திரும்பி பார்க்கிறேன்!

 துடுப்பதி ரகுநாதன், கோவை.

திரும்பி பார்க்கிறேன்!
இந்த கொரோனா தொற்று நீடித்துக் கொண்டே போகிறது! தினசரி வாழ்க்கை ஸ்தம்பித்துப்  போய் நீண்ட நாட்கள் ஆகி விட்டன! வயசு ஆக ஆக உடம்பில் தென்பும்  குறைந்து கொண்டே போகிறது!
எழுபது வயசுக்கு மேல் நான் போகும் இடங்கள் வாரப் பத்திரிகைகள் விற்கும்   பெட்டிக் கடைகளும், டவுனில் இருக்கும் நூலகமும், விஜயா பதிப்பகமும் தான்!
இனிமேல் அங்கு எல்லாம் பழையபடி போக முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது!
போலியாக தெம்பை வரவழைத்துக் கொண்டு வெளியில் கிளம்பினால், மகன், மகள்கள் மட்டுமல்ல, பேரன், பேத்திகளும் சேர்ந்து கொண்டு, “தாத்தாவுக்கு 80  வயசுக்கு மேல் ஆச்சு!…இன்னும் மைனர் மாதிரி வெளியே கிளம்பப் பார்க்கிறார்…பார்!…” என்று முணு முணுக்கிறார்கள்!
தர்ம சங்கடமாக இருக்கிறது!. இரவில் கூட நீண்ட நேரம் தூக்கம் வருவதில்லை! கட்டிலில் படுத்துக்க  கொண்டும், சோபாவில் உட்கார்ந்து கொண்டும்  பழைய காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
இந்தக் காலம் மாதிரி அந்தக் காலத்தில்  போன், முக நூல் வாட்ஸ் அப்,  காமிரா, ஜெராக்ஸ் போன்ற வசதிகள் எல்லாம் இல்லாத காலத்தில்  நான் வாழ்ந்து விட்டு, எந்த அடையாளத்தைப் பார்த்து  பழையதை நினைவு படுத்த முடியும்?
 நான் வாழ்ந்த காலத்தில் எங்கள் கிராமத்தில் மின்சாரம் கூட கிடையாது. எங்கள் கிராமத்துக்கு பக்கத்தில் துலுக்க பாளையம் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வசதியான கவுண்டர் தான், தன் தோட்டத்தில் முதன் முதலில் அந்தப் பகுதியில் மின் இணைப்பு வாங்கி பம்பு செட் வைத்தார். அவர் தோட்டத்தில் கிணற்றுக்கு பக்கத்தில் மாலை வந்தவுடன் 100 வாட்ஸ் குண்டு் பல்ப் போட்டு எரிய விடுவார்! வெளிச்சம் எங்களூருக்கு வரும்!
நாங்கள் சில நண்பர்களோடு அந்த கிணற்றடிக்குப் போய் அந்த ’பல்ப்’ க்கு பக்கத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் அந்த வெளிச்சத்தை வேடிக்கை பார்த்தது   முதலில் நினைவுக்கு வருகிறது!

