குறும்பா கூடம்!

குறும்பா கூடம்!

தோகை விரித்தாடும் மயில்

நின்று ரசிக்கின்றன

சூழ்ந்த மழை மேகங்கள்.

சாளரத்தின் அருகே

தொட்டிச் செடிகள்

தேடி வந்தது மழைச்சாரல்.

உருண்டோடும் கூழாங்கல்

திசையெங்கும் கேட்கிறது

நதியின் பாடல்.

கண்ணாடி முன்நின்று

சிரிக்கும் குழந்தை

பிரதிபலித்தது உற்சாகம்.

பள்ளி சுவரெங்கும்

வண்ண வண்ண ஓவியங்கள்

திசைதிரும்பியது வண்ணத்துப்பூச்சி.

ச. கோபிநாத்  சேலம்

உடைந்த பொம்மை 

ஏக்கத்தோடு பார்க்கும் 

தாயில்லா குழந்தை 

உடைந்த மண் சட்டி

பாதி நிறைந்த நீரிலும் 

முழு நிலா 

தொலை தூரம் 

பறந்து வந்த பறவை

நின்றது சோதனைச் சாவடியில் 

ஓங்கி அடித்துவிட்டு 

பின்வாங்கும் கடல் அலைகள் 

என்ன தவறு செய்ததோ கடற்கரை 

கவிஞர் மீன்கொடி.

வெளியே போனதால்
உள்ளே வந்தது
கொரோனா !

அரசனையும் ஆண்டியையும்
ஒன்றே என்றது
சமத்துவ கொரோனா !
 

கற்றல் தடைபடவில்லை
விடுமுறையில் வேலை
வாழ்க்கைப் பாடம் !

 ச.கிறிஸ்துஞானவள்ளுவன்.வேம்பார்

வறண்ட நதி

கடந்து செல்லுகின்றது 

வயிறு நிறைந்த லாரி 

வறண்ட நதியில் 

நீச்சல் கற்கிறது 

பறவையின் நிழல் 

பனை மரம் 

ஆடிக்கொண்டே இருக்கிறது 

குருவி கூடு 

பாண்டியராஜ்.

கடவுளின் கருணை.

சிக்கவேயில்லை

சிலை திருடன்.

முத்தங்களை

மிஸ் செய்கின்றன குழந்தைகள்

கொரோனா காலத்தில்.

புது வண்டி ரவீந்திரன்

கடும் கோடை

படிப்படியாக உயரும்

குளத்தின் ஆழம்

பசிக்கும் நேரம்

சுத்தமாக வைத்துள்ளார்

பிச்சைப் பாத்திரம்….

தட்சணா மூர்த்தி

சுவரில் மரங்களை வரைந்ததும்

ஆச்சிரியமாக இருக்கிறது

திடீர் கோடை மழை…

மழை நின்றதும்

மரம் வரைந்த சுவரில்

ஆங்காங்கே நீர்த்துளிகள்…

குளத்துநீரில் கால்களை கழுவ

தெறிக்கும் நீர்த்துளிகள்

தாமரை இலையில் மிதக்கின்றன…

பாதரசமில்லாத கண்ணாடி தான்

உருவத்தை காட்டுகிறது

தெளிந்த நீர்.

..

வண்ணத்துப்பூச்சி அமர்ந்தது

இந்த ரோஜாவுக்கு பிடிக்கவில்லையோ

ஒரு இதழை உதிர்த்து விடுகிறது.

..

நண்பனைப் பார்த்ததும்/

கடவுள் பெயரை உச்சரிக்கிறான்/

நார்த்திகவாதி..

 எஸ்.டென்னிஸ்.

நகரும் மேகங்கள்

நிழல் தேடி அமர்கிறான்

விறகு வெட்டி!!!

ஜீவா

சுமையேற்றிச் செல்லும்

வாகனத்தின் பின்புறத்தில்

தொங்கியபடிக் கோவைக்கொடி.

ச.ப. சண்முகம்

காதலியின் பேச்சால்

ஏறிக் கொண்டே போகிறது

சர்க்கரையின் அளவு

இளவல் ஹரிஹரன், மதுரை

கைக்கு எட்டியது

வாயிக்கு எட்டவில்லை

பசியோடு பரிமாறும் சிறுவன்!

படிப்பில்

முத்திரை பதித்தான்

அஞ்சல் வழிக்கல்வி!

யானைக்கும் அடி சறுக்கியது

பிதுங்கிய நெடுஞ்சாலை!

டென்டர் முறைகேடு!

 கோவை.நா.கி.பிரசாத்

மரண வீடு

வாசல் மிதியடியில்

நல்வரவு!

பதிவாகாது

எந்த ட்ரோன் கேமராக்களிலும்

பசி!

 தக்ஷன், தஞ்சை.

பட்டக்கடன்

அடிக்கடி பதறவைக்கிறது

அழைப்பு மணி…

குதிரையின் குளம்படி சத்தம்

இனிமையாக இல்லை

லாடங்களின் வடுக்கள்…

தூர் வாரிய குளம்

நாற்றம் எடுக்கிறது

ஊழல்…

நுனிப்புல் மேய்ந்த நாளை

அசை போடுகிறதோ?

பசித்திருக்கும் மாடு…

கரை ஏறுவதற்காக

கடலில் இறங்குகிறான்

வலை வீசுபவன்…

மீன்கள் துள்ளுவதால்

கலங்குகிறது குளம்

வலை விரித்திருக்கிறார்களே!…

சுவற்றில் பால் கணக்கு

அழியாமல் இருக்கிறது

அம்மாவின் நினைவுகள்…

ஐ.தர்மசிங்

1.

மணிச் சத்தம் கேட்கிறது

நான் மட்டும் தனியே

வண்டி மாடுகள்

போன பாதை.

*

2.

ஓர் இலை துளிர்க்கிறது

ஒரு குயில் கூவுகிறது

அமைதியாக மூச்சுவிடுகிறது வனம்.

3.

மூக்கின் பிராப்தம்

கண்களுக்கில்லை

எங்கிருக்கிறது அந்த மலர்?

*

4.

மாடு மேய்கிறது

வெட்டுக்கிளி கத்தரிக்கிறது

புல் வளருகிறது.

*

5.

நிழல் தராத

பனை மரம்

நுங்கு தருகிறது.

  • பிருந்தா சாரதி.

எத்தனை கண்கள்

விரித்த தோகை மீது

ஆடும் மயில்!

பூவை புறந்தள்ளி

இலையில் அமர்கிறது

முட்டையிடும் வண்ணத்துப்பூச்சி.

தலைக் கனம்தான்

அதிக ஆட்டமில்லை

ஈச்சமரம்.

தன் கால்களைப் பற்றி

மேலேறுகிறது

கண்ணாடியில் எறும்பு.

 எண்ணத்துவங்குகிறாள் சிறுமி

நேற்று விட்ட இட்த்திலிருந்து

நட்சத்திரங்களை

நீண்டநாள் கழித்து வருகிறேன்

ஓடிவந்து கால்களைத் தழுவுகின்றன

கடலலைகள்.

   மகிழ்நன் மறைக்காடு.

குடியிருப்பு அகற்றம்

வேதனையில் எறும்பு!

விரிசலில் பூச்சு!

பற்றிய கால்கள்

விட மறுத்தது

ஈரநிலம்!

சேரும் இடத்தின் சிறப்பை

தனதாக்கிக் கொண்டது!

தண்ணீர்!

வீசப்படும் எச்சில் இலை!

காத்திருக்கும் நாய்கள்!

தட்டிப்பறிக்கிறது காற்று!

பலமுறை படித்து முடிக்கையில்

காணாமல் போய்விடுகிறது!

புத்தகத்தின் புது வாசனை!

 இருண்ட வீடு!

விளக்கேற்றின மின்மினிகள்!

மரங்கள்!

 தளிர் சுரேஷ்

பீட்சா எனும் தூண்டில்

 பீட்சா எனும் தூண்டில்  
                                                       இளவல் ஹரிஹரன்

     ஒவியம்: அ.செந்தில்குமார்

   நந்தகுமாருக்கு காலாற சற்று நடந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தார். எவ்வளவு நேரம் தான்அந்தச் சிமிண்டுப் பலகையில் உட்கார்ந்திருப்பது.உட்காரவும் சலிப்பாக இருந்தது.

  சுந்தரேசன் வந்து விடுவார் என்று எதிர்பார்த்துக்காத்திருந்தார். இன்னும் வரவில்லை. இந்த வயதில்காத்திருத்தல் என்பது எவ்வளவு கொடுமையானது
என்பதை அறிவார் நந்தகுமார்.     பாவம்…சுந்தரேசனுக்கு என்ன கஷ்டமோ.இல்லை வரும் வழியில் வேறு யாராவது பார்த்துப்பேச ஆரம்பித்துவிட்டார்களோ……இல்லை தடுக்கிவிழுந்து காயம்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுகிறாரோ என்னவோ….

         ‘ நாமே ஏதேதோ கற்பனை ஏன் செய்து கொள்ளவேண்டும்…..வரும் போது வரட்டும். ரொம்ப நல்லமனுசன்……..அட…. இந்த செல்போனிலேயாவது ஒருவார்த்தை பேசி இருக்கலாமே…..’ என்று நினைத்த நந்த
குமார் தம் செல்போனை எடுக்கப் பையில் கை விட்டார்.      செல்போன் இல்லை. வீட்டிலேயே வைத்து விட்டேன் போலும் எனத் தம்மை நொந்து கொண்டார்.

            அந்தப் பூங்காவைச் சுற்றி நடக்கலாம் என்றுஎழுந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். மரங்களும் பூச்செடிகளுமாய் ஒரு அழகை அந்தச் சூழலுக்குக் கொடுத்திருந்தது.

            ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் நடைபயின்று கொண்டிருந்தார்கள்.செய்ய வேண்டியதை செய்யவேண்டிய காலத்தில் செய்யாததால் வந்த செய்வினை இது என ஒரு வாக்கியம் மனதில் ஓடியது.
 
            பரவாயில்லையே…..ஓர் அழகான வாக்கியம் எதுகைமோனையுடன் அழகாய்த் தோன்றுகிறதே…..கவிதைஎழுதலாம் போலிருக்கிறதே என்று தம்மைத் தாமே மெச்சிக்கொண்டார்.

              இதற்குள் ஒரு சுற்று பூங்காவைச் சுற்றி முடித்திருந்தார். இன்னும் சுந்தரேசன் தான் வரவில்லை. சரி….இரண்டாவது சுற்றும் போகலாம் என அடி எடுத்துவைத்தார்.

               அப்போது அடர்ந்த கொஞ்சம் இருளான பகுதியில்இருந்து ஏதோ முனகும் பெண் குரல் கேட்டது. அதோடுகடுமையான கரகரத்த ஆண் குரலும் கேட்டது.   அந்தப் பகுதியில் மட்டும் சிறிது நடமாட்டம்குறைவாக இருந்தது. பொது இடம் தானே….இந்த மாதிரிஇடங்களுக்கு உல்லாசம் தேடி வருபவர்களும் உண்டு.
இங்கிதம் தெரியாமல் நடந்து கொள்வதும் உண்டு. இந்தக்கருமங்களையெல்லாம் கண்டும் காணாமல் போவதுமக்களின் பழக்கமாகி விட்டது. அதனால் தான் இந்தமாதிரியான ஆட்களுக்குத் தோதாக இப்படி இடங்கள்
அமைந்து விடுகின்றன.

                 சரி……இதெல்லாம் நமக்குத் தேவை இல்லை,கடந்து போவோம் என்று நடை போட்டார். ஆனால் அவரைத் தடுத்து நிறுத்தியது அந்தக்குரல். அது பெண அல்ல, ஒரு சிறுமியின் குரலாகக்கேட்டது.

     ஏதோ தப்பு நடக்கிறதோ…….எதற்கு நமக்கு
வம்பு என எண்ணினாலும் நந்தகுமாருக்கு அங்கு நடப்பது என்ன என்று தெரிந்துகொள்ள ஒரு ஆவல்ஏற்பட்டுவிட்டது. இருந்தும் இந்த வயதில் எதற்குரிஸ்க். அக்கம் பக்கம் பார்த்தார்,ஒரு நடுவயது இளைஞன்
வந்து கொண்டிருந்தான்.

   அவனைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கை….
‘ தம்பி…..கொஞ்சம் என்னோட வர்றீகளா… அந்த இடத்திலே ஏதோ தப்பு நடக்கற மாதிரி தெரியுது….நீங்க வந்தீங்கன்னா என்ன ஏதுன்னு பார்த்திடலாம்…..வாங்க தம்பி…..’

   அந்த இளைஞன் நந்தகுமாரை மேலும் கீழுமாகப்பார்த்தான்.ஏதோ ஒரு அருவருக்கத்தக்க பூச்சியைப்
பார்ப்பது போல ,    “சார்……உங்களுக்கு எதுக்கு சார் வீண்வேலை..எங்கேயோ ஏதோ ஒன்னு நடக்குதுன்னா நாம ஏன் சார் நம்ம மூக்கை நுழைக்கணும்……இவ்வளவு வயசாகுது……நீங்க
எதுக்கு அவங்க அந்தரங்கத்திலே தலையிடனும்….உங்க வேலையைப் பார்த்துட்டுப் போய்க்கிட்டே இருங்க சார்….”
என்று முறைத்தவாறு சொல்லி நகன்றான்.

   நந்தகுமாருக்கு ஏன்டா அந்த இளைஞனை
அழைத்தோம் என்றாகி விட்டது. ச்சேய் என்று தம்மையேநொந்து கொண்டார். வேறு யாரையாவது அழைக்கலாமோ என்ற எண்ணம் வந்தது. ஆனால் சுற்றிலும் இங்குமங்கும்
செல்பவர்கள் அவரவர் வேலையில கவனம் கொண்டுஇருந்தனர். யாரையாவது அழைககப் போய் அந்த இளைஞனைப் போல பேசிவிட்டால என்ன செய்வது!

  இப்போது அந்தச் சிறுமியின் முனகும் குரல்
சற்று உரக்கக் கேட்டது. நந்தகுமார் சற்று துணிந்து அந்தச் செடியருகே சென்று,                 ‘ டேய் யார்றா அங்கே….என்ன நடக்குது!’ என்ற
வாறே எட்டிப் பார்த்தார்.  அங்கே நடப்பது கண்டு அதிர்ச்சியானார்.

     ஐம்பது வயதுக்கு மேலே மதிப்பிடத்தக்க ஒருமனிதன் தன் மடியில் ஒரு சிறுமியை அமர்த்திவைத்துஇறுக அணைத்துக் கொண்டிருந்தான். படக்கூடாத இடங்களில் எல்லாம் அந்தச் சிறுமியின் மேனியில்
அவனது கரங்கள் தடவிக் கொண்டிருந்தன.

