பாட்டி சுட்ட ரொட்டி! பாப்பாமலர்!

பாட்டி சுட்ட ரொட்டி! பாப்பாமலர்!

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

கதைப் பாடல்: பாட்டி சொன்ன கதை!- Dinamani

ரொம்ப வருசத்துக்கு முன்னாடி வங்காள கிராமத்துல பாட்டி ஒருத்தங்க வசிச்சு வந்தாங்க. அவங்க ரொம்ப ஏழை! ஏதோ தன்னால முடிஞ்ச வேலைகளை செஞ்சு அதுல வருகிற வருமானத்துல பிழைச்சு வந்தாங்க. ஒரு நாளு அந்த பாட்டி வேலை செஞ்சதுக்கு கூலியா கொஞ்சம் கோதுமை மாவு கிடைச்சுது. பாட்டி அதை பிசைஞ்சு ஒரு ரொட்டி செஞ்சாங்க. அதை ஒரு தட்டில் வைச்சுட்டு ஏதோ வேலையா திரும்பினாங்க. அப்ப ஒரு காக்கா உள்ளே நுழைஞ்சு அந்த ரொட்டியை தூக்கிக்கிட்டு பறந்துருச்சு! பறந்து போய் பக்கத்தில இருந்த மரத்தில இருந்த கூட்டுல வைச்சுருச்சு.

ரொட்டியைக் காக்கா தூக்கிப் போனதை பாட்டி பார்த்துட்டாங்க! ”காக்கா! காக்கா! என்னோட ரொட்டியைத் திருப்பிக் கொடுத்திடு!” அப்படின்னு பாட்டி கேட்டாங்க. “ தரமுடியாது! நான் சாப்பிடப்போறேன்!” அப்படின்னு சொல்லிருச்சு காக்கா. பாட்டி பாவம், பசியோட இருந்தாங்க, திரும்பவும் வேற ரொட்டி செய்ய மாவும் இல்லை! நேரமும் இல்லை. அதனால் காக்கா உக்காந்திருந்த மரத்துக்கிட்டே “மரமே! மரமே! நான் ரொம்ப பசியாய் இருக்கேன்! காக்கா என்னோட ரொட்டியை தூக்கி வந்து கூட்டுல வைச்சிருக்கு! உன் கிளைகளை அசைச்சு ரொட்டியை கீழ விழ வைச்சு உதவுன்னு!” கேட்டாங்க. மரம் மிகவும் அதிகாரமா சொல்லுச்சு! “ நான் ஏன் கிளைகளை அசைக்கணும்! கூட்டை கலைக்கணும்! காக்கா என்னோட பிரெண்டு! நான் கிளைகளை அசைக்கமாட்டேன்!”

அப்ப அந்த பக்கமா ஒரு மரவெட்டி வந்தாரு. பாட்டி அவருகிட்ட போயி, விறகு வெட்டி! விறகுவெட்டி! என்னோட ரொட்டியை காக்கா தூக்கி வந்துருச்சு! இந்த மரம் கிளைகளை அசைச்சு உதவ மறுக்குது! நீ இந்த மரத்தை வெட்டி அந்த ரொட்டியை கீழே விழ செய்யேன்!” அப்படின்னு கேட்டாங்க. விறகு வெட்டி அமைதியா சொன்னாரு. “ நான் எதுக்கு மரத்தை வெட்டனும் இந்த மரம் எனக்கு தீங்கு எதுவும் செய்யலையே?” பாட்டிக்கு பசி அதிகமாயிருச்சு! யாரும் உதவலை!

அப்ப அந்த மரப்பொந்துதுல இருந்து ஒரு எலி வந்துச்சு! பாட்டி அதுக்கிட்ட போய் , காக்கா என்னோட ரொட்டியை தூக்கி வந்துருச்சு! மரம் கிளையை அசைக்க மறுக்குது! இந்த விறகு வெட்டியும் மரத்தை வெட்டி உதவ மறுக்கிறாரு! நீ அவரோட கோடரிக் காம்பை கடிச்சுப் போட்டுரு! அப்படின்னு கேட்டாங்க. எலி கொஞ்ச நேரம் யோசிச்சுது! அப்புறமா சொல்லுச்சு. இந்த விறகு வெட்டி எனக்கு எந்த தீங்கும் செய்யலை! நான் ஏன் அவர் கோடறியை கடிச்சி பாழாக்கணும்! முடியாது. அப்படின்னு தீர்மானமா சொல்லிருச்சு.

அந்த சமயம் பார்த்து பூனை ஒண்ணு அந்த பக்கமா வந்துச்சு! பாட்டி பூனைக்கிட்ட போய், பூனையாரே! பூனையாரே ஒரு உதவி செய்யுங்க! என்னோட ரொட்டியை காக்கா தூக்கிண்டு போயி மரத்துல வைச்சுருக்கு மரம் கிளையை அசைக்க மறுக்குது! விறகு வெட்டி மரத்தை வெட்ட மறுக்கிறாரு எலியும் கோடரியை கடிக்கமாட்டேன்னு சொல்லிருச்சு! எலியை நீங்க பிடிச்சிக்குங்க! அப்படின்னு சொன்னாங்க. “ நீ சொல்றதுல நியாயம் இருக்குது! ஆனா எலி என்கிட்ட எந்த விஷமும் செய்யலையே! அதை நான் எப்படி கொல்வேன்?” அப்படின்னு சொன்ன பூனை ஓடிருச்சு!

அந்த சமயம் பாட்டி வளர்த்த நாய் அங்க வந்துச்சு! பாட்டி அதோட முதுகுல தடவிக் கொடுத்து என்னருமை நாய்க் குட்டியே! நீ இந்த பூனையை கொன்னு போட்டுருன்னு சொன்னாங்க! உடனே நாய் விறைப்பா தன் வாலை நிமிர்த்துக் கிட்டு பூனையை துரத்தி போச்சு! நாய் பூனையை நெருங்கவும், பூனை என்னை விட்டுரு! நான் எலியை பிடிச்சிடறேன்ன்னு எலிமேல தாவுச்சு! பூனையாரே! என்னை விட்டுடு! நான் கோடரியை கடிச்சு போட்டுடறேன்னு எலி கோடரியை கடிக்க ஆரம்பிக்க, விறகு வெட்டி, வேணாம் வேணாம்! நான் மரத்தை வெட்டிடறேன்னு சொன்னாரு விறகுவெட்டி. ஐயையோ! என்னை வெட்டிறாதே! நான் கிளையை அசைச்சு கூண்டை கலைச்சுடறேன்னு சொல்லுச்சு மரம். மரமே மரமே! அப்படி செய்யாதே! என்னோட கூண்டுல என் குஞ்சுகள் இருக்கு! நானே ரொட்டியை கீழே போட்டுடறேன்னு சொல்லிட்டு ரொட்டியை கீழே போட்டது காகம்.

