தேன்சிட்டு மின்னிதழ்- மே- 2020

தேன்சிட்டு மின்னிதழ்- மே -2020

கீழுள்ள லிங்கில் சொடுக்கி புத்தக வடிவில் வாசிக்கவும்

https://www.yumpu.com/xx/document/view/63293809/2020

கடைசிபக்க ஜோக்!

வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?

ஊரடங்கு போட்டு எல்லோரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கறாங்க! கொள்ளையடிச்சு பிழைக்க முடியலை! ஏதாவது நிவாரணம் கொடுத்தா நல்லா இருக்கும் எஜமான்!

சின்னசாமி, நத்தம்.

தேன்சிட்டு மின்னிதழ்- தஞ்சை ப்ரணா இணைந்து நடத்தும் மாபெரும் நகைச்சுவை சிறுகதைப்போட்டி!

தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து       நடத்தும்

மாபெரும்நகைச்சுவைசிறுகதைப்போட்டி-

மொத்தப்பரிசு ரூபாய்- 8000

முதல் பரிசு_ 3000- இரண்டாம்பரிசு ரூ 2000. மூன்றாம் பரிசு ரூ 1500

மேலும் மூன்று ஆறுதல் பரிசுகள் தலா.ரு 500.

போட்டிக்கான கதைகள் வந்து சேர கடைசி நாள்: 31-5-2020

முடிவுகள் ஜூலை 2020 இதழில் வெளியாகும்.

பரிசுபெற்ற கதைகள் தொடர்ந்து தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் தேன்சிட்டு இணையதளத்தில் பிரசுரமாகும்.

போட்டிக்கான விதிமுறைகள்:

கதைகள் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்க   வேண்டும்.

கதைகள் 800 முதல் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கதைகள் இதற்கு முன்னர் எந்த இதழிலும் ஊடகத்திலும் மின்னிதழ், இணையதளங்களில் பிரசுரம் ஆகாதவையாக இருத்தல் வேண்டும். படைப்பாளி இது தமது சொந்த படைப்பு வேறு எங்கும் பிரசுரம் ஆகவில்லை என்று சான்றளித்து கையோப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.

கதைகளை எம்.எஸ்.வேர்டில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டி குறித்து கடிதத்தொடர்போ போன் செய்து விசாரிப்பதை தவிர்க்கவும்.

போட்டியில் பிரபலமான எழுத்தாளர்கள் கலந்து கொள்வதை தவிர்க்கவும்.

போட்டிக்கான கதைகள் நடுவரால் பரிசீலிக்கப்பட்டு தேன்சிட்டு மின்னிதழில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

 .அனுப்பவேண்டிய மின்னஞ்சல் : thalir.ssb@gmaiil.com.   

  போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!

கவிதைக்காதலி!

கவிதைக்காதலி!

காதல்கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்

ஏறுமுகம்!

  என்னையும் உன்னையும்

  நெருங்க விடாமல் தடை வரும்போது

  நம்அன்பு தவிக்கலாம்!

ஆயிரம் இன்னல்கள் களம் புகலாம்!

இன்பம் விடுமுறையில் செல்லலாம்

ஈதலுக்கு வழியில்லாமல் போகலாம்

உண்மையான துடிப்பு உறைந்து விடலாம்

ஊக்கம் கோபித்து ஒதுங்கலாம்

எண்ணங்கள் மறையலாம்

ஏக்கங்கள் ஊற்றெடுக்கலாம்

ஐயம் இறுக்கமாகக் கட்டி விடலாம்

ஆனால் –

ஒற்றுமை என்றைக்கும் ஒன்று சேர்க்கும்

ஓயாமல் பாயும் நம்  *காதல் ஒவ்வொரு வினாடியும்

பலம் கொடுக்கும்

 பலன் அளிக்கும்!

அன்பு விலகியிருக்கும்போதுதான்

ஆற்றல் அதிகரிக்கும்

இன்முகம் தரிசனம் வழங்கும்

ஈகை குணம்தான்

உன் உண்மையான பேரழகு

ஊரும் உலகமும் சுதந்திரம் பெறுகையில்

ஊட்டச் சத்துகள்

நம்  *காதலுக்கும்கிடைக்கும்

எந்த வழி கிடைத்தாலும்

ஏறுமுகம்தான் நம் இருவருக்கும்!

ஐந்து விரல்களென்ன அப்பொழுது பத்து விரல்களும் இணையலாம்!

ஒன்பது கிரகங்களும்  ஒதுங்கி நின்று

ஓசையின்றி நம் அன்பைப்

பார்த்துப் பார்த்து ரசிக்கும்!

கடமை!

ஊருக்கும் உலகுக்கும்

 உபதேசங்கள் வழங்கும் முன்

நானும்நீயும்தான்

முதலில் கடைபிடித்துச் செயலாற்ற வேண்டும்!

விலகியிருந்தால்தான்

விதியை விரட்ட முடியும்

என்றால் –

அதைவிட வேறென்ன கடமை நமக்கு?!

இதென்ன சிறைக்கூடமா?!

பிணைவிடுதலைக்கு  முயற்சி செய்ய!

 நமக்கு நாமேகட்டுப்பாடுடன் இருந்தால்தானே

 நாளை  நாமும் காதலிக்கலாம்

நாட்டையும் காதலிக்கலாம்!

எங்கிருந்தாலும் வாழ்க என்றுநன்மைகளையும்

எங்கிருந்தாலும் ஒழிக என்றுதீமைகளையும்

 நாம்செயலாக்கும் கொள்கைகள்தான் நம் வாழ்க்கையின் அர்த்தம்!

நாம் ஆசை ஆசையாய்க் காதலிக்க

 வாழ்நாள் முழுவதும் போதாதுதான்!

ஆனால் -ஒரு நொடி அன்பில்கூட

உண்மை இருக்க வேண்டும்தானே!