      வயதுக்கு மீறிய வளர்ச்சி அந்தச் சிறுமியின்
மேனியில் தெரிந்தது.  எல்லாம் ஜங்க் புட்டின் கைங்கர்யம்.அவனது அருவருப்பான செய்கை கண்டு நந்தகுமாருக்குஅதிர்ச்சியாக இருந்தது.
.
    ‘ அடப்பாவி…….பச்ச மண்ணைப் போயி இப்படி
நாசம் பண்றியே……உன் வீட்டிலே பொம்பளப் பிள்ளைகளேஇல்லியாடா……உன் பேத்தி வயசிருக்கும் அதப் போயி….ச்சே…….” என்று கத்திக் கொண்டே,  கையில் கிடைத்த
கல்லை அவன் மீது எறிந்தார்.   இதற்குள் சுதாரித்துக் கொண்ட அந்தக் கயவன்
மண்ணை அள்ளி நந்தகுமார் மீது வீசி எறிந்தான். சிறுமியைவிடுவித்தபடி, நந்தகுமாரை நோக்கி ஓடிவந்தான்.

 “ஏய்….கிழவா…உனக்கென்னடா ஆச்சு……நான்
ஏதாச்சும் பண்றேன்…….உனக்கென்ன உன் வேலையைப்பார்த்துட்டுப் வியா……ஏதாச்சும் சவுண்டு விட்டேஅவ்வளவு தான் …..கழுத்தை அறுத்துருவேன்……”

  கத்தியைக் காட்டி மிரட்டினான்….இதற்குள் அந்தசசிறுமி ஓடி வந்து நந்தகுமாரின் பின்னே ஒட்டிக்கொண்டது. “ஏய்……இங்கே வா……அந்த ஆளுகிட்டே ஏன் போறே…….என்கிட்டே வந்துரு…….”   ” போ……வரமாட்டேன் போ…..பீட்சா வாங்கித்தர்றேன்னு கூட்டிட்டு வந்து இங்கே மடியிலே உட்கார வசசி தப்புத்தப்பா கைய வக்கிறே…..முத்தங் கொடுக்கறே..ச்சே…..த்தூய்….” என்று துப்பினாள் அந்தச் சிறுமி.

  இதற்குள் அந்தத் தடியன் சிறுமியைப் பிடிப்பதற்காகநந்தகுமார்மீதுபாய்ந்தான்.   நந்தகுமார் பலங்கொண்ட மட்டும், ‘ போலீஸ்…..போலீஸ்…….’ என்று கத்தியவாறு தம்மைத் தாக்கவந்ததடியனைத் தடுத்து தம் இரு கைகளாலும் கெட்டியாகப்பிடித்துக் கொண்டார்.  ” ஹெல்ப்…..ஹெல்ப்…..போலீஸ்….போலீஸ்…..”
என்று கத்த, அந்தச் சத்தம் கேட்டுச் சிலர் ஓடி வந்தனர்.  ஆட்கள் வருவது கண்டு நந்தகுமாரின் பிடியில்இருந்தவன் திமிறிக் கொண்டு அவரைக் கீழே தள்ளி விட்டு
ஓடி விட்டான்.   கீழே விழுந்ததில் நந்தகுமாருக்குத் தலையில் அடிபட்டு நினைவிழந்தபடி மயங்கிப்போனார்..

 “ஹேய்….நந்தகுமார்……ஒன்னுமில்லே……சின்னக்
காயம் தான்……துணிச்சலான ஆளுவே நீரு……ஒரு சின்னப்பொண்ணு சீரழியுறதிலே இருந்து காப்பாத்திட்டீரு ஓய்…..”

 .ஏதோ ஒரு குரல்……அது யாரது….ஓ….’   சுந்தரேசன் குரல் போலக் கேட்டது. நந்தகுமார் மெள்ளக் கண்விழித்தார்.. ..மருந்து நெடி வீசுகிறதுஇதென்ன தலையிலே கட்டு…..ஓ….பாண்டேஜ் போட்ருக்காங்க போல…… எனக்கு என்ன நடந்தது…..

  அந்தச் சிறுமி எங்கே..அந்தத் தடியனக்
காணோமே..அவன் எங்கே…..நந்தகுமார் படுக்கையைவிட்டு எழுந்தார். எதிரில் சுந்தரேசன் நின்றிருந்தார்.

   “ரிலாக்ஸ்……நந்தகுமார்….ரிலாக்ஸ்…..டாக்டர்
மருந்து போட்டு கட்டியிருக்காங்க…… அந்தத் தடியனபோலீசிலேபிடிச்சுக்கொடுத்தாச்சு…..போக்சோ சட்டத்திலே கேஸ் பைல்பண்ணியிருக்காங்க…..நல்லவேளை, சம்பவம்நடந்துகிட்ருக்கும் போது நான் வந்தேன்…..நடக்கறத அனுமானிச்சு உடனே போலீசுக்குப் போன் போட்டேன்….பொது
மக்கள் அந்தத் தடியன தப்பவிடாம போலீசு கிட்டே ஒப்படைச்சிட்டாங்க…….

..அப்ப…அந்தக் குழந்த….சிறுமி எங்கே……..?”         ” அவளுக்கும் இப்பசிகிச்சைபண்ணிகிட்ருக்காங்க..
பாத்தா……அந்தக் குழந்தை எங்க வேலைக்காரியோட குழந்தையா இருக்கு…..உடனே அவளையும வரவழைச்சி சிறுமிய அவ கிட்டெஒப்படைச்சிட்டேன்……..இப்ப உங்கள டிஸ்சார்ஜ்பண்ணி கூட்டிக்கிட்டுப் போகலாம்னுட்டாங்க….. உங்க
வீட்டுக்கும் போன் பண்ணி உங்க பையன்கிட்டெ தகவல்சொல்லிட்டேன்…….”

 சுந்தரேசன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு
காவலர் வந்து, “சார்……ஸ்டேசன் வரைக்கும் வந்து ஒருகம்ப்ளைண்ட் எழுதிக் கொடுத்திடுங்க சார்…..மத்ததநாங்க பாத்துக்கறோம்…….” என்றார்.

  இதற்குள் நந்தகுமாரின் பையன் ஓடி வந்தான்”அப்பா…என்னாச்சிப்பா…..உங்களுக்கு…எதுக்குப்பா இந்தவீண் வேலை…இப்பப் பாருங்க மண்டையிலேயும்அடிபட்டு,போலீசுக்கும்  அலைய வேண்டிரயிருக்குமே….எவன்எக்கேடு கெட்டா….நமக்கென்னப்பா……” என்று கேட்க,
சுந்தரேசன தான் அவனை ஆசுவாசப்படுத்தினார்.     தம்பி…..பதறாதிங்க…நாட்டிலெ நாம இந்த
மனநிலையிலே இருக்கறதாலே தான் இங்கே எல்லாஅநியாயமும் தடையில்லாம நடக்குது. உங்கப்பா…இந்தவயசிலேயும் இங்கே நடக்கற அநீதிய, கொடுமையக்கண்ண மூடிப் பாக்காம போயிருந்தா….ஒரு பெண்பிள்ளையோட எதிர்காலமே பாழாப் போயிருக்குமில்லியா..
உங்கப்பா …அப்படியில்லே….தைரியமா தட்டிக் கேட்கப்போயி தான் இந்த அநியாயத்தத் தடுத்திருக்காரு….அந்தப்புள்ளையத் தன் பேத்தியா நினச்சிக் காப்பாத்தி இருக்காரு.
உன்ன மாதிரி இளைஞர்கள் இப்படிப் பாராமுகமாப்போறதாலத் தான் நாடு சீர்குலையுது…..நடக்கற அநீதிய
நம்மால முடிஞ்சமட்டும் எதுத்துட்டாப் போதும்…அப்றம்அந்த நீதியே தன்னையும் தன்னைச் சார்ந்தவங்களையும்
காப்பாத்திரும்….”

 “தாத்தா…..தாத்தா……”என்றவாறே நந்தகுமாரை
நோக்கி அந்தச் சிறுமி ஓடி வந்தது. கூடவே அவளதுதாயும்.   “வாம்மா….அஞ்சல….குழந்தைக்கு இப்பப் பரவாயில்லையா……..”

  சுந்தரேசன் கேட்க, அஞ்சலையோ நந்தகுமாரின்காலைப் பிடித்தபடி கண்ணீர் சிந்தினாள்.     அய்யா…..உங்களாலே தான் எம் பொண்ணு உசிரு பொழச்சது….இல்லே அந்தப்பாவி இவளைச் சீரழிச்சிருப்பான்…..எல்லாம் இவளாலே தான்…..அந்தப் பீட்சா ஆசையிலே தான் இவள ஏமாத்திக் கூட்டிட்டுப் போயி
ருக்கான்……தடிப்பய…. எங்க தெருவிலே சுத்திக்கிட்ருப்பான் அப்பப்ப இவளுக்கு மிட்டாயி, பழம்னு ஏதாவது வாங்கிக்
கொடுப்பான்……அப்பவும் நான் சொல்லியிருக்கேன் ,,,,இந்தமாதிரி கண்டவங்க கொடுக்கறத வாங்கக் கூடாதுன்னு….
ஆனாலும் நான் ஏமாந்துட்டேன் அய்யா…நீங்க தான்தெய்வம் மாதிரி வந்து காப்பாத்திட்டீங்க உங்க பேத்தியககாப்பாத்துற மாதிரி……..இந்த சென்மத்துக்கும் மறக்கமாட்டேன் அய்யா………”

   “அப்ப….. அடுத்த சென்மத்துக்கு மறந்துரு
வியாக்கும்…….” என நந்தகுமார் சிரித்தார்.   நந்தகுமாரின் பையனும் அது கேட்டுச் சிரிக்க,
சுந்தரேசன் அவனோடு சேர்ந்து சிரித்தார்.   அஞ்சலையும் அவள் மகளும் வெட்கப்பட்டு
ஒன்றும் புரியாது நின்றபடி சிரித்தனர்.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

நீ… காதலிக்கிறப் பொண்ணு., டிராபிக் போலீஸ்காரரின் மகள் எப்படி சொல்றே?

தினமும் பச்சை, சிகப்பு, மஞ்சள் கலர் மட்டும் தான் சுடிதார் போட்டுக் கிட்டு வர்றாளே..!

இந்து குமரப்பன், விழுப்புரம்

டாக்டர் :உங்க மாமியாருக்கு மூச்சு திணறல்  அதிகமாயிடுச்சு, மூச்சு விட கஷ்டப்படுறாங்க மேடம்..!

மருமகள் :கஷ்டமான வேலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று அவுங்க கிட்டே சொல்லிடுங்க டாக்டர்..!

இந்து குமரப்பன், விழுப்புரம்.

*”இந்த கோரானா வந்தாலும் வந்தது லிப்ஸ்டிக்கே போட முடியவில்லை….!”* 

*”ஏன் போட்டுக்க வேண்டியது தானே…!”* 

*”போட்டு என்ன பண்றது அதுக்கு மேல மாஸ்க்கை கட்ட வேண்டி இருக்கே….!     *உமா புருஷோத்தமன் ஆதிச்சபுரம் 614717   

கட்சி தலைவர்: “வர தேர்தல்ல எல்லா தொகுதியிலும் நம்ம கட்சி சார்பா வேட்பாளர்களை நிறுத்தி தனித்து போட்டியிடலாம்னு ஆசைப்படுறேன். அதுக்கு என்ன செலவாகும்?”

உதவியாளார்: சும்மா ஆசை படுறதுக்கெல்லாம் ஒன்னும் செலவு பண்ண வேண்டியது இல்ல தலைவரே!

ப்ரணா,பெங்களூரு

“அந்த ஜோசியர் மேல ஏன் தலைவர் கோபமா இருக்காரு?”

“வருங்காலத்துல ‘கொரோனா நிவாரண நிதி ஊழல்ல’ வசமா மாட்டப்போறீங்கன்னு சொன்னாராம்”

——ப்ரணா, பெங்களூரு

” எதிரி நாட்டு மகாராணிக்கு நூல் விட்டீர்களா மன்னா …?”

    ” ஏன் அமைச்சரே ?”

  ” அவன் தங்கள் கழுத்துக்கு மாஞ்சா கயிறு அனுப்பி இருக்கிறான் ….”

சீர்காழி.ஆர்.சீதாராமன்

“அந்த டாக்டர் போலியா எப்படி சொல்றீங்க ?”

   ” குடலிறக்கம் நீங்க தலைகீழா நடக்க சொல்லிட்டாராம் ….”

சீர்காழி.ஆர்.சீதாராமன்.

 ஆளுக்கு பாதியா  சீட்டை பிரிச்சிக்கிட்டும் கட்சிக்குள்ள திரும்பவும் எதுக்குய்யா சண்டை?

 கொசுறு கேட்டு சிலர் அடம்பிடிச்சிகிட்டு இருக்காங்களாம்!

சின்ன சாமி, நத்தம்.

  அந்த சாமியார் புதுசா ரிசர்வ் பேங்க் எல்லாம் திறந்திருக்காரே…!

கூடிய சீக்கிரம் ஜெயிலுக்கு போக “ரிசர்வ்” பண்னிக்கிட்டிருக்கார்னு சொல்லு!

ஏழ்மையிலும் இல்லாதார்க்கு உதவி!

 ஏழ்மையிலும் இல்லாதார்க்கு உதவி!

 தேநீர் விற்கும் இளைஞரின் கருணை உள்ளம்!

சென்னை சோழிங்கநல்லூர், காந்தி நகர், எரிக்கரை பகுதியில் வசித்து வரும் சூரிய கலா என்ற பெண் என்னிடம் உதவி கேட்டிருந்தார்.கணவர் பிரிந்து சென்று விட்டதாகவும் இரண்டு குழந்தைகளுடன் 1200 ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறேன், வீட்டு வேலை செய்து வந்தேன், இப்போது வேலை இல்லை.

ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். ஜாக்கெட் தைக்க நன்கு தெரியும் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே, இந்த பெண்மணியின் பெற்றோரை அறிவேன். சிந்தாதிரிப்பேட்டையில் வசித்தவர்கள்.மிக மிக ஏழ்மையான குடும்பம்.

ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் கண்டிப்பாக இக் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்று முடிவு செய்து என் நண்பர்கள் மற்றும் தொண்டு உள்ளங்கள் நிறைந்த வாட்ஸ்அப் குழுக்களுக்கு இந்த தகவலை பகிர்ந்தேன்.

நான் பகிர்ந்தவுடன் மதுரையில் வசிக்கும் ஒரு அன்பரிடம் இருந்து போன் வந்தது .நீங்கள் குறிப்பிட்ட குடும்பம் உதவுவதற்கான தகுதி படைத்தவர்களா ?என்று அந்த தொலைபேசியில் பேசியவர் கேட்டார்.

உடனே நான் 100% தகுதியான குடும்பம் என்றதும் ,தையல் மிஷின் எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்க சொன்னார்.

நான் சம்பந்தப்பட்ட கடையில் விசாரித்து பதினெட்டாயிரம் என்று தெரிவித்தேன். உடனடியாக, என்னுடைய வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப சொன்னார்.

