ஹைக்கூ கவிதைகள்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

வெள்ளை அடிக்கையில்                         

அழுக்காகிப் போனது!

பக்கத்துவீடு!

கொளுத்தும் வெயில்

குடையாய் வந்தன

மரங்கள்!

பிம்பங்கள் பெரிதாகையில்

தொலைந்து போகின்றது!

நிஜம்!

தொட்டியில் அடைபட்டது

வாஸ்து மீனின்

சுதந்திரம்!

கண்டித்தாலும் விடுவதில்லை

குழந்தைக்கு

மண்ணாசை!

மேடு பள்ளங்கள்!

தடுத்து நிறுத்துகிறது

வாழ்க்கையின் ஓட்டத்தை!

   

விரல் அசைவில்

பிறக்கின்றன

எழுத்துக்கள்!

நினைவுகள் பூக்கையில்

வாசம் வீசியது

நட்பு.

இருள் கவ்விய சாலைகள்!

மிளிர்ந்தன

வாகன வெளிச்சம்!

அமாவாசை இரவு

நெருங்கி வந்தன

நட்சத்திரங்கள்!

விழித்து எழுந்ததும்

கலைந்து போனது

கனவு!

இலையுதிர்த்த மரங்கள்!

காணாமல் போனது

நிழல்!

கொட்டிக்கிடந்தது

பிச்சைக்காரர்களிடம்

சில்லறை!

தூரப் போகிறார் கடவுள்!

நீண்டு கொண்டே போகிறது!

தர்ம தரிசனம்!

விலை நிர்ணயம் ஆனதும்

உரிமை பறி போகிறது!

தேர்தல்!

நிறுத்தம் வந்ததும்

பிரிந்து போகிறது சிநேகம்!

பேருந்துப் பயணம்!

நாவில் கயிறு

வலியில் துடித்தது

கோயில் மணி!

கொள்ளைபோனது

புகார் இல்லை!

குழந்தையின் சிரிப்பு!

பருக்கைசோறு

பசியாற்றியது

பறிமாறியது குழந்தை!

ஈரமான கால்கள்!

உலர்ந்ததும் உதிர்ந்தன உறவுகள்!

மணல்!

பட்டாம்பூச்சி வந்தகதை!

வந்தமரும் வரை தெரியவில்லை

தோளில் எந்த பாரமும் இல்லை 

நீ சாய்ந்து விட்டு சென்ற என் தோளில்

 பூ வாசம் வீசி இருக்கக்கூடும் 

அந்த ஒரு காரணம் போதும்

 பட்டாம்பூச்சி வந்த வந்த கதை சொல்ல!

  ~இரா.ரமேஷ்பாபு

ஜவஹர் ப்ரேம்குமார் கவிதைகள்!

கொஞ்சம்
ஈஸ்ட் கலந்துவிட
உப்பித்தொலைந்துவிட்டேன்
நான்..
பாம்பென்னை வஞ்சிக்க
வேண்டுமென்றே
தொலைந்து போகிறேன்
என் விலாவின்
அழுகிய
தசையுடன்..
என்னைத் தீண்டிய பாம்பின்
நஞ்சு
யாருடைய குதிங்காலை முறித்ததோ அந்தக்கால்களிலோர்
பட்டாம்பூச்சி கிரீடம்..
அழுகிய என்
மார்பின் தசைகளை
உம் அழகிய மார்பின்
தசை மூலம் மூடிவிட
மூன்று முழுமையான
நாட்கள்
கல்லறைகளில் வாயிலில்
ஊற்றி வார்த்திட வேண்டுமோ..
மௌனத்தின்
பிரிதொரு மொழியில்
இழப்பில்லா மரணம்
வழக்கமில்லா பாணியில்
நிறைவேற வேண்டுமோ..
கண்ணுக்குக்ண்
பல்லுக்குப்பல்லென
உயிரீந்த உட்பொருள்
நல்கிய சட்டத்தின்படி
நான் துளிர்க்கிறேன்
என் மேசியாவின்
தோட்டத்து
முள்ளில்லா ரோஜாவென
ஈஸ்ட்டின்
புளிப்பில்லா
திராட்சையின் சுகந்த ரசத்தினால்.. குவளை தூய நீராக்கப்பட்ட
கசடு நீங்கிய நான்..
ஆர் ஜவஹர் பிரேம்குமார்,
பெரியகுளம்.

 

பாதை எங்கும்/
ஓடுகிறேன்.. என்னை/
வழிமறித்து கவிதை தருகிறது/
நானெறிந்த சொற்கள்..!

ஆர் ஜவஹர் பிரேம்குமார்,
பெரியகுளம்.

குறும்பா கூடம்

1

கோவில் யானை

மதம் பிடித்து நகரும்

சாமி ஊர்வலம்

2

மயானத்தை கடக்கையில்

மேலும் கீழும் அசைகிறது

துறவியின் உதடுகள்!!!

3

இரவு காவலாளி

பகலில் குழந்தைக்கு சொல்கிறார்

நிலா கதைகள்

ஜீவா, கோவை.