எப்பொழுதும் இன்புற்றுரிருக்க வேண்டுமென்றால்

இப்பொழுதிருக்கும் இன்னல்களை

இனியும் தாமதியாது துரத்துவோம்!

  பரிபூரணம்

  புறத்தைத் தொட்டு விளையாடி

மகிழ்வது மட்டும்தான் *காதல்என்றில்லை!

 அகத்தில் நினைத்தபடியே

இன்புற்று வாழ்வதும்

 உண்மையான அன்புதான்

 என் இனிய உயிர்க்காதல் அன்பே!

  நீ அமைதியாக இருந்தாலும் சரி

ஆரவார அவதாரமெடுத்தாலும் சரி

   நீ ஒருத்தி மட்டுமே

வாழும் இருப்பிடம்  என்  இதயம்!

பெற்றோரும் உற்றாரும் ஊரும் உலகமும்

முழுமூச்சாய் சுதந்திரம் பெறட்டும்

பிறகு சந்தித்த பின்

ஒவ்வொரு நொடியும் பிரியாமலிருப்போம்!

 உண்மையான அன்பும்

 உன்னதமான அன்பும்

என்ன சொன்னாலும் கேட்கும்

எது சொன்னாலும் செய்யும்!

எல்லோரும் வாழ்ந்தால்தானே

 நானும்நீயும் கூட

நிம்மதியாய் சுவாசிக்க முடியும்!

உன்கன்னங்களிலும் இதழ்களிலும்

இடுகின்ற முத்தங்களுக்கு மட்டுமல்ல

 கவிதைகளுக்கும் காதலுக்கும்கூட

விடுமுறையளித்து விட்டேன்  எந்தக் கேள்வியும் கேட்காமல்

 முகம் சுழிக்காமல்  மனம் கோணாமல்

  நீயும்நிச்சயமாய் ஒத்துழைப்பாய் என்ற *பரிபூரண நம்பிக்கையில்!

சின்ன சின்ன குறிப்புகள்!

சின்ன சின்ன குறிப்புகள்!

சொத்தைப் பல் உள்ளவர்கள் கிராம்பை தூள் செய்து கொண்ட பின் கற்பூரத்தையும் சிறிது சேர்த்து சில துளிகள் துளசிச் சாறில் குழைத்து சொத்தை பல்லின் மீது பூசி வந்தால் பல் வலி குறையும்.

சிறு குழந்தைகள் மண்ணில் விளையாடி விட்டு அப்படியே விரல் சூப்பும் இதனால் கிருமிகள் தொற்றும் வயிற்றில் பூச்சிகள் உண்டாகும். இந்த பூச்சிகளை ஒழிக்க வசம்புவை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும் இந்த பொடியை தேனில் குழைத்து கொடுத்து வர குழந்தைகள் மலம் கழிக்கையில் பூச்சிகள் வெளியேறிவிடும்

.

கடலைமாவு, அரிசி மாவு, கோதுமை மாவு இவற்றில் வண்டுகள் வராமல் இருக்க உப்புத் தூளை சிறு துணியில் முடிந்து போட்டு வைக்கலாம்.

செருப்பு ஷூ போன்றவை மழையில் நனைந்து ஈரமாகிவிட்டால் கழற்றி வைக்கையில் நியுஸ் பேப்பரை அதில் திணித்து வையுங்கள். நியூஸ் பேப்பர் ஈரம் உறிஞ்சியவுடம் வெயிலில் காய வைத்து சிறிது டால்கம் பவுடரை தூவி வைத்தால் துர்நாற்றம் வராது.

மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் பாலில் மஞ்சள்தூள், சுக்குத்தூள் சிறிதளவு போட்டு குடித்துவர மூட்டுவலி குணமாகும்.

மாதவிடாய் வயிற்றுவலி பிரச்சனை உள்ளவர்கள் மாதவிடாய் ஆவதற்கு ஒருவாரம் முன்பிருந்து தினமும் காலையில் வெறும்வயிற்றில் வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து விழுங்கினால் வயிற்றுவலி பிரச்சனை வராது,

சிங்கில் பாத்திரங்களை தேய்க்கும் போது நாளடைவில் அந்த இடம் சொரசொரப்பாகிவிடும். இதை தவிர்க்க அங்கு ரப்பர் ஷீட் போட்டு அதன் மீது பாத்திரங்களை வைத்து துலக்கினால் சத்தமும் வராது. இடமும் தேயாது.

சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும் போது மஞ்சள் வாழைப்பழத்தை சேர்த்து பிசையவும். சப்பாத்தி மிருதுவாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.

வலைப்பாய்ச்சல்!

வலைப்பாய்ச்சல்!

நாம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற பாடத்தை கொரோனா வைரஸ் நமக்கு கற்றுத் தந்துள்ளது!- மோடி. எந்த திசையிலும் பயணிக்க வேண்டாம்னுதானே கத்து தந்திருக்கு..? https://twitter.com/KLAKSHM14184257 மயக்குனன்

பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும்- ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: மோடி. நீங்க எங்களுக்கு என்ன செய்யப்போறீங்க ஜீ? அதைச் சொல்லுங்க முதல்ல.

 கட்டுப்படுதல் ‘ என்கிற வார்த்தை ஒரு தொற்று நோயாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். https://twitter.com/RajeshNovelist

வெயில் ஒரு கோழை.அது எப்பவும் முதுகிலதான் அடிக்கும் #கோடைகால கொப்பளிக்கும் சிந்தனை

ஊரே கறிக்கடைலயும் மார்க்கெட்லயும் கும்பல் கும்பலா நிக்கிதுக. உயிர் மேல பயமில்லையா இல்ல போற உசுரு நல்லா தின்னு அனுபவிச்சிட்டு போகட்டும்னு நினைக்கிறாங்களா ?