நான் சொன்னேன், நீங்கள் அந்த தையல் மிஷினை விற்பனை செய்யும் கடைக்கே அனுப்பி விடுங்கள் என்று அந்த விவரத்தை கொடுத்தேன்.

அந்த கடைக்கு தொகையை அனுப்பியிருந்தார்.

நான் ஒரு குட்டி யானையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 45 நாட்களுக்கு தேவையான

என் கண்ணீருக்கு கவிதையின் வடிவம்.. வழிகிறது மழைநீர்..! இதழ் பட்டு தெரிக்கும் மழைநீர்.. ருசிபார்க்க துரத்தும் பட்டாம்பூச்சி..! நூற்கத்தெரிந்த மழை நனையத் துவங்கும் வண்ணக்குடை..! வெற்றுடலுடன் நனைந்து நகராமல் நிற்கிறான் சுவரொட்டியில் கதாநாயகன்..! எங்கே செல்லும் இந்தப்பாதை ஓலை டீக்கடையில் பாடல் மழையால் நிறைந்த சாலை..!   ஆர். ஜவஹர் பிரேம்குமார், பெரியகுளம்.)  

மளிகைப் பொருள்களுடன் அந்த தையல் மிஷினுக்கு உடனடியாக தேவைப்படும் நூல்கள், பட்டன்கள், கொக்கிகளையும் வாங்கிக் கொண்டு சோளிங்கநல்லூர் சென்றேன்.

இவ்வளவு விரைவான உதவியை அவர்கள் எதிர்பார்க்க இல்லை. உடனடியாக அந்த மிஷினில் அப்பெண்மணியை உட்காரச் சொல்லி தைக்கச் சொல்லிவிட்டு, மதுரையிலுள்ள அந்த நண்பருக்கு வீடியோ காலில் தொடர்பு கொண்டு காண்பிக்க முற்பட்டேன்.

வீடியோ காலில் அவரைப் பார்த்ததும் மிரண்டு போனேன். ஒரு நடுத்தர வயது கொண்ட அதிகாரியாக அல்லது தொழிலதிபராக இருப்பார் என்று நினைத்தேன்.

ஆனால் அந்தப் பையனுக்கு சுமார் 25 வயதுதான் இருக்கும். டீ கேனுடன் கூடிய சைக்கிளுடன் நின்றிருந்தான். தெருத்தெருவாக சென்று டீ விற்கும் இளைஞன்.

அவனுக்கு பின்னால் துளாவி பார்த்தேன். அவனுடைய எஜமானர் யாரும் இருக்கிறார்களா! என்று தேடினேன்.

உதவி செய்தது …யார்? என்றேன். நான் தான் என்றான். எனக்கு தூக்கி வாரிப்போட்டது அதன் பிறகுதான் அவனுடைய முழு விவரம் தெரிய வந்தது.

அவன் பெயர் தமிழரசன், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன். வேலை தேடி சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு, பசியின் கொடுமையை அறிந்து மீண்டும் மதுரைக்குச் சென்று சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருவதும், தினந்தோறும் தன் வருமானத்தில் 20, 30 ஏழை மக்களுக்கு உணவுவாங்கிக் கொடுத்து பசிப்பிணி ஆற்றி மகத்தான சேவை புரிந்து வருவதையும் அறிந்தேன்.

அவன் செயல்பாட்டை பாராட்டும் வகையில் சமீபகாலமாக நிறைய பேர் அவனுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்ததுள்ளதாகவும் அந்த உதவிகளையும் இப்படி திருப்பிவிட்டு ஏழை எளிய மக்களுக்கு மேலும் நன்மைகள் செய்து வருவதையும் அறிந்து மெய்சிலிர்த்துப் போனேன்.!

-வெங்கடேசன், உதவும் கைகள்(9840914739) ( புரசைவாக்கம்)

(முகநூல் பகிர்வு)

தோனி…! இந்தியாவின் தோணி…!

தோனி…! இந்தியாவின் தோணி…!

விஷ்வக்சேனன்

சிறந்த கேப்டன் என்றதும் எப்போதும் கங்குலிக்கும் தோனிக்குமான ஒரு போட்டியாக இந்திய சூழலில் விவாதம் நடக்கும். சிலர் அசார், கபில், கவாஸ்கர், பட்டோடி என்று தங்களது விருப்ப போட்டியாளருடன் வருவர். மேலும் சிலர் தங்கள் மேதாவித்தனத்தை காட்ட அஜித் வடேகர், டிராவிட், கும்ளே, பேடி என்று எதாவது ஒரு பெயரை போகிற போக்கில் அடித்துவிட்டு சொல்வார்கள்.

ஒரு கேப்டனை எப்படி மதிப்பிடலாம் என்ற கேள்விக்கு பல பதில்கள் உண்டு, ஆனால் அடிப்படையான ஒரு விஷயம் அவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எத்தனை புயல்களை பார்த்தாய் என்பது பொருட்டல்ல, கப்பலை கரை சேர்த்தாயா இல்லையா என்பதுதான் அடிப்படை விஷயம். அப்படி கரை சேர்க்கத்தான் கேப்டன். இரண்டாவது விஷயம், அவர் ஆடும் காலத்தில் அவரது கேப்டன்சி உலகளவில் எப்படி மதிக்கப்பட்டது, அப்போதிருந்த சிறந்த கேப்டன்கள் வரிசையில் இவர் எந்த வரிசையில் இருந்தார் என்ற மதிப்பீடு.

இந்தியாவில் பத்து டெஸ்ட் வெற்றிக்கு மேல் பெற்றவர்கள் மொத்தமே நாலு கேப்டன்கள்தான் – அசார், கங்குலி, தோனி, கோலி. கவாஸ்கர், பட்டோடி நாற்பதுக்கும் மேல் போட்டிகளில் விளையாடி வெறும் 9 வெற்றிகள், டிராவிட் 8 வெற்றிகள், மற்றவர்கள் இன்னும் மோசம். இதில் அசாரின் 14 டெஸ்ட் வெற்றிகள் எல்லாமே துணைக்கண்டத்தில் அதுவும் உள்ளூரில் பெரும்பகுதி. அவர் காலத்து இந்திய அணியை உள்ளூர் புலி என்றுதான் அழைப்பார்கள், வெளிநாடுகளில் அவ்வளவு மோசமாக விளையாடுவார்கள். ஒருநாள் போட்டிகளில் இதைவிட பலமான அணியாக இருந்தாலும் அதிலும் வெளியூர் ஆட்டங்களில் தகிடதத்தம்தான். சச்சின் தனியாக அணியை தூக்கி சென்றதெல்லாம் இவர் காலத்தில்தான். முக்கியமாக உலகக்கோப்பை போன்ற எந்த பெரிய கோப்பையையும் வென்றதில்லை. அதிகபட்சம் நாலு நாடுகள் கலந்து கொள்ளும் தொடரில் வெற்றிபெற்றிருக்கிறார்கள், ஆனால் அதிலும் சச்சின் பெரிய பங்களிப்பு உண்டு. அசார் ஆடும் காலத்தில் ஹன்சி கிரோனியே, மார்க் டெய்லர், ஸ்டீவ் வாவ், அர்ஜூன ரனதுங்க, வாசிம் அக்ரம் போன்றவர்கள் இவரைவிட சிறந்த கேப்டனாக அறியப்பட்டார்கள்.

கங்குலியின் சிறப்பாக சொல்லப்படுவது அவர் சோர்ந்துக்கிடந்த இந்திய அணியில் புதுரத்தம் பாய்ச்சி ஆக்ரோஷமாக விளையாடும் இயல்பை புகுத்தினார் என்பதும் வெளிநாடுகளில் ஜெயிக்கும் வித்தையை அணிக்கு முறையாக பயிற்றுவித்தார் என்பதும்தான். 90களில் ஆஸ்திரேலியர்களும், சௌத் ஆப்ரிக்கர்களும் ஈவிரக்கமற்ற ஆக்ரோஷத்துடன் கச்சிதமான வெல்லும் மனப்பான்மையுடன் கொண்டுவந்த தொழில்முறை கிரிக்கெட் ஆட்டத்திற்குமுன், மன உறுதியும் தொழில்முறை நேர்த்தியும் இல்லாத இந்தியா போன்ற மற்ற அணிகளின் ஆட்டம் போதவில்லை. அப்படியான ஒரு காலக்கட்டத்தில் கங்குலி தனது ஆக்ரோஷமான கேப்டன்சி மூலம் இந்திய அணியின் சாதுவான முகத்தை மாற்றினார், அதற்கு ஒத்துவரக்கூடிய தீவிர மன உறுதியும் வெல்லும் மனப்பான்மையும் உடைய யுவ்ராஜ், கைஃப், தோனி, சேவாக், ஹர்பஜன், ஜாகிர் என்று பெரிய இளைஞர் கூட்டத்தை தயார் செய்தார். அவர்களுடன் இந்திய அணியின் பேட்டிங் மூவேந்தர்களான சச்சின், கங்குலி, டிராவிட் இனைய, ஒரு வலுவான அணி அமைந்தது, இதோட டெஸ்டில் லட்சுமணன் போன்ற வீரர்கள் கிடைக்க, திரும்பி வந்த கும்ப்ளேவுடன் சேர்ந்து பலமான அணியாக வெளிநாட்டிலும் ஜெயிக்க தொடங்கினர். வழக்கமாக வெளிநாடுகளில் எளிதாக முதல் டெஸ்ட் தோற்கும் கெட்ட வழக்கத்தினை அகற்றி, எப்படியாவது முதல் டெஸ்ட்டை தோற்காமல் ட்ரா செய்தாவது தப்பிவிடுவார்கள், பின் வாய்ப்பிருந்தால் அடுத்த போட்டியில் வெற்றி. அதன்மூலம் இந்திய அணியின் மோசமான கெட்டகனவாக இருந்த வெளிநாட்டு போட்டிகளை கடும்சவாலான சுவாரசியமான போட்டிகளாக மாற்றினார். இவ்வளவு செய்தும் அவர் இரண்டாம் இடத்துடன் திருப்தி பட்டுக்கொண்டார் என்பதுதான் கசப்பான உண்மை.

கங்குலியின் தலையிலான இந்திய அணி டெஸ்ட்டில் தொட்ட அதிகப்படியான உயரம் டெஸ்ட் ரேங்கில் இரண்டாம் இடம். அந்த காலக்கட்டத்தில் போட்டி என்பதே இரண்டாம் இடத்துக்காகத்தான் நடந்தது, அது இந்தியாவா, நியூசிலாந்தா, சௌத் ஆப்ரிக்காவா, இலங்கையா என்று. முதலிடத்தை எல்லோரும் மானசீகமாக ஆஸ்திரேலியாவுக்கு விட்டு கொடுத்துவிட்டார்கள், அவர்களை மீறி யாரும் சிந்திக்கவேயில்லை. ஒண்டே மேட்ச்களிலும் அவர் 2003ல் இரண்டாம் இடத்துடனே திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. பொதுவாகவே கங்குலிக்கும் ஃபைனலுக்கும் ஏழாம் பொருத்தம் என்ற நிலையே இருந்தது, அவரால் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை, எல்லாவற்றிலும் ஃபைனலில் வந்து தோற்றுவிடுவார். நாட்வெஸ்ட் தொடர் போன்றவை விதிவிலக்குகள். ஒருகட்டத்தில் இந்திய அணி ஒன்பது ஃபைனல்களில் தொடர்ச்சியாக தோற்றது. முத்தரப்பு போட்டிகளை விடுங்கள், இருதரப்பு போட்டிகளில்கூட கடைசி போட்டியில் ஜெயித்தால் தொடர் நம் கையில் கிடைக்கும் என்ற சூழல் இருந்தால் அந்த போட்டியைகூட ஃபைனல் என்ற பயத்தில் தோற்றுவிடுவார்கள். அப்படித்தான் 2002/03ல் இந்தியா வந்த இங்கிலாந்து அணியை வெல்ல கடைசி மேட்சை வென்றாக வேண்டிய கட்டத்தில் அந்த மேட்சை பரிதாபமாக தோற்றது அணி. இந்த மேட்சில்தான் ஃப்ளிண்டாஃப் சட்டையை கழற்றி சுற்றியது, அதற்கு பழிவாங்கதான் பின்னர் கங்குலி லார்ட்சில் கழட்டி சுற்றினார். கங்குலியின் காலத்தில் ஸ்டீவ் வாவ், பாண்டிங், ஃப்ளெமிங், கிரெயம் ஸ்மித் போன்றவர்கள் இவரைவிட சிறந்த கேப்டன்களாக அறியப்பட்டனர். இன்சமாம், நாசர் ஹுசைன் போன்றவர்கள் சமமான கேப்டன்களாக கருதப்பட்டனர். ஆடும் காலத்தில் இரண்டாம் இடத்தில் திருப்தியடைந்த ஒரு கேப்டன், சிறந்த கேப்டன்கள் வரிசையிலும் இரண்டாம் இடத்துடன்தான் திருப்தி அடையவேண்டும்.