இன்னும் நிமிர்ந்தபாடில்லை

கஜா புயல் சாய்த்துப் போட்ட

சவுக்கு விவசாயியின் வாழ்க்கை

மரமேறும் தொழிலாளரின் 

எதிர்காலம் குறித்த கேள்விக்குறியாய்

மரத்தில் கொத்திய அரிவாள்

வெளிச்சக் கோடுகள்

கிழித்து விளையாடுகிறது

மின்மினிப் பூச்சி

காற்றுவெளியில்
இசைக்குறிப்புகளை எழுதிச் செல்கின்றன
சிறகசைக்கும் பறவைகள்.

மகிழ்நன் மறைக்காடு

மழைமேகம்

வந்துகொண்டிருக்கிறது

துரத்திவிட காற்று

துளிப்பா எழுதுபவனின்
அப்பா ஆசிரியர் என்பதால்
எழுதினான் இன்று ஆசிரியப்பா.

சிறுவயசு முதலே

எனது விசிறி ஆனது

பனையோலை

காணவில்லை அறிவிப்பு சுவரொட்டி 

கண்களில் பட

மீண்டும் காணாமல் போகிறான்..

காணாமல் போனவன்

புது வண்டி ரவீந்திரன்

கொட்டும் பனி
மேசைமீது குளிர்காய்கிறது
கோப்பை நிறைய தேநீர்.

ச. கோபிநாத் …

கடுங்குளிர்
சுருட்டும் படுக்கைவிரிப்புக்கடியில்
கலைந்தோடும் எறும்புகள்!
@
நீலவானம்
எட்டிப்பார்த்ததும் உடைந்துபோகும்
நீர்க்குமிழிகள்!
@
உதிர்ந்த பூக்களை
உதட்டில் வைக்கிறேன்
அப்போதும் இனிக்கும் தேன்!
@
அந்தரத்து வானம்
தேங்கும் அணைக்கட்டில் துள்ளும்
மீன்கள்!
@
காலி மதுப்புட்டிகளைப்
பொறுக்கும் சிறுவனின் வீட்டில்
வீட்டுப்பாடம் எழுதும் அம்மா!

ஹைக்கூ உமா.

நிறைந்த குளத்தில்
மூழ்கிக் கிடக்கிறது
குன்றின் நிழல்

கலாராணி லோகநாதன்

வானவில் கவிதை
நாளிதழில் வெளியானது
கறுப்பு வெள்ளையில்…

காகிதத்தில் கவிதை
கடற்கரை மண்ணில் புதைந்திருக்கும்
கவிஞனின் பெயர்…

தண்ணீர் தேசம்
புத்தகத்தைப் படிக்கும் போது
இடியுடன் மழை…

வானவில் வரைந்த மகள்
நனைந்தபடி இருக்கிறாள்
மழைநீரில்…

ஒரு கட்டத்தில்
நான்கு முக்கோணங்கள் தெரிய
ஒரு சிலுவை வரைகிறேன்…

மகளெழுதிய தேர்வு தாளில்
தவறான பதில் அனைத்திலும்
சிலுவை…

ஸ்.டென்னிஸ்
மதுரை

மறுபிறவி..வேண்டுமா(ம்)

மறுபிறவி..வேண்டுமா(ம்)

கலவையில் உருவாகி

கருவாய் உருமாறி

காரிருளில் பல மாதம்.

குறித்த வேளையில்

குதித்தேன் வெளியே

கூவி அழுதேன்

கொண்டாட்டம் துவக்கம்.

குழவியாய் குதூகலம்

குமரியாய் நகர்வலம்.

குடும்பத் தலைவியென

குழந்தை வளர்ப்பு

கூடிய பொறுப்பு

கரைந்தது நாட்கள்

கூடுவிட்டு பறந்த கிளிகள்

கூரையைப் பார்த்தே

கழிந்தது நாட்கள்..

கைத்தடி ஊன்றல்

கைக்கூப்பி வேண்டல்..

கூப்பிடப்பா என்னை

குரலில் ஏக்கம்..

காணணும் மறுபிறப்பு

கூடொன்று மாறாமல்

குழந்தையாய்ப் பிறக்கணும்

கூடணும்..மீண்டுமிங்கே..

காட்டிடப்பா வழியுமே

காலதாமதமும்  ஏனிங்கே?

அகிலா ராமசாமி

பெங்களூர்

பூம்..பூம்…மாடு

எதிர்வீட்டு வாசலில்

அந்த பூம் பூம் மாட்டுக்காரன்

மாட்டிடம் இப்படி

கேட்டுக் கொண்டிருந்தான்….

அம்மாவுக்கு

நல்ல காலம் பொறக்குமா…?

என ஆரம்பித்து

அம்மா புது வேட்டி சட்ட…

பணம் கொடுப்பாங்களா…?

இப்படிக்கேட்ட அஞ்சாறு

கேள்விக்கும் அசராமல்

தலையாட்டியது மாடு….

