உறங்காத உண்மைகள்! சிறுகதை

உறங்காத உண்மைகள்!

பொன்னேரியின் பஜார் வீதியின் இறுதியில் அமைந்திருந்த அந்த மேன்சனில் பரபரப்புக் கூடியிருந்தது. காரணம் அங்கு நிகழ்ந்துவிட்ட ஓர் மரணம். வாசலில் கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு போலீஸ் உள்ளே நுழைந்தது.

    மேன்சனின் நிர்வாகி தனபால் முன்னே வந்து,  ”இன்ஸ்பெக்டர் சார்! நான் தான் இந்த மேன்சன் நிர்வாகி! உங்களுக்கு போன் பண்ணது நான் தான்!” என்றார்.

     மெலிந்த தேகம் கண்களில் பவர் கண்ணாடி முன் வழுக்கையும் பற்களில் வெற்றிலைக்கறையும் படிந்திருந்த அந்த மனிதரை உற்று நோக்கிய இன்ஸ்பெக்டர் பரசுராம்,” நீ  நிர்வாகின்னா ஓனர் யாருய்யா?” என்று ஒருமையில் மரியாதையைக் கைவிட்டார். பதவி தந்த அகங்காரம் அது.

  ”ஓனர் சென்னையிலே இருக்காருங்க!  லஷ்மி மில்ஸ் லஷ்மிநாராயணன் கேள்விப்பட்டிருப்பீங்களே! அவருதான் இந்த மேன்சன். கிட்ட்த்ட்ட ஒரு இருபது வருஷமா நான் தான் நிர்வாகம் பண்ணிக்கிட்டு இருக்கேங்க!”

  ” ஓ… கொலை எந்த ரூம்லயா நடந்திருக்கு!”

  ”பர்ஸ்ட் ப்ளோர் 17ம் நம்பர் ரூமுங்க! செத்துப் போனது ரிப்போர்ட்டர் குமாருங்க!”

   ” ரிப்போர்ட்டரா? எந்த பத்திரிக்கையிலா எழுதறான்? ஏதாவது முன் விரோதம் இருக்குமோ?”

    ”அப்படி பெரிய ரிப்போர்ட்டர் ஒண்ணும் இல்ல சார் அவரு! லோக்கல் பத்திரிக்கையிலே எழுதுவாரு! அப்பப்போ ப்ரிலான்ஸா சில பத்திரிகைகளுக்கு எழுதிட்டிருந்தாரு..”

  ”சரி வாங்க போய் பார்ப்போம்.”

  கொலை நடந்த 17ம் அறை எண் திறந்து கிடக்க வாசல் ஓரம் மூக்கில் ரத்தம் ஒழுக கவிழ்ந்து விழுந்து இறந்து கிடந்தான் குமார். ஒருவித கவுச்சி வாசம் ரத்தத்தில் இருந்து வீச மூக்கைப் பொத்திக்கொண்ட  இன்ஸ்பெக்டர்  உடன் வந்த எஸ்.ஐ யிடம் ”சீன் ஆப் க்ரைம் நோட் பண்ணுங்க! பாரன்சிக் ஆளுங்களை வரச்சொல்லிருங்க. அப்புறம் இவரு இறந்து கிடந்ததை யார் முதலில் பார்த்தது?” என்று கேட்டார்.

    அதுவரை ஓரமாக நின்ற ஓர் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி முன்னே வந்து  ”ஐயா, நான் தானுங்க முதல்லே பார்த்தேன்.” என்றார்.

     ”நீ யாரும்மா?”

  ”இந்த மேன்சன்லே பெருக்கி துடைக்கிற வேலை செய்யறேனுங்க!”

  ”ஓ.. ஸ்விப்பரா..?  சரி என்ன நடந்தது சொல்லு..!”

”காலையிலே வழக்கம் போல ஒவ்வொரு ரூமா கூட்டி பெருக்கிட்டு வருவேனுங்க! எல்லா ரூமும் சார்த்தியிருக்கும் கதவைத் தட்டி எழுப்பி உள்ளே போய் சுத்தம் பண்ணிட்டு வருவேணுங்க! அப்படி வரும்போது இந்த ரூம் கதவு லேசா திறந்து இருந்துச்சுங்க கதவை தள்ளி திறந்த நான் பயந்து போயிட்டேனுங்க!”

     ”ஏம்மா நீ என்ன  கொயம்புத்தூரா? நிமிஷத்துக்கு மூணுவாட்டி “இங்க” போடுற?”

     ”ஆமாமுங்க ஐயா!”

”சரியாப் போச்சு போ! அப்புறம்?”

”அப்புறமுங்க! இந்த குமார் தம்பி கவுந்தடிச்சு விழுந்து கிடந்துதுங்க! சுத்தியிலும் ரத்தம்! ஒரே பயமா போயிருச்சுங்க! “வீல்”னு அலறி அடிச்சுக்கிட்டு வந்து மேனேஜர்கிட்டே வந்து சொல்லிட்டேனுங்க! அவரும் வந்து பார்த்துட்டு  உங்களுக்கு போன் பண்ணிட்டாருங்க!”

  ”ம்.. நீ உள்ளே நுழைஞ்சப்ப உள்ளே புதுசா யாரையாவது பார்த்தியா?”

”யாரும் இல்லேங்க! ரூமுக்குள்ள இவரு மட்டும்தான் இறந்து கிடந்தாரு.”.

”இவர்கூட தங்கியிருக்கிற ரூம் மேட் யாரும் இல்லையா?”

   ”முரளின்னு ஒருத்தன் தங்கியிருக்கான்! எண்ணூர் ப்ளாண்ட்ல வேலை செய்யறான். நைட் ஷிப்ட் போயிருக்கான். இன்னும் கொஞ்சம் நேரத்துலே வந்திருவான்” என்றார் தனபால்.

   ”கிழே விழுந்து இறந்திருக்கான். மூக்குவழியா ரத்தம் வந்திருக்கு! உடம்புலே எந்த காயமும் இல்லே! நெத்தியிலேயும் லேசான சிராய்ப்புதான் இருக்கு! இது கொலையா இல்லே நேச்சுரல் டெத்தா குழப்பமா இருக்கே?  இவனுக்கு ஆகாதவங்க யாராவது கொன்னிருந்தாலும் ஒரு காயமும் இல்லையே!”

 ”பக்கத்து ரூம்லே யார் தங்கியிருக்காங்க விசாரிச்சிட்டீங்களா கணபதி?” என்று எஸ்.ஐ நோக்கி கேட்டார் பரசுராம்.

   ”ரெண்டு இந்திக் கார பசங்க பக்கத்துலே இருக்க ஸ்டீல் பேக்டரிலே வேலை செய்யறானுங்க அவனுங்க 18 ல தங்கியிருக்காங்க சார்..”

”அப்போ 16 லே”

  ”அந்த ரூம்லே யாரும் இல்லீங்க சார். 15லே போஸ்ட் ஆபீஸ்லே ரன்னர் வேலை பாக்கிறவர் தங்கி இருக்கார். வயசான மனுசன்.” எஸ்.ஐ சொல்லி முடிக்கவும் அவர்கள் முன்னே வந்து நின்றார்கள்.

அவர்களைப் பார்த்து ” ராத்திரி இந்த ரூம்லே இருந்து ஏதாவது சத்தம் கேட்டுதா?” என்றார் எஸ்.ஐ.

 ”ராத்திரி பதினோரு மணி வரைக்கும் அந்த ரூம்லே லைட் எரிஞ்சுகிட்டு இருந்தது.. காமன் பாத் ரூம் இந்த லைன்லே கடைசியிலே இருக்கு! எனக்கு சுகர் ப்ராப்ளம் பாத்ரூம் போக அடிக்கடி எழுந்து போவேன். பதினோரு மணிக்கு நான் போகும்போது இந்த ரூம்லே லைட் எரிஞ்சுகிட்டு இருந்தது. ஜன்னல் திறந்து இருந்தது. இவர் ரூம்லே உட்கார்ந்து கம்ப்யூட்டர்லே ஏதோ டைப் பண்ணிக்கிட்டு இருந்தாரு ஜன்னல் திறந்திருந்ததாலே.நான் இத பார்க்க முடிஞ்சது” என்றார் 15ம் அறைக்காரர்.

   ”உங்க பேரு என்ன?”

”வைத்திலிங்கம்”

”மிஸ்டர் வைத்திலிங்கம், பதினோரு மணிக்கு அப்புறம் நீங்க பாத்ரூம் போக எழுந்திருக்கலையா?”

 ”ரெண்டு மணி வாக்கில் எழுந்தேன் சார்! ”

”அப்போ நீங்க எதுவும் இந்த ரூம்லே பார்க்கலையா?”

 ”இல்லே சார்! கதவு ஜன்னல் எல்லாம் அடைச்சிருந்தது. உள்ளே சைலண்டா இருந்தது.”

”ஓக்கே நீங்க போகலாம்! விசாரணைக்கு கூப்பிடும்போது வரவேண்டியிருக்கும்!”

”தேங்க்ஸ் சார்! நான் டூட்டிக்கு போகணும்! இது என் போன் நெம்பர் தேவைப்பட்டா கூப்பிடுங்க!” என்று வாலண்டியராக நம்பரைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார் வைத்திலிங்கம்.

 “இந்திக்கார பசங்க என்னய்யா சொல்றானுங்க?”

  ”அவனுங்க போதை பார்ட்டீங்க சார்! நேத்து சீக்கிரமே தண்ணி அடிச்சிட்டு தூங்கிட்டானுங்களாம்! காலையிலே சத்தம் கேட்டுத்தான் விழிச்சானுங்களாம்! ரூம்ல செக் பண்ணிட்டேன் ஒரே சரக்கு பாட்டிலும் சிகரெட் துண்டுங்களா இருக்குது!”

 ”ரொம்ப சிக்கலா இருக்குதே…”

இதற்குள் பாரன்சிக் ஆட்கள் வந்து தங்கள் பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள் . ஆம்புலன்ஸ் வந்து உடலை ஏற்றிச் சென்றது.

  ”யோவ் தனபாலு!  இவன் ரூம் மேட் முரளி வந்தான்னா உடனே ஸ்டேஷணுக்கு வரச்சொல்லி அனுப்பி வை! என்று சொல்லியவர் ரூமை பூட்டி சாவியை அவரிடம் தந்து. கேஸ் முடியறவரைக்கும் இந்த ரூமை யாரும் திறக்க கூடாது. யாருக்கும் வாடகை விடலாம்னு நினைக்காதே! அப்புறம் நான் கூப்பிடறப்ப ஸ்டேசனுக்கு வரனும் தெரியுதா?” என்று மிரட்டலாக கூறிவிட்டு ஜீப்பில் ஏறிப் போக தனபால் தளர்வாய் இருக்கையில் சாய்ந்தார்.

  ”என்னய்யா? கேஸ் ஒரே இழுவையா இருக்கு! அந்த முரளி ஹார்ம்லெஸ்ஸா இருக்கான். நேத்து நைட் எட்டு மணிக்கே ட்யுட்டிக்கு கிளம்பி போயிருக்கான். அவன் போனதுக்கு அப்புறம்தான் குமார் ரூமூக்கே வந்திருக்கான். அவனை மிரட்டிப் பார்த்தாச்சு! அவனுக்கும் குமாருக்கும் எந்த கைகலப்போ சண்டையோ கிடையாது. அவன் வழி வேற என் வழி வேற.. வேற வழி இல்லாம இவன் கூட தங்க வேண்டி வந்துருச்சுன்னு சொல்றான்.”

    ”அதான் சார் குழப்பமா இருக்கு.”

”ஆமாம்! குமார் பத்தி விசாரிக்கச் சொன்னேனே! என்ன ஆச்சு?”

  ”குமார் கொஞ்சம் வில்லங்கமான ஆளுதான்னு விசாரணையிலே தெரிய வருது சார்! ஒரு பெரிய பத்திரிகையிலே ரிப்போர்ட்டரா இருந்து  நியுஸ் போட பணம் வசூல் பண்ணது தெரிஞ்சு வேலையை விட்டு நிறுத்திட்டு இருக்காங்க! அதுக்கப்புறம் லோக்கல் பத்திரிகைகளுக்கு செய்தி சேகரிச்சு கொடுக்கிறதோட விளம்பரமும் கலெக்ட் பண்ணிக் கொடுத்திருக்கான். அப்படி ஆட் கொடுக்க மறுத்த சில கம்பெனிகள்லே நீங்க ஆட் கொடுக்கலைன்னா பத்திரிக்கையிலே உங்களைப் பத்தி தப்பா எழுதுவேன்னு மிரட்டி பணம் பறிச்சிருக்கான். கோயில் விழா அரசியல் கட்சி கூட்டம், அன்னதானம் இப்படி லோக்கல்லே எது நடந்தாலும் அதை பத்திரிக்கையிலே போடறேன்னு சொல்லி காசு பார்த்திருக்கான். செயின் ஸ்மோக்கர் ஆல்க்ஹாலிக்கும் கூட.”

    ”அப்போ அவன் கேரக்டர் சரியில்லை! அப்போ எதிரிங்க நிறைய பேர் இருப்பாங்களே!”

  ”மே..பி.. ஆனா அவங்க அவனை கொலை செய்யற அளவுக்கு போவாங்கன்னு சொல்ல முடியாது. பாரன்சிக் ரிப்போர்ட் வந்தா ஓரளவுக்கு  உண்மை தெரியும் சார்.”

   ”பி,எம் நம்ம ஜி.எச் சிலேதானே நடக்குது டாக்டர் பரிமளாதானே சீப் டாக்டர்”.

  ”ஆமா சார்!”

பரசுராம் தன் செல்போனில் டாக்டர் பரிமளாவுக்கு டயல் செய்தார். இரண்டாவது ரிங்கில் போன் எடுக்கப் பட்டது.” டாக்டர் நான் இன்ஸ்பெக்டர் பரசுராம் பேசறேன். காலையிலே ஒரு பாடி அனுப்பினோமே குமார்னு ஒரு ரிப்போர்ட்டர் அந்த பாடியோட பி.எம் முடிஞ்சுதா? எதாவது சொல்லும்படி அப்நார்மல் நியுஸ் இருக்கா?”

    ”அது அப்பவே முடிஞ்சிருச்சு சார்! நீங்க நினைக்கிறாமாதிரி அது கொலை இல்லை சார். நேச்சுரல் டெத் தான். பீ.பி அதிகமாகி மூளைக்குப் போகிற நரம்புகளிலே பிரஷர் அதிகமாகி வெடிச்சிருக்கு மூக்கு வழியா ரத்தம் வெளியேறி இறந்து போயிருக்கார். வேற எந்த க்ளுவும் இல்லே! கொலை செய்யப்பட்டதற்கான வாய்ப்பே இல்லை!”

  ”டைம் ஆப் டெத் சொல்ல முடியுமா?”

   ”எக்ஸாக்டா சொல்ல முடியாது! நரம்பு வெடிச்சு இந்த ரத்தம் கொட்டி நினைவுகளை இழந்து இறந்திருக்கார். எப்படியும் விடிகாலை மூணு மணிக்கு மேல இறந்திருக்கணும். எங்கிட்டே பாடி வந்த  டைம் வச்சு இதைச் சொல்றேன்.”

    ”அப்போ நேச்சுரல் டெத் தான்!”

 “ஆமாம் சார்!  ஒக்கே தேங்க்ஸ் டாக்டர்.”