பொண்ணுக்கு வரன் பார்க்க நினைப்பவர்கள் லாக்டவுண் காலத்திலேயே பார்த்து கல்யாணத்த முடிச்சிருங்க! சரக்கடிக்காத தரமான வரன் இப்பத்தான் அமையும்!!

வீட்டிலிருந்து பார்..! நூல் பல கற்றிடுவாய்! சிந்தனையால் சிகரந்தொடுவாய்! சுகாதாரம் பேணிடுவாய்! உடற்பயிற்சி செய்திடுவாய்! உள்ளங்கையில் உலகறிவாய்! சரிவரக் கைகள் கழுவிடுவாய்! கொரோனாவை விரட்டிடுவாய்! வீட்டிலிருந்து பார்..

கடுகு எண்ணெய்யை மூக்கில் ஊற்றினால் கொரோனா வைரஸ் சாகும் – பாபா ராம் தேவ்# அப்போ தாளிக்க கரண்டியை வாயில விடணுமோ..!

வீட்டம்மா சொல்லாமலேயே காலையில 11 மணிக்கெல்லாம் வெங்காயத்தை எடுத்து உரிக்க தொடங்கிடுறேன் ஒரு செயலை தொடர்ந்து 21 நாள் செய்யும் போது அதுவே பழக்கமாக மாறி விடும் என்பது உண்மை தான் போல

இந்த வருடம் அட்சய திரிதியை ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது என்று நகைக்கடை உரிமையாளர்கள் எத்தனை மகிழ்ச்சியில் இருந்திருப்பார்கள்!?

வரலாற்றைத் தொலைத்துவிட்டால் மொழியில் தேடலாம். மொழியைத் தொலைத்துவிட்டு வரலாற்றைத் தேடமுடியாது.

பிடித்த உணவு/திண்பண்டத்தை கண்ட உடன் சாப்பிட தோன்றினால் உங்கள் குழந்தை பருவ மனது இன்னும் குறையவில்லை என்று அர்த்தம்…!!!

இணை கோடுகள்..

இணை கோடுகள்..

  காசாங்காடு வீ காசிநாதன்

ஆனந்தியின் வீட்டிற்கு அவளிடம் கூறாமலே திருமண அழைப்பிதழை மதன் கொண்டு செல்கின்றான். வீடு பூட்டியிருந்தது அவனுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. அழைப்பிதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பு எழுதினான்.

மிகக்குறைந்த அளவில் 25 பேருக்குத்தான் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளேன். அதில் நீயும் அடக்கம்.

மணமகள் ஆனந்தி என்ற உனது பெயர் இருக்க வேண்டிய இடத்தில் நந்து.

அழைப்பிதழ் கொடுத்து, அவசியம் வர வேண்டும் என அழைப்பது தான் நமது மரபுஆனால் திருமணத்திற்கு வருவது “உனது விருப்பம” .என்று எழுதினான். அழைப்பிதழை கடித பெட்டியில் போட்டுவிட்டு மதன் வீடு திரும்பினான்.

ஆனந்தி அன்று இரவு விருந்து நிகழ்ச்சி முடிந்து வாடகை உந்துவில் (டாக்சியில்) அவளது இருப்பிடம் சென்று கொண்டிருக்கும் போது பழைய நினைவில் மூழ்கினாள்.

தற்போது 26 வயதாகும் ஆனந்தி 3 ஆன்டுகளுக்கு முன்புதான் இங்கு பணியில் சேர்ந்தார். அவள் பணிபுரியும் நிறுவனத்தின் சீனப் புத்தாண்டின் விருந்து நிகழ்ச்சி அன்று மாலை ஆர்சர்ட் சாலையில் உள்ள “உட்கார்டன் ஹோட்டலில்” மிகச் சிறப்புடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

“டிரிபிள்E” என்று தொழில் வட்டாரத்தில் அழைக்கப்படும் அந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பயன்பாட்டாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

குளிர்பான வரவேற்பு விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி களைகட்ட, விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களை சொல்லிய வண்ணம் முக்கிய விருந்து நடக்கும் இடத்தில் வந்து அமர்கின்றனர்.

அந்த ஹாலில் 30 மேசைகள் போடப்பட்டள்ளன. சிறிது நேரத்தில் விருந்தினர் மற்றும் பணியாளர்களால்  நிரம்புகின்றது.

மங்கலான ஒளி வெள்ளத்தில் ஜோடிகளின் நடனம், மதுக் கோப்பைகள் நிரம்பி வழிந்தன. பலவகையான அசைவ உணவுகள் “சால்மன் டிக்கா” உட்பட சுற்றுகளாக பரிமாறப்படுகிறது.

நிகழ்ச்சி நெறியாளர் இடை இடையே அறிவிப்புகளைச் செய்த வண்ணம் இருக்கிறார். ஆடல், பாடல் என நிகழ்ச்சி தொடர்கின்றது  நிறுவனத்தின் இயக்குனர் திருவாட்டி இவானா லிம் வரவேற்புரை.

திறமையாகச் செயல் பட்டவர்களுக்கு விருதுக்கான சான்றிதழும் வெகுமதியையும் வழங்கினார்.இவானா பணியாளர்கள் அனைவரையும் மனதாலும், வார்த்தைகளாலும் புகழ்ந்தார்.

சிங்கப்பூரின் கலாச்சாரத் தொடர்புடைய “சிங்கே”  நடனம் அதற்கே உரிய ஆரவாரச் சத்தத்துடன் உள்ளே நுழைந்து காதுகளை பதம் பார்த்தது..சிறிது நேரம் அவர்களது சாகசங்களை ஆர்ப்பரித்து அரங்கேற்றினர்..

.முடிவில் மேன்டரின் ஆரஞ்சுகளை உரித்து வீசி 5534 என்ற நான்கு இலக்க எண்ணை அறிவித்து அதே ஒலியிடன் வெளியேறியது.