பாட்டி அப்பத்தான் கூட்டில சில குட்டி காகங்கள் இருப்பதை பார்த்தாங்க! அதுக்காகத்தான் காக்கா ரொட்டியை எடுத்துப் போயிருக்குன்னு தெரிஞ்சதும் மனசுக்கு கஷ்டமாயிருச்சு! காக்கா வருத்தபடாதே! இந்த ரொட்டியை நான் எடுத்துக்கறேன்! உனக்கு என்னோட வீட்டுல இருக்கிற சில தானியங்களை தரேன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ளே இருந்து சில தானியங்களை வெளியே போட்டாங்க. காகமும் மகிழ்ச்சியா அந்த தானியங்களை பொறுக்கி குஞ்சுகளுக்கு கொடுத்து தானும் தின்னு மகிழ்ச்சியா இருந்தது. பாட்டிக்கும் பசி அடங்கி ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு!

(நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஓர் ஆங்கில கதையை என் பாணியில் மாற்றி இறுதியில் சில மாற்றங்களுடன் தந்துள்ளேன். புத்தகத்தில் காப்பிரைட் குறித்து போட்டிருந்தாலும் இந்த கதை மிகவும் கவர்ந்ததால் என் குழந்தைக்கு ரொம்பவும் பிடிச்சதால் என் தளம் வாசிக்கும் குழந்தைகளுக்காக இந்த பதிவு) நன்றி: நேஷனல் புக் டிரஸ்ட்

சாகச வீரன் சூப்பர் தும்பி!


    “டேய்  முகில்! அங்க என்னடா பண்ணிட்டு இருக்கே?” தோட்டத்தில் தும்பிகளை பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்த  முகிலை அந்த குரல் கலைத்தது. “ அம்மா! இங்க வாயேன்! எத்தனை எத்தனை தும்பி! பாரும்மா! நம்ம தோட்டத்துல அதுங்க அழகா பறக்கிறதை பார்க்க பார்க்க ஆசையா இருக்கு!” என்றவாறு கையில் ஒரு சிறு தும்பியை பிடித்தபடி வந்தான்  முகில். 

    “  முகில்! இதென்ன கெட்ட பழக்கம்?” எந்த உயிரையும் நாம துன்புறுத்த கூடாது? ஓடி விளையாடற உன்னை பிடிச்சு கட்டி வைச்சா உனக்கு வலிக்குமா வலிக்காதா? அப்படித்தான் விலங்குகளும் பூச்சிகளும் அதுங்களோட உலகத்துல நாமும் இருக்கோம். நாம வலிமை மிக்கவங்கறதாலே அதுங்களை துன்புறுத்த கூடாது விட்டுரு!” 

“ஸாரிம்மா! நான் இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்! என் ப்ரெண்ட்  முத்து தான் இப்படி தும்பி பிடிக்க சொல்லிக் கொடுத்தான். அவனையும் பிடிக்கக் கூடாதுன்னு சொல்லிடறேன்!” என்றவாறு “ஸாரி தும்பி! ஏதோ ஆசையிலே உன்னை பிடிச்சிட்டேன்! இப்ப விட்டுடறேன்! நீ சுதந்திரமா பறந்து போ!” என்று அதை விட சிறகடித்து பறந்தது தும்பி. 

பள்ளியில், ”டேய்  முத்து! இனிமே தும்பி பட்டாம்பூச்சி எல்லாம் பிடிச்சு விளையாடறதை விட்டுடு. நம்மளை போல அதுவும் ஓர் உயிரினம்! அதை துன்ப படுத்த கூடாது!”

   “தோடா! வந்துட்டாரு புத்தரு!” போடா! நீ வேணா பிடிக்காதே! நான் தும்பி மட்டும் இல்லே! பொன்வண்டு, பட்டாம் பூச்சி எல்லாம் பிடிப்பேன்! உன்னால முடிஞ்சதை செய்துக்க!”    

 ”உன் கிட்ட அப்படி எதாவது பூச்சியை பார்த்தா நான் அவுத்து விட்டுருவேன்!”   ”முடிஞ்சா செய்! இதோ பாரு என் கிட்ட ஒரு தும்பி இருக்கு! இதோட ரெக்கையை உடைச்சி என் ஜாமெட்ரி பாக்ஸில் வைச்சுக்க போறேன்!”

    டேய்! வேணாம்டா! விட்டுடு!”    முத்து அந்த தும்பியை எடுத்து அதன் இறக்கையை உடைக்க முயல  முகில் சினம் கொண்டு கணேஷின் கையைத் தட்டி விட்டான். அவன் கையில் இருந்த தும்பி  விடுபட்டு பறந்தது. அடுத்த கணம்  முகிலின் கன்னத்தில் ஒரு குத்து விழுந்தது. “ஆ” என்று  முகில் அலறியது ஸ்கூல் பள்ளி மணி சத்தத்தில் மறைந்து போனது.  

“ எவ்வளோ கஷ்டப்பட்டு அந்த தும்பியை பிடிச்சேன்! இப்படி தட்டி விட்டுட்டியே! அதுக்கான பரிசுதான் இந்த குத்து! நாளைக்கு நான் மறுபடியும் தும்பியோட வருவேன். அப்ப நீ ஏதாவது வால் ஆட்டனே மவனே பல்லு உடைஞ்சிரும்!”  முத்து கருவியபடி சொல்ல கண்கலங்கியவாறு நடந்தான்  முகில் 

  அன்று மாலையில்  முகில்அவனது தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருக்க அவனது தோள் மீது வந்தமர்ந்தது அந்த தும்பி.  “ஹலோ  முகில்! அடி ரொம்ப பலமா பட்டிருச்சா! வலிக்குதா?” என்றது.   “யாரு யாரு பேசறது?””நான் தான்  முகில்! உன் தோள் பட்டையில உக்காந்திருக்கேன்! காலையில என்னை காப்பாத்தினேயே அந்த தும்பி!” முகிலின் கண்கள் வியப்பால் விரிந்தன. “ தும்பி நீ பேசக் கூட செய்வாயா?

   ”சாதாரண தும்பிகளால் பேச முடியாது! ஆனால் நான் ஒரு வினோத தும்பி. முனிவர் ஒருவர் சாபத்தினால் இப்படி தும்பியாக மாறிவிட்டேன். உண்மையில் நான் ஒரு கந்தர்வன்.”  

“கந்தர்வனா?”ஆமாம்! நாங்கள் ஆகாயத்தில் வசிப்பவர்கள். ஒரு முறை அப்படியே சஞ்சாரம் செய்து வரும் போது விந்திய மலை அடிவாரத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்தில் நுழைந்தேன். அங்கு கூடைகளில் நிறைய மலர்கள் நிறைந்து இருந்தது. மலர்களின் வாசம் என்னை கவர்ந்தது. அப்படியே கீழிறங்கி கூடையோடு மலர்களை எடுத்து முகர்ந்து கொண்டிருந்தேன்.


அப்போது, ஒரு முனிவர் ஆவேசத்தோடு வந்து பூஜைக்கு வைத்த மலர்களை பாழாக்கிவிட்டாயே! பூக்களை நுகர்ந்த நீ இனி தும்பியாக மாறி பல பூக்களை தினமும் நுகர்ந்து கொண்டிரு! என்று சாபம் விடுத்துவிட்டார். சாப விமோசனம் கேட்டேன். தும்பியாக பிறந்த உன்னை மனிதர்கள் பிடித்து துன்புறுத்தி சாகடிப்பார்கள். பலமுறை செத்தும் மீண்டும் தும்பியாக பிறப்பெடுப்பாய். நல்ல மனதுள்ள ஒரு சிறுவன் உன்னை ஒருமுறை விடுவிப்பான். அவனுக்கு தேவையான உதவிகளை செய்து முடி! அப்புறம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும். என்றார். 