 ”தலைவலி ஒழிஞ்சுதுய்யா! அது நேச்சுரல் டெத் தானாம் ஃபைலை க்ளோஸ் பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம்! தீபாவளி அதுவுமா தலைவலி இல்லாம போயிருச்சு! ஆமாம் அந்த குமார் பேமிலிக்கு இன்ஃபார்ம் பண்ணச் சொன்னேனே பண்ணிட்டியா? இன்னும் யாரும் வரவே இல்லையே!”

  ”இந்த குமார் மதுரைக் காரன் சார்! அப்பா அம்மா இறந்துட்டாங்க! கல்யாணம் ஆகலே! ஒரே ஒரு அண்ணன். அவருக்குத் தகவல் அனுப்பி இருக்கோம். கிளம்பி வருவதா சொல்லியிருக்கார்.”

 ”சரி அவர் வந்தா பாடியை கொடுத்து அனுப்பிட்டு கேஸை க்ளோஸ் பண்ணிடலாம்.”

      அப்போது.. அங்கே அந்த ஸ்விப்பர் பெண்மணி வந்து நின்றாள்.

”என்னம்மா! நீ அந்த மேன்சனோட ஸ்விப்பர்தானே! என்ன விஷயம்மா!”

  ”சார்! நீங்க என்னை அரெஸ்ட் பண்ணணோங்க!”

   ”எதுக்கும்மா?”

”அந்த குமாரை கொலை பண்ணது நான் தானுங்க!”

 “என்னம்மா சொல்றே?”

”ஆமாம் சார்! அந்த பொறுக்கிய நான் தானுங்க கொன்னுப் புட்டேன்..!”

 இன்ஸ்பெக்டர் புருவம் உயர்த்தினார்..

  ”இது என்ன புதுக்கதையா இருக்கே!”

”ஏம்மா! உனக்கு பைத்தியம் ஏதும் பிடிச்சிருக்கா! அந்த குமார் தானா செத்துப் போயிருக்கான்! பி,பி அதிகமாகி ரத்தக்குழாய் வெடிச்சு ரத்தம் அதிகமா வெளியேறி செத்துப் போயிருக்கான்”.

   ”இல்லீங்கோ! நாந்தான் அவனை கொன்னுப்புட்டேனுங்க! பாவிப்பய! அவன் வாழத் தகுதியில்லாதவனுங்கோ! குப்பை! அதான் கூட்டி பெருக்கிட்டேனுங்க!”

      ”விவரமா சொல்லும்மா! ஒண்ணுமே புரியலை!”

”அந்தக் குமார் பய வில்லங்கமானவனுங்க! ரிப்போர்ட்டர்னு சொல்லிக்கிட்டு காசு பிடுங்கிட்டு இருந்தான். அது கிடக்கட்டும். ஆனா அவன் பண்ண சில காரியங்க என்னை கோபப்படுத்திருச்சுங்க!  பக்கத்துலே ஒரு ஸ்கூல் இருக்குதுங்க! அதுல பணக்கார புள்ளைங்களா படிக்குதுங்க! அதுலே சில புள்ளைங்க கூட படிக்கிற பசங்களோட சேர்ந்து சுத்துங்க! அறியாத வயசு! தப்புன்னு தெரிஞ்சாலும் சிலதை பண்ணுங்க!  அப்படி அதுங்க சுத்தும்போது அதுங்களுக்குத் தெரியாம பாலோ பண்ணி வீடியோ எடுப்பாணுங்க இந்த குமாரு பய..

   அந்த வீடியோவைக் காட்டிப்  அந்த பசங்களை பயமுறுத்தி பணம் பறிப்பானுங்க! அதோட விட்டாத்தானே… சில பொண்ணுங்களை தன்னோட ஆசைக்கு பலியாக்கிட்டாங்க!”

   ”இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”

”நான் இந்த மேன்சனை மட்டும் கூட்டிப் பெருக்கிறதுல்லேங்க! சில வீடுங்கள்ளேயும் வீட்டு வேலைச் செய்யறேன். அப்படி ஒரு வீட்டுலே ஒரு பொண்ணுதான் இந்த விவரம் சொல்லுச்சு! ரெண்டு மூணு நாளா அந்த பொண்ணு ரொம்ப கவலையோட சோர்ந்து போயி இருந்த்தை பார்த்து நானா துறுவித் துறுவி விசாரிச்சேன். அந்த பொண்ணு முதல்லே சொல்ல்லை! அப்புறமா அழுதுகிட்டே விவரம் சொல்லுச்சு! அந்தப் பொண்ணு ஒரு பையனை கிஸ் அடிக்கிற போட்டோ ஒண்ணை எடுத்து வச்சிக்கிட்டு அவ அப்பாகிட்டே சொல்லிருவேன்னு நிறைய பணம் கேட்டிருக்கான். இதுவும் கையிலே இருந்த பணத்தை எல்லாம் கொடுத்திருக்கு அத்தனையும் வாங்கிகிட்டு அந்தப் பொண்ணை படுக்கைக்கு கூப்பிட்டிருக்கான். நேத்துதான் லாஸ்ட் வார்னிங் கொடுத்திருக்கான்.”

  ”அந்தப் பொண்ணை மட்டுமில்லே  பல பொண்ணுங்களை இப்படி மிரட்டி இருக்கான். இந்த குப்பை பய இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா? நானும் இதே மாதிரி ஒரு சம்பவத்துலே பாதிக்கப் பட்டு இருக்கேன். என் பொண்ணு ஒருத்தியை இழந்திருக்கேன். அது மாதிரி யாரையும் இழக்கக் கூடாதுன்னு அவனை கொலை செய்ய முடிவெடுத்தேன்”.

”நான் ஒரு  கெமிக்கல் கம்பெனியிலும் வேலைப் பார்க்கிறேனுங்க. அங்கே இருந்து நைசா கொஞ்சம் பொட்டாசியம் சயனைட் திருடிகிட்டு வந்துட்டேனுங்க. அதை குமார் குடிக்கிற விஸ்கி பாட்டில்லே கலந்துடறதான் திட்டம். ”

  ”நேத்து சாயங்காலம் கூட்டிப் பெருக்க வரும்போது குமார் ப்ரிட்ஜ்லே வச்சிருந்த விஸ்கியிலே கொஞ்சம் சயனைட் தூளை போட்டுட்டேனுங்க…!”

”அதைக்குடிச்ச குமார் இறந்து போயிருக்கணுங்க! காலையிலே அவன் ரத்தம் கக்கி செத்துப் போனதை பார்த்த்தும் அப்படி ஒரு சந்தோஷமுங்க! அத்தனையும் அடக்கிக்கிட்டு  இருந்தேனுங்க! ஆனா மனசாட்சின்னு ஒண்ணு இருக்குதே! அது என்னை தூங்க விடலைங்க! என்னை கைது பண்ணுங்க!”

   ”ஆனா பி.எம் ரிப்போர்ட்ல சயனைட் கலந்திருக்கிறதா எந்த தகவலும் இல்லையே டாக்டர் பரிமளா பொய் சொல்ல மாட்டாங்களே!”

      ”ஒரு நன்மை நடக்கணும்னா பொய் சொன்னாலும் தப்பில்லேன்னு வள்ளுவரே சொல்லியிருக்காருங்க! வள்ளுவரே அப்படி சொல்லியிருக்கும்போது பரிமளா சொல்ல மாட்டாங்களா?”

    ”என்ன சொல்ல வர்றே?”

   ”என்கிட்டே குமார் ப்ளாக் மெயில் பண்றதா சொல்லி அழுதப் பொண்ணு யாரு தெரியுங்களா?”

     ”யாரு…?”

  ”டாக்டர் பரிமளாவோட பொண்ணுதானுங்க…!”

  ”ஓ மைகாட்…!”

 “என்னை கைது பண்ணுங்க இன்ஸ்பெக்டர்…”

”உன் பேரு என்னம்மா? இதுவரைக்கும் கேக்கவே இல்லை! கதையே முடியப் போவுது!”

  ”மாசாணியம்மா சார்!”

 ” மாசாணியம்மா! இது கொங்கு நாட்டு தெய்வப்பெயர்தானே!”

  ”ஆமா சார்! ”

   ”ஒரு குற்றத்துக்கு தெய்வம் தண்டனை தந்தா  அதுக்கு மனுசங்க என்ன பண்ண முடியும்? தெய்வம் தந்த நீதியை ஏத்துக்கத்தானே வேண்டும்.”

  ” ஆமாமுங்க!”

   ”நீயும் ஒரு நீதி தேவதைதான்! அந்த குமார் உயிரோட இருக்க வேண்டியவன் இல்லே! சாக வேண்டியவன் தான்!  நீ செஞ்சதுதான் சரி! கடவுள் உன் ரூபத்திலே அவனுக்குத் தண்டனை கொடுத்திருக்கார்.”

   ”நீ செஞ்ச குற்றத்தை நிரூபிக்க எந்த ஆதாரமும் எங்க கிட்டே இல்லை! இதை இதோட மறந்துடு! நாங்களும் மறந்திடறோம்! உங்களை கை எடுத்து கும்பிட்த்தான் தோணுது கைது பண்ணத் தெரியலை!… ”

  காலையில் தன்னை ஸ்விப்பரா என்று இழிவாக பார்த்த இன்ஸ்பெக்டரின் கண்களில் ஈரம் கசிவதைப் பார்த்தபடி வெளியேறினாள் மாசானியம்மா!

மன்னித்துவிடு மணிமொழி!

மன்னித்துவிடு மணிமொழி!

அவன் அப்படி செய்வான் என்று கொஞ்சம் கூட மணிமொழி நினைத்துக்கூட பார்க்கவில்லை! பரபரவென உள்ளே வந்த்தும் யார் இருக்கிறார்கள் என்ன ஏது என்று ஒன்றைக்கூட பார்க்கவில்லை! என்னை மன்னித்துவிடு மணிமொழி! என்று சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்துவிட்டான்.

  அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுவரவே ஒருநிமிஷம் ஆகிவிட்ட்து மணிமொழிக்கு. ஆனாலும் சுதாரித்துக் கொண்டாள். “என்ன ..என்னங்க இது! முதல்லே எழுந்திருங்க!” என்றாள்.

பக்கத்து அறையில் அவனது மாமனாரும் மாமியாரும் ஏதோ குசுகுசுவென பேசிக்கொள்வது காதில் விழுந்தது. அதை சிறிதும் லட்சியம் செய்யாமல், ”மணிமொழி முதல்லே நீ என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தைச் சொல்லு! அப்போதான் எழுந்திருப்பேன்!” என்றான் மகேஷ். மணிமொழியின் கணவன்.

  “உங்களை எதுக்கு மன்னிக்கனும்?” என் பேர் எல்லாம் இன்னும் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? முதல்லே எழுந்திருங்க! ஏதோ சி எம் கால்லே விழற அமைச்சருங்க மாதிரி என் கால்லே விழுந்திருக்கீங்க என்றாள் மணிமொழி நக்கலாக.

 தடாலடியாக விழுந்தவன் தடாலடியாக எழுந்தான். இ..இந்த நக்கல்தான்  நம்மளை பிரிச்சது… அது மட்டும்..

  அது மட்டும் இல்லேன்னா! என்னை கட்டிக்கிட்டு அவளை வைச்சிக்கிட்டு இருக்க மாட்டீங்களா?

’பளார்” என்று கன்னத்தில் அடிவாங்கியது போல உணர்ந்தான்.

”மணிமொழி! எல்லாத்தையும் மறந்திருவோம்! என்னை மன்னிச்சிடு! நான் அவளை மறந்திட்டேன். இனிமே உன்னோடத்தான் வாழப் போறேன்!”

   ”அதுக்கு நான் ஒத்துக்கணுமே மிஸ்டர் மகேஷ்!”

”ப்ளீஸ் மணிமொழி! நான் திருந்திட்டேன்! எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு!”

“நிறைய சந்தர்ப்பங்களை உங்களுக்கு கொடுத்து பார்த்திட்டேன்! இனியும் அப்படிக் கொடுத்து ஏமாற நான் தயாரா இல்லை! இப்ப நீங்க எதுக்கு வந்திருக்கீங்க டைரக்டா நீங்க சொல்றீங்களா? இல்லை நானே சொல்லட்டுமா?

மணிமொழியின் இந்த அதிரடியான பேச்சால் அதிர்ந்தான் மகேஷ். ”அ.. அது வந்து..”

 ”போலீஸ்லே உங்க மேல கொடுத்த கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கனும் அதைத்தானே சொல்ல வர்றீங்க?

அவன் முகம் பேஸ்த் அடித்தாற்போல மாறியது.. அ.. அதேதான்! ப்ளீஸ் மணிமொழி இந்த ஒரு முறை…!

   ”யோவ்! நீ எது வேணுமின்னாலும் செய்வே! தாலிக்கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நான் மன்னிச்சு விட்டுகிட்டே இருக்கணுமா?”

  “தப்புதான் மணிமொழி!’ நீ மட்டும் டைவர்ஸுக்கு ஒத்துக்கிட்டிருந்தா நான் அப்படியொரு  வேலை செஞ்சிருக்க மாட்டேன்!”

”யோவ்! பொம்பளைங்கன்னா உங்க விளையாட்டுப் பொருளா? நினைச்சா கல்யாணம் பண்ணிப்பீங்க! வேண்டாம்னா டைவர்ஸ் வாங்கிப்பீங்க! நாங்க என்ன யூஸ் அண்ட் த்ரோ மெட்டீரியலா? இந்த நவீன யுகத்திலேயெயும் எங்களை அடிமையாவே  நடத்த பார்க்கிறீங்களே!”

 ”சாரி மணிமொழி! என் விருப்பம் இல்லாமலே வீட்டுலே உன்னை எனக்கு கட்டி வைச்சிட்டாங்க! நான் ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் பண்ணிக்கிட்டு இருந்தேன். அவளை மறக்க முடியலை! அதான் உன்னை விவாகரத்து பண்ணிட்டு அவளோட வாழனும்னு டைவர்ஸ் கேட்டேன்”.

 ”ஏய்யா! இந்த புத்தி கல்யாணம் செய்யறதுக்கு முன்னாடி வந்திருக்கணும்! நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்! அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உங்கப்பா அம்மாகிட்டே சொல்ல வேண்டியதுதானே.. கமுக்கமா இருந்துட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டே! அதோட விட்டியா? ஒரு மாசம் முழுசா என் கூட குடித்தனம் நடத்திட்டு உன் லவ்வர் நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சதும் என்னை கழட்டிவிட துணிஞ்சிட்டே!”

 ”உனக்கு அவளைப்பிடிச்சிருந்தா அப்பவே என்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லே! நானே என் வீட்டில் சொல்லி கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன்! ஆனா கடைசி வரைக்கும் கமுக்கமா இருந்திட்டே என்னோட மனசை கலைச்சு என் உடம்பை சுவைச்சு எல்லாத்தையும் முடிச்சுட்டு எப்படிய்யா உனக்கு மனசு வந்த்து டைவர்ஸ் கேட்க.  உன் களவாணித்தனம் எல்லாத்தையும் மன்னிச்சு உன் கூட வாழ நான் தயாரா இருந்த போதும் நீ ருசி கண்ட பூனையா அவ பின்னாடியே சுத்தி வந்து என்னை டார்ச்சர் பண்ணி விவாகரத்து கேட்டே அதுக்கு நான் ஒத்துக்கலை!”

   ”சாரி மணிமொழி! நான் செஞ்சது தப்புத்தான்! ஆனா என்னாலே அவளை மறக்க முடியலை! அவ இல்லாம என்னாலே வாழ முடியாதுன்னு அப்ப தோணுச்சு!”… 

”சபாஷ்! கட்டின பொண்டாட்டிக்கிட்டேயே வைப்பாட்டி இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற தைரியமாவது உனக்கு இருக்கே! இந்த தைரியம் உனக்கு முன்கூட்டியே இருந்திருந்தா என்னோட வாழ்க்கையை நான் இழந்திருக்க மாட்டேன் இல்லே.?”

