எதிர் சேவை! நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்!

எதிர் சேவை!  பரிவை.சே.குமார்.

மனசு என்ற வலைப்பூவில் எழுதி வரும் அமீரக எழுத்தாளரும் மண்ணின் மைந்தருமான பரிவை.சே.குமார் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு. எதிர் சேவை. கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்து இருக்கிறது.

பரிவை.சே குமார் தன் வலைப்பூவிலும் மற்ற மின்னிதழ்களிலும் எழுதிய பன்னிரண்டு கதைகளின் தொகுப்பு இந்த நூல். குமாரின் எழுத்துக்களை நான் வலைப்பூவில் மிகவும் விரும்பி வாசித்து இருக்கிறேன். அந்த எழுத்துக்களில் தேவையற்ற வர்ணனைகளோ வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்ற வர்ண ஜாலங்களோ இருக்காது. யதார்த்தமான எழுத்தும் அழுத்தமான உரைநடையும் தென் மாவட்டத்து மக்களின் வட்டார மொழியும் அவர்களின் வாழ்க்கை முறையும் அவர் எழுத்துக்களில் ஜீவித்து இருக்கும்.

 ஒரு சிறுகதையை வாசிக்கும்போது அந்த மாந்தர்களாகவே மாறி வாசிப்பது சுகானுபவம். அந்த சுகானுபவம் எல்லோருடைய  சிறுகதைகளிலும் கிடைக்காது. குமாரின் கதைகளில் அந்த அனுபவம் நமக்கு எப்போதும் கிடைக்கும். இந்த சிறுகதை தொகுப்பிலும் பன்னிரண்டு சிறுகதைகளிலும் உள்ள கதை மாந்தர்களாக படிப்பவர்களை மாறிவிடச்செய்திருப்பது அவரது எழுத்தின் வலிமையைக் காட்டுகிறது.

நினைவின் ஆணிவேர் காதல் திருமணம் ஒரு குடும்பத்தில் எத்தனை வலிகளை உண்டாக்கிவிடுகிறது என்பதையும் காதலித்து மண்ந்தவனின் குற்ற உணர்ச்சியையும் காதலியான மனைவியின்  நினைவிழப்பை சரியாக்க அவன் படும் துயரையும் சொல்கிறது. இக்கதை வெட்டி ப்ளாக்கர்ஸ் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசினை பெற்றது என்பது கூடுதல் தகவல்.

கிராமத்துப்பெண் நகரத்துக்கு வந்து வீட்டு வேலை செய்கிறாள். பதின் பருவத்தில் அவள் தீபாவளிக்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்று ஆவலோடு இருக்கையில் இரண்டு வருடங்களாக மறுக்கப்பட்ட அவள் கனவு நிறைவேறும் வேளையில் ஊரிலிருந்து வரும் தகவல் அவள் கனவை கலைத்துவிடுகிறது கூடவே நம் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.

வசதியான மாமா, வசதி குறைந்த அத்தைப்பையன் குடும்பங்களை கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது எதிர்சேவை. மாமா குடும்பம் தன் வீட்டில் பெண் எடுக்காது வசதியான வீட்டில் பெண் எடுப்பதால் கோபம் கொண்ட சரவணன் மனமும் மாறுகிறது அழகரின் எதிர்சேவையில்.

பங்காளிகளுக்குள் இருக்கும் தேவையற்ற வீராப்பும் அதன் முரண்பாடுகளையும் எடுத்துச்சொல்கிறது வீராப்பு.

அண்ணன் தங்கை பாசத்தை தன் கையில் பணமில்லாவிட்டாலும் தங்கைக்கு தீபாவளி சீர் கொடுக்கும் மகாலிங்கம் அண்ணன் கண்முன்னே நிற்கிறார் ஜீவ நதியில்

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நாற்காலி இருக்கும். அதைச்சுற்றி ஒர் கதை இருக்கும் அப்பாவின் நாற்காலியிலும் அப்படி ஒரு கதை இருக்கிறது படித்தால் நெகிழ்ந்து போவீர்கள்.

இந்த நூலில் உள்ள பன்னிரண்டு கதைகளும் பன்னிரண்டு முத்துக்கள். அவற்றில் சில முத்துக்களையே உங்கள் முன் காட்டியிருக்கிறேன். புத்தகத்தை வாசித்து முடிக்கையில் நம் மனதில் ஒரு நிறைவை ஏற்படுத்திவிடுகின்றது இந்த சிறுகதை தொகுப்பு. அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் இத்தொகுப்பு.