  இன்று உன்னால் விடுவிக்கப் பட்டேன்! எனக்கு சாபவிமோசனம் விரைவில் கிடைக்கும். உனக்கு என்னுடைய சக்தியை தரப் போகிறேன்! இன்று முதல் நீ பறக்க முடியும்! என்னை நினைத்து சிறகே வா! சீக்கிரம் பற என்று சொன்னால் அந்தரத்தில் பறப்பாய்! தம்பி! நீ சூப்பர் தும்பி ஆகப் போகிறாய்!” என்றது அந்த தும்பி.  

முகிலால் நடப்பது எதையும் நம்ப முடியவில்லை! ”அதோ உன் ப்ரெண்ட்   முத்து கையில் ஒரு பொன்வண்டை வைத்துக் கொண்டு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறான் அவனுக்கு நாம் விளையாட்டு காண்பிப்போமா?” என்ற்து தும்பி.   என்னை மனதில் நினை! மந்திரத்தை சொல்லு!தும்பியை நினைத்து, ”சிறகேவா! சீக்கிரம் பற” என்றான்  முகில்.

  தன் முன்னே தீடிரென்று வந்து நிற்கும்  முகிலைப் பார்த்து, காலையில் வாங்கினது பத்தலையா? என்றான் முத்து.   “முத்து அந்த வண்டை விட்டுரு!”   “இல்லேன்னா!”அடுத்த நொடி! முத்துவை தூக்கிக் கொண்டு பறந்தான் முகில். ஓர் உயரமான மரத்தின் கிளையில் தொங்கவிட்டான்.

”முத்து எப்படி இருக்குது நம்ம தொட்டில்! ராத்திரி முழுக்க இங்க தூங்கறியா?”    முத்துவின் கண்களில் பயம் தெரிந்தது. ”வேண்டாம் முகில்! விட்டுரு! நான் இந்த பூச்சியை விட்டுடறேன்!”   “ இந்த பூச்சியை மட்டும் இல்லே! இனிமே எந்த பூச்சியையும் பிடிக்க மாட்டேன்னு சொல்லு!”   ”பிடிக்க மாட்டேன்! பிடிக்க மாட்டேன்! உங்கிட்ட வம்புக்கும் வரமாட்டேன்!”சரி! உன்னை இறக்கி விடறேன்!  மரத்திலிருந்து முத்துவை அலேக்காக தூக்கி பறந்து கீழே  இறங்கினான் முகில்

   “ டமால்! என்ற சத்தம் கேட்டது. கட்டிலில் இருந்து புரண்டு விழுந்திருந்தான் முகில்  ஏண்டா கனவு ஏதாவது கண்டியா? தூக்கத்திலே என்னென்னமோ உளறினே இப்ப புரண்டு கீழே விழுந்திருக்கே!  அம்மா கேட்க    ச்சே!! எல்லாம் கனவா?  என்று முகம் கழுவ பாத்ரூம் சென்றான். சட்டையில் ஏதோ உறுத்த அவிழ்த்தான். அவன் விலாப்புறம் இரண்டு சிறிய இறக்கைகள் இது இது….!    பாத்ரூம் ஜன்னலில் தும்பி ஒன்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.


டிஸ்கி}  1980களில் தினமணிக் கதிரில் சூப்பர்தும்பி என்றொரு கார்டூன் வெளிவந்தது. படு சுவாரஸ்யமாக இருக்கும். நான் விரும்பி படிப்பேன். அதன் பாதிப்பே இந்த கதை. அவ்வப்போது தொடர்வேன் தும்பியின் சாகசங்களை!

எடை!

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த்து. வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த மணிவாசகம் காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார். கேட்டை திறந்தபடி ஒரு 50ஐ கடந்த நபர் நின்றிருந்தார்.

   அழுக்குச்சட்டை, எண்ணெய் காணாத தலை, கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா, பழைய நியுஸ் பேப்பர் எடுக்கறேங்க! அம்மா வரச்சொல்லியிருந்தாங்க என்றார்.

  ஊம்.. என்ற மணிவாசகம், ”என்ன விலைக்கு எடுத்துக்கறே?”

 ”இங்கிலீஷ் பேப்பர்னா 12 ரூபா கிலோ! தமிழ்னா பத்து ரூபாங்க!”

 “ரொம்ப கம்மியா யிருக்கே!”

”இல்லீங்க போனமாசம் 10 ரூபா  8 ரூபாதான் எடுத்தேங்க! இப்ப ரெண்டு ரூபா கூடியிருக்கு!”

 ” ஒரு மாசம் பேப்பர் பில் எவ்வளவு தெரியுமா?”

 “நமக்கெதுக்குங்க அதெல்லாம்?”

 “230 ரூபா சில சமயம் 250 கூட! ஆனா ஒரு மாசம் பழைய பேப்பரை வித்தா பத்து ரூபாதான் கிடைக்குது..!”

”வேஸ்ட் பேப்பர்தானுங்களே? இதை கொண்டு போய் கடையில போட்டா எங்களுக்கு கிலோவுக்கு ஒரு ரூபா கிடைக்கும் அவ்வளவுதான்!”

”சரி சரி உள்ளே வா! வீடே ஒரே நியுஸ் பேப்பர் அடைசலா இருக்குண்னு எம்பொண்டாட்டி கத்திக்கிட்டிருந்தா அதான் வரச்சொல்லியிருக்கா எடையெல்லாம்  ஒழுங்கா போடுவே இல்லே…!”

 ”கரெக்டா இருக்கும் சார்!”

அந்த மனிதர்  பழைய இரும்புத்தராசுடன் உள்ளே நுழைய ”லட்சுமி! பழைய பேப்பர் எடுக்க வந்திருக்காங்க சீக்கிரம் வா!”

   ”நான் கொஞ்சம் அடுப்படியிலே வேலையா இருக்கேன். நீங்களே எடுத்துப்போடக்கூடாதா?”

     ”அப்ப திருப்பி அனுப்பிச்சரவா?”

”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நானே வந்து எடுத்து போட்டுத் தொலைக்கிறேன்.”

லட்சுமி முணுமுணுத்தபடி கிச்சனில் இருந்து வந்து  ஹாலில் கப்போர்டில் கிடந்த பேப்பர்களை அள்ளி வராந்தாவில் போட்டாள்.

     சிதறிக்கிடந்த பேப்பர்களை அடுக்க ஆரம்பித்தார் அந்த பெரியவர்.

”அப்படியே ஒரு கயிரு போட்டு கட்டி வைச்சிருந்தா எடை போட சுலபமா இருந்திருக்கும்யா…!”

     ”ஏன் நீ கயிறு கொண்டு வர மாட்டியா? ”

 “இருக்குய்யா ! வண்டியிலே இருக்கு! போய் கொண்டு வரனும்!”

 ” போய் கொண்டு வா!”

”அந்த பெரியவர் எழுந்தார். ரொம்ப தாகமா இருக்குய்யா! குடிக்க கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா?”