இன்று சுதந்திர தினம்!
எனக்கு சுதந்திரம் வாங்கிய 1947 ஆண்டு ஆகஸ்ட் மாதம்  15 ம் தேதி மிக மங்கலாக நினைவுக்கு வருகிறது!
நான் அப்பொழுது எங்கள் கிராம பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்.
எங்கள் பள்ளியில் ரத்தினசாமி எனபவரும், அவர் மனைவியும்  ஆசிரியர்களாக இருந்தார்கள்.  
காலையில் பள்ளிக்குப் போனவுடன் தேசிய கொடியை பாக்கெட்டில் பின்னூசியால் குத்தி எங்களை வரிசையாக நிற்க வைத்தார்கள். பிறகு பாலக்கரை ரோட்டில் ஊர்வலமாக கூட்டிக் கொண்டு போனார்கள்!
எங்கள் ஊருக்கு கடைசியில் சானார் பாளையம் என்ற ஒரு பகுதி இருக்கிறது. அங்கு ரோட்டின்  மேலேயே இரண்டு   மிக பெரிய சிலைகள்  பயங்கரமான தோற்றத்தோடு இருக்கும். அதன் கைகளில் இருக்கும் அருவாள், குத்தீட்டி, முகத்தில் இருக்கும் மீசை எல்லாம் பார்க்க பயங்கரமாக இருக்கும்!
முனியாண்டியோ, மாயாண்டியோ  என்று எதோ பெயர்   சொல்வார்கள்..   தனியாக அதன் பக்கத்தில் போக பயந்து விடுவேன்.  அங்கு நிறைய பானைகள் அடுக்கி வைத்திருப்பார்கள்!
“மகாத்மா காந்திக்கு ஜே! ஜவகர்லால் நேருவுக்கு ஜே! சுபாஷ் சந்திர போஷூக்கு ஜே!” என்று தொண்டை கிழிய  கோஷம் போட்டுக் கொண்டே  எங்களை அங்கு கொண்டு  போய் அந்த பானைகள் அடுக்கி வைத்திருந்த இடத்திற்கு முன்னால்  நிறுத்தினார்கள்!
அது எல்லாம்  கள் இறக்கும் பானைகள், சாராயம் காய்ச்சும் பானைகள் என்று சொன்னார்கள். அது எதற்கு என்று எல்லாம் எங்களுக்குத் தெரியாது!
“நம் தேச தலைவர்கள் யாருக்குமே மது பானம் பிடிக்காது! அதை குடித்தால் அறிவு கெட்டுப் போய்,  குடும்பங்கள் அழிந்து, நாடு கெட்டுப் போய் விடும்!  அதனால் நம் தலைவர்கள் எல்லோரும் நாம் சுதந்திரம் வாங்கியவுடன் முதலில் இதைத் தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்! நீங்கள் முதலில் இந்த பானைகளை உடைத்து எறியுங்கள்!..” என்று ரத்தினசாமி வாத்தியார் சொன்னார்.
கல்லால் அடித்து உடைப்பதில் இருக்கும் சந்தோஷத்தை விட வேறு பெரிய சந்தோஷம் எல்லாம் எனக்கு அந்த வயசில் இல்லை!
எனக்கு ஏற்கனவே வேலியில் போகும் ஓணான்கள் கல்லால் விரட்டி விரட்டி அடித்த அனுபவம் உண்டு!
விடுவேனா?  ஐந்தாறு பானைகளை கல்லால் அடித்து நொறுக்கி விட்டேன்.  அன்று ரத்தினசாமி வாத்தியார் எனக்கு அதற்காகவே நிறைய ஆரஞ்சு மிட்டாய்  கொடுத்தார்!
அது எல்லாம் மங்கலாக நினைவுக்கு வந்தது!
இன்று நினைத்து பார்க்கும் பொழுது ஆசிரியர்கள் எல்லாம்  எதிர் காலத்தைப் பற்றி தீர்க்கமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்களாகத் தான் தெரிகிறது!
தேசத் தலைவர்களுக்கு  எல்லாம் மது பானம் பிடிக்காது! அவர்கள் நாடு விடுதலை பெற்ற பின் முதல்  வேலையாக மது அரக்கனைத் தான்  ஒழிப்பார்கள் என்று சொன்னது  இன்று ஒரு தமாஷாகத் தெரிகிறது!
இன்று நாட்டை ஆள வரும் எல்லாத் தேசத் தலைவர்களும மது பானம் தயாரிப்பதற்கும்,  விற்பனைக்கும்  தானே முதலிடம் தருகிறார்கள்?

நான்  இப்பொழுது எல்லாம் என்னுடைய அடி மனசில் இருக்கும் பழைய காலத்து நினைவுகளில்  மூழ்கிப் போய் விடுகிறேன்! எவ்வளவு நினைத்துப் பார்த்தாலும் எல்லாம் மங்கலாகத் தான் நினைவுக்கு வருகிறது!

 ஆரம்ப படிப்பை எங்கள் கிராமப்பள்ளியில் முடித்து விட்டு, பெருந்துறை உயர்நிலைப்  பள்ளியில் 1950 ல் சேர்ந்தேன்.

அந்தக் காலத்தில் எங்கள் கிராமத்தில் ஐந்தாவது வகுப்பு வரை தான் பள்ளிக் கூடம் இருந்தது. மேற் படிப்பு பெருந்துறையில் தான்!

 ஆனந்த விகடன், கல்கி  பத்திரிகைகள் எங்கள் வீட்டிற்கு நான் பிறந்த காலம் முதல்  வந்து கொண்டிருந்தது!  என் தந்தை அந்த இரண்டு பத்திரிகைகளையும் விரும்பி படிப்பார். நான் குழந்தையாக இருந்த பொழுதே  படிக்காமல் கிழித்துப் பழகியது அந்தப் புத்தகங்களைத் தான்!