   ”உனக்கென்ன? தினம் ஒரு பொண்ணோட வாழ்ந்துட்டு போயிருவே! நான் அப்படி இருக்க முடியுமா? சமூகம் என்னைப்பத்தி என்னவெல்லாம் பேசும்? அதை யோசிச்சுப் பார்த்தியா? யோசிச்சு பார்த்திருந்தா அப்படி ஒரு வேலையை நீ பார்த்திருப்பியா?”

   ”இல்லே மணிமொழி! மேட்ரிமோனியல்லே உனக்கு வரன் வேணும்னு அப்ளை பண்ணது என்னோட தப்புத்தான் ஒத்துக்கறேன்! மகா மோசமான செய்கை அது! அதுக்காக நான் வெட்கப்படறேன். ப்ளீஸ் என்னை மன்னிச்சுரு!”

  ”செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு ஈஸியா மன்னிப்புன்னு கேட்டுட்டா சரியா போயிருமா? புருஷன் ஒருத்தன் இருக்கிறப்ப இன்னொருத்தன் என்னை பெண் கேட்டு வந்தா என் மனசு என்ன பாடுபட்டிருக்கும்? நான் எப்படி தவிச்சுப் போயிருப்பேன்! என் மன உளைச்சளுக்கு அளவே இல்லாம ஒரு நாளைக்கு பத்து இருபது போன் கால்கள்! இந்த கஷ்டத்தை எல்லாம் நான் அனுபவிச்சிட்டு உனக்கு மன்னிப்பு கொடுத்திடனுமா?”

 ”மணிமொழி நான் தப்பை உணர்ந்திட்டேன்! என் வீட்டுலேயே என்னை சேர்க்க மாட்டேன்னுட்டாங்க!  அவளும் என்னை உதாசீனப்படுத்திட்டு வேற ஒருத்தன் கூட கல்யாணம் பண்ணிக்க திட்டம் போட்டு வைச்சிருக்கா! நீயும் என்னை வெறுத்து ஒதுக்காதே…!”

 “பலாக்கா இல்லேன்னுதான் இந்த கலாக்காவைத் தேடி வந்திருக்கியா? உன் புத்தி எப்படி மாறும்?”

  ”எல்லாம் உன்னாலேதான்! நீ மட்டும் சைபர் க்ரைம்லே புகார் பண்ணாம இருந்தா எல்லாம் நல்லபடியா போயிருக்கும்! எனக்கு வெளிநாட்டுலே வேலை கிடைச்சிருக்கும் அவளும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிருப்பா! உன்னாலே என் வாய்ப்பெல்லாம் போயிருச்சு! நீயாவது என்னை ஏத்துக்கோ! நடந்ததை மறந்துட்டு நாம நல்லபடியா வாழலாம்!”

  ”உன்னைப் போல ஒரு ஈனபுத்தி உள்ள மனுஷன் கூட நான் வாழத்தயாரா இல்லை! ஒரு காலத்திலே உன் கூட்த்தான் வாழ்க்கைன்னு இருந்தேன். ஆனா அது தப்புன்னு நீ நல்லாவே புரிய வைச்சிட்டே! நீ என்னதான் கால்லே விழுந்து மன்னிப்பு கேட்டாலும் உன்னை மன்னிக்க என் மனசு இடம் கொடுக்கலே! பொண்டாட்டிக்கே நீ புருஷன் தேடினவன் இல்லையா? அதுவும் ஒருவிதத்துலே நல்லதாத்தான் அமைஞ்சிருக்கு. அதுலே வந்த ஒரு வரன் எனக்குப் பிடிச்சுப் போச்சு! என் முழுக்கதையை அவருக்கு சொல்லிட்டேன். உன் கூட டைவர்ஸ் வாங்கிற வரைக்கும் அவர் காத்திருக்கிறதாவும் சொல்லிட்டார். நீ கேட்ட டைவர்ஸ் உனக்கு இப்ப ஈஸியா கிடைச்சிருக்கு வாங்கிட்டுப் போ!” என்று பீரோவைத் திறந்து விவாகரத்து பத்திரத்தை எடுத்து வீசி எறிந்தாள் மணிமொழி.

“அப்போ போலீஸ் கம்ப்ளைண்ட் வாபஸ் வாங்க மாட்டியா?”

”மாட்டேன்! நீ தண்டனை அனுபவிச்சே ஆகனும்! உன் குற்றம் உன்னை உறுத்தனும் ஆனா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம  என்னை ஏமாத்தி மன்னிப்பு கேட்டு கம்ப்ளைண்ட வாபஸ் வாங்க நினைச்சே இல்லே! அது தப்பு! உன்கிட்டே நான் மட்டும் இல்லே! எந்த பொண்ணுங்களும் இனி சிக்கக் கூடாது! அதுக்கு நீ போலீஸ் கொடுக்கிற தண்டனையை ஏத்துக் கிட்டுதான் ஆகனும்! இனிமே உங்களுக்கு ஜெயில்தான் மாமியார் வீடு மிஸ்டர் மகேஷ்.” மணிமொழி ஆக்ரோஷமாக சொல்ல 

     அதிர்ந்துபோய் பேச வார்த்தைகள் வராமல் தளர்ந்து போய் நடந்தான் மகேஷ்.

 (முற்றும்)

 (சில வாரங்களுக்கு முன் தினமலர் பேப்பரில் படித்த ஒரு செய்தியே இந்தக் கதையின் கரு.   மனைவிக்கு வரன் தேடி மேட்ரிமோனியலில் விளம்பரம் செய்த கணவர் கைது என்பதுதான் அந்த செய்தி>

காயத்ரி

ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி

காயத்ரி

————-

“சுக்லாம்பரதரம் …..சொல்லுங்கோ..”

என்று அந்த காவேரி ஆற்றங்கரையில் ஆவணி அவிட்டத்திற்கு வந்திருப்பவர்களைப் பார்த்து, இயந்திர கதியில் சொல்லிக் கொண்டிருந்தான், நாராயணன்…

பிடிப்பில்லாமல்..மனத்தில் லயிப்பில்லாமல் அவன் சொன்ன வார்த்தைகளை மந்திரங்களாக நினைத்து, பின்னால் பயபக்தியுடன் சொல்லிக் கொண்டு இருந்தது, அந்த கூட்டம்.

காரணம் இல்லாமல் இல்லை..உணர்ச்சி வசப் பட்டுக் கொண்டு, கண்களில் நீர் கசிந்துருகி..பதம் பிரித்து..அர்த்தத்துடன் ஒவ்வொரு வேத மந்த்ர உச்சாடனையையும் ஸ்பஷ்டமாக..உற்சாகத்துடன், சொல்லிக் கொண்டிருந்த நாணா இன்று இல்லை..

செத்துப் போயிட்டான்..இவன் வேறு யாரோ..வெளி நாட்டில் சொல்வாளே..ரூபாவா..ரோபோவா..ஏதோ ஒண்ணு அதைப் போல எந்திர மனுஷன் தான் இதோ இங்க நின்னுண்டு சொல்லிண்டு இருக்கானே இவன்.

வாய் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், கண்கள் வந்திருந்த தலைகளை எண்ணிக் கொண்டிருந்தது…மனசோ…தலைக்கு முக்கால் ரூபாய் என்று கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தது!

யாருக்காக சேர்க்கப் போகிறான், நாணா? உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு, இந்த உலகில் ஒட்டிக் கொண்டிருப்பது அவனுடைய அம்மா தான்..

அம்மாவிற்கு அவன் மேல் அபிரிமிதமான பாசம்…ஆஸ்த்மாவிற்கு அவள் மேல் பாசம்..குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என்கிறது..

மனசுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறானே..தட்சணை..அது அம்மாவை சந்தோஷப் படுத்தாது..இவன் வாய் கொள்ளாம கூப்பிடறதே போறும்..அதுவே ஆனந்தம் அந்த ஜீவனுக்கு!

….இதோ இங்க நிக்கறாளே..இவாளைப் போல கார்த்தால பத்து மணிக்கு ஆஃபீசிற்குப் போய் ..அரட்டை அடிச்சுட்டு..சாயங்காலம் ..புதுசாய் குளிச்சவன் போல ’பளிச்’னு ஆத்துக்கு ஓடோடி வராளே..அது மாதிரி இல்லையேன்னு தான் ஏக்கமா இருக்கும்..அதுக்கென்ன பண்றது? வைதீகன் தர்ப்பக் கட்டையை தூக்கிண்டு தான் போகணும்..டை கட்டிண்டு, ஆஃபீசுக்குப் போக முடியுமா?

குடுமியோடு, டையை கற்பனை செய்து பார்த்தான்..கவிந்து கொண்டிருந்த துக்கத்திலும்..மின்னல் கீற்றாக சிரிப்பு மலர்ந்தது, மனதிற்குள்…

‘சூர்யஸ்ய….மாமன்ஸ்ய ..’ மனம் சூரியனை நினைக்க வில்லை..சந்திராவை நினைத்துக் கொண்டிருந்தது!

அவனைப் போலத் தான் அவளும்! ஆனா, ஒரு வித்யாசம்..அவ அம்மா நாலு ஆத்துக்கு உபகாரம் பண்ணக் கிளம்பிடுவா..ஏதாவது விசேஷம்னா,

அங்க கனகத்து மாமியோட சமையல் தான் மணக்கும்!

கனகத்து மாமி, தம் பொண்ணு சந்திராவையும் ஒத்தாசைக்குக் கூட்டிண்டு போவா..அந்த காலத்தில..கல்லிடைக் குறிச்சி மாதிரி வட்டமா, பெரிய ஆத்துக் கூடத்தில எல்லாரும் ஊர் வம்பு பேசிண்டும்…அப்பளாத்துக்கு வட்டு இட்டுண்டும் இருக்கும் போது தான் ஒரு நாள் நாணாவின் கவனத்தைக் கவர்ந்தாள் சந்திரா.

தாழ்வாரத்தில..வெயில் வந்தா மணி பன்னிரெண்டு என்று தெரியும்..தெரிஞ்சுண்டும், வாசல் வழியாப் போற நாணாவை சந்திரா எதுக்குக் கூப்பிடணும்?

’இந்தாங்கோ… நாணு சாஸ்திரிகள் வாள்! மணி என்ன ஆறது..சித்த சொல்லுங்கோ?’

கண்களில் குறும்பு மின்ன அவள் அன்று கேட்டதை நினைத்துக் கொள்கிறான், நாணா..

அவனை யாரும் நாணு சாஸ்திரிகள் என்று கூப்பிட மாட்டா..அதுக்காக ‘டேய் நாணுன்னும் கூப்பிடறது கிடையாது..கும்ப கோணம் ராஜா வேத பாடசாலையில படிச்ச பையன்கிற மரியாதை அவனிடம் ஒட்டிண்டு இருக்கும்!

’ விசாலாட்சி அம்பா சமேத விஸ்வ நாத ஸ்வாமி சன்னிதெள…

அகிலாண்டேஸ்வரி அம்பா சமேத ஜம்புகேஸ்வர ஸ்வாமி சன்னிதெள..

சுகுந்த குந்தளாம்பா அம்பா சமேத மாத்ருபூதேஸ்வர ஸ்வாமி சன்னிதெள..’

‘…..சமையல் காரா ஆத்திலே பொறந்ததே ஈரேழு ஜன்மத்துக்கும் போறும்..

தர்ப்பைப் பிடிக்கிற வாத்யாருக்குவேற நான் வாக்கப் படணுமா நான்? நன்னா கதை சொன்னே போ!..எனக்கு வரப் போற ஆம்ப்டையான் சின்ன வேலையில இருந்தாலும் டெய்லி ஆஃபீஸ் போயிண்டு வந்துண்டு இருக்கணும் அதான் என் ஆசை!”

’மளுக்’கென்று நாணாவின் மூன்று மாத ஆசையை, முருங்கைக் காயை ஒடிக்கிறார்போல ஒடித்துப் போட்டு விட்டு ’ஸ்டைலா’க நடந்து சென்று விட்டாள் அந்த சந்திரா!

‘அதான் என் ஆசை..அதான் என் ஆசை..’ சினிமால சொல்றாப்பல ஏதோ ஒண்ணு, மனசுல படீர்..படீர்னு வந்து அடிச்சது நாணாவுக்கு..வாயில ‘அதான்

என் ஆசை’ன்னு அவனை மீறி வரப் பார்க்கவே, சட்னு ‘ஆனந்த வல்லி அம்பா சமேத நாக நாத ஸ்வாமி சன்னிதெள’ன்னு ஒரு வழியா சமாளிச்சுண்டுட்டான்..

தேவதைகளுக்கு அர்க்யம் விட்டுக் கொண்டிருந்தார்கள், எல்லாரும்..

முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு!

நாணா கரையில் நின்று கொண்டு மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தான்..

‘…ச்சே..என்ன பொழைப்பு இது..ஒவ்வொருத்தன் எவ்வளவு அமெரிக்கையா இருக்கான்..இந்த காலத்திலும், நாம காயத்ரியை கட்டிண்டு

மாரடிக்கணும்னு தலையில எழுதியிருக்கே..என்ன பண்றது?…’

இதான் கடைசீ ஆவணி அவிட்டம்..தலையை ‘க்ராப்’ வைச்சுண்டு இன்னும் பத்து நாள்ள பட்டணத்தைப் பார்க்க ஓடிப் போக வேண்டியது தான்

வாசு ஏதோ ஆட்டோ ஓட்டறானாம்..ஏதாவது ஒரு ஒர்க்‌ஷாப்ல க்ளீனர் வேலையாவது வாங்கித் தர மாட்டானா…! அப்புறமா கொஞ்சம் காசு சேர்த்துண்டு இப்ப என்னடி சொல்றேன்னு சந்திராவைப் பார்த்து நாலு கேள்வி கேட்கணும்..

“சொல்லுங்கோ..ஓம் பூர்ப்புவஸ்ஸரஹா..தத்ஸ விதுர்வரேண்யம்…….”

அவன் சொல்லிக் கொண்டே போக, எல்லாரும் கோரஸாகச் சொன்னார்கள்.

நாராயணன் ஸ்ரத்தையா மந்திரம் சொல்லிண்டு இருக்கான்… நாம பண்ணி வைக்கிற கடைசி ஆவணி அவிட்டம் என்று கூட இருக்கலாம்!

நாணா என்ன நாணா..பட்டணம் போனதுக்கப்புறம் க்ராப்..மீசை எல்லாம்

வைச்சுண்டு நம்பளைப் பார்த்தாலே’டிப்டாப்’பாக இருக்கணும்…எல்லாரும்

மிஸ்டர் நாராயணன் சார் இருக்காரான்னு கூப்பிடணும்….கலர்,கலரா சட்டைப்

போட்டுக்கணும்..பேண்ட் போட்டுக்கணும்……

எல்லாரும் ஒருவரை ஒருவர் நமஸ்காரம் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்..புதுசா யாரோ ஒருத்தர் நாணா பக்கம் வந்தார்..அவருடன் கூட

கோடி ஆத்து சீனு!

” …. நாணா, இவர் நம்மூருக்கு புதுசா வந்திருக்கார்..டெல்லியில பெரிய புரஃபஸராயிருந்து ரிடையர்ட் ஆனாராம்..உன்னோட பேசணும்னு ஆசைப் படறார்..” என்றான் சீனு..