”கேட்டு ஓரமா ஒரு பைப் இருக்கு பாரு…! அதுலே பிடிச்சு குடிச்சுட்டு போய் கயிறு கொண்டுவா!”

பெரியவர்  எழுந்து போய்  அந்த குழாயை திருகினார். வெயிலில் சுடுதண்ணீராய்  கையில் விழுந்த நீரை கொஞ்சம் கீழே விட்டு முகம் கழுவி பின்னர் இரண்டு கை பிடித்து அருந்தினார். முகத்தை தோளில் போட்டிருந்த அழுக்குத்துண்டால் துடைத்துக்கொன்டு வெளியே நிறுத்தியிருந்த அந்த மூன்று சக்கர ட்ரை சைக்கிளை  உள்ளே தள்ளிக் கொண்டு வந்தார்.

  ”கயிரை எடுத்து வான்னு சொன்னா வண்டியையே கொண்டு வந்திட்டியே?” மணிவாசகம் கேட்க

  ”பேப்பர் நிறைய இருக்குதுய்யா! அதான் எடை போட்டதும் வண்டியிலே எடுத்துபோக சவுகரியமா இருக்கும்னு கொண்டு வந்தேன்.”

    ”சரி பெரியவரே…! உங்க பேரு என்ன?”

   “முத்து”

 “எத்தனை வருஷமா இந்த தொழில் பண்றீங்க?”

 ”அது ஆகிப்போச்சுங்க முப்பது வருஷம்!”

  ”ஒருநாளைக்கு எவ்வளோ கிடைக்கும்.?”

”அது வியாபாரத்தை பொருத்துங்க! வீடுங்கள்லே வேண்டாம்னு எவ்வளோ தூக்கிப்போடறீங்களோ  அவ்வளவும் எங்களுக்கு சோறூ போடற தெய்வங்கள்!”

பேசிக்கொண்டே இருந்தாலும் பெரியவர் முத்து பேப்பர்களை இரண்டு மூன்று அடுக்குகளாக அடுக்கி கட்டினார்.

   அப்புறம் எடை போட ஆரம்பித்தார். இரண்டு கிலோ எடைக்கல் ஒன்றும் ஒருகிலோ எடைக்கல் ஒன்றையும் சேர்த்து  தராசில் வைத்து மறுபக்கம் பேப்பர்களை வைத்தார்.  தூக்க முடியாமல் தராசை தூக்கி நிறுத்த முள் பேப்பர் இருந்த பக்கம் தாழ்ந்தது. கொஞ்சம்  பேப்பர்களை எடுத்துவிட்டு மீண்டும் நிறுத்தார்.

 இதற்குள் வார இதழ்கள் சில நாவல் புத்தகங்கலையும்  என் மகன் படித்து முடித்த கல்லூரி பாடப்புத்தகங்களையும் கொண்டுவந்து போட்டாள் லட்சுமி.

     ” பேப்பர் வரைக்கு 5 எடை இருக்குய்யா!  அஞ்சு மூணு 15 கிலோ…”

  ” புக் எல்லாம் எட்டு கிலோ  இருக்கு.”

  ”மொத்தம் 23 கிலோ”

”பேப்பருக்கு 150 ரூபா… புக்கு கிலோ பன்னெண்டு ரூபா அப்போ  தொண்ணூத்தாறூ  ரூபா”

”மொத்தம்  எரநூத்து நாப்பத்தாறு ரூபா ” என்றவர்..

”ஐயா, எதாவது தக்காளி வெங்காயம் வேணுங்களா?”

  ”உன் அழுகின தக்காளி   யாருக்கு வேணூம்? பணத்தை கொடுத்திட்டு பேப்பரை எடுத்துட்டு கிளம்பு.”

”ஐயா,  அம்பது ரூபா கம்மியா இருக்கு! அதுக்கு எதாவது வெங்காயம் தக்காளி வாங்கிக்குங்க!”

  ”அதானே பாத்தேன்…! இப்படி எதையாவது சொல்லி அழுகுன தக்காளீயை தலையிலே கட்டப் பாக்கறீயா?”

    ”இல்லே சார்…! இன்னைக்கு காலையிலே மார்க்கெட்ல எடுத்த புதுத் தக்காளி நீங்களே பொறுக்கி எடுத்துக்கங்க! ரெண்டரை கிலோ ஐம்பது ரூபா..”

 ”மார்க்கெட்ல தக்காளி கிலோ பாஞ்சு ரூபாதான்..!”

 ”அது நேத்து ரேட்டுங்கய்யா!  இன்னிக்கு கிலோ இருபது ரூபாதான்!  உங்களுக்கா வேனூம்னா மூணு கிலோ போடறேன்..!”

    ”யாருக்கு வேணூம் உன் பிச்சை!  ரூபா இருந்தா கொடுத்துட்டு பேப்பரை எடுத்துக்கோ இல்லேன்னா கிளம்பு. நாங்க வேற ஆளூக்கு போட்டுக்கறோம்!”

 ” முத போணீ ஐயா!  காலையிலே இருந்து வெயில்ல சுத்திட்டு வரேன்!  கடைக்கு இன்னும்  அஞ்சு கிலோமீட்டர் போகணூம் ”

  ”அதுக்கு…!”

  ”இரு நூரு ரூபா இப்ப வாங்கிடுங்க! மிச்சம் ஐம்பது ரூபா நாளக்கி வரும்போது கொடுத்துடறேன்!”

   ”முழுசா அம்பது ரூபாயை ஆட்டையை போட பாக்கிறீயே?”

”அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்யா! இந்த ஏரியாவுலேதான் முப்பது வருஷமா வியாபாரம் பண்ணிகிட்டு இருக்கேன்.. உங்க துட்டு எனக்கு வேண்டாம்யா…! ஏமாத்தி துண்ணா உடம்புலே ஒட்டாதுய்யா! நாளைக்கு கண்டிப்பா கொண்டு வந்து கொடுத்துடறேன்யா!”

 ”அப்ப ஒண்ணூ பண்ணு இருநூரு ரூபாவுக்கு எவ்வளோ பேப்பரோ அதை மட்டும்  எடுத்துட்டு போ!  நாளக்கி வரும்போது மீதி பணம் கொடுத்திட்டு மிச்சத்தை எடுத்துப்போ… ”கறாராக சொன்னார் மணி வாசகம்.

  இனி பேசி பிரயோசனம் இல்லை..! என்று அவர் சொன்னபடி இருநூறு ரூபாயை கொடுத்துவிட்டு பேப்பர் பதினைந்து கிலோவையும்  நாலு கிலோ எடை புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் முத்து.

  ”‘பாவங்க அந்தாளு! இப்படி பச்சாதாபமே இல்லாம விரட்டறீங்க!” அந்த அம்பது ரூபாவை அவன் ஏமாத்த மாட்டான். அப்படியே ஏமாத்தினாலும் நாம கொறைஞ்சா போயிருவோம்.”