96 பக்கங்கள் அழகிய வடிவமைப்பு. தரமான அட்டை மற்றும் தரமான் தாளில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள் கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகத்தார்.

விலை. ரூ 100.

கிடைக்குமிடம்: கலக்கல்ட்ரீம்ஸ் பதிப்பகம், எண் 3 நேரு தெரு, மணிமேடு தண்டலம். பெரிய பணிச்சேரி, சென்னை 600122. அலைபேசி: 9840967484

ஆட்டம், வி. சகிதாமுருகன், நூல்விமர்சனம்

நூல் விமர்சனம்!

 ஆட்டம்!  வி.சகிதா முருகன். பாவைமதி பதிப்பகம்.

Description: C:\Users\nice day\Downloads\sm.jpg
Description: C:\Users\nice day\Downloads\smn.jpg

தமிழ்வாசகப்பெருமக்களுக்கு சகிதா முருகன் என்ற பெயர் மிகவும் பரிச்சயம் ஆனது. தமிழில் வெளியாகும் பிரபலமான வார மாத இதழ்களில் இவரது நகைச்சுவை துணுக்குகள் ஏராளமாக வந்து சிரித்து மகிழவைக்கும். அப்படி நகைச்சுவைக்கு சொந்தக்காரரான சகிதா முருகனை ஒரு வித்தியாசமான சமூக நோக்கம் உள்ள எழுத்தாளராக இந்த ஆட்டம் சிறுகதை தொகுப்பு நம்மிடையே அறிமுகம் செய்துள்ளது.

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது சுவாரஸ்யமான முன்னுரையில் சொல்லியிருப்பது போல சகிதாமுருகன் வளர்ந்துவிட்ட எழுத்தாளர் என்பதை இந்த நூல் வாசிக்கும் போது உணர முடிகின்றது.

மொத்தம் இருபது கதைகள். ஒவ்வொன்றிலும் சமூக சிந்தனை விரிந்து கிடக்கிறது. சிறுகதைகள் என்றால் விரிந்து ஏழெட்டு பக்கம் இருக்கும் என்று எல்லோரும் பயந்துவிட வேண்டாம். இக்கால வாசிப்புக்கு ஏற்ப மூன்று நான்கு பக்கங்களில்  சிறுகதையை எழுதி சொல்லவந்ததை அழுத்தம் திருத்தமாய் பதிவிட்டு விடுகின்றார் எழுத்தாளர்.புத்தகத்தின் தலைப்பாய் வைத்துள்ள முதல் கதை ஆட்டம். ஆட்டத்தை அட்டகாசமாக துவக்கியிருக்கிறார். நாட்டுப்புற கலைகளை முதலாளி வர்கம் எப்படி கையாள்கிறது. வயிற்றுப்பாட்டுக்கு கலைகளோடு உடலையும் விற்கவேண்டிய நிலைக்கு ஆளாகும் நாயகி இறுதியில் எடுக்கும் முடிவு நம்மை அதிர்ச்சி அடையவைத்தாலும் நாட்டுப்புற கலைஞர்களை மோசமாக நடத்துவோர்க்கு ஓர் சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

உரம் வாங்க முடியாத விவசாயி உரக்கம்பெனியில் வேலைக்கு சேரும் போது நம்கண்களில் ஈரம் வர அண்ணன் கதை பங்காளி பாசத்தை சொல்கிறது. முதிர்கன்னிகளின் சின்ன ஆசை கூட நிறைவேறாமல் போவதை பட்டுச்சேலை பேச கணவனே தெய்வமாக கணவனையே சுற்றிவந்தபெண் கணவன் திடீர்விபத்தில் சிக்கவும் குடும்ப பாரத்தை சுமப்பதை அழகுற விவரிக்கிறது துணைக்கோள்.

உயிர்ப்போராட்டம் என்ற அறிவியல் புனைக்கதையின் முடிவு நாம் எப்படி இந்த பூமியை நாசாமாக்கி வருகிறோம் என்று மண்டையில் அடித்துச்சொல்கின்றது.. உயிர்பிழைக்க முடியாத நடுத்தர வயது வாசக எழுத்தாளர் செய்யும் தானம் நம்மை கண்கலங்கச்செய்கிறது.ஸ்டெர்லெட் உயிரிழப்பு சம்பவங்களை அப்படியே கண்முன்னே நிறுத்தி தொழிலாளர்களின் நிதர்சனத்தை காட்டுகிறது நிதர்சனம் என்ற முத்தாய்ப்பான கதை.