” நமஸ்காரம்”

“ நமஸ்காரம்”

கை கூப்பியவர் அப்படியே அவன் கையை வாத்ஸல்யமாகப் பிடித்துக் கொண்டார்.

“இந்த இருபது வயசுல அதுஅதுகள் ’ஸ்டெப்’ வைச்சுண்டு..சிகரெட் குடிச்சுண்டு அலையறதுகள்..பழசை மறக்காம உங்களைப் போல சில பேர் இப்படி இருக்கறதுனால தான் நாட்டில மழை கொஞ்சமாவது பெய்யறது….

சும்மா சொல்லக் கூடாது..மந்திரங்கள் எல்லாம் ஸ்வர சுத்தமா நன்னா

சொல்றேள்.. நானும் டில்லியில பார்த்திருக்கேனே..என் பர்ஸ் மேல தான் நாட்டம் எல்லார்க்கும்…ஒண்ணும் தெரியாது..ஆனா, பெரிசா தர்ப்ப்பக் கட்டை தூக்கிண்டு வந்துடும், சாஸ்திரிகள்னு…”

சொல்லிச் சொல்லி மாய்ந்து போனவர், அவனது கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார்… நாணாவிற்கு மனது நெகிழ்ந்து போய் விட்டது அப்படியே!

”ஆச்சார்ய தேவோ பவ…. என்று தெரியாமலா சொன்னார்கள்…இத்துனூண்டு வயசுல இவ்வளவு ஞானத்தைப் பார்த்தது இல்ல…தீர்க்காயுஸா இருக்கணும்…”

நாணாவிற்கு பெருமை தாங்க முடியவில்லை..

குடுமியை முடிந்து கொண்டான்..

கணீரென மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தான்..

அப்படி மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்த போது, கிரஹணம் ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் விலக ஆரம்பித்தது, மனதுக்குள்ளிருந்து.

’சந்திர’ கிரஹணமாய்த் தான் இருக்க வேண்டும் அது!

(சித்திரம்: லக்ஷ்மி நாராயணன்

பம்பரம்! சிறுகதை

பம்பரம்

பரிவை சே.குமார்.

ம்பர சீசன் தொடங்கியதில் இருந்து ஆளாளுக்கு மதி கடையில் இருந்து பம்பரம் வாங்கி வந்து சாட்டையில் சுற்றி கோவில் தரையில் கிர்ரெண்று சுற்றினார்கள். மேலும் சிலரோ அதை லாவகமாக கையில் எடுத்து அடுத்தவரின் கையில் விட்டுச் சந்தோஷப்பட்டனர். ஒரு சிலர் பம்பரம் வாங்கிக் கொடுக்க முடியாது என அம்மாக்கள் பிடித்த அடத்தின் காரணமாக நல்ல வைரம் பாய்ந்த கருவைக் கட்டையை வெட்டி அழகாக செதுக்கி ஆணி அடித்து பம்பரம் ஆக்கியிருந்தார்கள். மேலத்தெரு முத்துசாமியின் நாலு வயசு சந்தோஷூக்கு இப்போ கடையில் தலைமீது ஆணி வைத்து அதில் சாட்டை கட்டி புதிதாக வந்திருக்கும் பம்பரத்தை வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அவனும் கிர்ரெண்ற சப்தத்துடன் சுத்தப பழகிவிட்டான். அவனோட அக்கா பத்து வயசு பாமா லாவகமாச் சுத்தி அவனைக் குஷிப்படுத்தினாள். அதுவும் சாட்டையில் தொங்கியபடி சுற்றுவது அழகாகத்தான் இருக்கு.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்ற முத்து மனசுக்குள் அப்பத்தாவைக் கருவிக் கொண்டான். எல்லாரும் பம்பரம் வாங்கி சுத்துறானுங்க…. இந்தக் கெழவி பம்பரம்தான் வாங்கித் தர விடலை. கட்டையில செஞ்சு தாறேன்னு சொன்ன சோலைப் பயலயுமில்ல திட்டிப்புடுச்சு… வெளங்காத கெழவி…. கட்டையில போக… 

ஏய் முத்து தள்ளி நில்லுடா… பம்பரம் குத்தும் போது சும்மா ரெங்கிக்கிட்டு வரும்… மண்டைகிண்டையில சொட்டுன்னு வந்து அடிச்சிப்புடும்….” கத்தினான் சேகர்.

ஆமா இங்கிட்டுத்தான் வருது… சும்மா சுத்துடா.. மொட்டக்கட்ட அடிக்கப்போறே… அதுக்கு உதாரு விடுறே…” பம்பரம் இல்லாத கடுப்பில் திரும்பி எகிறினான் முத்து.

எனக்கென்னப்பா நா சொல்லிட்டேன்… அப்புறம் உன் இஷ்டம்…” என்றபடி பம்பரத்தை சாட்டையால் சுற்றி ஆணியின் நுனியை நாக்கால் எச்சில்படுத்தி நாக்கைத் துருத்தி காலைத் தூக்கி வட்டத்துக்குள் இருந்த பம்பரத்தின் மீது குத்தினான்.

டேய் சோல… எனக்கொரு பம்பரஞ் செஞ்சுதாடா…” மும்மரமாக பம்பரம் சுற்றுவதில் இருந்த சோலையிடம் கெஞ்சலாகக் கேட்டான்.

அட போடாங்… உங்க அப்பத்தா சோத்தை திங்கிறியா பீயைத் திங்கிறியான்னு கேக்குது… வேண்டாம்ப்பா… உனக்கு நாஞ் செஞ்சுதரமாட்டேன்…”

“….” பதில் சொல்லாமால் வட்டத்துக்குள் குத்தி ர்ர்ர்ரென்ற சத்தத்துடன் வெளியே சீறி சுற்றிய முருகனின் சிவப்புக் கலர் பம்பரத்தையே பார்க்க, அவன் பார்ப்பதைப் பார்த்த முருகன் சாட்டையை பம்பரத்தைச் சுற்றி முடிச்சுப் போல் போட்டு ஒரு கையால் டக்கென்று மேலே தூக்கிவிட்டு லாவகமாக கையில் வாங்கி சுத்தவிட்டான்.

டேய் அதை எங்கையில விடுறா…” வெட்கத்தை விட்டுக் கேட்டான்.

டேய் இங்க பாருங்கடா… தொத்தப்பயலுக்கு பம்பரம் கையில சுத்தணுமாம்… நீ விடாதேடா…” என்று சொன்ன இளங்கோவிடம் “சும்மா இருடா” என்ற முருகன் அவனது கையில் விட்டான். கிர்ரெண்று கையில் சுற்றும் போது உச்சந்தலை வரை சில்லிப்பாய் இருந்தது. அடக்க முடியாத சிரிப்பு அவனுக்கு வந்தது.

டேய் முத்து… அடேய் இங்க வாறியா… வரவா…?” அப்பத்தாவின் குரல் கேட்டதும் கடுப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.

வீட்டுக்குப் போனதும் வாசலில் நின்ற அப்பத்தா, “அவனுக பம்பரம் குத்துற இடத்துல நிக்காதேன்னு எத்தனை தடவ உனக்குச் சொல்லியிருக்கேன்… ஒரு நேரம் போல ஒரு நேரமிருக்காது. அது பாட்டுக்கு படாத இடத்துல பட்டுட்டா என்ன பண்றது.?” கத்தினாள்.

சும்மா போப்பத்தா… பம்பரந்தான் வாங்கித் தரமாட்டீங்க… பாக்கக்கூடக் கூடாதா?”

எனக்கென்னப்பா உங்கப்பன் வரும்போது உங்காத்தாக்கிட்ட சொல்லி வாங்கிட்டு வரச்சொல்லுங்க….”

நா அப்பாக்கிட்ட சொல்லி வாங்கியாரச் சொல்லுறேன்….” என்றபடி உள்ளே சென்றான்.

றுநாள்…

முத்து நா உனக்கு என்னோட செவப்புப் பம்பரத்தைத் தரவாடா?” முருகன் அவனிடம் கேட்டான்.

போடா… நீ சும்மா சொல்லி என்னைய வெறுப்பேத்துவே…”

இல்லடா நெஜம்மாத்தான்… நான் புதுசா பம்பரம் வாங்கப்போறேன்… இதைத் தாறேன்…” என்றான்.

எப்போ?”

மத்தியானம் வரும்போது புதுசு வாங்கிட்டு வந்திருவேன்… சாயந்தரம் உனக்குத் தாறேன்…”

உண்மையாவா?”

எங்க அம்மா மேல ஆணையா”

சரி குடு பாக்குறேன்…”

இந்தா…”

வாங்கி எல்லாப் பக்கமும் பார்த்தவன் இடமில்லாமல் ஆக்கர் போட்டிருப்பதைப் பார்த்ததும் “என்னடா இம்புட்டு ஆக்கர் இருக்கு…” முகத்தைச் சுருக்கினான்.

ஆமா வெளாடும் போது தோத்தா ஆக்கர்தானே போடுவாங்க… பிரியாத்தானே தாரேன்னு சொன்னே… புதுசா வாங்கிக் கொடுப்பாக…”

இல்லடா சும்மா கேட்டேன்… நல்லாத்தான் இருக்கு…”

வேணாம்ன்னா விடு… வேற யாருக்காச்சும் கொடுக்கிறேன்….”

இல்லடா… எனக்கே கொடுடா… இனிமே இதுல ஆக்கர் விழுகாம பாத்துக்கிறேன்…”

உனக்கு ரொம்ப திமிருடா… வெளாட்டுன்னு வந்தா ஆக்கர் வாங்கம இருக்க முடியாது… உன்னய முதல்ல சேக்குறானுங்களான்னு பாரு….”

மாலை பம்பரம் சுற்றத் தயாரானபோது…

டேய் நானும் வாரேன்டா..” என்றபடி வந்து நின்றான் முத்து.

டேய் இங்க பாருங்கடா தொத்தப்பய ஆட்டைக்கு வாராணாமுடா… உங்கிட்ட ஏதுடா பம்பரம்… உங்கப்பத்தா வாங்கிக் கொடுத்துச்சா…” ஏளனமாக கேட்டான் சேகர்

இல்ல முருகன் கொடுத்தான்… எங்கப்பா இந்த வாரம் வரும்போது புது பம்பரம் வாங்கிட்டு வாறேன்னு சொல்லியிருக்காக…”

ப்ப்பூ….என எல்லாருமாக சிரித்தார்கள்.

எதுக்குடா சிரிக்கிறீங்க…?”

புதுசா வாங்கி என்ன பண்ணப்போறே… உனக்கு பம்பரமே குத்தத் தெரியாது… முதல்ல இதுல பழகு அப்புறம் பாப்போம்…” தான் என்னவோ பம்பரம் சுற்றுவதில் சாம்பியன் என்பது போல சோலை பேசினான்.

எதுக்குடா இவனுக்கிட்ட கொடுத்தே… ஆக்கர் வாங்கிறதுக்காவது வச்சிருக்கலாமுல்ல…” மெதுவாக கீறிவிட்டான் இளங்கோ

அட பொயிட்டுப் போகுதுடா…. பாவம் சுத்திட்டுப் போறான்…”

சரிடா… உனக்கு மூணு சான்ஸ் தாரேன்… இந்த வட்டத்துக்குள்ள இருக்க என்னோட பம்பரத்து மேல ஒரு தடவையாச்சும் ஆணி பதியிற மாதிரி குத்திடு… அப்புறம் உன்னைய ஆட்டையில சேத்துக்கிறோம்…” முத்துக்கு போட்டி வைத்தான் சேகர்.

சரிடா… வையி….” தயாரானான் முத்து

டேய் எதுக்குடா தேவையில்லாம… அவனையும் ஆட்டையில சேத்து அவனோட பம்பரத்தை உடைப்போம்…” என்றான் சோலை.

இவன் முதல்ல வட்டத்துக்குள்ள சுத்துறானான்னு பாப்போம்… சும்மா இருங்கடா…”

சாட்டையை சுற்றும் போது நிற்காமல் சுத்திக் கொண்டே வர எல்லாரும் சிரித்தார்கள்.

ஒரு வழியாக சுற்றி ஓங்கிக் குத்த முதல் குத்து வட்டத்துக்குள் விழுந்தாலும் மொட்டைக் கட்டையாக மண்ணில் சுற்றிச் செல்ல “மொதக்குத்து மொட்டக்குத்து…” என்று எல்லாரும் ஒன்றாகக் கத்தினார்கள்.

இந்த முறை எப்படியும் ஆக்கர் போட்டே ஆகணும் என்ற முனைப்புடன் குத்த இந்த முறை பம்பரம் சாட்டை நுனியில் தொங்கியது.

அடேய் இனி இவன் ஜெம்மத்துக்கும் நம்ம கூட ஆட முடியாது…. முருகன் வச்சிருக்கும் போது எப்புடி ரெங்குன பம்பரம் தொத்த கைக்குப் போனதும் தொத்தலாகிப் போச்சுடா…” சிரித்தான் இளங்கோ.

என்னடா தொத்த… நோத்தாவா எனக்குப் பேரு வச்சா… மூத்தரக்குண்டி…” என்று பதிலுக்கு சிலுப்பினான்.

டேய் மூத்தரக்குண்டியின்னு சொன்னே மூக்கைப் பேத்துருவேன்…” இளங்கோ எகிறினான்.

இருடா… இன்னும் ஒரு குத்து… அவன் குத்தலைன்னா நாம அவனைக் குத்துவோம்…” என்று இளங்கோவை சமாதானப்படுத்தினான் சேகர்.

மாரி… இந்தக் குத்துல பம்பரம் வெளியாகணும்..என்று மனசுக்குள் சாமி கும்பிடும்போது “அடேய் அவனுக்கிட்ட எவன்டா பம்பரத்தைக் கொடுத்தது… எங்களுக்கு வாங்கித் தரத்தெரியாமயா இருக்கோம்… நீங்கதான் சொல்பேச்சுக் கேக்கலைன்னா அவனையும் ஏண்டா கெடுக்கிறீங்க… யாருமேலயாவது பட்டு சண்டைக்கு வந்துட்டா… இப்பக் கொடுத்துட்டு வாரியா வரவாடா” என்று அவனது அப்பத்தா கத்தியபடி வர…

தொத்த தோக்கப்போறான்… ரெடியா இருங்க…. அவனை வெளுக்கிறதுக்கு…” என்று சேகர் சொல்ல, “ஏய்… ஏய்…” என எல்லாரும் கோரஸாகக் கத்த….

பம்பரத்தை நாக்கால் எச்சில் பண்ணி கண்ணை மூடி கையை ஓங்கும் போது அப்பத்தாவும்  சுற்றி நின்று சிரிப்பவர்களும் ஒரு முறை வர கண்ணைத் திறந்து ஓங்கிக் குத்தினான்.