     ”ஏன் பேச மாட்டே? ஒவ்வொரு ரூபாவும் நான் உழைச்சு சம்பாதிச்சு    இந்த அளவுக்கு வந்திருக்கேன். யாருகிட்டேயும் நான் ஏமாறத் தயாரா இல்லே!  அவன் நாளக்கி வர மாட்டான் பாரு… இந்த மாதிரி எத்தனை பேரை நான் எடை போட்டு வைச்சிருக்கேன் தெரியுமா?  அந்த ஓட்டை தராசுலே எடை போட்டா எப்படியும் கிலோவுக்கு நூறூ கிராம் லாபம் கிடைக்கும். நம்மகிட்டே பத்து ரூபாய்க்கு எடுத்து பன்னென்டு ரூபாவுக்கு விப்பான். ஏமாந்தா எடையிலே இன்னும் கொள்ளையடிப்பான்.”

      ”இப்படி ஒரு ரூபா ரெண்டு ரூபா லாபம் வரலைன்னா அவன் தொழில் செஞ்சு பிரயோசனம் இல்லாம போயிருங்க! அவன் வயித்து பொழைப்ப பாக்க வேணாம்”.

  ”சரிசரி! அவனாலே நமக்குள்ளே எதுக்கு பிரச்சனை? ஆக வேண்டிய வேலையைப்பாரு…!” என்று மனைவியை அடக்கினார் மணிவாசகம்.

  மறுநாள் மணி வாசகம் சொன்னபடி  முத்து வரவில்லை! பொழுது சாய்ந்துவிட்ட்து.  “பார்த்தியா! நான் சொல்லை! அவன் வர மாட்டான்னு!” என்று அமர்த்தலாக சொன்னார்.

  ”இன்னிக்கு வேற லைன்ல போயிருப்பார்… நாளைக்கு வருவார்னு நினைக்கிறேன்.”

”உன் நினைப்பை காயப்போடு…!  நமக்கு  நாலு கிலோ பேப்பர் மிச்சம் ஆச்சு! இல்லேன்னா அம்பது ரூபா நஷ்டம் ஆகியிருக்கும்”.

  லட்சுமி தலையில் அடித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

மறுநாள்  அதிகாலை வேலையிலேயே கேட் கதவு திறக்கவும்  செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்த மணி வாசகம்  அப்படியே போட்டுவிட்டு கவனித்தார். முத்து உள்ளே நுழையவும் தன் கணிப்பு பொய்யாகிவிட்ட்தே என்று வருத்தமுடன்

  ”என்னய்யா! அம்பது ரூபா கொண்டு வந்துட்டியா?”

   ”இல்லீங்கய்யா.. நான் வந்தது”…

”தான் நினைத்தது சரிதான் என்று உள்ளூக்குள் பெருமிதப்பட்டுக்கொண்டு  அம்பது ரூபா இல்லாம பேப்பர் போட முடியாது,,,! ”என்றார்

   ”சரிங்கய்யா! நான் அம்பது ரூபா கொடுத்திட்டே பேப்பர் எடுத்துக்கறேன் . ஆனா.”

  ”என்னய்யா ஆனா?”

”முந்தா நாள் நீங்க போட்ட புக்ஸ்களை எடுத்துட்டு போனேன். அதுல சில பாட புஸ்தகமும் இருந்த்து. அதை கடையிலே போடறதை விட  பழைய புத்தக கடையில கொடுத்தா கொஞ்சம் ரூபா அதிகம் கிடைக்கும்னு தனியா எடுத்து வைச்சேன். பேப்பரை மட்டும் கடையிலே போட்டுட்டு வீட்டுக்கு போய் புக்ஸ்களை புரட்டினேன். அப்ப அதிலே இந்த  காசு இருந்துச்சுய்யா?”  என்று இரண்டு ஐநூறூ ரூபா நோட்டுக்களை நீட்டினார் முத்து.

மணிவாசகம் அதிர்ந்து போனார். ஐம்பது ரூபாயை நம்பாத நான் எங்கே ஆயிரம் ரூபாயை அதுவும் எப்போது வைத்து நான் மறந்து போன அந்த ரூபாயை திருப்பித்தரும் முத்து எங்கே? மிகவும்  எடையில் மிகவும் தாழ்ந்து போய்விட்டோமே என்று வருத்தம் அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்த்து.

  மனம் தெளிவடைந்தவராய்  ”பெரியவரே! புத்தகத்தை எடைக்கு போட்டப்புறம் அது உங்களுக்குத்தான் சொந்தம்.  அதுலே பணம் இருந்தாலும் அது உங்களோட்துதான். நீங்களே வச்சுக்கங்க!”

    “நீங்க பெரிய மனசோட  இந்த பணத்தை கொடுத்தாலும் உழைக்காம  இவ்வளோ பணம் கிடைச்சா அப்புறம் அது  என் மனசை மாத்திடும். இதே மாதிரி தினமும் கிடைக்காதான்னு ஏங்க வைக்கும். அப்புறம் என் நேர்மையை கொன்னுடும். வேணாங்கய்யா! இதை நீங்களே வச்சிக்குங்க! ”என்று மணிவாசகம் கையில் ரூபாயை திணீத்துவிட்டு  கிள்ம்பினார் முத்து.

    ”பெரியவரே ஒரு நிமிஷம்!  நேத்து எடை போட்டு வைச்ச புத்தகத்தையாவது எடுத்துட்டு போங்க!”

  ”அம்பது ரூபா கிடைச்சதும் கண்டிப்பா வரேன்! ”சொல்லிவிட்டு அவர் நடக்க

அப்படியே உறைந்து போய் நின்றார் மணிவாசகம்.

தவளை ராணி!முன்னொரு காலத்துல வேங்கடபுரி என்ற நாட்டை வேங்கட நாதன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மூணு பசங்க. இளவரசருங்க மூணு பேரும் குருகுலம் போய் கல்வியும் வில், வாள் பயிற்சியெல்லாம் எடுத்து வாலிபர்களாக வளர்ந்து நின்னாங்க. அவங்களுக்கு திருமணம் பண்ணி வைக்கணும்னு ராஜா நினைச்சாரு.

அந்த சமயத்துல அந்த நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தாரு. வந்தவர் ராஜ தர்பாருக்கு வந்து. “வேங்கடநாதா, நான் தருகிற மூன்று அம்புகளை ஒவ்வொரு மகனிடமும் ஒரு அம்பு கொடுத்து வில்லில் பூட்டி எய்தச் சொல். அந்த அம்பு எங்கே சென்று விழுகிறதோ அங்கு உனக்கு மருமகள் கிடைப்பாள்” அவளையே நீ உன் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதில் மாற்றம் கூடாது! அப்படின்னு சொல்லிட்டு அம்புகளை கொடுத்துட்டு புறப்பட்டு போயிட்டாரு.

அரசனும் தன் மகன்கள் கிட்டே அம்புகளை கொடுத்து எய்தச் சொன்னான். முதல் மகன் எய்த அம்பு பக்கத்து நாட்டு அந்தப்புரத்தில் விழுந்தது. இரண்டாவது மகன் எய்த அம்பு மந்திரி குமாரியின் மடியில் விழுந்தது. மூன்றாவது மகன் எய்த அம்பு ஒரு குளத்தில் இருந்த தவளை மீது விழுந்தது.