இந்த நிகழ்ச்சிகளை ஆனந்தி முழுமையாக ரசிக்கவில்லை. கடைசி சுற்று அதிர்ஷ்ட குலுக்கலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது                      

*******

பதின்ம வயதில் ஆனந்தியின் பள்ளிக்கல்வி ஒரு சில தோழிகளுடன் இனிதே முடிந்தது.

கல்லூரி சென்ற போதுதான் மதனுடன் பழக்க மேற்ப்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகப் பழகினாள். மதன் சராசரியை விட நல்ல சிகப்பு, எப்போதும் அவனைச் சுற்றி மகிழ்வுடனும் சிரிப்புடனும் ஒரு நண்பர்கள் வட்டம் சூழ்ந்திருக்கும். இதனால் மதனிடம் மயங்கினாள் ஆனந்தி.

நாளடைவில் அவன்மேல் அதீத காதலை வளர்த்து கொண்டு மதனை சுற்றி வந்தாள்

அவனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியில் செல்வதில் அலாதி விருப்பம்.

கல்லூரி கலாச்சார விழாக்கள், இளையவர்களுக்கான போட்டிகளில் இவர்களது கல்லூரியின் சார்பாக இருவரும் கலந்து கொண்டு சில நேரங்களில் பரிசுகள் பெற்றுள்ளனர்

மதன் அவனது அம்மாவிடம் ஆனந்தியை விரும்புவதை சொல்லி வேலையில் சேர்ந்தபின் அடுத்த ஆண்டு அவளையே திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான்,

வீட்டில் யாரும் இல்லை, அப்பாவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் இருப்பதாக மாமா தொலைபேசியில் பேசினார், உடனடியாக மருத்துவனை விரைந்தான். பெரிய டாக்டர், அப்பாவிற்கு மூளையில் பிரச்சனை என்றும், ஒருவகை “என்சிபாலோபதி`”(Encephalopathy) என்று ஆங்கிலத்தில் கூறினார். செவிலியரிடம் மாமா கேட்டதற்கு

மூளையின் இரத்த குழாயில் கசிவு,

கொஞ்சம் சிக்கலான கேஸ்,

நாங்கள் முடிந்தவரை முயற்சிக்கின்றோம் எனப் பதில் கூறினார்.

மதனின் தந்தை கோமா நிலையில் மருத்துவமனையிலேயே இருக்கின்றார். டாக்டர்கள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் பிழைப்பது ஆண்டவன் செயல் என கைவிரித்து விட்டனர். ஆனந்தி ஒரு சில முறை மருத்துவமனை வந்து மதனுக்கு ஆறுதல் கூறினாள். நாட்கள் நகர்ந்தது. இரண்டு மாதக்களுக்குப்பின் தந்தை இறந்து விட்டதாக  மதனிடமிருந்து ஆனந்திக்கு தொலைபேசித் தகவல் வந்தது.

மாமா மகள் நந்து சில நாட்கள் அம்மாவுடன் தங்க நேர்ந்தது. அம்மாவை நந்து நன்கு கவனித்துக் கொண்டாள். அம்மாவிற்கு தேவையானவற்றை செய்து முடித்துவிட்டு பிறகு கல்லூரிக்குச் சென்று விடுவாள். மூன்று மாதம் எங்கள் வீட்டிலிருந்துதான் கல்லூரி சென்று வந்தாள். அம்மாவிற்கு நந்துவை பிடித்து விட்டது. மாமா மகளை திருமணம் செய்ய வேண்டும் அது அம்மாவிற்கு ஒரளவு ஆதரவாக இருக்கும் என்று உறவினர்களால் ஒருமனதாக முடிவானது.  திருமணத்திற்கு ஒன்றும் அவசரமில்லை எனச் சொல்லி அப்போதைக்கு இதற்கு முற்றுப் புள்ளியிட்டான்.

அப்பா இறந்த அதிர்ச்சியினால் அம்மா உறைந்து போனார். அப்பாவின்  நினைவுகளிலிருந்து அம்மா முழுவதும் மீளவில்லை. சில நேரங்களில் படுத்தே இருப்பார். நந்து ஒருத்தி தான் அம்மாவிற்கு ஆறுதல். தன்னுடன் ஒரு சகோதரி இருந்திருந்தால் அம்மாவிற்கு மிகவும் ஆறுதலாக இருந்திருக்கும், அவரது தேவையறிந்து நடந்து கொள்ளவும் இயலும். ஒரு தாய்க்கு மகனால் எல்லா பணிவிடைகளையும் செய்துவிட இயலாது என்பதை மதன் அறிந்து கொண்டான். அம்மாவா? காதலியா? இச்சூழலில் அம்மாவை விட மனமில்லை, மனதை கல்லாக்கினான்.

*******

மதனின் திருமணம் மாமா மகளுடன் முடிந்தது. அவனது திருமண நாள் இரவுதான் அந்த கேளிக்கை விடுதிக்கு அவளது தோழியுடன் ஆனந்தி சென்றிருந்தாள். நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் அந்த விடுதியில் ஆண்களும் பெண்களும் மதுபானம் அருந்திவிட்டு நடனமாடும் பொழுது போக்கு இடம். வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு மது நண்பனாக ஆரம்பிப்பது இது போன்ற இடங்களில் தான். அவளது தோழி தனது ஆண் நண்பருடன் நடமாடிக்கொண்டு இருமுறை ஆனந்தியை அழைத்தாள். ஆனந்தி நடனமாட விருப்பமில்லாத்தால் அன்று தான் மதுவை வெறுப்புடன் அருந்தினாள். மது மற்ற பானங்களை போன்று நல்ல சுவையில் இருந்தால் அனைவருமே குடிப்பழத்திற்கு அடிமை ஆகியிருப்பார்களோ? குடிப்பதற்கு நல்லாவே இல்லை, எதோ ஒன்று மாதிரி குமட்டுகிறது. இதை எப்படி தொடர்ந்து குடிக்கின்றார்கள்? என்ற கேள்வி எல்லோருக்கும் ஏற்படுவதைப் போன்று அவளும் உணர்ந்தாள். கிமு கிபி என்பது மாதிரி குடிப்பவர்களின் செயல்பாடுகள் மாறுபாடாக உள்ளது. குமு குபி என்றுதான் சொல்ல வேண்டும்.