சரியான குத்து… துள்ளியமாய் வீசிய வீச்சு…. சேகரின் பம்பரத்தில் பச்சக் என்று குத்த…. அந்த வேகமான குத்து கொடுத்த தாக்கத்தில் சேகரின் பம்பரம் ரெண்டாக உடைந்து சிதற…

குத்திய வேகத்தில் வாடிவாசல் காளை போல முத்துவின் பம்பரம் எகிறி அவர்களை நோக்கி வந்த பாட்டியின் நெற்றியை சொட்டென்று தாக்க…

அய்யோ… யாரையோ பம்பரத்தால அடிக்கப் போறான்னு பாத்த கடைசியா எம்மண்டைய உடைச்சிட்டானே… வா உங்காத்தாக்கிட்ட சொல்லி உனக்குப் பூஜை போடச் சொல்றேன்… பம்பரமா வேணும் பம்பரம்… உங்கப்பனுக்கிட்ட சொல்லி மசுர வாங்கிட்டு வரச்சொல்லுறேன்…” என்று கத்தியபடி நெற்றியைத் தடவ…

அப்பா பம்பரம் வாங்கித் தருவாரா மாட்டாரா என்பது இப்போது முக்கியமில்லை… கேலி பேசியவர்களின் முகத்தில் கரி பூசிய சந்தோஷத்தில் “யாருக்கிட்ட இனி எங்கிட்ட மோதுனா… பம்பரத்தை சில்லாத்தான் பொறக்கணும்…” என கத்திவிட்டு அப்பத்தாவைத் தாக்கி எகிறிய பம்பரத்தை எடுத்துக் கொண்டு “பாத்து வரக்கூடாதா அப்பத்தா…. நல்லவேளை படாத இடத்துல பட்டிருந்தா சங்குதான்…” என்று எகத்தாளமாகச் சொல்லிவிட்டு “ம்.. வேற யாருடா வைக்கிறா… வச்சிப் பாருங்கடா….” என்று சவால் விட்டான் தொத்தலான முத்து.

-‘பரிவைசே.குமார்.

86. சிறுகதை

86…   நந்து சுந்து

86

பாய்ஸ் ரீ யூனியன் இருக்கு. வர்ரியா?” என்றான் நண்பன் பிரபு.

பாய்ஸ் ரீ யூனியனா? கேர்ள்ஸ் கிடையாதா?” என்றேன்.

கேர்ள்ஸும் உண்டு

சரி. அப்போ வர்ரேன்

கும்பகோணத்தில் பள்ளியில் படித்த காலம் நினைவுக்கு வந்தது. Wait. நீ சேலத்தில் தானே படிச்சே? என்று கூவ வேண்டாம்.

கும்பகோணம் என்று தான் flash back ல் எழுத வேண்டும். Tourism map ல் பார்த்தால் கூட கும்பகோணத்தைப் பற்றி the most preferred flash back destination என்று தான் போட்டிருக்கும்.

ஒரு தடவை ஸ்கூலை போய் பாத்துட்டு வரலாமா?” என்று கேட்டான் பிரபு.

இருவரும் ஸ்கூலுக்கு போனோம்.

வாசலில் ஒரு செக்யூரிட்டி இருந்தார். 35 வயது இருக்கும்.

என்னடா நாம படிச்சப்ப இருந்த செக்யூரிட்டி தசரத ராஜ் இன்னும் இளமையா இருக்காருஎன்றேன்.

நான் தசரதராஜ் மகன் ராமராஜ். இப்போ நான் தான் இங்கே செக்யூரிடி

அப்பா எங்கே?”

போய் சேந்துட்டாரு..இப்போ சொர்க்கத்துல செக்யூரிட்டியா இருக்காரு

சொர்க்கமே என்றாலும் நம்மூரு செக்யூரிட்டி போல வருமா? ஏன் அவசரப்பட்டுப் போனார்

நாங்க ஸ்கூலுக்கு உள்ளே போய் பாக்கலாமா?”

இப்போ பசங்களுக்கு tik tok  time. பிஸியா இருப்பாங்க. நீங்க நாலு மணிக்கு மேல வாங்க

நான்கு மணிக்கு ஸ்கூல் உள்ளே போனோம். உள்ளே கால் எடுத்து வைத்ததும் ஜில்லென்று உணர்ந்தேன்.

டேய்..தேங்கியிருந்த தண்ணீல காலை வைச்சிட்டே..எடுஎன்றான் பிரபு.

நாங்கள் படித்த 10 C செக்ஷனுக்கு போனோம்.

இரண்டாவது வரிசை பெஞ்சில் போய் அமர்ந்தேன்.

இந்த பெஞ்சுல தான்டா எப்பவுமே உக்காந்துகிட்டு இருப்போம் …”

தப்பா சொல்றே. இந்த பெஞ்சுல தான் எப்பவும் நின்னுகிட்டு இருப்போம்

வாத்தியார் பாடம் நடத்தும் போது சீரியசாக டிஸ்கஸ் செய்து கொண்டிருப்போம். முன் பெஞ்ச் கேர்ள்ஸ்  கூந்தலில் இயற்கையாகவே பேன் உண்டா என்று விவாதித்துக் கொண்டிருப்போம்.

இதன் பலனாக எங்களை பெஞ்ச் மேல் நிற்கச் சொல்வார் வாத்தியார்.

கற்றலின் நிற்றல் நன்று என்று நாங்களும் ஏறி நிற்போம். Ariel view ல் பார்க்கும் போது கனகா கடலை மிட்டாய் சாப்பிடுவது தெரியும்.

சுந்தரி நமக்கு முன்னால பெஞ்சுல தான் உக்காந்திருப்பாஎன்ற பிரபு என்னையே பார்த்தான். சுந்தரி என்ற பெயரைக் கேட்டதும் ஒரு vibration உண்டானது. போன் vibration mode ல் ரிங் ஆனது.

நீ யாருக்கும் தெரியாம சுந்தரியை மூனு வருஷம் லவ் பண்ணே. எனக்குத் தெரியும்என்றான் பிரபு.

ஆம். ஒரு நாள் Black board ல் கூடராம் லவ்ஸ் சுந்தரிஎன்று யாரோ எழுதியிருந்தார்கள்

சுந்தரியின் முழுப் பெயர் கே.பி. சுந்தராம்பாள். கே.பி.எஸ் பாடல்களை அப்படியே பாடுவாள்.

வாத்தியார் சில சமயம் அவளைக் கூப்பிட்டு பாடச் சொல்லுவார்.

அவளும்சென்று வா மகனேசென்று வா..’ என்று பாடுவாள். வகுப்பில் இருக்கும் மாணவர்கள் எல்லாம் வெளியே சென்று விடுவார்கள்.

கே.பி.எஸ்ஸின் எல்லா பாட்டையும் சுந்தரி பாடினாலும்வெண்ணீர் அணிந்ததென்ன…’ பாட்டை மட்டும் பாடவே மாட்டாள்.

நான் எவ்வளவோ முறை கேட்டும் அவள் பாடவில்லை.

ஒரு முறை மன்த்லி டெஸ்ட் போது காப்பி அடிக்க அவளிடம் ஆன்ஸர் பேப்பர் கேட்டேன். அவள் கொடுக்கவில்லை. கோபத்தில் நான்கு அடிஷனல் ஷீட் வாங்கி 32 பக்கம் வெத்து பேப்பராக கட்டிக் கொடுத்தேன்

ஒரு வாரம் அவளுடன் பேசவில்லை. அவளும் பேசவில்லை. பிறகு நான் பேசப் போன போது ஒதுங்கிப் போனாள்.

இரண்டு வாரம் அழுதேன்.

மூன்றாவது வாரத்தில் சிரித்தாள். ஒரு வார்த்தை பேசினாள்.

பழம் நீயப்பா…’ என்று பாடி என்னுடன் பழம் விட்டாள்.

நாங்கள் இருவரும் லவ் செய்வது அவர்கள் வீட்டுக்கு தெரிந்து விட்டது.

அவ்வளவு தான். அவர்கள் அப்பா ஒரு பாடி கார்ட் மாதிரி அவளுடன் ஸ்கூலுக்கு வர ஆரம்பித்தார்.

காலை முதல் மாலை வரை ஸ்கூலில் வேப்ப மரத்தடியில் வெட்டியாக நின்று கொண்டிருப்பார். பால்காரர் பெரிய பால் கேனை சைக்கிள் பின் பக்கம் கட்டி வைத்து கொண்டு போவது போல சுந்தரியை சைக்கிளில் கட்டி வைத்து  கூட்டிப் போவார்.

சுந்தரியின் அப்பா தினமும் ஸ்கூலில் வந்து காத்திருந்ததில் ஒரு விபரீதம் நிகழ்ந்தது. சமூக நூல் டீச்சருக்கு அவர் நூல் விடுவதாக வதந்தி கிளம்பியது.

Toilet wall ல் இது பற்றி status update போட்டார்கள்.

அவமானம் தாங்காமல் சுந்தரியை இழுத்துக் கொண்டு வேறு ஊருக்கு போய் விட்டார் அவளின் அப்பா.அதன் பிறகு சுந்தரியை நான் பார்க்கவில்லை.

கண் மூடி அமர்ந்திருந்தேன்.

சுந்தரி இப்போ எங்கே இருக்கா?”

உகாண்டால இருக்கா..”

கேட்டதும் நான் செம காண்டுல இருந்தேன். என்னை ஏமாற்றி விட்டு போய் விட்டாளே..

சுந்தரி மீட்டுக்கு வர்ராளா?”

ஆமா..வர்ரா…”

கேட்டதும் காதில் இன்பப் பேன் வந்து பாய்ந்தது.

“Alumi meet எந்த ஹோட்டல்ல வைச்சிருக்கு?”

“Aluminium godown . ஹோட்டல்ல வைக்கறதுக்கு பட்ஜெட் உதைக்குது

சந்திப்பு நிகழும் நாள். பின்னால் போய் தனியாக அமர்ந்திருந்தேன். வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன். சுந்தரி எப்போது வருவாள்?

Description: Image may contain: 1 person

அதோசுந்தரி வந்து விட்டாள்.

வெள்ளை சூடிதார் போட்டிருந்தாள்.

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பேசுடா…” என்றான் பிரபு.

சூடிதார் நல்ல வெள்ளையா இருக்கு. பொன்வண்டு சோப் உகாண்டால கூட கிடைக்குமா? ” என்றேன்.

சிரித்தாள். 86 ல் சிரித்த அதே சிரிப்பு

சுந்தரி இப்போ ஒரு பாட்டு பாடு..” என்றார்கள் அனைவரும்.

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்..’ என கே.பி.எஸ் பாட்டை பாடினாள். நான் என்  தொப்பையை பார்த்துக் கொண்டேன்.

சுந்தரி தனியாக வந்தாள்.

இப்பவாவது வெண்ணீர் அணிந்ததென்ன பாட்டை பாடக் கூடாதா?” என்று கேட்டேன்.

என்னைக்குமே பாட மாட்டேன். அதுக்கு பின்னால ஒரு சோக கதை இருக்கு. எங்க அம்மா வெந்நீர் அடுப்பு பத்த வைக்கறப்ப விபத்துல எரிஞ்சு செத்து போயிட்டாங்க. அதுலேந்து வீட்ல வெந்நீரே கிடையாது. காபி டிகாஷன் கூட பச்சைத் தண்ணீல தான் போடுவோம். அன்னைக்கு தான் வெண்ணீர் அணிந்ததென்ன பாட்டு பாடறதை நிறுத்தினேன்

ஸாரி. வெந்நீர் பின்னால ஒரு கண்ணீர் கதை இருக்கறது எனக்கு தெரியாதுசிறிது நேரம் வெந்நீர் ஆறட்டும் என்று காத்திருந்தேன்.

சொல்லுஉனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

இல்லை

ஏன்?”

இருபது வருஷம் முன்னால அப்பா எனக்கு மாப்பிள்ளை பாத்தாரு. செட்டில் ஆயிடுச்சு. ஆனா இன்னும் மண்டபம் கிடைக்கல்லேஉனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என்றாள்.

Description: Image may contain: 1 personஎனக்கும் 20 வருஷம் முன்னால பொண்ணு பாத்தாச்சு..ஆனா கல்யாணம் பண்ணி வைக்க  சாஸ்திரிகள் கிடைக்கல்லே..எல்லா சாஸ்திரிகளும் பிஸி

அப்படியா?”

ஆமா..இவ்வளவுக்கும் அது சாஸ்திரிகளோட பொண்ணு தான்

சுந்தரி விரக்தியாக சிரித்தாள்.

திடீரென நான் கேட்டேன்.

நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா என்ன? மண்டபம் கூட வேணாம். எனக்குத் தெரிஞ்ச போலீஸ் ஸ்டேஷன் ஒன்னு இருக்கு. நல்லா நடத்தி வைப்பாங்க..”

நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணமா? அது முடியாதுஎன்றாள்.”ஏன்?”

அங்கே யார் வந்திருக்காங்கன்னு பாரு..”

பார்த்தேன்.

அவளின் அப்பா நின்று கொண்டிருந்தார்.

அந்த வார்த்தைகள்

அந்த வார்த்தைகள்

*********************

மரு.வெங்கட்ராமன் -கோபி

——————————————————————

‘எப்படியும் நீ சம்மதிச்சுடுவே நு எனக்குத் தெரியும்.மிலிட்டரியிலே இருக்கார்னாலே,நிறைய பேர்மாப்பிள்ளையே வேண்டாம்பாங்க. ஆனா, உன் வீட்டில நீ என்.சி.சி டிரஸ்ல இருந்த போட்டோவைப் பார்த்தவுடன் மனசு நிம்மதியாச்சு.”

முதலிரவில் ராமுவின்வெளிப்படையான பேச்சினால், அவள்

வியப்படைந்தாள்.

“என்னோட தாத்தா காவல்துறை.அம்மாவும் போலீஸ்.

அதனாலே எனக்கும் அந்த ஆசை உண்டு.

என்.சி.சி ல சேர்ந்தேன்.எதேனும் பாதுகாப்புத் துறையிலதான் சேரனும் ஆசை.ஆனா கண்ணிலே பட்ட அடியானாலே எலிஜிபிலிட்டி இல்லாமப் போயிடுச்சு… ஏக்கம் மனசில இருக்கத்தான் இருக்கு.உங்களைப் பத்தி கேட்டவுடன் மனசு நிறைஞ்சு போச்சு.”

அவளுடைய பேச்சைக் கேட்டு அவனும் உணர்ச்சி வசப்பட, அவன் தந்த டம்ளரில் மீதம் இருந்த பாலை அவள் பருகினாள்.

“உங்க வீட்லே உன்னோட தாத்தா,அம்மா எல்லோரும்

போலீஸ்ல இருந்தாங்க. உனக்கு அதில் ஒரு ஆர்வம் நிச்சயம் சின்ன வயசிலிருந்தே இருந்திருக்கும்ல”.

அவளும்,தனது ஆசைகள் முழுவதும் அன்றே சொல்லிவிடவேண்டும் என்பது போல் பேசினாள். தன் கைகளுடன் பிணைந்திருந்த ராமுவின்

விரல்களை நெட்டிப் பிடித்து இழுத்தாள்.

“எனக்கு அந்த என்.சி.சி.காம்ப்பை மறக்கவே முடியாது.

நல்ல மழை வேற, நாங்க தங்கி இருந்த ஊரலே.எல்லோரும் டென்ட்ல ஒண்டிட்டிருந்தோம்மா! அப்ப….”

“இந்த மன்மத ராஜா கனவிலே வந்தாரா?” அவன் குறுக்கிட, அவளோ “ நான் அந்த மாதிரி கனவெல்லாம் கண்டதேயில்லை.வீட்ல உங்களைப் பாத்து, நிச்சயம் ஆனவுடன்தான் கனவு காண ஆரம்ப்பிச்சேன்.” என முடித்தாள்.

“வெளிப்படையா பேசற நீ…ஐ லவ் யு”

“கதைக்கு வருவோம். அப்ப மழையிலே ஒரு பீபளாங் குட்டி…” ராமு விழிக்க, அவள் தொடர்ந்தாள்.

“ஆட்டுக்குட்டிகளை, எங்க அப்பா,எங்களுக்கு கதை சொல்லும் போது அப்படித்தான் சொல்வாரு. இரண்டு குட்டிங்க வழி தவறி அங்க வந்திருக்கும் போல… குளிர்ல நடுங்கிட்டு இருந்தன. அதுகளை அழைச்சுட்டு வர நான் அங்க போன போது மின்னல் தாக்கி…நல்ல வேளை,கண் நரம்பு முழுசும் பாதிக்கல. வலது கண்ல கொஞ்சம் பாதிப்பு. இல்லேன்னா போலீஸ்லையாவது சேரந்திருப்பேன்”.