இரண்டு மகன்களுக்கும் இளவரசியும், மந்திரி குமாரியும் மனைவியாக கிடைக்க மூன்றாவது மகனுக்கு தவளையை எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று மன்னன் கலங்கினான். ஆனாலும் முனிவரின் சொல்லைத் தட்டினால் ஏதாவது தீங்கு ஏற்படுமோ என்று அஞ்சி தவளையைத் திருமணம் செய்து வைத்துவிட்டான்.

இரண்டு இளவரசர்களும் மூன்றாமவனை கிண்டலாக பார்த்தனர். போ! போய் குளத்தில் குடித்தனம் நடத்து! ராத்திரி முழுவதும் பாடல் கச்சேரிதான்! கொர்! கொர்! என்று கிண்டல் பேசினர். மூன்றாவது இளவரசன் வருத்தமாக தனக்கு மட்டும் இப்படி தவளை மனைவியாக அமைந்துவிட்டதே! என்று நினைத்து அழுதபடி சென்று விட்டான்.

ஒருவாரம் கடந்ததும் அரசன் வேங்கட நாதன் தன்னோட மருமகள்கள் விருந்து செய்யனும் யாரோட விருந்து நன்றாக இருக்கிறதோ அவர்களுக்கு பரிசு வழங்குவேன்னு அறிவிச்சாரு.

இளவரசியும் மந்திரி குமாரியும் விதவிதமா போட்டி போட்டு சமைச்சு தள்ளிட்டாங்க. மூணாவது இளவரசன் தவளை எப்படி சமைக்கும்? இதிலும் நமக்கு அவமானம்தான்! என்று அழுதபடி அரண்மனையில் அமர்ந்து இருந்தான். அப்போது அவனது நண்பன், ஏன் நண்பா! இப்படி வருந்தி அழுகிறாய்? என்று கேட்டான்.

என்னுடைய தந்தை மூன்று மருமகள்களில் யார் நன்றாக விருந்து சமைக்கிறார்கள் என்று போட்டி வைத்திருக்கிறார். என் தவளை மனைவி எப்படி அதில் கலந்து கொள்ள முடியும்? அவளை எப்படி நான் சமைக்கச் சொல்ல முடியும்? என்று அழுகிறேன்! என்றான் இளவரசன்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தவளை நடு இரவில் நீர் நிலையை விட்டு வெளியே வந்தது. “க்ராக் க்ராக்” என்று கத்தியது. உடனே ஏராளமான தவளைகள் அங்கே வந்துருச்சு. சில நொடியில் அவை அழகான பெண்களா உருமாறிருச்சு. இந்த தவளையும் அவர்களை விட அழகான பெண்ணா உருமாறி நின்னுச்சு. சில நிமிடங்களில் அவை பிரமாதமான விருந்தை செய்து வைத்துவிட்டு மீண்டும் தவளையாக மாறி குளத்திற்கு சென்றுவிட்டன.

தவளை ராணியும் மெல்ல கணவனை அழைத்து “நாதா! விருந்து தயாராஇருக்கு! மாமாவை அழைத்து வாருங்கள் என்று சொன்னது. தவளை பேசினதும் விருந்து தயாரா இருக்குன்னு சொன்னதும் இளவரசனாலே நம்பவே முடியலை! நீ எப்படி பேசுறே? அப்படின்னு தவளையைக் கேட்டான்.

இன்னும் ஒரு பவுர்ணமி வரைக்கும் பொறுத்திருங்கள். அப்புறம் எல்லாம் சொல்றேன்! முதல்ல ராஜாவை விருந்துக்கு கூப்பிட்டு வாருங்கள் அப்படின்னு சொல்லுச்சு தவளை.

தவளை ராணி சமைச்ச உணவை சிலாகித்து சாப்பிட்ட ராஜா, தவளையா இருந்தாலும் அருமையா சமைச்சிருக்கா! இந்த சாப்பாடுதான் ஜோரா இருக்குன்னு பாராட்டி ஓர் அட்டிகையை பரிசா கொடுத்துட்டு போயிட்டாரு. இது மத்த ராணிகளுக்கு வருத்தமாயிருச்சு. கேவலம் ஒரு தவளை நம்பளை போட்டியிலே ஜெயிச்சிருச்சே! மனசுக்குள்ளே குமைஞ்சுகிட்டாங்க!

மேலும் ஒரு வாரம் கழிச்சு, ராஜா! தனக்கு ஒரு அழகான அங்கி வேணும் அது உங்க மனைவியர் கையால் நெய்ததாக இருக்க வேண்டும்! என்று உத்தரவு போட்டார். வழக்கம் போல மூணாவது இளவரசன். வருத்தப்பட்டு ஒரு தவளையாலே எப்படி அங்கி நெய்ய முடியும்? அப்பா ஏன் இப்படி போட்டி வைக்கிறார்னு புலம்பிக்கிட்டு இருந்தான்.


இதைக் கேட்ட தவளை ராணி நள்ளிரவில் பெண்ணா உருமாறி ஒரு புதிய அங்கியை நெய்து தைச்சு வச்சிருச்சு.

விடிகாலையில் விழிச்ச அரச குமாரனுக்கு அதிசயமா போயிருச்சு! ஒரே இரவில் இத்தனை அழகா பளபளப்பா ஒரு புதிய அங்கியை தவளை ராணி செய்திருக்கான்னா அவகிட்ட ஏதோ சக்தி இருக்குன்னு நினைச்சுகிட்டான். தவளை ராணிகிட்டேயும் கேட்டான்.

ஆனா தவளை ராணி, இப்ப எதுவும் கேக்காதீங்க! வரும் பவுர்ணமி அன்னிக்கு என்னோட சுயரூபம் தெரியும். இந்த அங்கியை மாமாவுக்கு கொடுத்திருங்க அப்படின்னு சொல்லிருச்சு.

தவளை ராணியின் அங்கி தான் பாராட்டு வாங்கிச்சு! அதை பார்த்து மத்த இளவரசனுங்களும் இளவரசிகளும் மனதில் கருவிக் கொண்டு. ஒரு தவளை நம்மையெல்லாம் ஜெயிச்சிருச்சே! இந்த முறை எப்படியும் அவனை அவமானப் படுத்தனும்னு நினைச்சிகிட்டாங்க.

அன்னிக்கு பவுர்ணமி! ராஜா மூணு பசங்களையும் கூப்பிட்டு, பிள்ளைகளே! இன்னிக்கு நம்ம குலதெய்வத்துக்கு பூஜை! உங்க மனைவிகளை கூட்டிக்கிட்டு கோயிலுக்கு வந்திருங்கன்னு சொன்னார்.

மத்த ரெண்டு பேரும் “ என்னடா! தவளையை எப்படி கூட்டிட்டு வரப் போறே? உன் சட்டைப் பையில் போட்டு கூட்டிட்டு வா! வழியில யாரும் மிதிச்சிடாம பார்த்துக்க! நம்ம குலதெய்வம் வேற நாகராஜா! தவளைங்கன்னா அதுக்கு உசிராச்சே! பாத்து பத்திரமா கூட்டி வா! என்று ஏளனம் செய்தனர்.