பணியாளர்களை ஹலோ என்றவர்கள் “டேய் இங்கே வாடா… என்னடா முரைக்கிறே” என்கின்றனர். “நான் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறேன்….. டோன்ட் டிஸ்ட்ரப் மீ”.. என வசனம்.. தள்ளாடிக்கொண்டே நிற்கவும் இயலாமல் “மாப்ளே நான் ஸ்டெடியா இருக்கேன்” என்று கூறுவது,

இன்னும் பல… 

பெண்களும் உலகை மறந்து,

தங்கள் நிலை மறந்து உடை நழுவதும் தெரியாமலும் கூத்தடிக்கின்றனர்.

தோழியும் அவளது நண்பனும் நடனமாட அழைத்ததால் அதை விரும்பாமல் மீண்டும் ஒரு கோப்பை மது அருந்தினாள். அதன்பிறகு இருவரும் அவர்களது வீடுவந்து சேர்ந்தனர். உடல் அசதியில் கவலையை மறந்து தூங்கினாள்

                               .**********

அடுத்த வார இறுதியிலும் மீண்டும் தோழியுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றாள். எல்லோருக்கும் மதுபானம் வழங்கப்பட்டது. தோழி அவளது நண்பருடன் சிறிது நேரத்திற்கு பிறகு நடனமாடினாள். அப்போது இவானா என்பவள் ஆனந்தி அருகில் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.“ஏன் ஒருமாதிரி கவலையாக இருக்கின்றீர்கள்?“ உடல் நலமில்லையா? என வினாவினாள். இங்கு வருவதே கவலை மறந்து ஜாலியாக இருக்கத்தானே? ஆண் நண்பர் வரவில்லையா? எனக் கேட்டாள்  அப்போது அவளது தொலைபேசி சினுங்கியது. எதோ அவசர செய்தி, தொலைபேசியில் பேசிக்கொண்டே தனது பெயர் தகவல் அட்டையை (விசிட்டிங் கார்டு) ஆனந்தியிடம் கொடுத்துவிட்டு உதவி தேவையெனில் தொடர்பு கொள்ளவும் எனக்கூறி வெளியேறி விட்டாள். ஆனந்தி  நல்லநிறம்… அலைபாயும் விரிந்த கூந்தல்… பார்ப்பவர்கள் மீன்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் வசீகரம்….. ஆனந்தியின் அங்க அமைப்புக்களும், முகத்தோற்றமும் தனது நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுவாள் என தீர்க்கமான முடிவில் அவளது அலுவலகம் நோக்கிச் சென்றாள். ஆனந்தி மது அருந்திவிட்டு அவளது பெயர் அட்டையை பார்த்தாள். இவானா ஒரு நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

ஆனந்தி முன்புபோல் இல்லை, எதிலும் நாட்டமில்லாமல் இருந்தாள். கல்லூரி இறுதியாண்டில் சில பாடங்களில் வெற்றி பெறவில்லை. படிப்பிலும் ஆர்வமில்லை. அன்று மதியம் இவானாவை தொலைபேசியில் அழைத்து தனக்கு எங்கேனும் வேலை வாங்கி தர இயலுமா? எனக் கேட்டாள். அதற்கு அவள் இன்று மாலை கேளிக்கை விடுதிக்கு வருவேன் அங்கு பேசிக் கொள்ளலாமே எனக் கூறினாள்.

சிறிய நேர்முக விசாரணைக்குப்பின் ஆனந்திக்கு இவானாவின் நிறுவனத்திலேயே வேலையும் கிடைத்தது. வேலையில் சேர தயக்கமானலும் இப்போதைக்கு இதில் சேர்ந்துவிட்டாள். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகமல் இருக்க இதுதான் தற்போதைக்கு சரியெனப் பட்டது

இந்த நிறுவனத்தில் சேர்ந்தபின் ஆனந்திக்கு தேவைக்கு அதிகமான ஊதியம், பரிசுகள், வசீகரமாக இருந்த ஆனந்தி டிசைனர் கலெக்ஷன் ஆடைகளை தேர்வு செய்து அணிந்தாள். விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், கைப்பைகள், விதவிதமான காலணிகள், பலவகை கைக்கடிகாரங்கள் மற்றும் அணிகலண்கள் என மாற்றங்கள்.

*******

மதனின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இல்லை. மாமா மகளை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் விரக்தியுற்றவனாகவும், ஆனந்தியின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.  மதன் தொலைபேசியில் அவ்வப்போது அழைக்கும் நேரத்தில் ஆனந்தி உற்சாகமாகப் பேசுவதில்லை, வேலை அதிகம் இருப்பதாக கூறிவிடுவாள்  நேரில் பார்ப்பதையும் தவிர்த்து வந்தாள். ஒருமுறை எதோச்சையாக இருவரும் மாலை நேரத்தில் புகீஸ் கடைத்தொகுதியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதும் இருவருக்குமே கட்டிப்பிடித்து தழுவிக் கொள்ள வேண்டும் என உள்மனது துடித்தது. ஆனால் செய்கையில் கைகளை குலுக்கிக் கொள்ள மட்டுமே உடல் அசைந்தது. இருவரது மூளையும் மிக விரைந்து செயல்பட்டு முதல் கட்டளையை இரண்டாவது கட்டளை “ஓவர் ரைடு” செய்து கட்டுப்படுத்தியது.