ராமு பேச்சைத் திசை திருப்பினான் “நீயாவது

ஆசைப்பட்ட. ஆனா,என் கதை தெரியுமா?. நான் இருக்கறதில்லையே மோசமான ஸ்டூடண்ட். அப்பா செல்லம்…பணமும் இருந்துச்சா!. கண்டதே கோலம் நு சுத்திக்கிட்டு இருந்தேன். நான் உருப்படணுமே எல்லோரும் பயந்தாங்க. ஸ்போர்ட்ஸ்ல மட்டும் இன்டெரெஸ்ட் இருந்ததினாலே நோ கெட்ட பழக்கம் …ஆனா அதுலையும் பேர் சொல்ற மாதிரி இல்லை.”

அவளும் “அடுத்து சொல்லுங்கோன்னா” என்றாள்.

“ஐயர் பாஷை தெரியுமா?”வியந்து கேட்டான் ராமு.

“காலேஜ் முடிக்கிற வரைக்கும் பக்கத்து ஆத்து உமாதான்

என் உயிர்த் தோழி.அவா ஆத்து சமையலும் எனக்குத் தெரியும்.”

“எங்க வீட்டு அஷ்டவதானி!” ராமு அவளை இழுத்து அணைத்தான்.

நழுவிய அவள், பொய்க் கோபத்துடன் “முழுக் கதையும்

சொல்லுங்க. உங்களை முழுசும் புரிஞ்சக்கணுமில்ல.”

அவள் பேசினாள்.

“பொறுப்பில்லாம சுத்தறான். கல்யாணம் பண்ணி வைச்சுடலாமா நு பேரண்ட்ஸ் நினைச்சாங்க. தாத்தா மட்டும் எதிர்ப்பு. ‘என் பேரனை பத்தி தெரியும். அவன் பிரமாதமா வருவான் ‘ அப்படின்னு சொல்லி என்னைத் திருத்தப் பாத்தார். நானா ….என் இஷ்டம் தான்

முக்கியம் இருந்தேன்.அப்ப.. இப்படியே பேசி பொழுதை

கழிக்கணுமா?” அவன் பரிதாபமாக கேட்க, அவள் சிரிப்பு அவனை கிறங்க வைத்தது.

“எனக்கும் என் தாத்தா ஞாபகம் வந்துடுச்சு. முழுசும் சொல்லிடறேன். படிப்பிலே சுமார்னாலும் ஃபுட் பாலில் பயங்கர ஆர்வம். ஸ்போர்ட்ஸ்ல தோத்துட்டா பயங்கர கோபம் வரும்.அந்த டீம் மேட்ஸ் கூட சண்டை போட்டா, யாரு வருவாங்க?. நண்பர்களும் குறைய ஆரம்பிக்க…தாத்தாவுக்கும் கவலை. தோட்டத்தோட சேர்ந்த வீடா! மூனு நாய்கள்

வளர்த்தேன். நான் தான் சாப்பாடு போடணும். இதுக்காவது வீட்டிற்கு வரணும் இல்ல. மூனையும் உட்கார வைச்சு சோறு, இல்ல மட்டன், பாலு நு வைப்பேன். அதுகளும் என்னோட அப்படி ஒரு அட்டாச்மென்டோட பழக… ஒரு நாள் டாபிங்கற நாய் இறந்திடுச்சு. எங்க அம்மா அசதியிலே தோட்டத்தில் தூங்கற போது, அங்க வந்த விஷப்பாம்போட சண்டை போட்டதில், அது கடிச்சு எங்க டாபி போயிடுச்சு. இல்லைன்னா அம்மாவை பாம்பு கடிச்சிருக்கும். நான் ரொம்ப டல் அடிச்சுப் போயிட்டேன்”.

உணர்ச்சிவசப்பட்ட ராமு சிறிது நேரம் அமைதியாக இருந்தான். காதலுடன் அவனைப் பார்த்தாள்.

“தாத்தாதான் சொன்னாரு. பிறந்ததுக்கு தன்னோட

கடைமையை டாபி முடிச்சுடுச்சு. பிறந்த எல்லோருக்கும்

ஒரு கடமை இருக்கும். உனக்கும் சேத்துத்தான் சொல்றேன். அந்த வார்த்தைகள் என் மனசை மாத்திடுச்சு.

நம்ம நாட்டுக்காக, நானும் மிலிட்டரியில சேர்ந்தேன்.

ஹவில்தார் லெவல் வரைக்கும் முன்னுக்கு வந்துட்டேன்”.

“எதிரிகளுடன் நடந்த போரில் வீரமரணம் எய்திய ஹவில்தார் ராமுவிற்கு வழங்கப்படுகின்ற ‘பரம வீர சக்ரா’ விருதைப் பெற அவர் மனைவியை அழைக்கின்றோம்” என்ற அழைப்பைக் கேட்டு தன் கனவிலிருந்து மீண்ட அவள், மேடையை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

அருகிலே_உள்ள_தூரமே!

அருகிலே_உள்ள_தூரமே! ============ #சிறுகதை#தீபப்ரியா_ரமணன்

அந்த அழைப்பிதழை நூறாவது முறையாகப் பார்த்தார் வரதராஜன். ஆச்சரியம், திகைப்பு, வெறுப்பு என்று அலையலையாக ஏதேதோ அவருக்குள். இந்த விழாவின் முக்கிய ஸ்பான்சர் அவர். தமிழ் நாட்டின் தலையாய பிராண்டுகள் என்று லிஸ்ட் போட்டால் – முதல் ஏழு இடங்களில் வரதராஜனின் நிறுவனங்கள் தாம் இருக்கும்.

உப்பு முதல் சிமெண்ட் வரை ஒன்று பாக்கியில்லை. பிள்ளையில்லாச் சொத்தை நாளைக்கு எப்படியிருந்தாலும் பங்காளிகள் தான் கூறு போட்டுக் கொள்வார்கள். எனவே முடிந்த போதெல்லாம் நிவாரணம், உதவித் தொகை, விருதுகள், நன்கொடைகள் என்று , வாய்ப்புகளை நழுவ விடாமல்… புண்ணியமும் சேர்த்துக் கொள்கிற வியாபார மூளை!

இது போன்ற விருது விழாக்களில் சம்பிரதாயமாக ஒரு மணி நேரம் போல இருந்துவிட்டு வருவார். ஆனால் இன்று போகத்தான் வேண்டுமா என்ற யோசனை… போய்த்தான் ஆக வேண்டுமென்று ஜானகியும்…

=============================================================கார், நெடுஞ்சாலையில் விரையத் தொடங்கியது.ராஜலெட்சுமியோ, ஒரு பெருங்காட்டில் நடக்கும் செவிடனைப் போல மிகத் தனிமையாகவும், தவிப்பாகவும் உணர்ந்தார். அவருடைய நினைவலைகள் காரின் வேகத்தை விஞ்சி, காலத்தைக் குடைந்து சென்றது.

“வெல்டன் ராஜ்! கிரேட் ப்ராஜக்ட்! வெரி இன்னோவேடிவ்!” – வரதராஜனுடைய கைகளைப் பற்றிக் குலுக்கிய ஜானகி அவனுடைய வருங்கால முதலாளி. விவாகரத்தானவள். சமீப காலமாக ஆஃபீசுக்கும் வந்து போகிற அவள் சட்டென்று ராஜனின் கூர்த்த அறிவையும், தொலை நோக்கையும் கண்டு கொண்டாள்; கவரப்பட்டாள். முன்னெல்லாம் அவள் இப்படி குதூகலமாக அவன் கையைப் பற்றிக் குலுக்கிடும் போது, வரதராஜனுக்குச் சங்கோஜமாக இருக்கும்; இப்போது சகஜமாகி இருந்தது; இயல்பாக அந்தக் கைகளைத் தொட்டுப் பேச முடிந்தது.

காரில் அவளோடு முன்சீட்டில் உட்கார்ந்து, அவள் பெர்ஃபியூமில் கிறங்கி மூச்சடைத்துப் போவது சுகமாக இருந்தது. அவள் அவனை உயர்த்திப் பாராட்டும் போதெல்லாம், அவள் காதுக்கருகே “ராஜா கையை வெச்சா அது ராங்கா போனதில்லை!” என்ற சமீபத்திய ஹிட் வரியைப் பாட வைத்தது! “ராஜ், ஃபார் எ சேஞ்ச், உங்க வீட்டுக்கே போகலாமே!” – எப்போதும் போகும் ஹோட்டலைத் தவிர்த்து அவள் வரதராஜனின் வீட்டை நோக்கித் தன் ஃபியட் காரை விரட்டினாள். அவன் பதட்டமானான்; இந்த சந்திப்பு நடக்குமென்பது அவனுக்குத் தெரியும்.. அதன் உள்நோக்கமும் தெரியும்…

ஆனால், ஜானகி, திடுதிடுவென்று இப்படிப் போய் நின்றாள் லெக்ஷ்மி என்ன செய்வாள் பாவம்? காலிங் பெல்லை அழுத்தியதும், இடுப்பில் ஏற்றிச் சொருகியிருந்த சேலையை அவசரமாக உதறி, “வாங்க, வாங்க” என்றபடியே, இடது கையால் சிரமப்பட்டு பூட்டைத் திறந்து அவஸ்தையாக அசடு வழிந்தாள், ராஜலெக்ஷ்மி! வலது கையிலிருந்த கடலை மாவுக் கரைசலும், எண்ணெய் வாசனையும்… அவளது பரபரப்பைக் கூட்டி அழகாக்கின.. “க்யூட்!” — கையில் கோடாக வழிந்த மாவைத் தோய்த்து, லெக்ஷ்மியின் மூக்கு நுனியில் ஜானகி தடவிச் சிரித்தபோது, ராஜுவும் சேர்ந்து சிரித்த விதம் லெக்ஷ்மிக்குப் பிடிக்கவில்லை.

காஃபியை உறிஞ்சியபடியே, “எங்க ரெண்டு பேருக்குமே ஒரே வேவ்லெங்த்; ஒரே மாதிரி ரசனைகள், பிசினஸ்ல பெருசா சாதிக்கணும்ங்கிற வெறி.. ப்ச், மூணு வருஷத்துக்கு முன்னாடியே பார்த்திருக்கணும் இவரை!” – ஜானகியின் கண்கள் ஆர்வமாக ராஜை நொக்கின.“அதென்ன மூணு வருஷம்னு கணக்கு?” “என் கல்யாணங்கிற ஆக்சிடெண்ட் அப்ப தான்..!” கண்ணடித்துச் சிரித்தாள்.“ஓ..இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை..” கண்களில் காதல் வழிய வரதராஜனைப் பார்த்துக் கொண்டே கேலி பேசிய லெக்ஷ்மி – தனக்குத் தானே அக்கணத்தில் குழி வெட்டிக் கொண்டாள்.

“வெரி ட்ரூ.. “ – லெக்ஷ்மி, நான் உன்னை உபத்திரவம் பண்ணவே மாட்டேன்; பணமா, வைரமா உனக்கு அபிஷேகம் பண்றேன்; அவரையே எங்க கம்பெனியின் எம்.டி. ஆக்குகிறேன். உன் இருப்புக்கு நான் தடையில்லை; ஆனால் என் பெருவிருப்பம் அவர்! செண்டிமெண்ட்களால் அவர் எதிர்காலத்தைக் நீ கெடுக்க மாட்டேன்னு நினைக்கிறேன்!” தான் தீர்மானித்ததை நோக்கி லெக்ஷ்மியைச் சாமர்த்தியமாக நகர்த்தினாள், ஜானகி.“நமக்கும் தான் குழந்தை இல்லையே லெக்ஷ்மி!” – அவள் அடி பட்டவளாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் கண்களிலிருந்த உறுதியும், வார்த்தைகளில் தெறித்த வறட்சியும்… கைமீறிவிட்டான்! மனசால் விலகியும் விலக்கியும் விட்ட ஒருவனை, அதற்கப்புறம், லெக்ஷ்மி ஒரு கணம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை!

================================================================“பைத்தியமா நீயி? ஓயாம வூட்டுத் திண்ணையில குந்திகினு பசங்களை பள்ளியோடத்துக்கு அனுப்பு, அனுப்புன்னு உசுரை வாங்குறியே?” – எடுத்தெறிந்து பேசியவர்களிடம் ராஜலெக்ஷ்மி மறுபடியும் போய் நின்றாள். “ஐ…யோ! வந்துடுச்சு!” என்று அலுத்துக் கொள்வார்கள்.

அவள் ஒருத்தி அங்கிருப்பதைப் பற்றிய பிரக்ஞை இல்லாதவர்களாக துவைப்பார்கள்; சமைப்பார்கள்; சாப்பிடுவார்கள்; தூங்குவார்கள். அலுப்பில்லாமல் அழிச்சாட்டியமாக அவள் ஆறு மாதங்களுக்கும் மேலாக பின்னால் அலைவதைக் கண்டு, “இந்தா, உனக்காகத் தான் விடுறேன்! உன்னை நம்பித்தான்!” –முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பள்ளிக்கு அனுப்புவார்கள்.

. தூசி தட்டி எடுத்த சான்றிதழ்கள், ஒரு குக்கிராமத்தில், ராஜலெக்ஷ்மியை அரசுப் பள்ளி ஆசிரியை ஆக்கின. ‘லெக்ஷ்மி டீச்சர்’ குழந்தைகளைத் தேடிப்போகப் போக அவளைத் தேடி, பத்திரிகைகளும், சேனல்களும், விருதுகளும் வர ஆரம்பித்தன. ஓய்வு பெற்ற பின்னரும் ஓடியோடி இதுவரை ஏழாயிரம் குழந்தைகளுக்குப் படிப்பு வாசனை என்ன என்பதைக் காட்டியிருக்கும் ப்ரியமான ‘லக்ஷ்மி டீச்சர்’, பெயரால் ராஜலெக்ஷ்மி என்றாலும் கை வீணையில்லாச் சரஸ்வதி… விழாவில் ராஜலெஷ்மியைப் பற்றிய காணொலி திரையில். ஜானகியும் வரதராஜனும் நுழைய கேமராக்கள் அவர்களைத் தொடர்ந்தன.

கல்வி அமைச்சர் கைகளால் விருது வாங்கிய ராஜலெக்ஷ்மி இவர்களைப் பார்க்கத் தவறவில்லை. “இவ்வளவு பேஷன், அர்ப்பணிப்பு! எப்படிச் சாத்தியம் மேடம்?”“முப்பத்திரெண்டு வருஷத்துக்கு முன்னால, ரொம்பத் திறமைசாலியான இளைஞர்கள் ரெண்டு பேர், எ ஜெண்டில்மேன் அண்ட் எ லேடி, என்னோட ஒரு கையெழுத்தால அவங்களோட வாழ்க்கையே வெளிச்சமாயிடும்னு நம்பிக்கையோட கேட்டாங்க; ஒரு உந்துதல்ல, நானும் உதவினேன்; நிஜமாகவே அவங்க வளர்ச்சி பிரமிப்பா இருந்துது; தட் வாஸ் த ஸ்பார்க்! “ ராஜலெக்ஷ்மி புன்னகைத்தார்.