தோனி தனது கன்னி தொடரில் ஒரு உலக கோப்பையை வெல்லுவதுடன் தனது கேப்டன் ஆட்டத்தை ஆரம்பித்தார். கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் யாரும் முதல் தொடரில் ஒரு உலகக் கோப்பையையோ, சாம்பியன்ஸ் ட்ராபியையோ வென்ற சரித்திரம் இருந்ததில்லை. ஒரு டெஸ்ட் கேப்டனாக தோனி செய்த முக்கியமான செயல் ஆஸ்திரேலிய அணியில் ஒரு தசாப்த ஆதிக்கத்தை முடித்து வைத்தது. 2008, 2010, 2012 என ஆஸ்திரேலியாவை டெஸ்ட்டில் தோற்கடித்து அவர்களது கொடியை இறக்கிவைத்ததில் இவருக்கும் முக்கிய பங்குண்டு. அதன்பின் சிலவருடங்கள் உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியாக இந்தியா தொடர்ந்தது. அதே போல் ஒரு நாள் போட்டிகளிலும் முதலிடம், முத்தாய்ப்பாக 2011 உலகக்கோப்பை. 1983 பின் இந்திய அணிக்கு கோப்பை திரும்ப வந்தது, ஆனால் முதல் முறை போல கறுப்பு குதிரையாக தொடரை தொடங்கி ஆச்சரியபடுத்தி வெல்லவில்லை. 2011 உலக கோப்பை தொடங்கும் போதே இந்திய அணி வெல்லக்கூடிய அணியாக மதிப்பிடப்பட்டு, அதற்கேற்றார்போல ஒவ்வொரு கட்டத்திலும் தனது ஆதிக்கத்தை காட்டி கம்பீரமாக வென்ற தொடர். அதன்பின் ஒரு சரிவு. ட்ராவிட், லட்சுமண், சச்சின், ஜாகிர், ஹர்பஜன், சேவாக், கம்பீர் என்று பழைய ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிரத்தொடங்க அணி முதலிடத்தை விட்டு இறங்குகிறது. அடுத்த அணியை தவான், ரோகித், விராட், அஷ்வின், ஜடேஜா, ரெய்னா, முரளி விஜய், புஜாரா, இஷாந்த், ரகானே போன்றவர்களை கொண்டு கட்டியெழுப்பி சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற பெரிய தொடரை வென்றார். தோனி எப்போதும் இரண்டாம் இடத்துடன் திருப்தி கொண்டதில்லை, கிடைத்த முதலிடத்தையும் தலைக்கு ஏற்றி கொண்டு ஆடியதில்லை. ஒரு நல்ல கனவானாக இந்திய அணிக்கும், கிரிக்கெட் விளையாட்டிற்கும் மதிப்பு சேர்த்திருக்கிறார். தோனியின் காலத்தில் எப்போதும் உலகின் சிறந்த கேப்டனாகவே மதிப்பிடப்பட்டு வந்திருக்கிறார். அவரது தலைமை பண்பு, வழிநடத்தும் திறன், வித்யாசமான ஆட்ட சிந்தனை, களமுடிவெடுக்கும் திறன், முன்னின்று போராடும் குணம் என அவரை பற்றி உலகெங்கிலும் பல அறிஞர்கள் காவியம் பாடாத குறையாக எழுதியிருக்கின்றனர். தோனி ஆடிய காலக்கட்டத்தில் ஆரம்பக்காலத்தில் பாண்டிங் இருந்தார், அதன் பின் கிரெயம் ஸ்மித், ஸ்ட்ராஸ், மைக்கேல் கிளார்க் போன்றோர் இருந்தாலும் தோனி பல வருடங்களாக சிறந்த கேப்டனாக கருதப்பட்டார். கிரெயம் ஸ்மித், ஸ்ட்ராஸ் போன்றோர் டெஸ்ட்களில் திறம்பட வழி நடத்தியிருந்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எந்த பெரிய கோப்பையையும் வெல்லவில்லை என்பது ஒரு பெரிய சறுக்கல். உலகின் பல நாட்டு அணிகளாலும், அதன் கேப்டன்களாலும் தோனி சிறந்த கேப்டனாக மதிக்கப்பட்டது, புகழப்பட்டது எல்லாம் கண்கூடு. கிரிக்கெட் அறிஞர்கள் தோனியை ஸ்டீவ் வாவ், பாண்டிங், கிளைவ லாய்ட் வரிசையில் வைத்து பார்க்கிறார்கள்.

விராட் கோலி இப்போதே தோனியை விடவும் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுவிட்டார். அணியையும் அசைக்க முடியா முதலிடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். ஆனால் ஒரு நாள், மற்றும் டி20 போட்டிகள் கைகூடவில்லை. கங்குலி போல சிறப்பாக விளையாடி தொடரின் ஃபைனலுக்கு சென்ற பின் கோப்பையை கோட்டைவிடுவதை வழக்கமாக்கி கொண்டுவிட்டனர். கோலியின் அணி தோனி தயார் செய்த அணியின் தொடர்ச்சிதான், ஆனாலும் அதை கறாரான ஒரு ஜெயிக்கும் எந்திரமாக மாற்றிய பெருமை கோலிக்குதான் செல்லும். அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது, அதோட சில கோப்பைக்களையும் வெல்லட்டும், ஆடி முடிக்கட்டும், பின் இந்த சிறந்த கேப்டன் போட்டிக்கு இழுக்கலாம்.

கேப்டன்சியில் இந்திய அளவில் தோனியின் உயரத்தை யாரும் தொடவில்லை என்பதுதான் யதார்த்தம். உலக அளவிலும் கேப்டன்சியை பொருத்தவரையில் வாழும் போதே வரலாறானவர் தோனி. வரலாற்றின் சிறந்த கேப்டன்களின் அரியணை வரிசையில் தனது மாறாத புன்சிரிப்புடன் கேப்டன் கூல் என்ற பட்டத்துடன் தோனி அமர்ந்திருப்பார்.

GUN பதில்கள்!

GUN பதில்கள்!

க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் பதில் அளிக்கிறார்

 ரத்தத்தில் ‘ஓ’ பாம்பே ( O Bombay) என்ற ஒரு வகை ரத்தப் பிரிவு இருக்கிறதா?

(எஸ். சண்முகராஜன் ,மதுரை)

ஆமாம்.

‘ஓ’ க்ரூப் ரத்தம் உள்ள ஆணுக்கும், ‘ஓ’ க்ரூப் ரத்தம் உள்ள பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு மிகவும் அரிதாக ஓ.எச் ( OH ) என்ற ரத்த க்ரூப் இருக்கும்.

இந்த வகையான ரத்தத்தைதான் ‘ஓ’ பாம்பே என்று சொல்கிறார்கள் .

இந்த OH ரத்த குரூப் உள்ளவர்கள் விபத்தில் சிக்கும் போது, சாதாரண ‘ஓ’ வகை ரத்தம் கொடுத்தால் அவர்களின் உடல் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

OH ரத்த க்ரூப் உள்ள நோயாளிகளுக்கு அதே OH ரத்த க்ரூப் உள்ளவர்கள் மட்டுமே ரத்தம் கொடுக்க முடியும் .

மும்பையில் இந்த ரத்த குரூப் உள்ளவர்கள் அதிகம்

இருப்பதால்

இதற்கு ‘ஓ பாம்பே’ என்று பெயர் .

 தோனி?
(
கே.வருண், சென்னை)
வெற்றிக்காக போராடும் போது பல சமயங்களில் ஏணியாகவும்
தோணியாகவும் மாறியவர்.


பொதுவாக ஆண்கள் எப்படி இருந்தால் பெண்களுக்குப் பிடிக்கும்?

(வி.பரந்தாமன், பெங்களூரூ)

இ.வா.கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

அப்படியிருந்தால் பிடிக்கும்.

இ.வா. க்கு என்ன அர்த்தம் என்பதை வெற்றிகரமான ஆண்களிடம் கேட்டுப் பாருங்கள்.

இனிமையான வார்த்தைகளைப் பேசுபவர்களாக என்று

சொல்வார்கள்.

நமது மூளைக்கு ‘தலைமைச் செயலகம்’ என்ற செல்லப் பெயர் இருப்பது போல் வேறு ஏதேனும் ஓர் உறுப்புக்கு அது மாதிரியான செல்லப் பெயர் உண்டா?

( எஸ். திவ்யா சந்திரன், சென்னை)

நம் உடம்பில் உள்ள ஒரு உறுப்புக்கு ஸ்வீட் பிரெட் ( Sweet bread) என்று பெயர்.

அந்த உறுப்பு கணையம்.

(Pancreas)

நீண்ட இலை வடிவத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் மிருதுவாக இருக்கும் நமது கணையத்தின் எடை 90 கிராம். நீளம் 15 சென்டிமீட்டர். உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் அதற்கு ஸ்வீட் ப்ரெட் என்று பெயர்.

 சினிமாவில் காட்டுவது போல் போலீசில் பிடிபட்ட தீவிரவாதிகள் சயனைட் விஷம் சாப்பிட்ட அடுத்த விநாடியே இறந்து போவது சாத்தியம்தானா?( எம்.மனோகரன், ஓசூர்)

மனிதனின் உயிரை பறித்து விடும் தன்மை கொண்ட சயனைடு விஷம் பார்ப்பதற்கு வெண்மை நிறத்தில் உப்பு போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அதனுடைய அணுக்கள் படு ஸ்ட்ராங்க்.

கூர்மையான கண்ணாடித் துகள்கள் போல் அதன் அணுக்கள்

இருப்பதால் தொண்டைக்குள் சயனைடு இறங்கும் போதே மெல்லிய இரத்தக் குழாய்களை அறுத்து வயிற்றை ரத்தத்தால் நிரப்பி விடும் தன்மை கொண்டவை.

சயனைடு விஷம் வாயு வடிவத்தில் இருக்கும் போது ஹைட்ரஜன் சயனைடு எனவும் ,உப்பு போன்ற பவுடர் வடிவில் இருக்கும்போது பொட்டாசியம் சயனைடு எனவும் நாமகரணம் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது.

இதை வாயுவாக சுவாசித்தாலும் சரி, பவுடராக உட்கொண்டாலும் சரி, மரணம் என்பது உடம்புக்குள் போகும் சயனைடின் அளவைப் பொறுத்துதான் ஏற்படும்.

சில வினாடிகளில் சயனைடு விஷம் ரத்தத்தில் கலந்து அது மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இதயத் துடிப்பையும் குறிவைத்து ஆக்ஸிஜன் சப்ளையைத் துண்டித்து இறப்பை ஏற்படுத்தும்.

100 முதல் 200 மில்லி கிராம் வரையிலான சயனைடு ஒரு மனிதன் உயிரை எடுக்க போதுமானதாகும்.

சினிமாவில் வில்லன் சாவதாக இருந்தால் சில விநாடிகளிலும் ஹீரோ சாவதாக இருந்தால்

சில நிமிஷங்களிலும் சயனைடு நேரம்

எடுத்துக் கொள்கிறது

ஹீரோ பக்கம் பக்கமாக வசனம் பேச

வேண்டாமா….மனோகரா?

 பெண்கள் யாரும் தங்கம் வாங்குவதில்லை என்று முடிவு எடுத்துவிட்டால் நகை கடைகள் எல்லாம் என்னாகும்? (கற்பனைததான்)

( ரமேஷ்பாபு , கிருஷ்ணகிரி)

கற்பனைதான் என்று நீங்களே பதிலையும் சொல்லிவிட்டு கேள்வியையயும் கேட்டால்

எப்படி ரமேஷ்…..?

கொரோனா ஒழிந்த பிறகு பெரும்பாலான பெண்களின் கழுத்தில் கொரோனா நெக்லஸ்

ஜொலிப்பதை நாம் எல்லோரும் பார்க்கத்தான் போகிறோம்.

யாரும் தங்கம் வாங்குவதாக தெரியவில்லை.

இருந்தாலும் தங்கத்தின் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

( எம். ராஜப்பன், திருவையாறு)

திருவாளர் கொரோனா அவர்கள்தான் காரணம்.

கொரோனாவின் தாக்கத்தால்

உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு மூச்சு திணறி வருகிறது.

உலகில் உள்ள அனைத்து பண முதலீட்டாளர்களும் பங்குச் சந்தையில்

பணத்தை போட பயந்து போய் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அப்புறம் விலை ஏறாமல் என்ன செய்யும்?

இதனால் பெரிய அளவில் லாபம் அடைபவர்கள் நகைக்கடை அதிபர்கள்தான்.

நான்கு மாதங்களுக்கு முன்பு பவுன் 33000 ரூபாய்க்கு விற்ற தங்கம் இப்போது 43000 ரூபாய்.

நகைகளை விற்காமலேயே பவுனுக்கு 10000 ரூபாய் லாபம்.

ஒவ்வொரு நகைக் கடை அதிபரும் இப்போது 64 பற்களைக்

காட்டிச் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 எதிர்காலத்தில் வரப்போகும் நோய்களில் விபரீதமானதாக எது இருக்கும்?

( எல். மாணிக்கவாசகம், ஓரிக்கை,காஞ்சிபுரம்)

மனிதனை அதிரவைக்கும் நோய்களில் ஒன்று அல்சீமர் (Alzheimer) எனப்படும் நினைவுகளைத் தொலைக்கும் நோய்.

மனிதனின் தலைமைச் செயலகமான மூளையை குறி வைத்துத் தாக்கும் நோய்களில் இது முதல் இடத்தைப் பெறுகிறது.

அலியோஸ் அல்சீமர் என்பவர் 1906 ஆம் ஆண்டு இந்த நோயை கண்டு பிடித்தார். எனவே அவர் பெயரிலேயே இந்த நோய் அல்சீமர் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் ஒரு மனிதனுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதே கடினமான காரியமாக இருக்கும்.

பொதுவாக இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தாக்கும் .கொஞ்சம் ஏமாந்தால் இளைஞர்களின் மேலும் பாய்ந்து பதம் பார்த்துவிடும்.

தற்போது உலகெங்கும் 4 கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு ,மனைவி குழந்தைகளின் முகங்களையும், அவர்களைப் பற்றிய நினைவுகளையும் , தங்கள் வாழ்க்கையில் நடந்த எல்லா விதமான சம்பவங்களையும் மறந்து விட்டு

தீவு ஒன்றில் மாட்டிக் கொண்டவர்கள் போல் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

இந்த அல்சீமர் நோயை குணப்படுத்தும் வல்லமை எந்த மருந்துக்கும் இல்லை.

இந்த நோய்க்கான காரணம் மனிதர்களின் பரபரப்பான வாழ்க்கைதான் என்கிறார் மேட்டேஜ் ஆரேஸிக் என்னும் அல்சீமர் ஆராய்ச்சியாளர்.

2050 ம் ஆண்டில் மனிதர்களின் வாழ்க்கை இன்னமும் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும்.

அப்போது உலகம் முழுவதும் 100 பேரில் ஒருவர்க்கு இந்த அல்சீமர் நோய் இருக்கும்.

கவலை வேண்டாம்.

அந்த ஒருவரில் நீங்களோ அல்லது உங்கள் வாரிசுகளோ யாரும் இருக்க மாட்டீர்கள் என்பது நிச்சயம்.

கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டதா…அல்லது உடல் சம்பந்தப்பட்டதா?

(பி.சர்வோத்தமன்,குற்றாலம்)

பெண் கெடும்போது உடல்.

ஆண் கெடும்போது மட்டும்

மனம்.

பஞ்சாயத்து முடிஞ்சுது…. வீட்டுக்கு போங்க சர்வோத்தமன்..

நல்ல பழக்கம் என்பது எங்கிருந்து எப்படி ஆரம்பிக்க வேண்டும்?
(
எஸ். கனகராஜ், அரவக்குறிச்சி)

காலையில் படுக்கையை விட்டு எழுந்த உடனேயே போர்வையை ஒழுங்காக மடித்து வைப்பதிலிருந்து

ஸார்…நான் பலமுறை இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டேன். இந்த தடவையாவது பதில் சொல்லுங்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை கடலில் இருந்து வெளியே எடுத்து விட்டார்களா இல்லையா ?

( ப.நிதிஷ்குமார், சிங்கம் புணரி)

இல்லை…..நிதிஷ்.