மூன்றாம் இளவரசன் அழுதபடி தன் அறைக்கு சென்றான். அங்கே தவளை ராணி அவனை ஆறுதல் படுத்தி, இளவரசே கவலைப்படாதீர்கள்! இன்று பவுர்ணமி! நிலா முழுதும் உதயமாகி அதன் கிரணங்கள் என் மீது படுகையில் நான் பெண்ணாக உருமாறி விடுவேன். ஒரு சாபத்தினால் தேவலோக மங்கையான நான் இப்படி தவளையாக உருமாறும்படி ஆகிவிட்டது. கவலைப்படாமல் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றது.

இளவரசன் தவளையை தன் கையில் ஏந்தியபடி கோயிலுக்குச் சென்றான். நிலவு உதித்து அதன் கிரணங்கள் தவளை மீது பட அது அழகிய பெண்ணாக உருமாறியது. தேவலோக மங்கையாக பிரகாசமாக அங்கிருப்பவர்கள் அனைவரும் அவளையே நோக்கும்படி அழகான பெண்ணாக மாறியது தவளை.

இந்த காட்சியை பார்த்து அரசரும் இளவரசர்களும் அவர்களது மனைவியரும் வியந்தனர்.. தேவலோக மங்கையான தவளை, அரசே ஒரு சாபத்தினால் தவளையாக மாறினேன். முனிவர் அருளினால் இவரை மணந்து சாபவிமோசனம் பெற்றேன். என்று ராஜாவின் காலில் விழுந்து வணங்கினாள்.

அப்போது முனிவரும் அங்கு வந்து எல்லாம் இறைவன் அருள். உன் மூன்றாவது மகன் பொறுமை சாலி! அவனுடைய சகிப்புத் தன்மையினால் தேவலோக மங்கையை மணக்கும் பாக்கியம் பெற்றான். உங்கள் நாடு செழிக்கும் என்று வாழ்த்திச் சென்றார்.

அது முதல் மூவரும் ஒற்றுமையாக இருந்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்.

நரி ருசித்த ஆப்பம்!

 வயலூர் என்ற கிராமத்தின் அருகே ஒரு சின்ன புதர்க் காடு இருந்துச்சு. அந்த புதர்காட்டுல குள்ள நரி ஒண்ணு வசிச்சு வந்தது. புதர்காடுன்னா பெரிய பெரிய மரங்கள் இல்லாம சின்ன சின்ன மரங்களும் செடிகொடிகளும் அடர்த்தியா வளர்ந்து இருக்கிற ஒரு காடு அது. அந்த காட்டின் எல்லையில் வயலூர் இருந்துச்சு. வயலூர் கிராம மக்கள் அந்த காட்டுல போய் சுள்ளி பொறுக்குவாங்க. சில மூலிகைச் செடிகளை பறிச்சு சேகரம் பண்ணி வெளியே நகரத்துக்கு கொண்டுபோய் வித்து காசாக்கிப்பாங்க. சின்ன காடா இருக்கிறதனாலே பெரிய விலங்குங்க நடமாட்டம் இல்லை. அதனால ராத்திரிப் பொழுதிலே கூட பயமில்லாம காட்டுப் பக்கம் போய் வருவாங்க.

