க, இத்தனைநாள் கூடவே இருந்தவங்க, ஒரு கஷ்டம்னு வரும்போது சுயநலமா யோசிக்கறங்களேன்னு…”

“சூரி சார், இந்த… ஜிகினா சிவகாமு… விவகாரம்…” என்று இழுத்தாள் தன்யா.

“செண்பகராமனே ஒத்துக்கிட்டார். அதுக்குமேல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?”

“இந்த நரேந்திரன்…” யோசனையில் தன்யா மௌனமாகிவிட்டதை உணர்ந்து தர்ஷினி தொடர்ந்தாள்.

“அவ பிள்ளைன்னு ஒரு ரூமர் ட்ரூப்ல உலாவிட்டிருக்கு. அவன் பார்க்க அவளை மாதிரி இருக்கான்ங்கறது உண்மைதான். ஆனா நிச்சயமா தெரியாது.”

“அவர் நடிப்பு எப்படி இருக்கு?”

“கொஞ்சம் அமெச்சூர்த்தனம் இருந்தாலும், விஷயம் இருக்கு. நல்லா வருவான்.”

“மிஸ்டர் செந்தில்குமார்.”

“அமைதியான, நல்ல பையன். உழைப்பு இருக்கு. முன்னுக்கு வரணும்னு ஆசையும் இருக்கு. தங்கமுத்துக்கா இப்படி ஒரு பையன்னு இப்போ வந்தவங்க எல்லாரும் ஆச்சரியப்படறாங்க. ஆனா அவனோடு பழகின என்னை மாதிரிப்பட்டவங்களுக்குத் தெரியும் – அவன் சின்ன வயதில் இந்தச் செந்தில்குமார் மாதிரித்தான் இருப்பான். அமைதியான டைப். எந்த வம்புக்கும் போக மாட்டான். நம்ம செண்பகராமன் ஐயாவுக்கு ரொம்ப க்ளோஸ். நண்பன்னே சொல்லலாம்.

“அதான் செந்தில்குமாருக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றார் செண்பகராமன்” என்றாள் தர்ஷினி தனக்குத்தானே பேசிக் கொள்பவளைப் போல.

5.3

செண்பகராமனும் ஸாம்மியும் உள்ளே வந்தார்கள். செண்பகராமனின் கண்கள் சிவந்திருந்தன. ஸாம்மியின் கண்களிலும் கண்ணீர் வரும்போலிருந்தது.

“நாளைக்கு நாடகம் அரங்கேற்றம். இன்னிக்கு வந்து பிரச்சனை பண்றாங்க” என்றார் செண்பகராமன். “ஊருக்குப் போகணுமாம். ஏன் போகணும்? இந்த நாடகம்தான் நம்ம வாழ்வு. பிறந்ததும் வளர்ந்ததும் வாழ்ந்ததும் இந்த நாடகத்தில்தான். சாகறதும் நாடகமேடையிலேயே நடக்கட்டும். போற உயிர் என்னைக்கோ ஒருநாள் போகப் போகுது. நாடகம் நடிச்சிட்டிருக்கையில் போனா, அது பாக்கியம். யார் ஊருக்குப் போறதுன்னாலும் போகட்டும். நாடகம் நடக்கும். எனக்கும் ஒரு ரோல் கொடு, சூரி! சிசுபாலன் ரோல்னா கூடப் பரவாயில்லை” என்றார் கோபமும் வருத்தமுமாய்.

“ஐயா வருத்தப்படாதீங்க” என்றார் உள்ளே வந்த கலையரசு. “எல்லாரும் பயந்திருக்காங்க. ரெண்டுபேர் உயிருக்குப் போராடிட்டிருக்காங்க. நிலைமையை நாமும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும் இல்லையா? எனக்காக நான் பேசல. நம்ம குழுவுக்காகப் பேசறேன். அவங்கள்ள யாராவது வெளியேறினா, நானும் நடிக்கத் தயாராத்தான் இருக்கேன்” என்றார்.

“ரொம்ப நன்றி கலையரசு” என்றார் செண்பகராமன்.

“என்னங்க நன்றில்லாம் சொல்லிக்கிட்டு” என்றார் கலையரசு. “இந்த ஒவ்வொரு நாடகமும் என்னோடு குழந்தைங்க. அது நல்லா இருக்கணும், நல்லா வளரணும்னுதான் நான் நினைப்பேன். நாம நடைமுறையையும் யோசிக்கணும்னு சொன்னேன், அவ்வளவுதான்” என்றார்.

இருவரும் பேசிக் கொண்டே வெளியே போனார்கள்.

ஸாம்மி “பயமாயிருக்கு சூரி அண்ணா. யாரையுமே நம்ப முடியல. யார், எதுக்கு இப்படியெல்லாம் செய்யறாங்கன்னே தெரியல…” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தன்யா படாரென்று எழுந்தாள். அவள் இவர்களுடைய பேச்சு எதையுமே வெகுநேரமாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. வேறு ஒரு சப்தத்தை உற்றுக் கேட்டவாறிருந்தாள்.

“க்ரீ…க்” என்ற ஒலிகேட்டு எல்லோரும் பதறுவதற்குள் தன்யா சூரியின் நாற்காலியைத் தள்ளிவிட்டாள். அந்த விநாடியில் மேலே சுற்றிக் கொண்டிருந்த பழையகால மின்விசிறி கழன்று கீழே விழுந்தது.

பெரிதாகக் கத்திவிட்டாள் ஸாம்மி. சூரி மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தால் மண்டை பிளந்திருக்கும்.

சூரியைக் கைகொடுத்து எழுப்பி நிற்கவைத்து ஆசுவாசப்படுத்தினாள் தன்யா. தர்ஷினியின் பார்வை மேஜை மீது தனியாக இருந்த காகிதத்தின்மீது விழுந்தது. எடுத்துப் பார்த்தாள்.

“சிசுபாலன் மோக்ஷமடைந்தான்

இனித் தோன்ற மாட்டான்

அசுரனை உயிர்ப்பித்தால்

ஆண்டவன் தண்டிப்பான்

எச்சரிக்கை! எச்சரிக்கை!”

5.4

“டிங் டிடிங்” என்று ஏதோ விழுந்த சப்தம் மெலிதாகக் கேட்டது.

எல்லோரும் அருகிலிருந்த சிறு ஹாலுக்கு ஓடினார்கள்.

செந்தில்குமார் அறையில் போடப்பட்டிருந்த சோபாவில் கண்மூடி அமர்ந்திருந்தான். ஸ்ரீஹரி பெரிய கண்ணாடி முன் அமர்ந்து மேக்கப்பைத் திருத்திக் கொண்டிருந்தான். அறைக்குப் பின்னாலிருந்த சிறிய அலமாரியிலிருந்த புத்தகங்களையும் பழைய ஸ்க்ரிப்டுகளையும் புரட்டிக் கொண்டிருந்தான் நரேந்திரன்.

ஆனால் அவர்கள் யாரையும் ஒருவரும் பார்க்கவில்லை. ஹாலின் நடுவில் விழுந்திருந்த ஸ்க்ரூ ட்ரைவரையே பார்த்தார்கள்.

இவர்களுள் யார் ஸ்க்ரூ ட்ரைவரை வைத்திருந்தது? யார் தங்களைச் சோதனை செய்வார்களோ என்று பயந்து அதனை எறிந்தது?

எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே கையில் டீ ட்ரேயோடு உள்ளே நுழைந்தான் ஆனந்தன்.

(தொடரும்)