கனடாவில் இருந்து தென்கிழக்கு திசையில் 329 மைல் தூரத்தில்

கடலில் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடந்த டைட்டானிக் கப்பலை வெளியே எடுப்பது சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு வந்த ஆய்வுக் குழு, அதற்குப் பிறகு அந்த டைட்டானிக் கப்பலை கடலிலேயே நினைவுச் சின்னமாய் வைத்து பாதுகாக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

ஆனால்..கடல் நீரில் பல வகை உப்புகள் இருக்கின்ற காரணத்தால் டைட்டானிக் கப்பலின் இரும்பு பகுதிகளை அது கத்தி கொண்டு அறுப்பது போல் அறுத்துக்கொண்டு இருந்தது.மேலும்….அந்த உப்பைக் காட்டிலும் கடல் நீரில் இருந்த 27 வகையான அபாயகரமான பாக்டீரியாக்கள் வேகமாய் கப்பலை தின்று வந்தது. எனவே கப்பலை வெளியே எடுப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள்.கப்பலையே கபளீகரம் செய்யும் இந்த வகை பாக்டீரியாக்கள் இதுவரை மருத்துவ உலகம் பார்த்திராத ஒன்று. இந்த பாக்டீரியாக்களுக்கு விஞ்ஞானிகள் ஹாலோமோனஸ் டைட்டானிகே ( Halomonas Titanicae) என்று இப்போது பெயரிட்டுள்ளார்கள்.

இனி சில வருடங்களுக்கு டைட்டானிக் கப்பலை ஆராய்ச்சி செய்ய யாரும் அதன் அருகே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால்…..டைட்டானிக் கப்பலை உப்பு ஒரு பக்கமும் பாக்டீரியாக்கள் ஒரு பக்கமும் அரித்துக் கொண்டிருப்பதால் அதில் இருந்து உதிரும் இரும்புத்தூளும் ,கடலில் உள்ள உப்பும் கலந்து சேர்ந்து இறுகி மிக மெலிதான பிளேடு போன்ற கூர்மையான பாறைகளாய் மாறி வருகிறது.

இதற்கு ஊசிப் பாறைகள் என்று பெயர்.

இந்த ஊசி பாறைகள் தண்ணீருக்குள் இருக்கும் போது மனித பார்வைக்கு சரியாகப் புலப்படாத காரணத்தால் நீந்தி செல்லும் மனிதர்களின் உடம்புகளை விநாடிக்கும்..குறைவான நேரத்தில் அது இரண்டு துண்டுகளாக அறுத்து விடும்.இந்த ஊசிப்பாறைகள் முற்றிலுமாக அழிய முப்பது ஆண்டுகள் ஆகும் என்பதால்

அந்த கடல் பகுதியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பல் இனிமேல் நம்

நினைவில் மட்டுமே இருக்கும்.

ராமர் கோவில் பற்றி ?

(ஏ.பழனியப்பன், ராஜபாளையம் )

கோவையில் இருக்கும் கோவில்களில்

ராம்நகரில் இருக்கும் ராமர் கோவில் ரொம்பவும் பிரசித்திபெற்ற ஒன்று.

எனக்கு மிகவும் பிடித்த கோவில்.

ஒவ்வொரு வருடமும் ராமநவமி அன்று நடைபெறுகிறபூஜைகள் அற்புதமாக இருக்கும்.

நீங்களும் ஒருமுறை அவசியம் வந்து தரிசிக்க வேண்டிய கோயில். அப்புறம்……

ராஜபாளையத்தில் நல்ல மழையா பழனியப்பன்?

எந்த ஒரு கேள்வியைக் கேட்டாலும் அசத்தலாய் பதில் சொல்லும் நீங்கள் படித்து அசந்து போன கேள்வி பதில் ஏதாவது உண்டா?

( ஹென்றி டேனியல், பணகுடி)

சாவி ஸாரின் கேள்வி பதில்கள் எப்போதுமே அசத்தலாக இருக்கும்.

உதாரணத்திற்கு ……

கேள்வி.

ஆடு சைவமா….அசைவமா?

பதில்.

அது உயிரோடு இருக்கும் போது சைவம்.

உயிரை விட்டதும்

அசைவம்.

சாம்பிராணி, மடச் சாம்பிராணி …என்ன வித்தியாசம் ?

(திருப்பூர் எஸ்.ரவிச்சந்திரன்,திருப்பூர்)

முதலில் சாம்பிராணியைப் பார்ப்போம்.

ஃபிராங்கின்சென்ஸ் (Frankincense) என்ற மரத்திலிருந்து வழியும் பால் போன்ற பசையை சரியான முறையில் பதப்படுத்தி கட்டிகளாக மாற்றினால் அதுவே சாம்பிராணி ஆகும்.

உண்மையில் சாம்பிராணி என்பது மிக முக்கியமான அதிக நன்மைகள் மிகுந்த ஒரு மருத்துவப் பொருள் .இதனை ஆங்கிலத்தில் ‘ஃபிராங்கின்சென்ஸ் ‘ என்றே அழைக்கிறார்கள். இதன் புகையை சுவாசித்தால் நுரையீரல்களில் உள்ள

நச்சுகள் மாயமாக மறையும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது.

சாம்பிராணி மரமானது ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் வளர்கிறது .

இந்தியாவில் இம்மரம் பீகார் அஸ்ஸாம் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் சேலம் அருகிலுள்ள சேர்வராயன் மலைப் பகுதியில் செழிப்பாக வளர்கிறது.

சாம்பிராணியில் அனேக ரசாயன சங்கதிகள் இருப்பதால் நம் முன்னோர்கள் எண்ணெய் குளியலுக்கு பிறகு சாம்பிராணிப் புகை போட்டு தலைக்கேசத்தை

ஆற வைப்பார்கள். குழந்தை ஈன்ற இளம் தாய்களுக்கு அரு மருந்து இந்த சாம்பிராணி.

நச்சு கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட

ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை கொண்ட இந்த சாம்பிராணி பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாப்பதை அலோபதி மருத்துவமும்

ஒப்புக் கொண்டுள்ளது.

இனி….

மடச் சாம்பிராணி என்ன என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக மடம், கோவில், போன்ற

இடங்களில் கூட்டம் சேரும்போது காற்றில் இருக்கிற கிருமிகளை

அழிப்பதற்கு ஒரு பெரிய சாம்பிராணி கட்டியை வைத்திருப்பார்கள்.

இந்த சாம்பிராணி கட்டி சில நாட்களில் கறுத்து நிறம் மாறி எதற்கும் உதவாமல்

போய் விடும். இப்படி உதவாமல் போகும் சாம்பிராணிக்கு பெயர்தான் மடச் சாம்பிராணி.

இந்த கொரோனா காலத்தில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு இந்தப் பெயர் மிகவும்

பொருத்தம்.

 ஸார்….பெருங்காயம் நமக்கு எப்படி கிடைக்கிறது?

மணக்காடு சி.தெ.ரஜினிஅருள்

பெருங்காயம் ஃபெருலா அசஃபொட்டிடா ( Ferula asafoetida ) என்ற செடியின் வேர், தண்டிலிருந்து சுரக்கும் ஒருவித பசையிலிருந்து கிடைக்கிறது .

இயற்கையாக கிடைக்கும் பெருங்காயம் துர்நாற்றம் கொண்டதாக இருப்பதால் இதை ஆரம்ப காலத்தில் ‘சைத்தானின் கழிவு’ என்று பெயரிட்டு அழைத்தார்கள்.

ஆனால்

இது பல வைரஸ்களை அழிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது என்று

ஒரு காலத்தில் நிரூபணம் ஆனதும் ‘கடவுளின் அமிர்தம் ‘ என்று கொண்டாடப்பட்டது.

இது பெர்சியாவை பிறப்பிடமாகக் கொண்டது என்றாலும் துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது.

பெருங்காயச் செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும் வேரையும் கீறிவிட்டு அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால்

அதுதான் பெருங்காயம்.

இதில் வெள்ளை பெருங்காயம் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.

கலப்படம் இல்லாத பெருங்காயம் எளிதில் தீப்பற்றிக் கொண்டு எரியும்

தன்மை கொண்டது. பெருங்காய வாசனை காற்றில் கரையக் கூடியது என்பதால்

அதை திறந்து வைக்கக்கூடாது. திறந்து வைத்தால் அது வெறும்

பெருங்காய டப்பா.

என்ன ரஜினி .பெருங்காயத்தைப் பற்றி இந்த தகவல் போதுமா….இன்னும் கொஞ்சம்

வேணுமா?கீழே

பெருங்காய செடி.

சார், உடலில் மச்சம் தோன்ற காரணம் ஏதாவது உண்டா….? மச்சம் அதிர்ஷ்டமானதா?

( நம்பிக்கைராஜ் ,திருவண்ணாமலை)

மனிதனின் தோல் மற்ற பாலூட்டி மிருகங்களின்

தோலைக் காட்டிலும் மென்மையானது.

கருவில் இருக்கும் போதே தோலின் அடிப்பகுதியில்

லட்சக்கணக்கில் நுண்ணிய ரத்தக் குழாய்கள்

பின்னிப் பிணைந்து உருவாகும்.

பிரசவ காலம் நெருங்கும் போது குழந்தை உடம்பின் மிருதுவான தோல் பகுதி ரத்தக் குழாய்களால் அழுத்தத்திற்கும்,

நசுங்குதல்களுக்கும் உட்பட்டு தோலின் மேற்பகுதியில் சிறிய புடைப்புகள்

ஏற்பட்டு மெலனின் ( Melanin) என்கிற ரசாயனத்தோடு வினை புரிந்து

மச்சங்களாக (moles )மாறுகின்றன.

மச்சங்கள் திர்ஷ்டமானவை…..ஜோதிடர்களுக்கு மட்டும்.

 பதில் சொல்ல முடியாத கேள்வி,கேள்வியே கேட்காமல் கிடைக்கும் பதில்எது ஸார்…? ( குழப்பி விட்டேனா?)( எல்.தீர்த்தராமன், அரசரடி, மதுரை)

பிறப்பு ஒரு கேள்விக் குறி.இதற்கு யாரும்

பதில் சொல்ல முடியாது. மரணம்தான் அதற்கு பதில்.ஆனால் மரணத்திடம் யாரும்

கேள்வி கேட்க முடியாது.(ரொம்பவும் குழப்பிவிட்டேனா?)

கந்தர் சஷ்டி கவசம் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?

(எஸ் ஜெயவேல், சென்னை)

நாத்திகம் பேசுபவர்களே அதை ஆராய்ச்சி

செய்யும் அளவுக்கு

விரும்பிப் படித்திருக்கும்

போது நான் சொல்ல

என்ன இருக்கிறது?

 ஒருவர் மேஜர் ஆவதற்கு அது என்ன குறிப்பாக18 வயதை நிர்ணயம் செய்து இருக்கிறார்கள்?( எம். முருகானந்தம், கோவை)

நமது உடம்பின் தலைமை செயலகம் மூளை என்பதுஉங்களுக்குத் தெரியும்.

மூளையின் வளர்ச்சி வயதுக்கு வயது மாறுபடும். முதல் 5 வயது வரை ஒரு விதமாகவும் ,அதற்குப் பிறகு நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறியும் திறமையோடும் வளரும் .

அதனால்தான் ஒரு குழந்தையின் பள்ளிக் கல்விஐந்தாவது வயதில் முதல் வகுப்போடு ஆரம்பம் ஆகிறது .

5 வயதுக்குப் பிறகு மூளையின் வளர்ச்சி படிப்படியாக ,அதிகரித்து அதன் 18 வது வயதுடன் நின்று போய்விடுகிறது.

அதாவது மூளை முழுவளர்ச்சி பெற்று விடுகிறது.

இதனால் தான் ஒரு நபருக்கு 18 வயதானதும்,

மேஜர் ஆகி விட்டதாக சொல்கிறார்கள்.

நமது மூளையில் 100 பில்லியனுக்கும்,

மேற்பட்ட நியூரான் செல்கள் உள்ளன.

ஒரு பில்லியன் என்பது 100 கோடி .

ஒரு மூளையின் ஆயுள் 250 வருடம் வரை உள்ளது.ஆனாலும்ஒரு மனிதன் தன் ஆரோக்கியத்தை எவ்விதம் பாதுகாக்கிறான்

என்பதைப் பொறுத்தே மூளையின் வாழ்நாள்

அமைகிறது.

18 வயதுக்குப் பிறகு மூளையில் புது செல்கள்

உற்பத்தியாவதில்லை. அதற்கு பதிலாக தினசரி ஆயிரம் செல்கள் அழியும். இப்படி அழிவதால் மூளையின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.மூளையில் புதிதாக செல்கள் தோன்றும் வாய்ப்பு இல்லாததால் தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

முடி கொட்டுவதை தடுக்க நீங்களாவது நல்ல யோசனை சொல்லுங்கள் ஸார்?

( ப.தெய்வநாயகம் ,திருவையாறு)

முதலில் முடி ஏன் கொட்டுகிறது என்று பார்ப்போம்.

ஒரு மனிதனின் வாழ்நாளில் 25 வயது வரை முடி கொட்டி, கொட்டி வளரும்.

முடி வளர்ச்சியை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். அவை…..

அனாஜென். ( Anagen)

கேட்டாஜென், (Catagen)

டெலோஜென். (Telogen)

அனாஜென் என்பது ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில்

வளரும் முடி.10 வயது வரை முடி செழிப்பாக வளரும்.

அடுத்ததாக கேட்டாஜென். இந்த நிலையில் புதிதாக முடி வளரவும் செய்யாது.அதேபோல்

கொட்டவும் செய்யாது.

இதுதான் நீண்டகாலம் நீடிக்கும். ( அதாவது கல்யாணம் ஆகிற வரைக்கும்)

மூன்றாவது டெலோஜென். இதுதான் இலையுதிர் காலம். முடி கொஞ்சம் கொஞ்சமாக கொட்ட ஆரம்பிக்கும். ஆண்கள் ஆண்ட்ரோஜன் ஜாதி என்பதால் வேகமாக கொட்டி

வழுக்கை என்ற பெயரை வாங்கிக் கொடுத்துவிடும்.

பெண்கள் ஈஸ்ட்ரோஜன் ஜாதி என்பதால் வழுக்கைக்கு வாய்தா வாங்கி வாங்கியே தப்பித்துக் கொள்வார்கள்.

இரும்பு, கால்சியம்,புரோட்டீன் இந்த மூன்றும் கலந்த சமச்சீரான உணவை தினமும் எடுத்துக் கொண்டால் முடி கொட்டுவதை தள்ளிப்போடலாம். ஆனால்…….

தாத்தாவின் தாத்தா, தாத்தா, அப்பா

இவர்களுக்கு பரம்பரை சொத்தானவழுக்கை இருந்தால்….ஆண்கள் அதிலிருந்து தப்பிக்கவே

முடியாது.

 கண்கள் இத்தனை விநாடிகளுக்கு ஒரு முறைதான் சிமிட்டப்பட வேண்டும் என்கிற உயிரியல் விதி ஏதாவது இருக்கிறதா ஸார் ?

( எம். வி. நீலகண்டன், சென்னை)

நிச்சயமாக…..நீலகண்டன்.

கண்களில் எந்த கோளாறும் இல்லாமல்,

எதிர் வீட்டில் ஒரு அழகான பெண்ணும் இல்லாமல் இருந்தால் ஆறு விநாடிகளுக்கு ஒரு முறைகண் சிமிட்டப்பட வேண்டும்.