மதன் சற்று இளைத்திருந்தான், ஆனந்தியின் முகத்தில் சோர்வான தோற்றம் தெரிந்தது. இருவரும் அவர்களது உடல் அமைப்பின் மாற்றத்தை பற்றியே பேச்சு இருந்தது!. அருகில் இருக்கும் உணவகத்தில் தேநீர் அருந்தலாமே!! என மதன் கூறியதும் இருவரும் அங்குச் சென்று தேநீர் கொண்டு வரும்படி கூறி அமர்ந்து பேச்சைத் தொடர்ந்தனர். மதன் நந்துவுடன் ஈடுபாடற்ற வாழ்க்கைதான் வாழ்ந்து கொன்டிருப்பதாகக் கூறினான்.  அப்போது ஆனந்தி தனது நிலைமை பற்றி கூறுகையில் தடுமாறி தடம் மாறிவிடுவேனோ? அல்லது தடம் மாற தடுமாறுகின்றேனா? என்பதும் வெறுப்பில் செய்வது தப்பா எனப் புரியவும் இல்லை எனக் கூறினாள். இதுவரை மன உறுதியுடன் இருக்கின்றேன், தற்போதைய கணினி பயிற்சி முடிந்தபின் முதலில் வேறு  நல்ல வேலையில் சேர வேண்டும் எனவும் கூறினாள்.

நாம காதலித்தது உண்மை, இன்று இணைகோடுகளாக தனித் தனியாய் சென்று விட்டோம். என்று மதன் கூறி முடிக்கவும் இருவரும் அங்கிருந்து எழுந்து வெளியே நடந்தனர்.

***********

ஆனந்தி பணிபுரியும் நிறுவனமான “டிரிபிள்E” என்பதின் விரிவாக்கம் இவானா எஸ்கார்ட்ஸ் எண்டர்பிரைஸ் (Evanaa Escorts Enterprise). இது ஒரு வாடிக்கையாளர் சேவை நிறுவனம். வளர்ந்த நாடுகளில் வேறுன்றிய இத்தொழில் வளரும் நாடுகளில் பரவி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து தனியாக சுற்றுலாவரும் ஆண் வாடிக்கையாளருக்கு இங்குள்ள முக்கிய இடங்களை அழைத்துச் சென்று காண்பிப்பது, கடைத் தொகுதிகளுக்கு அழைத்துச் செல்வது அவர்களது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதுமான சேவை.

இவர்களது சேவைகளுக்கு ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியே குறியீட்டு வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பலவகை சேவைகள்.

மதனின் நண்பன் பிரதீபன் அமெரிக்காவிலிருந்து இங்கு அலுவலக வேலையாக வருவதாகக் தொலைபேசியில் கூறியிருந்தான்.அலுவலக வேலை முடிந்து வார இறுதியில் அவசியம் சந்திப்போம் என இங்கு வந்ததும் பேசினான். மதன் இந்தியா சென்று அங்குள்ள பள்ளியில் படித்தபோது அவனது வகுப்புத் தோழன், குறும்புத்தனம் அவன் கூடவே பிறந்தது.

பிரதீபன் தற்போது வந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டதென்றும் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு வரும்படி கூறினான். வேலை முடிந்து பிரதீபனை பார்த்து இருவரும் பலவற்றை பற்றி பேசிக் கொண்டிருந்தனர் நேற்று வெளியில் முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்க உடன் ஒருத்தியை கூட்டிச் சென்றதாகக் கூறினான்..அவளைக் கூட்டிசென்றதற்கு உன்னையே கூப்பிட்டு போயிருந்திருக்கலாம் எனப் புலம்பினாள். புகைப்படத்தில் பார்க்க குடும்பப் பொண்ணு மாதிரி யிருந்தா..…தொட்டதுக்கே. சத்தம் போட்டுட்டா…ஒரே நிமிடத்தில் நோகடிச்சுட்டா.

வேனும்னா நீயும் பாரு என கைத்தொலைபேசியில் இருந்த அவளது புகைப்படத்தை காண்பித்தான்.

புகைப்படத்தை பார்க்கும் முன் மதன் கூறியது, பொதுவாக மனிதர்களை இரண்டு வகைப்படுத்தலாம்.

சந்தர்ப்பங்களையும் சூழ்நிலையையும் “வலுவான காரணமாக்கி தப்பு செய்பவர்கள்” ஒரு வகை.

எந்த சூழலிலும் “மன உறுதியுடன் இருந்து தப்பே செய்யாதவர்கள்” இன்னொரு வகை, அவர்கள் “எங்கேயும் எப்போதும் நெருப்புடா.”.என விளக்கம் கூறினான்.

புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சி..

அதில் கன்னத்தில் குழி விழும் அதே சிரிப்புடன்..ஆனந்தி,.

எளிமை மனிதர்கள்!

எளிமை மனிதர்கள்!

வரதராஜன் ஐயா.. 

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள ஆனைகுளம் கிராமத்தை சார்ந்தவர்..யார் இவர் .. இவரைப் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் .. இவர் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன..

தொடர்ந்து கட்டுரையை வாசியுங்கள்

சாதாரண பேருந்து நடத்துனர் பணி தான் ஆனால் இவர் சமுதாயத்தில் மறைமுகமா ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்..

சின்னவயதில் எங்கள் ஊர் அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கான நல்லொழுக்க வகுப்பு ஒன்று நடக்கும் அதில் சிறுவர்கள் நாங்கள் அனைவரும் ஒன்று கூடுவோம்..