ஒரு நாள் மீனாட்சிப் பாட்டி வயலூர் கிராமத்துல இருந்து காட்டுக்கு விறகு சேகரிக்க போனாங்க. அவங்க வயலூர்ல இட்லிகடை வைச்சு பிழைச்சுகிட்டு இருந்தாங்க. அவங்க கை மணத்துக்காகவே நல்லா வியாபாரம் ஆச்சு. விலையும் குறைவு. அதனாலே கடையிலே எப்பவும் கூட்டம் அள்ளும். வழக்கமா அவங்களோட பேரன் குருபரன் தான் சுள்ளிப் பொறுக்க போவான். ஆனா அவனுக்கு திடீர்னு காய்ச்சல் வந்ததாலே அவனாலே சுள்ளி பொறுக்க போக முடியலை. அதனாலே பாட்டியே சுள்ளி பொறுக்க கிளம்பிட்டாங்க. நல்ல பகல் பொழுதுல கிளம்பினாங்க பாட்டி. மதியம் சாப்பிடறதுக்கு காலையில சுட்ட ஆப்பமும் தேங்காய் பாலும் கொஞ்சம் எடுத்துக்கிட்டு காட்டுக்குள்ளே போனவங்க காய்ந்து போன மரங்கள் நிறைய இருக்கிற இடமா பார்த்து கொண்டு போன ஆப்பத்தையும் தேங்காப் பால் பையை ஒரு மரத்து கிளையிலே தொங்க விட்டுட்டு சுள்ளிகளை ஒடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த காய்ந்த புதர்களுக்குள்ளே குள்ள நரி ஒண்ணு ரொம்ப நாளா பசியிலே காய்ஞ்சி கிடந்தது. அதுக்கும் பாவம் வயசாயிருச்சு! முன்ன மாதிரி சின்ன விலங்குகளை வேட்டையாடி பிடிச்சு தின்ன முடியலை. பாட்டி கொண்டு போய் வைச்சிருந்த ஆப்பம் தேங்காய் பால் வாசம் அதன் மூக்கை துளைச்சது. உடனே அது சந்தடி பண்ணாம பாட்டி வைச்சிருந்த பையை தாவி எடுத்துக்கிட்டு வேற ஒரு புதருக்குள்ளே போய் ஒளிஞ்சிகிட்டு சாப்பிட ஆரம்பிச்சது. பாட்டி ஒரு சுமை சுள்ளிகளை கட்டி முடிச்சுட்டு சாப்பிடலாம்னு பையை தேடினா காணோம். சுத்தும் முத்தும் பார்த்தாங்க. அவங்களுக்கு எதுவும் தென்படலை. சரி ஏதோ விலங்கு தூக்கிட்டு போயிருச்சு போலிருக்கு. இன்னிக்கு நம்மளுக்கு மதிய சாப்பாடு இல்லைன்னு முடிவு பண்ணிட்டு விறகு சுமையைத் தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. குள்ள நரிக்கு சந்தோஷமா போயிருச்சு! பாட்டி சுட்ட ஆப்பம் சுவையா இருந்ததே! இவங்க பின்னாடியே போய் இவங்க வீட்டுல ஒளிஞ்சிகிட்டு தினமும் சாப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டு அவங்களுக்கு தெரியாம பின்னாலேயே பின் தொடர்ந்து போய்க் கிட்டு இருந்தது. பாட்டி வீட்டுக்குள்ளே நுழைஞ்சாங்க. அப்ப இருட்டிருச்சு அதனாலே பாட்டியோட வந்த நரியை யாரும் பார்க்க முடியலை. பாட்டி வீட்டோரம் ஓர் வயல் அதுல மறைஞ்சிக்கிட்ட நரி பாட்டி கொல்லைக் கதவை திறந்து முகம் கை கால கழுவ போனதும் நைஸா உள்ளே நுழைஞ்சிருச்சு. சுத்தும் முத்தும் பார்த்தது. அந்த வீட்டுல ஒரு நெல் குதிரு இருந்தது. நெல் குதிர்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு பெரிய பானை போல இருக்கும் சுட்ட மண்ணினால் செய்யப்பட்ட ஒரு பெரிய பாத்திரம் அது. அந்த காலத்துல அதில் நெல் அரிசி, தானியங்கள் சேமித்து வைப்பாங்க. ஒரு ஆள் உயரம் அது இருக்கும். அதுக்குள்ளே எட்டி பார்த்தது நரி. அந்த குதிர்ல பாதி அளவு தானியம் இருந்தது. மீதி இடத்துல நாம ஒளிஞ்சிப்போம்னு அதுல “சடார்’னு குதிச்சி ஒளிஞ்சிகிட்டது. பாட்டியோட பேரன் குருபரன் உடம்பு சுகமில்லாம வேற அறையில படுத்துக் கிடந்ததாலே நரிக்கு வேலை சுலபமா ஆயிருச்சு. குதிருக்குள்ளே ஒளிஞ்சிருந்த நரி காலையிலே பாட்டி இட்லி தோசை, ஆப்பம் இதெல்லாம் சுட்டு அடுக்கினதும் நாக்கில நீர் பொங்க பார்த்துக் கிடந்துச்சு. வியாபாரம் அடங்கினதும் பாட்டி மீதி இருந்த பலகாரங்களை மூடி வைச்சிட்டு பொருள் வாங்க சந்தைக்கு புறப்பட்டாங்க. நரி சத்தம் போடாம அந்த பலகாரங்களை திருடி தின்னுட்டு பக்கத்துல இருந்த வயலுக்குள்ளே போய் ஒளிஞ்சிருச்சு. இப்படி ராத்திரியிலே உள்ளே நுழைஞ்சி குதிருக்குள்ளே ஒளிஞ்சிக்கிறதும் காலையில பலகாரத்தை தின்னுட்டு வயலுக்குள்ளே ஒளிஞ்சிக்கிறதுமா இருந்தது நரி. பாட்டிக்கு பலகாரங்கள் காணாம போறது கவலையா இருந்துச்சு. முத முதலே காட்டில பலகாரம் காணாம போச்சு. இப்ப வீட்டுலேயும் நாளைஞ்சு நாளா காணாம போவுதே எப்படி? குருபரா! யாராவது நான் போனதுக்கு அப்புறம் வீட்டுக்குள்ளே வந்தாங்களா?ன்னு கேட்டாங்க. யாரும் வரவே இல்லையே பாட்டி! அப்படி வந்தா நான் படுத்திருக்கிற அறையை தாண்டித்தான் சமையல்கட்டுக்கு போக முடியும். நான் கண்டிப்பா பாத்திருப்பேனே என்றான் பேரன். சரி! இன்னிக்கு எப்படியும் இதை கண்டுபிடிச்சே தீரனும்னு அப்படின்னிட்டு பாட்டி வெளியே போற மாதிரி போய் ஒளிஞ்சி நின்னு ஜன்னல்வழியா என்ன நடக்குதுன்னு கவனிச்சாங்க. நம்ம குள்ள நரியார் குதிருக்குள்ளே இருந்து குதிச்சு வந்து பலகாரங்களை சாப்பிடறதை பார்த்ததும் பாட்டிக்கு பகீர்னு ஆயிருச்சு இதென்ன நம்ம வீட்டுக்குள்ளேயே நரி குடி வந்துருச்சே அதை எப்படியும் விரட்டணும்னு முடிவு பண்ணாங்க.
உடனே நிறைய் வேல முள்ளுங்களை ஒடைச்சு எடுத்து வந்து குதிருக்குள்ளே இருந்த நெல்லை கோணியிலே கட்டி வைச்சுட்டு வைக்கோலை நிரப்பி அதுக்குள்ளே முள்ளுங்களையும் போட்டு வைச்சாங்க. பொழுது சாய்ந்ததும் திறந்திருந்த கொல்லைப்புற கதவுவழியா உள்ளே வந்த நரி குதிருக்குள்ளே குதிச்சது. அடுத்த நிமிடம் “ஆ” ஐயோ!” என்ற வலியால் துடித்தது. பாட்டி போட்டிருந்த வேல முள்ளு அதன் உடம்பெல்லாம் குத்திக் கிழிச்சது. அடடே பாட்டி நம்பளை கண்டுபிடிச்சிட்டாங்க போல! இப்ப கத்தி சத்தம் போட்டா அடி பின்னிருவாங்க! வந்ததுதாம் வந்தோம்! வலியை சகிச்சிட்டு இருந்தோம்னா நாளைக்கு நிறைய ஆப்பத்தை தின்னுட்டு போயிரலாம். அப்புறம் ஒளிய வேற இடம் தேடலாம்னு நரி முடிவு பண்ணி அமைதியா இருந்துச்சு. பாட்டிக்கு நரியோட திட்டம் விளங்கிருச்சு. அது சத்தம் போடாம குதிருலேயே இருந்துட்டு நாளைக்கு பலகாரம் தின்னுட்டு போகப்போவுது போலன்னு நினைச்சிக்கிட்டாங்க. அப்படியா சேதி! உனக்கு நல்லா பாடம் புகட்டறேன்னு சொல்லிகிட்டாங்க. மறுநாள் காலையிலே பலகாரங்களை சுட்டு முடிச்சுட்டு தோசைக் கல்லை நல்லா காய்ச்சி அடுப்பு மேலேயே வைச்சிட்டு கொஞ்சம் எண்ணையையும் காய்ச்சி பக்கத்துலே வச்சிட்டாங்க. மீதி பலகாரங்களை வெளியே எடுத்துட்டு போயிட்டாங்க. ஆப்பம் தின்னற ஆசையிலே நரி பாட்டி அந்த பக்கம் போனதும் குதிருக்குள்ளே இருந்து வெளியே குதிச்சு வந்தது. இது என்னது அடுப்பு மேல கருப்பா இருக்கே! புது பலகாரம் போலன்னு நினைச்சிகிட்டு வேகமா வந்து வாயை வைச்சது. அவ்வளவுதான் தாமதம் வாய் புண்ணாகி வெந்து போயிருச்சு! அதனாலே ஒண்ணும் பண்ண முடியலை! தேங்காய் பால் தின்ன ருசியிலே பக்கத்து சட்டியில இருந்த பாட்டி காச்சி வச்சிருந்த தேங்காய் எண்ணெயில வாய் வைச்சது. இப்ப நாக்கும் கொப்பளமா ஆயிருச்சு! கண்ணு ரெண்டுலேயும் தண்ணி ஊத்த விட்டா போதும்னு வெளியே ஓட பாத்துச்சு! அப்ப குருபரன் ஒரு பெரிய தடியோட வாசல்ல நிக்கவும் ஒரு வாரம் திருடி தின்னதுக்கு நல்ல கூலியை இன்னிக்கு கிடைக்க போவுதுன்னு தீர்மானிச்சு கொல்லை பக்கமாவே ஓட முயற்சி பண்ணுச்சு. அங்க பாட்டி துடைப்ப கட்டையும் கையுமா நின்னாங்க! தடியால அடிவாங்கினா உசுரு மிஞ்சாது! துடைப்ப அடி பரவாயில்லைன்னு புழக்கடை பக்கமா தெறிச்சி ஓடுச்சு நரி! அதுக்கு அப்புறம் அது ஆப்பத்துக்கு ஆசைப்படவே இல்லை
!