இது தான் கண்கள் ஆரோக்கியமாய் இருக்கிறதுஎன்பதற்கான அடையாளம்.


ராத்திரி 12 மணிக்கு நீங்கள் கதை எழுதிக்கொண்டு இருக்கும்போது ஒரு பெண்ணின் கொலுசுச் சத்தம் கேட்டால் என்னசெய்வீர்கள்?( வி.கிருத்திகா, கோவை)

உடனே எழுந்து போய் “இப்படியெல்லாம் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது.

கொலுசுகளை கழற்றிவிட்டு வேண்டுமானால் நட”

என்று சொல்லிவிட்டு வந்து

தொடர்ந்து எழுத ஆரம்பித்து விடுவேன்.

கொலுசு சத்தத்துக்கெல்லாம் பயப்பட்டா க்ரைம் நாவல் எழுத முடியுமா கிருத்திகா?

இதிகாச நட்புகளில் எது டாப்?

( ரா.நிரஞ்சன், ஸ்ரீபெரும்புதூர்)

கர்ணன்,துரியோதனன்….நட்பு.

எடுக்கவோ….?

கோர்க்கவோ….?

துரியோதனன் கேட்ட அந்த கேள்வியில் உள்ள நட்பின் ஆழத்தை இன்னமும் அளந்து கொண்டிருக்கிறேன்.

பேப்பரும்,பேனாவும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால்…..?
(
மு.மதிவாணன் ,அரூர்)

நீங்கள் தப்பிக்கவே முடியாது. அப்போதும் பனையோலைகளில் எழுத்தாணி கொண்டு க்ரைம் நாவல்கள் எழுதியிருப்பேன்

ஆப்ஷன்

ஆப்ஷன்   

கடலூர் சார்லி.

டிவியில் நேரடி ஒளிபரப்பு. காம்பியர் மேனகா,

ஜோதியைக் கேட்டாள். “மேடம், சொல்லுங்க. நீங்களும் உங்க பொண்ணும் ரொம்ப க்ளோசா !”

“ஆமாம் “

” அவங்க பர்சனல் எல்லாம் கூட உங்களுக்கு தெரியுமா?”

“நிச்சயமா “

ஏன்னா, போட்டியே அதைப் பத்தி தான்.

அப்புறம். போட்டியின் விதி முறைகளை

திரும்பவும் நினைவு படுத்தறேன். உங்ககிட்ட இப்ப கேக்கப்போற அத்தனை கேள்விகளையும் உங்க பொண்ணு வித்யா கிட்ட ஏற்கனவேபெர்சனலா கேட்டு

ரெக்கார்ட் பண்ணி வெச்சிருக்கோம். உங்க விடை தப்பா இருந்தா, உங்க பொண்ணு சொன்ன சரியான

பதிலை உங்களுக்கு சொல்லி உங்க பொண்ணை

காட்டிக்கொடுக்க மாட்டோம். உங்க விடையும் பொண்ணு

விடையும் மேட்ச் ஆனால் தான் நீங்க ரெண்டு பேரும்

க்ளோஸ்னு அர்த்தம். உங்களுக்கு ஒரு லட்சம்

பரிசு. ஓகே வா.”

“ஓகே “

” சரி. உங்களுக்கான முதல் கேள்வி. உங்கள் மகள்

வித்யா யாரை லவ் பண்றா? ஆப்ஷன் A:ஸ்ரீதர்

ஆப்ஷன் B:மகேஷ். ஆப்ஷன் C:சிவா ஆப்ஷன் D:

யாரும் இல்லை.

“ஆப்ஷன் A.ஸ்ரீதர். “

“மிகச் சரியான விடை. வாழ்த்துக்கள். ம்.. ஓகே.

உங்களுக்கான அடுத்த கேள்வி… வித்யா யார் கூட சமீபத்துல டேட்டிங் போனா?

ஆப்ஷன் A:ஸ்ரீதர். B:மகேஷ் C:சிவா

D:புது ஃபிரண்டு ரூபன். “

இதற்கு ஜோதி பதில் சொன்னாள், “ஆப்ஷன் D.ரூபன் “

” ஆர் யூ ஷ்யூர்? “

“எஸ் “

” ஜோதி மேடம்,உங்க பொண்ணு வித்யாவின் பதிலோட உங்க பதில் மேட்ச் ஆகுதான்னு இப்ப போர்டை பார்க்கலாமா?

காம்பியர், போர்டில் விடையை சரி பார்க்க,

போர்டு, ” ரூபன் “சரியான விடை என்று காட்டியது. “கரெக்ட் ஆன்சஅஅஅர் ” என்று கத்திய காம்பியர்,

அந்தக் கடைசி கேள்வியைக் கேட்டாள்.

“வித்யாவோட குடும்ப வாழ்க்கை எப்படி அமையும்?

ஆப்ஷன் A:ஸ்ரீதரோட ஓடிப்போய்.

ஆப்ஷன் B: ரிஜிஸ்டர் மேரேஜ்.

ஆப்ஷன் C:அப்பா அம்மா பார்க்கிற மாப்பிள்ளையோட திருமணம்.

ஆப்ஷன் D:மேலே சொன்ன எதுவும் இல்லை.

இதற்கு ஜோதி பதில் சொன்னாள், “ஆப்ஷன் டி தான் சரி.

என் பொண்ணு வித்யா யாரையும் கல்யாணம்

பண்ணிக்க மாட்டா. எதிர் காலத்துல ஒரு அமெரிக்க

பையனுடன், ” லிவிங் டு கெதர் ” பிளான்ல

இருக்கா. “ஜோதி இவ்வாறு பதில் சொன்னதும்,

“வாவ் “மிகச் சரியான விடை “என்று கத்திய

காம்பியர், “ஒரு லட்சத்துக்கான காசோலை

உங்களுக்கு ” என்று அறிவித்தாள். காசோலையுடன்

ஜோதி வீட்டுக்கு ஆட்டோவில் சென்று இறங்கியபோது வாசலிலேயே இருந்த வித்யா காச் மூச்

என்று கத்தினாள். என்னைப் பத்தி மீடியாமூலமா

என் பாய் பிரண்ட்ஸ் எல்லாருக்கும்

போட்டுக்குடுத்து டீவில ஒரு லட்சம் வாங்கிட்ட இல்லே.

அதே டீவில அடுத்தப் போட்டி “அப்பா… மகள் “

நீ அப்பாவை எப்படி வளைச்சுப் போட்டே, எப்படி கார்னர்

பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேங்கறதை எல்லாம்

கழுவி கழுவி ஊத்தி ரெண்டு லட்சம் பரிசோட வரேன்.

“ஏய்…. ஏய்… நில்லுடி “என்ற அம்மாவைப்

பொருட்படுத்தாமல் வித்யா, அதே ஆட்டோவில் ஏறி

விரைந்தாள்.

கவிதைச்சாரல்

கவிதைச்சாரல்!
1.
காசுபணம் தொலைத்தார்கள்
பண்ட பாத்திரங்கள் தொலைத்தார்கள்
பொன்பொருள் தொலைத்தார்கள்
சொத்து சுகங்களை தொலைத்தார்கள்
பிள்ளைகளை தொலைத்தார்கள்
சில பெரியவர்கள் தொலைந்திட
பெற்றோரைத் தொலைப்பதோ
வாடிக்கையானது.

தொடர்ந்து…. 
தன்மானத்தையும் சுயகவுரவத்தையும் 
உரிமைகளையும் தொலைக்கலாயினர்
அனைத்தையும் 
தொலைக்க முற்பட்ட மனிதர்கள்
இயற்கை வளங்களையும்
வனங்களையும் நதிகளையும் 
கனிம வளங்களையும் 
தொலைத்ததற்கா வருத்தப் போகிறார்கள் 
இந்த மதி கெட்ட மனிதர்கள்.

2.
எனக்கும் உனக்கும் இருந்ததில்லை 
ஒருபோதும் இடைவெளி.
உண்மை நிலையறிய உன் 

நினைவிழைகளை பின்னோக்கித் தள்ளு
அதனால் தவறொன்றுமில்லை.

நட்பெனும் புள்ளியில் பூத்தது 

நமது ஆரம்பம்.
அனுமதி மறுக்கப்பட்ட
நாளொன்றினை உறிஞ்சி
நீயே உருவாக்கி கொண்டாய்
உனக்கான விலகல் வட்டங்களை.

சுயநலக் கோப்பையைகளை
கவிழ்த்து விடு
நமக்குள் இல்லை எப்போதும் விரிசல்.
விரிசல் விழுமென்ற கற்பனையில் 

உன்னை வலிய திணித்துக் கொண்டு
அன்புப் பதியனிட்ட உன் பிறப்பின் 

அடையாளங்களை நிரப்பாமலே போகிறாய்.


கவிஞர்.பாரியன்பன் நாகராஜன்
குடியாத்தம் – 632602  பேச: 9443139353

பாய்ந்தோடும் நதி நீர்
இழுத்து செல்ல முடியவில்லை
தன்னில் விழுந்த
நிலவின் பிம்பம்.

 அலமாரி திறக்கையில்
சின்ன கிரீச் சத்தம்
கதவு செய்வது…
பாப்பாவுக்கு கேட்கும்
தன் பள்ளிச் சீருடையின்
கேவலாக…
துடுப்பதி வெங்கண்ணா

வலியே வாழ்க்கை

ஏணிகளைக் காணத

எனக்கு என்றும் வாழ்க்கை 

ஒரு பாம்புக்கரம்.

மலைப் பயணத்தில்

ஏற்றம் கடினம் இறக்கம் சுலபம்

முன்னதாகவே முடிவு.

துள்ளிக் குதித்தேறினாலும்

இறங்குவது நிச்சயம்

இது சருக்கல் விளையாட்டு.

(வெ.ஹேமந்த் குமார், ஈரோடு)

கொலுசும், பாவாடையும் 

மிணுமிணுக்குது 

சிணுங்கிற வயதில் 

அவளுக்கு திருவிழா 

அது !எனக்கு 

இவள்தான் 

திருவிழா 

தேர் வீதி வீதியாக செல்லும் 

இவள் செல்லும் வீதி தான் 

தேர் எனக்கு 

இதயக் கூட்டில் விழுந்தது 

ஒற்றைப் பூ 

தேரில் இருந்த பூவா ?

இவள்

தலையிலிருந்த பூவா ?

தெரியவில்லை 

முகர்ந்த பின் தெரிந்தது 

தேரில் 

இருந்தப் பூ 

தேவதையின் 

கூந்தலில் பட்டு 

என் இதயக் கூட்டில் விழுந்தது 

நொறுங்கியது 

என் இதயக் கூடு

அவள் முகத்தில் 

ரெண்டு விண்மீன்கள்   

சிமிட்டுக் கொண்டிருக்கிறது

என் சிமிட்டலை நோக்கவா ?

ஏதோ சுவாசிக்கிறாள் 

தெரியவில்லை 

காற்றையா ?

காதலையா ? 

இல்ல என்னையவா ? 

தங்கட்டிசுழல்கிறது 

பூமிப் போல 

பார்க்கிறேன் 

அவளாலபூமி 

சுழல்வதை 

பூமியிலிருந்து

அவள்

மொழி தெரியவில்லை 

இனிக்கிறது 

நாவல் பழத் தோலுக்கு 

ஓர் அதிசயம்

பௌர்ணமியில்

இரு பிறைகள்  

பிறைகளின் மையத்தில் 

ஓர் பொட்டு 

மறைத்துவிட்டாள்

ரவிக்கையால் !

கல்லால் செதுக்கியமேனி 

சிற்பியின் உளி தவறியது 

அதில் ஓர்பள்ளம் 

சரிக்கினேன் 

நானும் !

நடை !

மடை கட்டியது 

மௌன மொழி

கொலுசால் !

நான் மயங்கியது 

அங்கத்துக்குமில்ல

அழகுக்குமில்ல

வெள்ளி சத்தத்திற்க்கே ! 

கனவில் வீதியில் 

நிற்கிறேன் 

அவள் வருகைக்கு 

நினைவில் …..

            நல். கதிரேசன்

வாழ்க்கை

———————-

மூக்குக் கண்ணாடியை

துடைத்துவிட்டு

அணிந்த போது –

எங்கிருந்தோ பறந்து வந்த

ரெண்டு சிட்டுக்குருவிகள்

என் வீட்டு ஜன்னலில்

அமர்ந்தன….

கீச்ச்…கீச்ச்…குரலில்

அவை ரெண்டும்

ஏதோதோ சங்கதிகள்

பேசுவதும்-கொஞ்சுவதும்

பறப்பதுமாய் இருந்தன….

இந்த

சின்னக் குருவிகளுள்

ஆண்டவன்

எவ்வளவு பெரிய

உற்சாகத்தை

வைத்து இருக்கிறான்…?

வாழ்க்கை

முடிந்து போனது’_என

நினைக்கும்

தருணங்களில் எல்லாம்…

ஏதோ ஒரு வகையில்

இயற்கை என்னை

வாழ வைக்கிறது…!

எல்.இரவி  செ.புதூர்.612203.  செல்.9952720995.

விவாகரத்து பெற்ற பெண்ணைப்

பார்த்து பரிதாபத்தை தூவுகிறார்கள் உறவினர்கள்.

தொழிலில் தோல்வியடைந்தவனை

இரக்கத்தோடு விசாரிக்கிறார்கள்

சுற்றத்தார்கள்.

ஓடிப்போய் திருமணம் செய்தவளின்

தாயை கரிசனத்தோடு விவரம்

கேட்கிறார்கள் அக்கம்பக்கத்தார்கள்.

வேலை கிடைக்காமல் வெதும்பியனுக்கு அறிவுரைகளை பரிவாக அள்ளித் தெளிக்கிறார்கள் நண்பர்கள்.

உலகம் தெரியாத அப்பிராணிக்கு வலிய வந்து புத்திமதி கூறுகிறார்கள்

சாமர்த்தியசாலிகள்.பலவீனமாக இருப்பதென்பது நமக்கு எத்தனை சௌகரியமாய் இருக்கிறது நம் சுயத்தை பாதிக்காமல் அன்பு காட்டுவதற்கு.

# தி.கலையரசி.

நரம்பில்லா ஒற்றை நாக்கு

ஆக்டோபஸின் கரங்களாய்

திசைகொன்று நீளும்…..

சுற்றி சுழற்றி – எதிர்வரும்

நிலைக்கோர் சொற்களை

உதிர்க்கும்…..

அவை

சில நேரங்களில்……

அழுத குழந்தையை அள்ளி

மார்போ டணைக்கும் தாய்போ

லரவணைக்கும்…..

பசுமரம் சாய்க்கும் கொடும்

கோடாரியாய் மனம் வெட்டிச்

சாய்க்கும்……

நஞ்சினை நற்தேன் குழைத்துத்

தருதல் போல் நயந்து

கெடுக்கும்……

தேர்ந்தவன் கைத் தோட்டா

போல் குறித்

துள்ளியமாய்த்

தாக்கும்…..