எல்லாம் கிடைத்து விட்டது_

போன்ற திருப்தியில்

எதிர் வீட்டுக்காரி

இருந்தை அள்ளிக் கொடுத்தாள்….

ஒரு வகையில்

பூம்..பூம் ..மாடும்

சில குடும்பங்களும்

ஒன்றுதான்….

அவள் 

சொல்லும் போதெல்லாம்

அவன் தலையாட்டுவதும்…

அவன்

சொல்லும் போதெல்லாம்

அவள் தலையாட்டுவதுமாய்…

இருவருக்குள்….

இருப்பதை 

கொடுத்து விடுவதால்…

அறுபதிலும் தாம்பத்யம்

தடம் புரளாமல் போகிறது…!!!

ஆக்கம்: கவிஞர்.எல்.இரவி.

மகிழை சிவகார்த்தி கவிதைகள்

“காரணி”அவள் மலடியாயிருந்தபோது திட்டியவர்களோ

பின் தாய்மையடைந்தபோது போற்றியவர்களோ பெண்குழந்தையை பெற்றெடுத்தாளெனதூற்றியவர்களோ…

யாரும் எங்கும் எதற்கும்விமர்சிக்கவேவில்லை

எல்லாவற்றிற்கும் காரணகாரணியான அவள் கணவனை…!

“வருத்தம்”

முதலாவதாய் பிறந்தது

பெண்குழந்தையாய் இருந்திருந்தால் அடிக்காமல்வளர்த்திருப்பேனோ என்னவோ!

மகனை அடித்துவிட்டு வருந்தும் அப்பா!

“ஓவியம்”

இந்த ஓவியங்களையெல்லாம்வரைந்தது யாரென்று கேட்கிறது

விருந்தாளியாய் வந்த குழந்தை!

சுவரிலிருக்கும் கிறுக்கல்களைப்பார்த்து!

“பசி”

சீக்கிரம் சாப்பிட வாருங்களென்று

சொல்லாமல் சொல்கிறாள் அவள் பசியை!

கணவன் உண்டபின் உண்ணும் மனைவி!@@@@@@@@@@@@@@@@@-மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி

தா.சரவணன் கவிதைகள்

 (சுழற்சி)
—————-
பட்டி ஆடு விற்று
பட்டப் படிப்பு
படிக்க வைத்த
அப்பாவை
கடைசியில்
கஞ்சி ஊற்றி
காப்பாற்ற
பத்து ஆடு
மேய்க்கும் வேலை
எனக்கு

(யார் தெய்வம் )
—————————
எல்லா தெய்வங்களையும்
தனக்கு துணை இருக்க
வேண்டிக்கொண்டான்
பெற்றவர்களை
முதியோர் இல்லத்தில்
விட்டவன்  

கல்யாணமந்தை, தா.சரவணன், 

மழைத்தடம்.

மழைத்தடம்..

நீ பொழிந்ததற்கான

தடம்

காலைவரை கூரையிலும்

நாளைவரை சாலையிலும்..

அதன் பிறகுமென்றால்

என் நினைவுகளாய்

சொட்டிக்கொண்டுதானிருக்கும்

செம்பா, திருச்சி 

வாள் விழிகள்

உன் கண்களுக்குள்

ஒளித்து வைத்திருந்ததை

என் கண்கள்

கண்டுபிடித்துவிட

நடந்த கத்திச்சண்டையில்

யார் வென்றது

யார் தோற்றதென்று தெரியாமல்

பரிசை தட்டிச்செல்கிறது

நம் காதல்!

செம்பா,திருச்சி

செம்மொழித் தமிழுக்கு இணையில்லை. +++++++++++++++++++

தொன்மைமிகு செம்மொழித் தமிழ்

மேன்மையுறு இலக்கியத் தடங்கள்தோறும்

கடைச்சங்க நூல்கள் செப்புகின்ற

தமிழர்தம் வாழ்வுதனை நன்கறிந்தோம் !

குறள் கூறும் வாழ்வியலில்

குன்றமெனத் தமிழர் மாண்பு 

ஈராயிரம் ஆண்டுகளாய் இத்தரையில் 

முத்திரைப் பதித்ததை நாமறிந்தோம் !

இரட்டைக் காப்பியங்கள் மானுடத்தின்

அகக்கண்ணைத் திறந்துவைத்து

அறிவார்ந்த சிந்தனையை மண்மீது

பரவவிட்டச் செய்திகளை மறப்போமா?

இன்றளவும் செம்மொழியில் வரிவடிவம்

பரிணாம வளர்ச்சியில் புகழீட்டி

பூலோகம் குரலெழுப்பும் வாழ்த்தொலியால்

புவிமாந்தர் மகிழ்வெய்தி திளைக்கின்றார் !

இலக்கிய நூல்களின் சீர்மிகு வரிகளை

ஒலிவடிவம் சிதைக்காது போதித்து

சொற்சுவையும் பொருள்சுவையும் குன்றாது

இக்காலத் தலைமுறையை வாழ்விப்போம் !

 ….கா.ந.கல்யாணசுந்தரம்