மகன்கள் நிராகரித்துவிட கணவனோடு கிளம்பும் சரோஜினியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றி நடை போட வைக்கிறது.மனைவியின் துரோகத்தை அறிந்து துடிக்கும் ஒரு கணவனின் முடிவு கைதட்ட வைக்கிறது துரோகமுள் சிறுகதையில்.

இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒரு மென் சோகத்தை கொடுத்து நம்மை கண்கலங்க வைத்தாலும் நடுத்தர வர்க்கத்தின் கஷ்டங்களையும் எதிர்பார்ப்புக்களையும் ஏமாற்றங்களையும் சுருங்கச்சொல்லிவிடுகின்றார்.

சுவாரஸ்யம் குறையாத வாசிப்புக்கும் இந்த சமூகத்தின் மீது சிறிதளவாவது மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டவைக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரராகி தனது முதல் தொகுப்பிலேயே அசத்தலான பாராட்டுக்களை பெறுகின்றார் சகிதா முருகன்.

வெளியீடு: பாவைமதி வெளியீடு, தண்டையார்ப்பேட்டை, சென்னை.

பக்கங்கள்:96. விலை ரூ 100.00.

மரக்குட்டி! நூல் விமர்சனம்!

மரக்குட்டி! நூல் விமர்சனம்!

ஒரு நல்ல நூலை வாசிக்க ஆரம்பிக்கையில் கீழே வைக்கவிடாமல் செய்து முழுவதையும் படித்து முடிக்கச் செய்யும். அப்படி ஒரு சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் சுஜாதாவின் சிறுகதைகளும் க்ரைம் மன்னர் ராஜேஷ்குமார் நாவல்களும் ஏற்படுத்தி நூலை முழுதாக ஒரே மூச்சில் வாசிக்க வைக்கும். அதே மாதிரி ஒரு வாசிப்பை மிக நீண்டநாட்களுக்கு பிறகு ஒரு நூல் எனக்கு ஏற்படுத்தியது. அது. கி.ரவிக்குமார் அவர்கள் எழுதிய மரக்குட்டி. சிறுகதை தொகுப்பு.

கி.ரவிக்குமார் என்ற எழுத்தாளரை பல்வேறு வார மாதப் பத்திரிக்கைகளில் அடிக்கடி ஜோக்ஸ், கவிதை, சிறுகதை வாயிலாக நீங்கள் அனைவருமே அறிந்திருப்பீர்கள். நானும் அப்படி அவரது எழுத்துக்களை ரசித்து வாசித்து அவரது வாசகனாக இருந்த சமயத்தில் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தில் இணைந்தபோது அவருடன் பழகும் வாய்ப்பும் நேரில் பேசும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றேன்.

அவரது திறமைக்கு இன்னும் புத்தகம் ஏதும் போடாமல் இருக்கிறாரே! என்று ஆதங்கப்பட்ட சமயத்தில் பாவைமதி பதிப்பகத்தின் வாயிலாக வந்திருக்கிறது 12 சிறுகதைகள் அடங்கிய இந்த மரக்குட்டி சிறுகதை தொகுப்பு.

ஒவ்வொரு சிறுகதைகளும் ஆழமான கதைக்கரு கொண்டுள்ளதுடன் அதை விவரிக்கும் பாங்கிலும் ஆழமான உரைநடையும் அதே சமயம் சராசரி வாசகனை ஈர்க்கும் எளிய நடையும் கொண்டிருப்பது சிறப்பு. பெரும்பாலான கதைகள் நினைவுகளை நோக்கிப் பயணிக்கிறது. பயணம் எழுத்தாளர்களுக்கு பிடித்த ஒன்று. இவரும் பயணங்களை விரும்பி பயணிக்கிறார்.