முகில் சிவராமன்.

வானில் கடல் புரண்டு

பூமிக்கு நீர்த்துளிகள்,

நீர்க்கடவுளின் பாதங்கொண்ட

மழைக்கால சிறார்கள்…

நட்பால் சுரம் காக்கும்

ஒடிந்த வாழையிலை,

சலசலத்து சிரிப்பது

சிற்றாறோ? சிறாரோ??

(வெ.ஹேமந்த் குமார்)

#அகலிகை_வனம்

நதி நம் ஞாபகத்தில்

ஓடிக்கொண்டிருக்கிறது

பாவங்களை சுமந்தபடி.

நதிக்கு சாயம் பூசி

நஞ்சாக்கி விட்டு

கங்கைக்கு போய் கழுவுகிறோம் கறையை.

ஆற்றை அள்ளி அள்ளி தின்றுவிட்டு

அனாதை ஆக்கிவிட்டோம் ஆலமரத்தை.

மழை தங்கவந்த ஏரியில்

நாம் தங்கிக்கொண்டு

நெகிழி குடம் தூக்கி

தாகவழிப் பயணம் போகிறோம்.

கடலை கச்சா எண்ணெய்

தார்ப்பாயால் மூடிவிட்டு

ராமேஸ்வரத்திற்கு

ரயில் எப்போது என கேட்கிறோம்.

புலிப்பாலுக்கும்

யானைத் தந்தத்திற்கும்

மலைச் சாம்பலுக்கும்

மான் கொம்பிற்கும்கொலை செய்துவிட்டு

நரியைப் போய் சொல்கிறீர்கள்

நயவஞ்சக நரியென்றுநாகூசாமல்.

மரத்தை மாட்டை

மலையைவணங்குங்கள்

யாரும் மறுக்க மாட்டார்கள்.

மரக் கட்டையையோ

மாட்டு மூத்திரத்தையோ

மைல் கல்லையோ

வணங்கச் சொல்லும் போது தான்

கடவுளுக்கு எதிராய் கருத்துப் பிறக்கிறது.

நெய்யை ஊற்றி நெருப்பு வைத்து விட்டு

பழங்கஞ்சி உண்ணும்

பாமர பிள்ளையிடம் புராணங்களை காட்டி

பொய் பேசாதீர்கள்.

உங்களுக்கு தாழம்பூவே மேல்.

நடுரோட்டில் நாம் நிற்பதற்கு

எட்டு வழிச்சாலை ஏற்பாடாகிறது.

காட்டை கற்பழித்த

சாபத்தினால் தான்

கண்ணுக்குத் தெரியாத உயிருக்கு பயந்து

கதவைச் சாத்திக் கொண்டார் கடவுள்.

  சிகரம் தொடு

” எண்ணத்தால் உயர்ந்து எளிமையில் தவழ்ந்து

 தூய்மையில் நனைந்து

 உழைப்பை மூலதனம்  செய்து 

 விடா முயற்சியை  கைவசமாக்கி

 தோல்விகளை விலக்கி

 வெற்றிப் படிகளை அனுபவம் என்கிற

  ஊன்றுகோலால் கடந்து 

  முதியோர்  பக்குவத்தை வசமாக்கி

  நிமிர்ந்து  செல்  நாணலாய் வளைந்து

  கொடு   

   நேர்மறை   எண்ணம் கொண்டு 

  துல்லிய இலக்கை

  நோக்கி வழுக்காமல்  தடம் பதித்து விடு

   சிகரம்     தொடு   சிம்ம சொப்பணமாய்

   இரு   மனிதா .

பி.கே. ராதா . சீர்காழி .

  இடைக் காலத் தடை உத்தரவு தெரியும்

  அது என்ன?!   இடை தொடத் தடை உத்தரவு?!

  எல்லாம் கொரோனா ஆட்சியின் கோலம்

 உன்னையும் இப்படிப் பிடித்து ஆட்டுகிறது!

  ராமர் பாலம் கட்ட  அணில் சின்னச் சின்ன

  உதவிகள் செய்ததுபோல்தான்

  *நம் காதல் வளர  நான் செய்த உதவிகளும்

   ஆனால்   அதற்காக நீ என்னை

  இப்படி ஒதுக்கலாமா?  ஓரங்கட்டலாமா?

  கை கழுவி  கவசத்தைக் கழற்றிய பின்

  முகத்தையும் கழுவி  முத்தங்கள் வழங்க

  ஆசையாய் வந்தால்

  முன் பின் யோசிக்காமல்  முழு மூச்சாய்

  நீ நிராகரிப்பதுஎந்த வகையில் நியாயம்?!

  உலகத்தையே உலுக்கிக் கொண்டு

  முதல் முறையாகக்

  காதலுக்கே விடுமுறை வழங்க வைத்த

  அந்தக் கிருமி மேல்  உனக்கு மட்டும்தானா கோபம்?!

  எனக்கும் கொலைவெறிதான்!

  நம்மை நாமே மாற்றிக் கொண்டால்தான்

அடுத்தவர்களையும்கொஞ்சமாவது மாற்ற

  முயற்சி செய்யலாம்!

  முத்து ஆனந்த் ,      வேலூர்

உருக்குலைந்த_வாழ்க்கை…!

 *பத்துப் பதினஞ்சு வருசமா

கடைவீதிக்கு கொண்டு போன அக்கா

பின்னிய பிளாஸ்டிக் ஒயர் கூடை…

*குழாயடியில் அக்கம் பக்கம்

சண்டை போட்டு தண்ணி பிடிச்சு

நைந்து போன நைலான் குடங்கள்…

*இருவது வருசமுன்ன புதுவீட்டு

பால்காய்ப்புக்கு மச்சினன் மனசார

வாங்கி மாட்டின சுவர் கடிகாரம்…

*ரெண்டாவது பயல் எங்கிட்ட அடம்புடிச்சி

கோவில் கொடையோட வாங்கிக் கொடுத்த

கீ குடுத்தா ஓடும் காரும், ரயிலும்…

*மூத்த பொண்ணின் முகம் கொள்ளா ஆசையுடன் அவளது அத்தை வாங்கித் தந்த

அலங்கார பாசிமணியும், பொட்டு டப்பாவும்…

*பள்ளிக்குப் புள்ளைக பவிசா கொண்டுபோன

பென்சில் டப்பாக்களும், தண்ணி கேனும்…

லேசான கீறலைக்கூட மன்னிக்காமல்…

* வீடு முழுவதும் ஆக்ரமித்திருந்த — பிளாஸ்டிக்

பொருள்களெல்லாம் தேடித்தேடி சேகரித்து

எடைக்குப் போட்டுட்டோம் வேற வழியில்லாம…

* கொரோனா ஒழியுறதெப்போ…?

வேலை வெட்டி கிடைக்கிறதெப்போ…?

உருக்குலைஞ்சு போச்சுதையா எங்க வாழ்க்க…

இந்த பழைய பொருளுக மாதிரி….!!

#தன்னூத்து_குமரன்

டோரா புஜ்ஜி ஸ்டிக்கர் ஒட்டிய

பென்சிலை பாக்ஸுக்குள் வைத்திருக்கிறாள்…

ஒரு முனை ஒடிந்த சிகப்பு பென்சில்

நான்கு கலர் க்ரேயான்ஸ்

பாதி கடித்த ரப்பர் துண்டு ஒன்று

பூ பூவாய் விரிந்திருக்கும்

பென்சில் துருவல்

மிக்கி மௌஸ் டாட்டூ

ரெண்டு குட்டி மயிலிறகு

மஞ்சள் நிற மலர்கள் சில…

கூடவே

கிளாஸ் டீச்சரின் கையெழுத்தில்…

இந்த மாத டர்ம் பீஸ் கட்டச்சொல்லும்

ஒரு

துண்டு சீட்டும்!தக்ஷன், தஞ்சை

ஐம்பதுகிலோ தாஜ்மஹால்

ஐம்பது கிலோ தாஜ்மஹால்

கி. லட்சுமி

பெயர்   : முனைவர் கி.இலட்சுமி கல்வித் தகுதி : எம்.ஏ,எம்.பில்,பி.எச்.டி (தமிழ்) பணி அனுபவம் : 18ஆண்டுகள்
வயது :45 பணி புரியும் கல்லூரி : ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. (தமிழ்த்துறைத்தலைவர்) *சென்னை இலயன்ஸ் கிளப்பில் 2013ல் நல்லாசிரியர் விருது. *பத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு. * எழுதிய சிறுகதைகள் பல நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. *முகநூலில் நாள்தோறும் நடைபெறும் கவிதைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று 500க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். *முகநூல் குழுமங்கள் வாயிலாக செந்தமிழ் கவிஞர் விருது, பாரதி விருது,பாரதிதாசன் விருது, கவி மின்னல் விருது, சிறந்த ஹைக்கூ கவிஞர் விருது முதலான பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.
*உயர்ந்த சிந்தனைகளைப் படைப்பிலக்கியத்தின் வழி மக்களின் மனதில் விதைக்க வேண்டும் என்பதே என் படைப்பிலக்கிய நோக்கம்.  

ஒவியம்:      அ.செந்தில்குமார்

நாக்கில் சனி என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.. அதை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். மனைவி ரஞ்சியோடு உறவினர் திருமணத்திற்கு சென்றேன்.. ரஞ்சி செல்ல பெயர்.. மனோரஞ்சிதம்..முழு பெயர்.. திருமணத்திற்கு போனோமா.. மொய் கொடுத்தோமா.. விருந்து சாப்பிட்டோமா எனத் திரும்பி வந்திருக்க வேண்டும்.

  என் அத்தை மகள் அழகுவை பார்த்ததும் நாலு வார்த்தை உபசாரத்திற்காக பேசினேன். அங்குதான் வினையே ஆரம்பித்தது..

“ஏன் அழகு அப்ப பார்த்த மாதிரியே இருக்கியே.. உனக்கு வளர்ந்த பசங்க ரெண்டு பேரு இருக்காங்கன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க..”

“அட போங்க மாமா.. கிண்டல் பண்ணாதீங்க..நீங்க மட்டும் என்ன ..அப்படியேதான் இருக்கீங்க.. ஹீரோவாட்டும் …ப்ளஸ்டூ படிக்கற மக இருக்கான்னு  சொன்னா நம்புவாங்களா..என்ன உங்களுக்கும் சேர்த்து ரஞ்சிதம் சாப்பிடறாப் போல.. முன்ன பார்த்ததுக்கு டபுளாயிட்டா.. இத்தோட நிறுத்திக்க ரஞ்சிதம்..இப்பவே மாமாக்கு அக்கா மாதிரி இருக்க..இன்னும் ஊதினா மாமா வேற ஒண்ணை பார்க்க வேண்டியதுதான்.. சரி..அத்தான் தேடுவாரு..நான் வரேன் மாமா..”

அவள் சென்றபிறகு அந்த விஷயத்தை நான் மறந்து விட்டேன். ரஞ்சி அதற்கு பிறகு எதுவும் பேசவில்லை. லொடலொடவென ஏதாவது பேசும் ரஞ்சி அமைதியாகவே இருந்தாள்.

அன்று இரவு மணி பன்னிரெண்டு இருக்கும். ஆழ்ந்த நித்திரையில் நயன்தாராவோடு டூயட் ஆடிக் கொண்டிருந்த என்னை பிடித்து உலுக்கி எழுப்பினாள்.

நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசுபெறும் கதை- 1

“ஏன் ஜெய்.. நான் அழகா இல்லையா..ரொம்ப குண்டாயிட்டேன் இல்ல.. காதலிக்கும் போது எப்படி ஸ்லிம்மா இருந்தேன்..நீங்க கூட பிப்டி கேஜ் தாஜ்மஹால்னு சொல்வீங்களே.. இப்ப அசிங்கமா பெருத்துப் போயிட்டேன்ல..இந்த குடும்பத்துக்காக உழைச்சு களைச்சு இப்படி ஆயிட்டேன் ஜெய்…அதுக்காக என்னை வெறுத்திட மாட்டீங்களே.. நான் வேணா ஜிம்முல சேர்ந்து எடைய குறைக்கவா.. நாளைக்கே விசாரிச்சு என்னை சேர்த்து விடுங்க.. இன்னும் மூணு மாசத்துல உங்க பெரியப்பா பையன் கல்யாணம் வருதுல்ல..அதுல சிக்குனு போயி எல்லோரையும் அசத்தணும்..முக்கியமா அந்த அழகு முகத்துல கரியைப் பூசணுங்க..” ரஞ்சி உணர்ச்சிவசப்பட்டு சொல்லிக்கொண்டே போக கொட்டாவியோடு மிரள மிரள முழித்தேன் நான். ஜெய்கணேஷ் என் முழு பெயர்.. ரஞ்சி செல்லமாய் ஜெய் என அழைப்பாள்.

மறுநாள் காலையில் எழுந்ததும் ரஞ்சி என்னை விடவில்லை. இன்னிக்கே ஜிம்மில் சேருங்க என அடம் பிடித்தாள்.

“கொஞ்சம் பொறுமையாரு ரஞ்சி ..நாலுபேருகிட்ட விசாரிக்க வேண்டாமா..தவிரவும் உன் உடல்நிலைய கவனிச்சுதான் எந்தமாதிரி பயிற்சி கொடுக்கறதுன்னு பார்க்கணும்.. இந்த வயசுல எடுத்தோம் கவிழ்த்தோம்னு சட்டுனு எதுலயும் இறங்கிட முடியாது..”

“போங்க ஜெய் ..உங்க அத்தை பொண்ணு சொன்னது சரிதான்.. இவ இப்படியே இருந்தாதான் நல்லது..புதுசா ஒண்ணை செட்டப் பண்ணலாம்னு பார்க்கறீங்க..”

“வாயை மூடு ரஞ்சி ..நாற்பது வயசுல செட்டப்பா…வயசு பொண்ணை வச்சிகிட்டு பேசற பேச்சா இது..”

நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசுபெறும் கதை- 1

“அவ அப்பவே கிளம்பி டியூசனுக்கு போயாச்சு.. இந்த கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்.. இன்னிக்கு வரும்போது எடை பார்க்கற மிஷின் வாங்கிட்டு வாங்க.. அப்பதான் அப்பப்போ இம்ரூமெண்ட் இருக்கான்னு செக் பண்ணிக்க முடியும்..பக்கத்துல இருக்கற ஜிம்ல விசாரிச்சுட்டு விவரத்தோட வாங்க.. ” சகதர்மிணி உத்தரவு போட தலையை ஆட்டி புறப்பட்டேன் நான்.

மறுநாள் காலை ஏழு மணி..தூக்கக் கலக்கத்தோடு எழுந்த நான் மிகவும் டைட்டான சுடிதாரை சிரமப்பட்டு அணிந்திருந்த ரஞ்சியைப் பார்த்ததும் பொங்கிய சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிகொண்டேன்.

“என்ன ரஞ்சி இது கோலம்..”