அதில் குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு விஷயங்கள் கொடுப்பார்கள். அதற்கு வகுப்பு எடுக்க தொலைவிலிருந்து, தன் கையில் காசு இல்லாவிட்டாலும், பெட்ரோல் போடுவதற்கு பணம் இல்லாவிட்டாலும் BajajbM80 வாகனத்தில் ஒருவர் வருவார். வந்து குழந்தைகளுக்கு அருமையான கதைகள் சொல்வார். குழந்தைகளை ஊக்கப்படுத்தி புத்தகங்களை பரிசாக வழங்குவார்.. அவர் யாரும் அல்ல இந்தக் கட்டுரையின் கதாநாயகன் வரதராஜன் ஐயா அவர்கள்.

என் வாழ்க்கையில் முதல் முதலாக பரிசு வாங்கியது இவரின் கையால்தான். அன்று இவர் ஊக்கப்படுத்தி கொடுத்த ஒரு சிறிய புத்தக பரிசு எனக்குள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது..

பொதுவாக நடத்துனர் என்றாலே எரிந்து விழுவார்கள், கோபப்படுவார்கள் பயணிகளை ஏசுவார்கள் இந்த கண்ணோட்டத்தில் தான் நாம் பார்த்திருப்போம்..

ஆனால் இவரோ எல்லாவற்றிலும் தனித்துவம் மிக்கவர். பள்ளி செல்லும் போது நாங்கள் செல்லும் பேருந்தில் இவர்தான் நடத்துனர். பேருந்தில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எங்களை எல்லாரையும் நின்று ஏற்றிச் செல்வார். அவ்வளவு கூட்டத்திற்கு இடையிலும் எங்களுக்கு பொது அறிவு கேள்விகளை கேட்டு. அந்தப் பேருந்து பயணத்தையே இனிமையாக மாற்றுவார்..

சாதாரணமான குக்கிராமங்களில் டீக்கடைகளில் அரசியல் சமுதாய சிந்தனைகள் என பல விஷயங்கள் பேசுவார்கள் ஆனால் ஐயா அவர்கள் தான் வேலைசெய்யும் பேருந்தை அறிவுக் களஞ்சியமாக மாற்றிவிடுவார்.. கிராமத்தில் வாழும் ஒரு வயதான தாத்தாவை கூட கலகல என சமுதாய சிந்தனையோடு பேச வைத்து விடுவார். ஐயாவிடம் ஒரு இரண்டு நிமிடம் பேசினாலே நமக்கு சமுதாயத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் மிகப்பெரிய அளவில் அக்கறைகளும் யோசனைகள் தோன்றும்.. தான் பணி செய்த காலத்தில் சமுதாயத்துக்காக நடத்துனராக இருந்துகொண்டே இவர் செய்த பணிகள் ஏராளம்.

பொதுவாக அன்று பொறியியல் பட்டப்படிப்பு படிப்பதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. தென்காசியில் ஒரு மிகப்பெரிய தனியார் பயிற்சி நிறுவனம் நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி கொடுத்தார்கள் .

அதில் சேருவதற்காக நானும் என்னுடைய நண்பனும் சென்றிருந்தோம் . சென்ற இடத்தில் நுழைவுத்தேர்வு பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச மாணவர்கள் மட்டுமே அனுமதி உண்டு, மேலும் அதில் சேர்வதற்கு 5000 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் அன்றே கடைசி தேதி.. என்று பயமுறுத்தி விட்டார்கள்.. காசு கட்டினால் மட்டுமே உங்களுக்கு பயிற்சி உண்டு என்று சொல்லிவிட்டார்கள் .( வழக்கமாக கல்விநிறுவனங்கள் வியாபார உத்தியாக பயன்படுத்தும் முறைதான் இது)

5000 ரூபாய் காசு இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன்.. அன்றைய தினம் நான் ரோட்டில் நின்ற நேரத்தில் ஒருவர் கையில் மஞ்சள் பையுடன் வேர்த்து விறுவிறுத்து வந்தார். தனக்கு தெரிந்த “பையனுக்கு” காசு கொடுத்து இந்த நுழைவுத்தேர்வு பயிற்சியை தொடர்வதற்கு உதவி செய்வதற்காக வந்திருந்தார்..

அப்பொழுது அவரைப் பார்க்கும் பொழுது எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. யாரோ ஒருவருக்கு கல்வி கொடுப்பதற்காக தான் உழைத்த உழைப்பை செலவிடுவதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.. கல்விக்காக இவர் செய்யும் செயலைக் கண்டு இவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு..

ஒருமுறை வரதராஜன் ஐயாவை பார்ப்பதற்காக சுரண்டை க்கு சென்றேன்.. என்னை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார். ஒரு சிறிய அறை, அந்த அறையில் ஏராளமான புத்தகங்கள், உடுத்துவதற்கு இரண்டு துணிகள் குளிப்பதற்கு ஒரு துண்டு, இவ்வளவுதான் ஐயாவின் வாழ்க்கை.. ஒரு மனிதன் வாழ்வதற்கு இவ்வளவு போதும் என்று எனக்கு எடுத்துக் காட்டினார். இதுவெல்லாம் இவர் மறைமுகமாக என் வாழ்க்கையில் உருவாக்கிய மிகப்பெரிய தாக்கங்கள்..

அத்தையே சிறப்புவாய்ந்த இந்த மாபெரும் மனிதர் இன்று உலகத்தை ஆட்டிப்படைக்கும் corona விற்கு இவர் செலுத்திய தொகை 1,50,000 ரூபாய் என்பதைப் பார்த்து மிரண்டு விட்டேன்..

என்ன மனிதன் இவர், இப்படி எல்லாம் ஒருவர் இருக்க முடியுமா என்று ஆச்சரியம் வருகிறது. வாழ்க்கையின் கடைசி காலத்திற்கு சேர்த்து வைத்திருந்த காசை இப்படி மொத்தமாக கொடுக்கிறாரே என்ற வியப்பும் தோன்றுகிறது..

சாதாரண ஒரு பணியில் இருந்து கொண்டு சமுதாயத்திற்காக இவ்வளவு பெரிய விஷயங்களை செய்ய முடியுமா என்பதை நினைக்கும் பொழுது பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகிறது..