ஐந்தாவது வகுப்புக்கு போகும் முன்பே எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தவுடனே ஆனந்த விகடன் கல்கி தான் விரும்பி படிப்பேன்.  பாடப் புத்தகங்களை வேண்டா வெறுப்பாகத் தான் தொடுவேன்!

எங்கள் கிராமத்திலிருந்து பெருந்துறை மூன்று மைல் தொலைவு. எங்கள் கிராமத்திலிருந்து பையன்களும் சில பெண்களும் சேர்ந்து  நூற்றுக் கணக்கில் தினசரி பெருந்துறைக்கு நடந்தே போய் தான் படிப்போம். 

அந்தக் காலத்தில் எல்லாம் சைக்கிள் வைத்துக் கொள்ள பெரிய பணக்காரர் வீட்டு பையன்களால் தான் முடியும்!

அதனால் சைக்கிள் கனவு எல்லாம் எனக்கு அந்தக் காலத்தில்  இருந்தது இல்லை. என்  நினைப்பு எல்லாம் கல்கி எப்பொழுது வரும். அதில் பொன்னியின் செல்வன் எப்பொழுது படிப்போம்…ஆனந்த விகடன் எப்பொழுது வரும்..அதில் தேவன், லக்ஷ்மி  போட்டி போட்டு எழுதும் தொடர்கதைகளை எப்பொழுது படிப்போம் என்பதைப் பற்றித்தான் இருக்கும்!

காலையில் என் தாயார்  எட்டு மணிக்கு எல்லாம் சுடச் சுட தோசை சுட்டுக் கொடுத்து மத்தியானம் சாப்பிட புளி சாதம் அல்லது தயிர் சாதம் பித்தளை தூக்குப் போசியில் நிறையப் போட்டு, தின்பண்டம் வாங்கிச் சாப்பிட  செலவுக்கு இரண்டணா கொடுத்து அனுப்புவார்கள்!

  மூன்று  மைல் நடைப் பயணம்.  நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே  போக ஜாலியாகத் தான் இருக்கும்! 

  எனக்குப் பிடித்தது  வாய் சுவைக்கு இனிப்பு. மன சுவைக்கு படைப்பு. 

பெருந்துறை போனதும்  உயர் நிலைப் பள்ளிக்குப் பக்கத்தில் கே.வி.என். கவுண்டர் கடை என்ற பெரிய மளிகைக் கடை இருக்கும், அங்கு போய் ஒரு அணாவுக்கு கற்கண்டு வாங்கி  புத்தகப்  பையில்  போட்டுக் கொள்வேன். ஒரு அணாவுக்கு திருப்பதி லட்டு சைசுக்கு கற்கண்டு கொடுப்பார்கள் அடுத்து நாற்சந்திக்கு பக்கத்தில் இரு பக்கத்திலும் புத்தகக் கடைகள் இருக்கும்! அங்கு  சின்னச் சின்ன சைசில் அரையணா ஒரு அணவுக்கு  லட்டு, ஜலேபி, டில்லி சலோ,  போன்ற தலைப்புகளில்  கதைப் புத்தகங்களும் கல்கண்டு, ஜில்ஜில், அணில், டமாரம்,  பாப்பா மலர், கண்ணன் போன்ற ஏராளமான வார இதழ்களும் கயிற்றில் வரிசையாக தொங்க விட்டிருப்பார்கள்! 

அந்தக் காலத்தில் சிறுவர்களுக்கு பிடித்த பொழுது போக்கு கதைப் புத்தகங்கள் படிப்பது தான்!

அதில் ஒன்றை வாங்கிக் கொண்டு தான் பள்ளிக் கூடம் போவேன். ஆசிரியரை ஏமாற்றி விட்டு அவைகளை  வகுப்பிலேயே படிப்பது உண்டு. 

 பாடப் புத்கங்களுக்கு செலவழித்த நேரத்தை விட கதைப் புத்தகங்களுக்கு செலவழித்த நேரம் தான் அதிகம்!

அந்தக் காலத்தில் டைபாய்டு ஜூரம் கொடிய காய்ச்சலாக கருதப் பட்டது. பலர் உயிர் இழந்திருக்கிறார்கள். அந்தக் காய்ச்சல்  எனக்கு பனிரண்டு வயசில் வந்து விட்டது.  பிழைப்பதே கஷ்டம் என்ற நிலை!

பெருந்துறையில் நம்பியார் என்ற பெரிய டாக்டர் அந்தக் காலத்தில் இருந்தார். அவர் மருத்துவ மனை பவானி ரோட்டில் இருந்தது… காய்ச்சல் முற்றிய நிலையில் என்னை அவரிடம் அழைத்துப் போனார்கள்

பிற்காலத்தில் அந்தக் கட்டிடம் அஞ்சல் நிலையமாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.  