“இதுதாங்க எக்சர்சைஸ் பண்ண ஈசியா இருக்கும்..மகி வளர்ப்புல கவனம் செலுத்துனதுல லைட்டா  வைட் போட்டுட்டேன்ல… அதான் டைட்டா இருக்கு.. ஒரே வாரத்துல எப்படி இளைக்கறேன் பாருங்க..உங்ககிட்ட பேச  நேரமில்ல..எனக்கு ஜிம்முக்கு டைம் ஆச்சு ..மகிக்கு தோசை ஊத்தி கொடுங்க.. மிக்சியில தேங்காய் சட்னி அரைச்சுடுங்க. அப்படியே குக்கர்ல சாதம் வெச்சுடுங்க..நான் வந்து குழம்பு வைக்கறேன்.. அப்படியே மறக்காம ஆப்பிள் ஜூஸ் போட்டு வைங்க..வந்தவுடனே குடிக்கணும்..” சரமாரியாய் உத்தரவிட்டுவிட்டு சென்று விட்டாள்.

“என்னப்பா இது.. நீங்க ஏதாவது சொன்னீங்களா.. ஏன் அம்மா இப்படி திடீர்னு காமெடி பண்றாங்க ..” சிரித்தபடி கேட்டாள் மகள் மகிஷா.

“விடு மகி..ரெண்டுநாள்தான்..உங்க அம்மாவால இதையெல்லாம் பண்ணமுடியாது.. பட்டாதான் புத்தி வரும்..நீ ஸ்கூலுக்கு கிளம்பு.. நான் ஆபிசுக்கு பர்மிஷன் போட்டுட்டு ஆகற வேலையை பார்க்கறேன்..”

ஜிம்மிலிருந்து உடலெங்கும் வியர்த்து விறுவிறுக்க களைத்துபோய் வந்த ரஞ்சியை பார்த்தபோது  பரிதாபமாகத்தான் இருந்தது.

“இப்பவே ரெண்டு கிலோ இளைச்ச மாதிரியில்ல..”

ஆமாம்..ஆமாம்..  என்று தலையாட்டி வைத்தேன் நான்.

ஒரு வாரம்தான்.. ஜிம் அலுத்துவிட்டது ரஞ்சிக்கு…என்னங்க முக்கி முக்கி எக்சர்சைஸ் பண்றேன்… வைட்டே குறையலை.. வேஸ்ட்….சூப்பரான வழி ஒண்ணு கிடைச்சிருக்கு..நேத்துதான் என் ப்ரெண்டு ஒருத்தி சஜ்ஜஸ்ட் பண்ணா.. பேலியோ டயட்டாமே..அதுல நல்ல எபக்டு தெரியுதாம்..யூடியூப் எல்லாம் பார்த்துட்டேன்…இப்பவே கடைக்கு போயி சிக்கனும் மட்டனும் வாங்கிட்டு வாங்க.. இனிமே சோறே கிடையாது… சிக்கன் மட்டன்தான் ஆகாரம்..அப்படியே பாதாம் பிஸ்தாவும் வாங்கிக்கங்க அதையும் சாப்பிடணுமாம்.. சீக்கிரம் போங்க ..அடிக்காத குறையாய் விரட்டினாள். பர்சை தொட்டுப் பார்த்தபடி விதியை நொந்தபடி கடைக்கு கிளம்பினேன் நான். கடைசியில் ஜிம்முக்கு கட்டின ஆறாயிரம் அவுட்…

நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசுபெறும் கதை- 1

தொடர்ந்து வந்த ஒரு மாதம் நானும் மகியும் சாம்பாரும் சுட்ட அப்பளமும் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க வேளாவேளைக்கு தட்டு நிறைய சிக்கன் முட்டை ஆட்டு இறைச்சி.. என முழு அசைவ பிராணியாக மாறிக் கொண்டிருந்தாள் ரஞ்சி. ஆடுகள் கோழிகளின் எண்ணிக்கை குறைந்ததுதான் மிச்சம்.. பத்தாக்குறைக்கு தினமும் வைட்மிசினில் ஏறி எடையை என்னை எட்டிப் பார்க்கச்சொல்லி தொந்தரவு வேறு. மில்லிகிராம் அளவில் கூட எடை குறைந்தபாடில்லை.

வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் நாலைந்து உடற்பயிற்சி இயந்திரங்களும் அமேசானிலிருந்து இறக்குமதி ஆயிற்று..இது பத்தாது என்று விடிகாலை எழுப்பி என்னையும் நடைபயிற்சி செய்ய அழைத்தாள்.

ஒரு மாதமாயிற்று பேலியோ டயட்டும் ரஞ்சிக்கு வெறுத்துப் போயிற்று..

‘இனிமே வெறும் பழம் மட்டும் தாங்க.. ‘ அதுவும் ஒரு வாரத்துக்குதான்.. மறுவாரம் காய்கறி டயட்டுக்கு மாறினாள். மாற்றி மாற்றி என்னை அலைக்கழித்ததில் பாதி இளைத்துப் போயிருந்தேன் நான்.

நாளுக்கு நாள் ரஞ்சியின் முயற்சிகள் தீவிரமாகிக் கொண்டிருக்க இதிலிருந்து ரஞ்சியையும் எங்களையும்  மீட்பது எப்படி என யோசித்துக் கொண்டிருந்தேன் நான்.இல்லாவிடில் என் பொருளாதாரம் படுபாதாளத்துக்கு போய்விடும் போலிருக்கிறது..

“அப்பா..அம்மா என்னோடு கலகலப்பா பேசறதில்ல..விதவிதமா சமைச்சு தர்றது இல்ல… எப்பவும் வைட் குறைக்கறது பத்தி பேசி போரடிக்கறாங்க.. எனக்கு பழைய அம்மா வேணும்பா..” மகியின் வார்த்தைகளில் ஏக்கம் தெரிந்தது.

ஒருநாள் அதிசயமாக எங்களோடு அமர்ந்து பழைய திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சி. சமயம் பார்த்து ஆரம்பித்தேன்.

“புசுபுசுன்னு குஷ்பு எவ்வளவு அழகு பாரேன்..என்ன வேணா சொல்லு ரஞ்சி…பூசினா மாதிரி இருந்தாதான் பொண்ணுங்க அழகு.. என்னோட ஆபிசுல கூட குஷ்பு மாதிரியே ஒரு பொண்ணு வேலைக்குச் சேர்ந்திருக்கு.. எல்லாப் பசங்களும் ஆன்னு வாயைப் பொளந்துட்டு பார்த்து ஜொள் விடறாங்க..அட சொல்லப்போனா கல்யாணத்துக்கு முன்னாடி நீ ரொம்ப ஒல்லியா இருந்த இல்ல.. அதைவிட நம்ம மகி பொறந்தப்புறம் லேசா சதை போட்டப்புறம் கொள்ளை அழகாயிட்ட…இது தெரியாம நோஞ்சான் மாதிரி இருக்கறதுதான் அழகுன்னு நினைச்சுகிட்டு திரியுதுங்க.. இந்தக்காலப் பொண்ணுங்க..”

“ஆமாப்பா.. எனக்கும் அப்படிப்பட்ட ஹீரோயின்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்… என்னோட பேவரிட் ஹன்சிகாதான்..  ” என்னைப் பார்த்து கண்ணடித்தபடி ஒத்து ஊதினாள் மகள். ரஞ்சி கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தாள்.

மறுநாள் நண்பனின் மகனுக்கு பிறந்தநாள் விழா. நானும் ரஞ்சியும் சென்றிருந்தோம். நண்பனின் மனைவி திலகா வாசலுக்கே வந்து வரவேற்றாள்.

மேகம் போர்த்திய நிலா!   மங்கிப்போனது ஒளி.   தளிர் சுரேஷ்  

“என்ன ரஞ்சிதா அக்கா..இப்படி இளைச்சுட்டீங்க.. கன்னமெல்லாம் ஒட்டிப்போயி பார்க்கவே நல்லாயில்ல..ஏதாவது

உடம்பு சரியில்லையா …”

அக்கறையாய் விசாரித்தாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லையே …” அவசரமாய் பதில் சொன்னாள் ரஞ்சி.

“சிஸ்டர் ஏன் இப்படி இளைச்சு போயிட்டீங்க..நீங்க முன்னாடி இருந்தமாதிரியே இருங்க.. மகாலட்சுமியாட்டும் எவ்வளவு அழகு தெரியுமா.. அதையே மெயின்டேன் பண்ணுங்க.. இவன் ஏதாவது சொன்னா கண்டுக்காதீங்க..” நண்பனும் ஒத்து ஓதினான். எல்லாம் அடியேன் ஏற்பாடுதான்..ஹிஹி..

வீட்டிற்கு வந்ததும் ரஞ்சி சொல்லிவிட்டாள்.

“என்னங்க இந்த மிசினெல்லாம் வந்த விலைக்கு வித்துடுங்க.. என் கண்லயே படக்கூடாது..இனிமே எந்த டயட்டும் கிடையாது.. நாளைக்கு உங்களுக்குப் பிடிச்ச ஆப்பமும் மகிக்கு பிடிச்ச வெஜ் ரோலும் பண்ணபோறேன்.. மதியம் பிரியாணி…நைட் டின்னர் வெளியில.. ரெண்டு மூணு மாசமா நாம ஹோட்டலுக்கே போறதில்லையே.. ” உத்தரவுகளை பிறப்பிக்க பொய்யாய் தலைவணங்கி ஏற்றுக் கொண்டிருந்தேன் நான்.

பேசிக்கொண்டே கால் தடுமாறிய ரஞ்சி என்மேல் விழ ஒருகணம் மூச்சுத் திணறியது எனக்கு.. என்ன கனம் கனக்கிறாள்..டயட் இருக்கிறேன் பேர்வழி என இன்னும் அதிகமாய் எடை போட்டிருக்கிறாள்.. இருக்கட்டும் போங்கள்..எண்பது கிலோ தாஜ்மஹால் என்மேல் விழுந்ததாய் எடுத்துக் கொள்கிறேன்..

அன்பார்ந்த வாசகப்பெருமக்களே!

அன்பார்ந்த வாசகப்பெருமக்களே!

   வணக்கம்! தேன்சிட்டு மின்னிதழ் இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டாண்டுகளாய் வாசகர்களின் பெருமளவு ஊக்கத்தினாலும் ஆதரவினாலும் அன்பினாலும்  சிறகை விரித்து பறந்து கொண்டிருக்கும்  இந்த இதழ் மூன்றாம் ஆண்டிலும்  தொடர்ந்து பறந்து உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் துவங்கிய கோவிட் 19 கொரானாத் தொற்று இன்னும் முழுவதும் அகலாமல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. நம் நாட்டையும் மாநிலத்தையும் கூட மிகவும் பாதித்து வருகின்றது. அச்சு ஊடகங்கள் இந்த தொற்றினால் இயங்க முடியாமல் நம் இயக்கத்தை தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நிறுத்திக் கொண்டுள்ளன. பாரம்பரியம் மிக்க கல்கி வார இதழும் மின்னிதழாக  மாறிவிட்டது.

லாக்டவுன் காரணமாக ஏராளமான யூ-ட்யூப் சேனல்களும் மின்னிதழ்களும், புதிய இணைய தளங்களும் பெருகிவிட்டன. ஆன் லைன் வகுப்புகள் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் வசூல் வேட்டையை துவக்கி விட்டன. முழுமையாக ஏழு மாதங்களை கடந்த பின்பும் இன்னும்  கோவிட் 19 பாதிப்பை விலக்க முடியவில்லை.  பள்ளிகள் திறக்கும் நாளும் பேருந்துகள் இயங்கும் நாளும் எந் நாளோ? என்று ஏங்க வைக்கிறது.

ஒவ்வொரு குடிமகனும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாடப் பொழுதை கழிக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களின் வாழ்வாதாராத்தை பற்றி சிந்திக்காமால் குடிமக்களை எப்படி  பஞ்சம் பசி பட்டினியில் இருந்து காப்பது என்பது பற்றி துளியும் சிந்திக்காமல் யார் முதல்வர் என்ற நாற்காலி சண்டையில்  இறங்கியிருக்கிறது ஓர் அரசு.  மத்திய அரசோ புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழக மக்களுக்கு விரோதமான ஓர் கல்விக் கொள்கையை  இப்போது கொண்டு வந்திருக்கிக்கிறது. இடையில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி தன்  ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டு விட்டது. எதிர்கட்சிகளோ  வலுவானதாக இல்லை. ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும் திராணியோ திடமோ இல்லாமல்  அண்ணன் எப்போ சாவான்? திண்ணை எப்போ காலியாகும் என்ற மனப்பான்மையில் பொழுதை கழித்துக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழலில் குடிமக்களாகிய நாம் விழித்தெழ வேண்டும். சாதி மத கட்சி அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். நாட்டை காத்திடும் நல்லவர்களை  திறமையானவர்களை  ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும். சினிமா பிரபலங்கள்,  கட்சி பிரமுகர்கள் என்று பார்க்காமல் நல்லவர் களை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெறச்செய்ய வேண்டும். அப்போதுதான் வலுவான பாரதம்  உருவாகும்.

இந்த ஆண்டுமலர் வழக்கம்போல உங்கள் அபிமான பகுதிகளைத் தாங்கி சிறப்பாக வந்திருக்கிறது. நகைச்சுவை சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதைகள் இடம்பெற்றிருக்கிறது. மேலும் சுவையான பகுதிகளுடன் உங்களுக்கு பிடித்த வகையில் வழங்கி இருக்கிறோம். படித்து ரசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து சொள்ளுங்கள்!  மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்! நன்றி.

அன்புடன்.  சா. சுரேஷ்பாபு. ஆசிரியர், தேன்சிட்டு மின்னிதழ்.

மலர்: 3   இதழ்: 1

கதைகளில் வரும் பெயர்கள், இடங்கள், சம்பவங்கள் கற்பனையே! கதைகளை சுருக்கவோ, மாற்றவோ, திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு.

தேன்சிட்டு மின்னிதழ் குழுமத்தின் சார்பாக  வடிவமைத்து வெளியிடுபவர் மற்றும் ஆசிரியர்:  நத்தம்.எஸ். சுரேஷ்பாபு.

முகவரி:  73. நத்தம் கிராமம். பஞ்செட்டி அஞ்சல், பொன்னேரி வட்டம், 601204

அலை பேசி: 9444091441.

இமெயில்: thalir.ssb@gmail.com                 அடுத்த இதழுக்கான

உங்களின் படைப்புக்கள் வந்து சேர கடைசி தேதி: 15-09-2020

தேன்சிட்டு இணைய தள முகவரி:   http://thenchittu.com/

நவகுஞ்சரம்! மகாபாரதத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவை நவகுஞ்சரம். ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது. சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு   நவ’ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந் தார். அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர், அர்ஜுனன் முன் தோன்றியதாக வருகிறது.      

அன்பின் நன்றிகள்: அட்டைப்பட ஓவியம்: ஓவியர் மாருதி