சிறுவயதிலிருந்து எனக்குள் நல்ல சிந்தனைகளை நீங்கள் விதைத்ததில் விளைவு என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி உள்ளது .அதற்கு நான் என்றுமே நன்றி சொல்வேன்..

மேலும் சுரண்டை வட்டாரத்து இளைஞர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி நீங்கள். நீங்கள் எப்பொழுதும் மிகவும் ஆரோக்கியமாக மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எத்தகைய துரோகத்தையும் எத்தகைய விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு இத்தகைய மகத்தான காரியங்களை தொடர்ந்து செய்வதற்கு வாழ்த்துக்கள் ஐயா..

உங்களை நினைத்து இளைஞர்கள் நாங்கள் பெருமை கொள்கிறோம் வாழ்த்துக்கள் ஐயா..செல்வ ராம ரத்னம் அவர்களின் முகநூல் பதிவு

காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்

காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்

தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி, BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்”.

உண்மையில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாகக் கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் T. சிவா, “தற்போது திரையுலகம் பலமுனைகளிலும் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா டிக்கெட் மீது ஏற்கெனவே அதிகப்படியான வரிவிதிப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசு மேலும் 8 சதவீத TDS வரி விதித்துள்ளது. நாங்கள் இப்போது மத்திய அரசிடம் இதனை முறையிட டெல்லி செல்லவுள்ளோம். 10 சதவீத படங்களில் மட்டுமே ஒரு வருடத்தில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. இன்று இங்கே தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல முயற்சியைக் கண்டுகொண்டு அதனை அடையாளப்படுத்தி மிகப் பெரிய அளவில் எடுத்து செல்கிறார். இது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்என்றார்.

நடிகர் மைம் கோபி, “உண்மையில் இப்படம் ஒரு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது . இயக்குநர் RDM மிக நுண்ணிய, இதயம் அதிரும் சம்பவத்தை அழுத்தமாகத் திரையில் தந்துள்ளார். அதில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து இரண்டாம் பகுதியில் முரட்டுத்தனமாக அவர் மாறுவதைக் கண்டு நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். ரவீனா மிக அழகானதொரு நடிப்பைத் தந்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும். இப்படத்தின் ஆக்ஷன் பெரிய அளவில் பேசப்படும். படத்தின் க்ளைமாக்ஸ் பலரையும் அதிரவைத்து, மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்என்றார்.

நாயகன் சுரேஷ் ரவி பேசியது, “நானும் இயக்குநர் RDM இருவரும் 8 வருடங்களாக இணைந்து படம் செய்ய வேண்டும் எனப் பேசிக் கொண்டிருந்தோம். இப்போது எங்கள் கனவு உண்மையாகியுள்ளது. எங்கள் படத்தை முன்வந்து வாங்கியதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. அவர் வெளியிட்ட பல படங்கள் தரமான கதையுடன், நல்ல பெயர் பெற்று வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் காவல்துறை உங்கள் நண்பன்படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றாது. காவல்துறை பற்றிய நல்லவற்றை பல படங்கள் சொல்லிய நிலையில் இப்படம் அதன் வேறொரு முகத்தைக் காட்டும். எல்லாத் துறையிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும் இதில் நாங்கள் காவல்துறையின் காட்டப்படாத பக்கத்தைக் காட்டியுள்ளோம்என்றார்.

BR Talkies சார்பில் பேசிய தயாரிப்பாளர் B. பாஸ்கரன், “முதன் முதலாக இயக்குநர் RDM என்னிடம் கதை கூறியபோது எனக்கு பல இடங்களில் அதிர்ச்சியாக இருந்தது. சில ஆச்சர்யங்களும் இருந்தது. இந்தப் படம், பார்ப்பவர்களைப் பெரியளவில் பாதிக்கும் குறிப்பாக இறுதிக்காட்சி பெரும் அதிர்வை தரும்என்றார்.

நடிகர் ராம்தாஸ், “இயக்குநர் RDM ஒரு மினி மணிரத்னம் எனலாம். மிகவும் தெளிவான சிந்தனையுடன், குறைந்த பட்ஜெட்டில் நேர்த்தியாக, எந்தவித சமரசமுமின்றி படம் எடுக்க கூடியவர். இப்படத்தில் பங்கு கொண்டது மிகவும் மகிழ்ச்சிஎன்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் மொத்த நிகழ்வையும் அழகாகத் தொகுத்து வழங்கினார். அவர், “இப்படத்தைத் தமிழின் மிக முக்கிய இயக்குநர்களுக்குத் திரையிட்டுக் காட்டினோம். அனைவரும் படத்தை வெகுவாக ரசித்ததோடு இப்படத்தைத் தங்கள் படம் போல் கருதி விளம்பரம்படுத்தப் போவதாகக் கூறினார்கள். இப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்என்றார். http://ithutamil.com/

பாடல்கள் பலவிதம்! ”ப்ரணா”

பாடல்கள் பலவிதம்!   ”ப்ரணா

திரை இசைப்பாடல்களில் ஒத்த கருத்து உடைய பாடல்கள் ஏராளம்!  அத்தகைய பாடல்களை பிரபல கவிஞர்கள் தம் நடையில் வித்தியாசமாக எழுதி ரசிகர்களை மகிழ்வித்து கொள்ளை கொண்டிருப்பார்கள்.

பிரபல கவிஞர்கள் திரை இசையின் சிறப்பான கவிஞர்கள் திருமிகு கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து தம் தம் காலகட்டங்களில் எழுதிய  ஒருமித்த சிந்தனை தரும் பாடல்களை பிரபல எழுத்தாளரும் கவிஞருமான தஞ்சை ப்ரணா இங்கே தொகுத்து வழங்குகிறார். வாசித்து மகிழுங்கள்!