முன்னிருக்கையில், அமரவைக்கப்பட்ட வரதராஜனும் ஜானகியும் கொந்தளித்த உணர்வுகளால் திணறினார்கள். “தேங்க் காட்! அந்த ஸ்பார்க் மட்டும் இல்லாம போயிருந்தா?” – தொகுப்பாளினி பேசத் தூண்டினாள். “யாருக்குத் தெரியும்… ஒருவேளை, இது போன்ற மாலை நேரத்தில, கதவைத் திறக்கிற வரைக்கும் காலிங் பெல்லில் வைச்ச கையை எடுக்கத் தெரியாத கணவனுக்காக, அவசர அவசரமாக பஜ்ஜியும் காபியும் ரெடி பண்ணிட்டு இருப்பேனோ என்னவோ?” – பெரிதாகச் சிரித்து விட்டு மேடையை விட்டு இறங்கினார் ராஜலெஷ்மி. தலைக்குள் ஆயிரம் எரிமலைகள் வெடிக்க வரதராஜன் ராஜலெக்ஷ்மியைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

குழந்தை

குழந்தை

மரு.வெங்கட்ராமன்கோபி

**************************************************************

அவனைப் பார்த்தவுடன் தன் கையிலிருந்த சிகரெட்டை

கீழே போட்ட அந்தஆடிமகிழுந்தின் ஓட்டுநரைப் வியப்பாய் பார்த்தான் அவன்.

ஏம்ப்பா! இப்படி வீணாக்கிட்டியே!”என்று அவன் கூறியவுடன், அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான் ஓட்டுநர்.

சார், உங்களையும், அவுகளையும் பத்து நாட்களாக

இங்க பார்க்கிறேன், சார். நீங்க? “ஓட்டுநரின் கேள்விக்கு

அவன் பதிலளிக்கும்முன், அவளைக் கூப்பிட்டான்.

எதுக்கு என்னெ கூப்பிட்டீங்க?” அவள் கேட்டாள்.

இவதான் என் சம்சாரம். சார், நம்மை இந்த பூங்கால

பத்து நாளா பார்க்கிறாராம்.அதான் உன்ன கூப்பிட்டு

சொல்றேன்.”

வணக்கம் சார்

அம்மா, நான் சாதாரண டிரைவர்மா. என்ன போயிநீங்க சார் அது இது  நுஓட்டுநர் இவர்கள் மீது காட்டிய மரியாதை அதிகமாக உணர்ந்தார்கள்.

இல்லப்பா,நானும், அவளும் பக்கத்து ஹவுசிங்

போர்டு வீட்லதான் வாடகைக்கு இருக்கோம். கல்யாண புரோக்கரா இருக்கேன். தென்காசி பக்கம்இவ அம்பாசமுத்திரம். எதோ ஓடுது வாழ்க்கை.”

சார், உங்க ரெண்டு பேரையும் பார்க்கறப்போஅதுவும் அம்மாவைப் பார்க்கறப்போ காளிகாம்பாள் அம்மன் போல இருக்காங்க.”

வெயில் காலமா இதுகொஞ்சம் காற்றோட்டமா இருக்கட்டுமே நு சாயங்காலம்

ரெகுலரா இந்தப் பார்க்குக்கு வர்றோம். நீ..?” அவனுடைய கேள்விக்கு ஒட்டுநர்சார்,அதோ அங்க தனியா உட்காந்திருக்கேஅந்த பையன், எங்க ஓனர் குழந்தை.பிரவீன் நு பேரு, சார். அம்மா இல்ல. ஓனரோ பெரிய கோடீஸ்வரர். மில்,தியேட்டர், கடைகள் எல்லாம் இருக்கு.அந்த குழந்தைக்கு அன்பு செலுத்த யாருமில்லஎன்றார்.

வசதி இருக்குல்லஎன்று அவன் கூறியவுடன் ஓட்டுநர்

சிரித்தார்.

என்ன இருந்து என்ன பிரயோசனம்?. நாங்க கூலிக்கு

மாரடிக்கறவங்க. தினமும் ஒரு  ஒன்னரை மணி நேரம்சாயங்காலம் இந்த பார்க்குகாலையில அடையாறு ஆலமரம்.இதான் என்னோட டுயூட்டி. அந்தப் பையனை பாத்தீங்களா?.யார்கூடவும் பேச மாட்டான்;விளையாடமாட்டான்.சும்மா உட்காந்திருப்பான். என்னவோ உடம்பு சரியில்லையாம். பெரிய,பெரிய டாக்டருங்க என்னென்னமோ சொல்றாங்க.பாவம்.உங்களைப் பார்த்தாவது  பேசறானோ?”

ஓட்டுநரின் அங்கலாய்ப்பு அவன் மனதைக் கரைத்ததோ?

அவளுடன்,அந்த  குழந்தையை நோக்கிச் சென்றான்.

பிரவீன் என்கிற அது அவர்களைப் பார்த்து சிரித்தது.

தனது இரு கைகளையும் தூக்கி ஆட்ட, ஓட்டுநரின்

முகத்தில் ஆச்சரியம்சத்தமாக பேசினார்,” பக்கத்தில் போய் பேசிப் பாருங்க

அவன், குழந்தையைப் பார்த்த பார்வை வித்தியாசமாக இருந்தது.

பிரவீன்!” அவள் குரலழைப்பைக் கேட்ட குழந்தை ஓடி

வந்துதூத்து,தூத்துஎன மழலையில் பேச,அவள் அந்தப்

பையனை வாரி அணைத்துக் கொண்டாள்.பிரவீன் அவள்

கழுத்தை இறுக  அணைத்துமா,அம்மா,அத்தேஎனப் பேச, ஓட்டுநரின் கண்கள் பனித்தன.

நாளையிலிருந்து காலையும் இந்த பார்க்குக்கே வரணும். குழந்தை இவ்வளவு சந்தோஷமா இருக்கான். ஐயா கிட்ட இதை சொல்லணும்ஓட்டுநரின் மனதிற்குள் எண்ணங்கள் ஓடின.

அவனும், அவளும் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பூங்காவின் காவலாளி கூட ஆச்சரியப் பட்டான்.ஓட்டுநர் வரும்போது பீடிகளை பகிர்ந்ததினால் உண்டான நட்பல்லவா?

அவங்க இரண்டு பேரும் குழந்தை இல்லாத ஆளுங்க போல. பாருப்பா எப்படிக் கொஞ்சறாங்க?ஆண்டவன்

எல்லாருக்கும் முழுசா தர்றதில்லை. ஒவ்வொருத்தருக்கும்

ஒரு குறைய வைச்சுடறான்.” காவலாளி சொல்வதைக் கேட்ட ஓட்டுநர் சிரித்தார். அவருக்கும் அது உண்மையாகத்தான் தோன்றியது.

,அம்மாமாஎன்ற சத்தம் கேட்டு ஓட்டுநர் திரும்பி பார்த்தார். பிரவீன் விளையாடுகையில், அவள் கன்னத்தை

கடித்து விட்டான் போலும். பல் கூர்மையினால் லேசாக புண்ணாகிவிட்டது. வலி தாங்காமல் அவள் கத்த, ஓட்டுநருக்கு கோபம் வந்து விட்டது.

விடுப்பா! குழந்தைதானேவிளையாட்டு மும்முரத்திலே

கடிச்சுடுச்சு. குழந்தை முகத்தைப் பாரு. அவ அழுதவுடனே, என்னமா வாடிப் போச்சு.பரவயில்லை பிரவீன் கண்ணா!என் கிட்ட வா! மாமா தூக்கிக்கொள்றேன்என்று அவன் சொல்ல, பிரவீன் தயங்கி, தயங்கி அவளைப் பார்த்தபடியே நின்றான்.

தன் பிஞ்சுக் கைகளால் அவள் கன்னத்தில் கடிப்பட்ட

இடத்தை தடவிக் கொடுத்தான்.அவளும் பிரவீனை இறுக அணைத்தப்படி அழுதாள். குழந்தையின் பிஞ்சுக் கைகள் தடவியதில், அவள் அடைந்த ஆனந்தமே கண்ணீராக வந்ததோ?..

சரி,சரி. நாங்க கிளம்பறோம்.நீங்க விருப்பப்பட்டால்,

உங்களுக்கு ஐயா கிட்ட சொல்லி வேலை வாங்கிடலாம்.

புரோக்கர் தொழிலில் அப்படி என்ன வரப்போகுது?.”ஓட்டுதர் பேசியபடியே குழந்தையை பின்னால் குழந்தைக்கான சீட்டில் அமர வைத்து, சீட் பெல்ட்டைப்போட்டார்.அதற்குள் பிரவீன் அவனையும்,

அவளையும் பிரிய மனமில்லாமல் சத்தமாக அழுதது.

நாங்க நாளைக்கே உங்க வீட்டுக்கு வர்றோம்டா கண்ணா! செல்லமில்ல, அழுகாதே

மனசில்லாமல் அவனும்,அவளும் குழந்தைக்கு கை

அசைத்து விடை கொடுத்தனர்.

யோவ்! நம்ம போன சென்மத்தில என்ன பாபம் செஞ்சோமோ?.குழந்தை பொறக்கலை. மறுபடியும் தப்பு மேல தப்பா பண்ண வேண்டாம்.பிரவீனை கடத்த அவன் மாமன்,நம்ம கிட்ட தந்த அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துடு.அந்த குழந்தை சிரிப்பை பாருய்யா!”. அவளின் பேச்சிற்கு அவன் மௌனமே சம்மதமாயிற்று.

கண்ணாடி பிம்பங்கள்!

சாம்பவி சங்கர்

கண்ணாடி பிம்பங்கள்

**************************

May be an illustration of 1 person

மனிதர்கள் மட்டுமல்ல சூரியனும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான் எங்கே சிக்னலில் மாட்டிக்கொள்வோமோ என்று பயந்து ..

அந்த பரபரப்பான காலை ,, 8 :00 , மணி எனக் காட்டியது

கொரோனாவைவிட வேகமாக ஒவ்வொரு வீட்டிலும் டென்ஷன் தொற்றிக்கொண்டிருந்தது , பள்ளி , காலேஜ் , ஆபீஸ் இப்படி ஓட வேண்டிய இடங்கள் நிறைய இருக்கும் .

மென்பொருள் நிறுவனங்களின் கூடாரமாக இருக்கும் .நகரின் ஒரு பகுதியில் , இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு வில்லாவில் ஒரு அறையில் இருந்து ,

ச்..ச்..ச்..என்று ஒரு பெண் உச்சுக் கொட்டும் சத்தம் கேட்டது ..

பவி ரீ ரெக்கார்டிங் வாசிக்காம அந்த ஸ்டிக்கர் பொட்டை பிய்த்து எடுக்க முடியாதா ..என்ற ரமேஷ்

ஏன் தான் எல்லா லேடீசும் ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் போது இப்படி ஒரு சத்தம் தர்ராங்களோ என்று சலித்துக்கொண்டான் .

பவி திரும்பி முறைத்தாள் ,..அந்த பார்வையின் அர்த்தம் அதெப்படி எல்லா பெண்களையும் பற்றி தெரியும் என்பதாகும் .

முறைக்காத பவி , உன் நாத்தனார்களைச் சொன்னேன் என்று சமாளித்தான் .

பவி மட்டும் லேசானவளா ,

நான் எங்க முறைச்சேன் சும்மா பார்த்தேன் என்று புன்னகைத்தாள் .

சரிங்க நான் கிளம்பறேன் என்ற பவியை , ஏற இறங்க பார்த்தான் ரமேஷ் .

தழைய கட்டிய சில்க் காட்டன் புடவை , லூசாக பின்னப்பட்டிருந்த பின்னல் , அதில் மல்லிகைப் பூ , நெற்றியில் மெல்லிய சந்தனக்கீற்று அதன் மேல் அதனினும் மெல்லிய குங்குமம் , பேரழகி என்று சொல்ல முடியாது , அழகில்லை என்று சொல்ல முடியாத ஒரு அழகி ..

என்னங்க ஆச்சு அப்படி பார்க்கறீங்க , என்று ரமேஷை உசுப்பினாள் பவி .

நானும் 10 வருடமா ட்ரை பண்றேன் உன்னை மெட்ராஸ் பொண்ணா மாத்தனும்னு , நீ இன்னும் அதே நாட்டார்மங்கலமாகவே இருக்கியே அதான் பார்க்கிறேன் என கிண்டலடித்தான் ரமேஷ் .

அதற்குள் கேப்ஸ் சத்தம் கேட்டது . பவி எல்லாருக்கும் பை சொல்லிவிட்டு வேகமாக ஓடி ஏறினாள் .

ரமேஷ் பிங்க் கலர் ஷர்ட் , நீல கலர் ஜீன் அணிந்து கிளம்பினான் .

ரமேஷ் ஒல்லிக்கும் ,குண்டுக்கும் இடைப்பட்ட உருவம் , தாடியில் வரைந்த முகம் , கணகளை அழகாக்கும் கண்ணாடி , ரமேஷின் ஸ்பெஷலே அவன் குரல் தான் , மறுத்து பேச முடியாத தொணி .

.அவன் வேலை செய்வது , துரைப்பாக்கத்தில் ,கார் கம்பெனியில் ,

பவி வேலை செய்வது கந்தன் சாவடி மென் பொருள் நிறுவனத்தில்

, பவி ஆபீஸை தாண்டி தான் போகவேண்டும் என்றாலும் , இருவருக்குமான நேரம் செட் ஆகலைன்னு தனித்தனியாக செல்கிறார்கள் .

பவி வேகமா வந்து அவள் கேபினுக்குள் நுழைந்தாள் , கடிகாரம் சரியாக தன் கடமையைச் செய்தது , 9:30 மணி .

பககத்து கேபினில் இருந்து நிஷா , பதற்றமாக வந்தாள்

பவி ..பவி .என் கண்ணாடி மறந்து வந்துட்டேன் பா , என்ன பண்றதுன்னு தெரியலை என்றாள் நிஷா .

ரைட் காலையிலேயே நீ பிள்ளையார் சுழியா ..இன்றைய பொழுது அவ்வளவு தான் என்று இழுத்தாள் பவி .

சரி உங்க வீட்டுகாரருக்கு போன் பண்ணி எடுத்துவரச் சொல்றதானே ,..என்ற பவிக்கு ,

போனையும் சேர்த்து இல்ல வச்சிட்டு வந்துட்டேன் என அசடு வழிந்தாள் நிஷா .

மோகன் அண்ணா உனக்கு கோயில்கட்டி கும்பிடனும் , என் தோழியைக் கட்டிகிட்டு காலந்தள்றதுக்கு என கிண்டலடித்தாள் பவி .

சரி போன் பண்ணி , கண்ணாடியும் போனும் எடுத்து வரச்சொல்லுன்னு போனைக் கொடுத்தாள்

பவி .

ரிங் போனது ..மோகன் போனை எடுத்ததும் , எங்க இருக்க ,என்று கேட்டாள் நிஷா,..

வீட்ல தான் என்ன விசயம் ,என்ற மோகனிடம் ,

என் கண்ணாடியும் போனும் மறந்து வச்சிட்டேன் எடுத்துட்டு வா ,என்று நிஷா அதிகாரமாக சொன்னாள் ,

உனக்கு இதே வேலையாப் போச்சு , என்று கோபப்பட்டான் மோகன் .

ஆபீஸ் போற வழி தானே கொடுத்துட்டு போனா குறைஞ்சா போவீங்க என்று பதிலுக்கு பேசினாள் நிஷா .

உன்கிட்ட பேச முடியாது

போனை வை என்று சொல்லி விட்டு டொக் என்று போனை வைத்தான் மோகன் .

நிஷா முகத்தில் அமாவாசை தெரிந்தது .

என்னாச்சு டி ..சி.எஸ். கே .டீம் மாதிரி முகத்தை தொங்க போட்டுகிட்டு இருக்க என்று வெறுப்பேத்தினாள் பவி .