அவருடைய கதைகளினூடே நாமும் பயணிக்கையில் சிறிது களைப்பு கூட ஏற்படாததுடன் ஊக்கத்தை தருவதுதான் ஆசிரியரின் வெற்றியாகும். முதல் கதையான நீதானா அந்தக் கிளி! மனைவியின் அன்பை புரிந்துகொள்ளாத கணவனின் பாத்திரம் விரும்பியதை அடையமுடியாத விரக்தியும் வந்தவள் வேறொருவரை விரும்பி கிடைக்காது அவரை திருமணம் செய்து கொண்டதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது மகளையே ஆசையோடு வளர்க்க அவளும் காதல் என்று சொல்ல ஒரு கையாளாகாத விரக்தியில் அவரிடம் வெளிப்படும் கோபம். அப்புறம் அவர் தெளிவது என்று மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்.

நினைவைத்தேடியில் சிறுவயதில் தான் பார்த்த ஊர் இப்போது மாறிவிட்டிருப்பதை மனிதர்களும் மாறிவிட்டிருப்பதை அருமையாக சித்தரித்து இருக்கிறார். அங்கன ஊரே இல்லை! என்று முத்தாய்ப்பாக முடித்த விதம் கனக்கச்சிதம்.

செல்போனுக்கு ஆசைப்படும் அன்புமகனை ஓட்டலில் சர்வர் வேலை செய்யவைத்து திருத்தும் அப்பாவையும் அவரது பாசத்தையும் ரெண்டுங்கெட்டான் விடலை மகனின் வீறாப்பும் அப்புறம் அவன் உண்மை உணர்ந்து திருந்துவதும் செல்போனின் ரீங்காரமாய் இன்னும் ஒலிக்கிறது

வயசு 16 வீட்டில் பெண்பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோரின் தவிப்பை சொல்லுகிறது அழகாக. மார்க்கெட்டில் காய்கறி கடையில் வேலைப்பார்க்கும் எத்தனையோ சிறுவர்களை பார்த்திருப்போம். அவர்களுக்குள் பால்ராசுவைப் போல் எத்தனை பேரோ? உறவுகள் தொடர்கதையில் வாசித்து முடிக்கையில் ஒரு சொட்டு நீர் கண்ணில் சுரக்கும்.

அனிச்சம் தூய நட்பை பறைசாற்ற, சல்லிவேர் விவசாயத்தின் பெருமையைசொல்கிறது. உணவு உற்பத்தியும் ஒரு நாட்டின் ராணுவ சேவை போன்றதே என்று ஆசிரியர் சொல்லும்போது விவசாயிகள் உயர்ந்து நிற்கின்றனர்.

அன்பு மனம் வறுமையில் செம்மையையும் தூய நட்பு எதையும் எதிர்பார்க்காது கொடுக்கும் என்று சொல்லுகிறது பருவப்பேருந்து நிலையம் அக்கா போல் எல்லா அக்காக்களும் தம் மலரும் நினைவுகளை மொட்டவிழ்த்து பார்க்க கூடும் அந்த கதையை வாசிக்கும் போதே

மலையம்மா பவானி அன்பின் ஈரத்தை விவரிக்க மானம் நாயகி வடிவு பெண்மையின் வீரத்தையும் கற்பையும் காட்டிச்செல்ல இந்த தொகுப்பின் தலைப்பான மரக்குட்டி மர வளர்ப்பின் அவசியத்தை விரிவாக்கம் வசதி என்று சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை ஒரு மரம் எப்படி நம்மோடு உறவாடுகிறது நம் பால்யத்தை நம் சோகத்தை, நம் சந்தோஷத்தை எப்படி அதனோடு கொண்டாடுகிறோம் என்பதை ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தி இழக்கும்போது ஏற்படுத்தும் வலியை உணரச்செய்கிறது மரக்குட்டி. இறுதியில் வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் துளிர்த்து மரக்குட்டியாக வளர்கையில் நம்மிடம் ஒரு மலர்ச்சி ஏற்படுகிறது.

அந்த மலர்ச்சி இந்த புத்தகம் வாசித்த பின் நீடித்து இருப்பதுடன் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதும் புத்தகத்தை எழுதிய கதாசிரியரின் பெரும் வெற்றி.நூலின் வடிவமைப்பும் அட்டைப்படமும் மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது.

96 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை.ரூ 90.00 பாவைமதி பதிப்பகம் வெளியீடு.நூலினை பெற : கி.ரவிக்குமார். 9443393536

பாவைமதி வெளியீடு: எண் 55 வ.உ.சி.நகர்,மார்க்கெட் தெரு தண்டையார்ப்பேட்டை , சென்னை 81. அலைபேசி: 9444174272/9800114225

இ,மெயில்: pavaibooks@gmail.com