அங்கு மாடியில் சில ரூம்கள்  இருந்தன. ஊசியைப் போட்டு உடனே அங்கு என்னைப் படுக்க வைத்து விட்டார்கள். காய்ச்சலில் உளறிக் கொண்டு இருந்ததாக அம்மா சொன்னார்கள்.

நாலு நாட்களில்  காய்ச்சல் இறங்கி விட்டது.  எனக்கு ஆரஞ்சு, ஆப்பிள் பழம் எல்லாம் அப்பா மருத்துவ மனை மாடியில் இருந்து கீழே போய் எதிரில் இருக்கும் கடையில்  வாங்கிக் கொண்டு வருவார்.

மறு நாள் முறை  அப்பா பழக்கடைக்குப் போகும் பொழுது “ அப்படியே புத்தகக் கடைக்குப் போய் அந்த வாரக் கல்கண்டு பத்திரிகை வாங்கிக் கொண்டு வாங்க!..”.என்றேன்.

“புத்தகம் எல்லாம் வீட்டிற்குப் போன பிறகு படிக்கலாம்” என்றார்.

“நீங்கள் வாங்கி வராவிட்டால் நான் காலையில் எழுந்து போய் வாங்கி வருவேன்”என்றேன்

அப்பா அடிக்க வந்தார்.  அம்மா திட்ட கோபத்தை அடக்கிக் கொண்டு,  கீழே இருந்த புத்தகக் கடைக்குப் போய் ஒரு கல்கண்டு பத்திரிகை  வாங்கி வந்தார்

சங்கர்லால் துப்பறிகிறார் போன்ற துப்பறியும் கதைகள், மர்ம கதைகள் தான்  தமிழ்வாணன் நிறைய எழுதியிருக்கிறார். விகடன் போன்ற பத்திரிகைகளில் மணிமொழி நீ என்னை மறந்நு விடு போன்ற கதைகளும் எழுதியிருக்கிறார் என்று தான் அவரைப் பற்றிய இன்றைய தகவல்கள் சொல்கின்றன.

 ஆனால் அந்தக் காலத்தில் கண்ணம்மா, மாயக்கள்ளன் போன்ற சிறுவர்களுக்குப் பிடித்த தொடர்கதைகளும் ஆரம்பத்தில் கல்கண்டில்  எழுதியிருக்கிறார். நான் அந்த மாதிரி ஒரு கதையைத் தான் காய்ச்சலில்  படுத்திருந்த பொழுது படித்ததாக நினைவுக்கு வருகிறது! 

இப்பொழுது அவர் பதிப்பக விலைப் பட்டியலிலேயே அவர் பெயரில் அந்த மாதிரி தலைப்புள்ள புத்தகங்கள் இல்லை! வேறு எங்கும் அந்தக் கதைகள் பற்றிய குறிப்புகளும் இல்லை! எனக்கு நன்றாக நினைவுக்கு வருகிறது. மர்ம கதைகள், துப்பறியும் கதைகள் எழுதுவதற்கு முன்பு கல்கண்டில் அவர் மாயக் கள்ளன் போன்ற கதைகள் எழுதியது! 

அரை டிராயர் டவுசர் சைடு பாக்கெட்டில் மறைத்து ஸ்கூலுக்கு எல்லாம் கொண்டு போய் வகுப்பில் படித்திருக்கிறேன்!

எப்படியோ குணமாகி அடுத்த வாரம் ஊர் போய் சேர்ந்தேன்.

தொடரும்.

பாடல்கள் பலவிதம்! ”ப்ரணா”

பாடல்கள் பலவிதம்!   ”ப்ரணா

திரை இசைப்பாடல்களில் ஒத்த கருத்து உடைய பாடல்கள் ஏராளம்!  அத்தகைய பாடல்களை பிரபல கவிஞர்கள் தம் நடையில் வித்தியாசமாக எழுதி ரசிகர்களை மகிழ்வித்து கொள்ளை கொண்டிருப்பார்கள்.

பிரபல கவிஞர்கள் திரை இசையின் சிறப்பான கவிஞர்கள் திருமிகு கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து தம் தம் காலகட்டங்களில் எழுதிய  ஒருமித்த சிந்தனை தரும் பாடல்களை பிரபல எழுத்தாளரும் கவிஞருமான தஞ்சை ப்ரணா இங்கே தொகுத்து வழங்குகிறார். வாசித்து மகிழுங்கள்!