கடுப்பேத்தாதடி ..அந்த மனுஷன் போனை வச்சிட்டாரு .என்று சோகமாக சொன்னாள் நிஷா .

சரி சரி விடு அன்பே இன்று நான் உன் கண்ணாடியாய் இருக்கிறேன் , என்று கிண்டலடித்த பவி ,உன் வொர்க்கை குறைச்சிக்கோ அதை நான் பண்றேன் என்றாள் .

தேங்க்ஸ் என்று சொன்ன நிஷா , பவி இன்னிக்கு 11 :00 மணிக்கு மீட்டிங் ரெடியாயிட்டியே எனக் கேட்டாள் .

ஓ ..எஸ் ..நைட் 1:00 மணி வரைக்கும் கண்விழித்து புராஜக்டை சக்ஸஸ் புல்லா முடிச்சிட்டேன் என்ற பவி அவள் கைப்பையில் எதையோ

தேடிக்கொண்டிருந்தாள் .

என்ன தேடற பவி , என்ற நிஷாவிடம் , பென்டிரைவர் தேடறேன் பா என்று தேடிக்கொண்டே பதிலளித்தாள் பவி .

பென்டிரைவர் காணோம் என்றதும் பவியிடம் பதற்றம் தொற்றிக் கொண்டது .

இப்ப என்ன பண்ணுவேன் தெரியலைப் பா ..பென்டிரைவரை வீட்லயே வச்சிட்டு வந்துட்டேன் போல ..

சாதாரணமாகவே அந்த மேனேஜர் எண்ணெய்யில் போட்ட பணியாரம் மாதிரி குதிப்பாரு ..இது முக்கியமான மீட்டிங் செத்தேன்டி நானு என்று புலம்பினாள் பவி .

சரி சரி ரிலாக்ஸ் பவி ,என்ன பண்ணலாம்னு யோசி என்றாள் நிஷா .

பவி , ரமேஷ்கு போன் பண்ணினாள் ,

போனை ஆன் பண்ணதுமே , சொல்லுடி சண்டைக்காரி , என்று ஆரம்பித்தான் ரமேஷ்

ரமேஷின் டிக்னரியே பவி தான் , சரி ரமேஷ் இப்ப நல்ல மூடுல இருக்காரு , அவரிடம் சொல்லி பென்டிரைவ் எடுத்துட்டு வரச்சொல்லலாம்னு நினைத்து பேச்சை வளர்த்தினாள் பவி ,..

என்ன சைலன்ட் என்ற ரமேஷிடம் , காலைல சாப்டீங்களா ..என்று பதற்றமுடன் கேட்டாள் பவி .

ம் நானும் என் பொண்டாட்டியும் சேர்ந்து தான் டிபன் சாப்பிட்டோம் , ..பவி என்னாச்சு ஏன் டென்ஷனா இருக்க என்று அக்கறையுடன் கேட்டான் ரமேஷ் .

நாம டக்குன்னு கேட்டு முடியாதுன்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்ச பவி , இன்னிக்கு என்ன கலர் ஷர்ட்ங்க என்று அமைதியாக கேட்டாள் பவி .

உன்னை பிங்க் கலர் சாரியில பார்த்தேன் , சோ நானும் பிங்க் கலர் ஷர்ட் , இன்னிக்கு வெள்ளிக்கிழமை , ஆபீஸ் முடிச்சிட்டு அப்படியே டிரைவின் போய்ட்டு தானே போவோம் , அதான் மேட்ஜிங் , மேட்ஜிங் என்று ஜாலியாக பேசினான் ரமேஷ்..

ஆமா..இல்ல மறந்தே போயிட்டேங்க ..பிங்க் கலர் உங்களுக்கு சூப்பரா இருக்கும் , என்று ரசனையுடன் கூறினாள் பவி .

என்னடி நடக்குது , ஒரு பென்டிரைவ் எடுத்துட்டு வரச்சொல்றதுக்கு போன் பண்ணிட்டு , இப்படி அன்பாயிருக்கீங்க இப்ப தான் கல்யாணமான ஜோடி மாதிரி என்று பொறாமையில் பொசுங்கிக் கொண்டே சொன்னாள் நிஷா .

நிஷா பேசுவதைக் காதில் வாங்காமல் பவி பேசிக்கொண்டிருந்தாள் .

புளு கலர் ஜீன் தானே போட்டிருக்கீங்க என்ற பவிக்கு நீ தானே செட்டா எடுத்து அடுக்கி வச்சிருக்க ..

என்ன ஆச்சி பவி , ஏதோ சொல்ல நினைக்கற ஆனா தயங்கறயே என்னதான் ஆச்சி உனக்கு என்று அன்பாக கேட்டான் ரமேஷ் ..

ஒன்னும் இல்லீங்க என் பென் டிரைவ் வீட்டிலேயே வைத்து விட்டேன் , கொஞ்சம் எடுத்துட்டு வந்து தர முடியுமா ..என்று மிகவும் கெஞ்சலாக கேட்டாள் பவி .

சாரி டா,..செல்லம் .ஆல் மோஸ்ட் நான் என் ஆபீஸ் கேட் உள்ளே நுழைஞ்சிட்டிருக்கேன் ..

ஒகே ..டேக் ..கேர் .பை..பை..என்று இணைப்பைத் துண்டித்தான் ரமேஷ் ..

என்ன செய்றதுன்னு தெரியாம அமைதியாக கண்களை மூடி யோசித்தாள் பவி .

பவியை இப்படி பார்த்ததும் நிஷாவுக்கு கவலையானது

என்ன பண்ண போற பவி இன்னும் 1 மணி நேரம் தான் இருக்கு ..

என்று வருந்தினாள் நிஷா .

அந்த தெர்மாமீட்டர் ( மேனேஜர் ) வேற வந்திடுவார் , .டெம்பரேஜர் ஏத்தறதுக்கு , திட்டியே சுரம் வர வச்சிடுவார் ,..என பயந்த பவி , ஏதோ முடிவுக்கு வந்தவளாய் ,

நிஷா பக்கத்துல தான் என் நாத்தனார்வீடு அவங்களுக்கு போன் பண்ணி கால் டாக்ஸி பிடிச்சி எடுத்துட்டு வரச்சொல்லப் போறேன் என்று சொல்லி விட்டு போனை எடுப்பதற்குள் ,

இன்டர்காமில் ரிசப்ஷனிஸ்ட் சிணுங்கினாள் , ..

மேம் உங்களைப் பார்ப்பதற்கு ரிசப்ஷனில் ஒருத்தர் வெயிட் பண்றாரு வரமுடியுமா என்று கேட்டாள் ,..ரிசப்ஷனிஸ்டு.

என்னைப் பார்க்கவா , பேர் எதுவும் சொன்னாரு என்று கேட்ட பவிக்கு இல்லை என்பதே பதிலாக வந்தது .

நிஷா , நீயும் வாயேன் என்று அழைத்துக்கொண்டு ரிசப்ஷன் வந்தாள் பவி .

அங்கு ரமேஷ் ஸ்டைலாக அமர்ந்திருந்தான் , அவனைப் பார்த்ததும் ரிசஷனிஸ்டை முறைத்தாள் பவி , இவரை உனக்கு தெரியாதா என்ற அர்த்தத்தில் ,.

மேம் ,அவரு தான் அப்படி பேச சொன்னார் என்றாள் ரிசப்ஷனிஸ்ட்

ரமேஷிடம் திரும்பிய பவி என்னாச்சுங்க , .என்றாள் பதற்றத்துடன் ,

அதான் பென்டிரைவ் தான் எடுத்துவந்து தரமுடியாதுன்னு சொன்னீங்களே ஜி அப்புறம் ஏன் வந்தீங்க ..என்று கடுகடுத்தாள் நிஷா .

ஏய் ..சோடாபுட்டி என் பவியை நான் எப்ப வேணாலும் வந்து பார்ப்பேன் உனக்கென்ன வந்ததுன்னு சிரிச்சிகிட்டே கேட்டான் ரமேஷ் ;.

அத்துடன் நிஷாவின் வாய் பேஸ்ட் ஆனது ,..

பவி , டென்ஷன் ஆகாத இந்த மீட்டிங் சக்ஸஸா முடிப்ப என்று சொல்லிக்கொண்டே , பவியின் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்தான் ,

ம் சரிங்க என்று சுரத்தில்லாமல் சொன்னாள் பவி .

சண்டைக்காரி போய்வரேன் டி , ஈவினிங் வெளில போலாம்னு சொல்லிட்டு , ஸ்டைலா அந்த படிகளில் இறங்குவதையே ரசித்துக் கொண்டிருந்தாள் பவி .

எத்தனை பாரதியார் வந்தாலும் உங்களை மாத்த முடியாதுடி என்று கோபப்பட்ட , நிஷாவின் முகத்தருகே பென்டிரைவ்வை நீட்டினாள் பவி .

இது எப்படி நானும் தானே பக்கத்திலேயே நிக்கறேன் …என்று வாய்க்குள் காற்றாடி விட்டாள் நிஷா .

கைகள் கோர்க்கும் போதே ..என வெட்கப்பட்டாள் பவி .

ஆணின் அன்பு கண்ணாடி மாதிரி , நிறைய பேருக்கு இது புரியறதில்லை என்று நினைத்துக் கொண்டு கேபினுக்குள் நுழைந்தாள் பவி.

நீலம் பிரிந்த வானம்

சாய்ரேணுசங்கர்

நீலம் பிரிந்த வானம்===================”

ஏன் இப்பல்லாம் நீ ட்ராயிங் போடறதில்லை சந்தியா?” ஒரு மாலை வேளையில் கேட்டான் கார்த்திக்.”வீட்டு வேலையே சரியா இருக்குங்க” என்றாள் சந்தியா.”நல்லா இருக்கு, அதுக்காகக் கத்துண்ட கலையை நிறுத்திடறதா? எத்தனை பழமையான ஓவியக்கலைகள் கத்துண்ட நீ – மதுபனி, பட்டசித்ரா, கேரளா முரல்னு? மறுபடி போட ஆரம்பி” என்று கண்டிப்பாகச் சொன்னான் கார்த்திக்.பாவம், அவன் சொன்ன வார்த்தைக்காக வீட்டு வேலை முடிந்ததும் சற்றுநேரம் கூட ஓய்வெடுக்காமல் வரைய உட்காருவாள் சந்தியா.

அமெரிக்கா மகன் வீட்டுக்குக் காடாறு மாதம் வந்திருந்த அவள் மாமியார்கூட “அவன் சொல்றான்னு எல்லாம் கேட்காதேடி! பழங்கலை ஓவியங்களை வித்தா ஏகப்பட்ட டாலர் கிடைக்குமாம்! அதான் உன்னை வரையச் சொல்றான்! இந்த வீட்டுக்குச் சம்பாதிச்சுப் போடத்தான் அவன் இருக்கானே, நீ ஏன் கஷ்டப்படணும்? பேசாம குழந்தைகளைப் பார்த்துக்கோ, போதும்” என்று சொல்லிவிட்டாள். என்றாலும் கார்த்திக்கின் அன்பான வார்த்தைகளின் காரணத்தால் அவளால் வரைவதை நிறுத்த முடியவில்லை.

அக்கம்பக்க அமெரிக்க, இந்திய நண்பர்களின் பாராட்டும் அவளுக்கு ஊக்கமாக அமைந்தது.குழந்தைகளையும் கார்த்திக் விடவில்லை. கர்நாடக சங்கீத க்ளாஸ், பரதம், சம்ஸ்கிருதம், திருப்பாவை திருவெம்பாவை என்று வகுப்புகளில் சேர்த்திருந்தான். இரண்டும் அவனிடம் எதிர்த்துப் பேசப் பயந்துகொண்டு இவளிடம் வந்து கத்தும் – “ஸ்கூல் வொர்க்கே ரொம்ப டயரிங்கா இருக்கு, இதில் இந்த க்ளாஸெல்லாம் என்னத்துக்கு? வேஸ்ட் ஆஃப் டைம்” என்று உறுமும்.பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் சந்தியா

. அந்த வீக்கெண்ட் அவர்களை அவுட்டிங் அழைத்துப் போவதாகச் சொல்லிவிட்டுச் சனிக்கிழமையன்று “சந்தியா டார்லிங்! நம்ம காலனி இண்டியன்ஸ் எல்லோரும் சேர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம க்ரூப் ஃபார்ம் பண்ணியிருக்கோம். இன்னிக்குச் சாயந்திரம் முதல் மீட் – நம்ம வீட்டுல! ஏதாவது பிரசாதம் – கேசரி, சுண்டல்னு – ரெடி பண்ணிடுடா கண்ணா!” என்றபோது வெடித்துவிட்டாள்

.”ஆமா! இதான் வேலையா எனக்கு? நீங்கதான் அமெரிக்காவிலேயே இந்தியக் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கறவர்னு பேர்வாங்கணும், அதுக்கு எங்களையெல்லாம் டார்ச்சர் பண்றீங்க, அப்படித்தானே கார்த்திக்? இந்தியக் கலாச்சாரத்தை வித்துப் பணமும் புகழும் வேலையில் சவுகரியங்களும் சம்பாதிக்க நினைக்கறீங்க! அதுக்கு நாங்க பலிகடா! இதோ பாருங்க, என்ன வேணுமோ அதை நீங்களே பண்ணிக்குங்க! இனிமே உங்க ட்யூனுக்கு நானோ குழந்தைகளோ டான்ஸ் ஆடறதா இல்லை!” – பொறுமித் தீர்த்தாள் சந்தியா

.கார்த்திக் அறை வாங்கியவன்போலத் திக்பிரமித்தான். பிறகு மெல்லிய குரலில் சொன்னான். “சந்தியா! வானத்தை வானமா ஆக்கறதே நீலநிறந்தான். அது இல்லேன்னா வானம் வெறும் வெளிதான். அதுக்குன்னு நிறமோ, வடிவமோ கிடையாது. நாம நம்முடைய பூமியை விட்டுட்டு இங்கே வந்திருக்கோம். நமக்கு வாழ்வும் வளமும் தந்த இந்தத் தேசத்திற்கு உண்மையா உழைக்க வேண்டியது நம் கடமை. அதற்காக நம் அடையாளங்களை இழக்க வேண்டிய அவசியம் இல்லைம்மா.

நம் உயர்ந்த கலாச்சாரந்தான் நம் அடையாளம். நம் பழங்கலைகளும், புராண இதிஹாஸங்களும், பக்தியும், தர்மமும்தான் நம்ம அடையாளம். அதையெல்லாம் நாம ஏம்மா இழக்கணும்? அப்படி இழந்துட்டா நாம யாரு? சின்னப் பாத்திரத்தில் இருந்தாலும் பெரிய அண்டாவில் இருந்தாலும் வெளிக்கு மதிப்பு இல்லைம்மா! உயர்ந்த வானத்திற்குத்தான் மதிப்பு. எத்தனைப் பணம் சேகரிச்சாலும் நம் பண்பாட்டை விட்டுட்டா நாம் வானமல்ல, வெறும் வெளிதான். இன்னிக்கு மீட் நடக்கட்டும், நாளை கட்டாயம் அவுட்டிங் உண்டு.”மீட்டின்போது கார்த்திக், சந்தியா குழந்தைகள் எல்லோருமே பாராயணத்திற்கு அமர்ந்தார்கள். பிரசாதம் புளியோதரை, சுண்டல், கப்பில் பாயஸம். “விச்வம் விஷ்ணு” என்ற நாமங்களின் அர்த்தம் இப்போது புரிந்தது சந்தியாவிற்கு.