ஹைக்கூ கவிதைகள்!

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு


1.   தழுவும் மோகினி!

நழுவிக்கொண்டே சென்றாள்

காற்று!


2.   இரவும் பகலும் வருகை!

அயராமல் சுற்றியது

பூமி!


3.   தேய்ந்து கொண்டே போனது நாட்காட்டி

வளர்ந்து கொண்டிருந்தது

ஆண்டு!


4.   சிதறும் துகள்கள்

செல்ஃபி எடுத்தது

ஓட்டிடுக்குள் புகுந்த ஒளி!


5.   குழந்தையின் சிரிப்பு

!கூட்டிவந்தது

குதூகலம்!


6.   எண்ணெய் தீர்கையில்

சுடர் விட்டது!

அகல்விளக்கு!


7.   முதுமை!

முகத்தில் ரேகைகள்!

அனுபவம்!


8.   பற்றிக்கொண்டது

பிரிய மறுக்கிறது!

சுவரில் கொடி!


9.   பறக்கும் நட்சத்திரங்கள்!

பார்த்து ரசித்தது பூமி!

மின்மினி!


10. பிரிவுத் துயர்

வாடி வதங்கியது!

கூந்தலில் பூக்கள்!


11.  நீர் இருந்தும்

மூழ்கவில்லை!

குளத்து மலர்கள்!


12. வலைவீசி தேடப்படுகிறது

வாழ்க்கை!

மீனவர்கள்!


13. இருளில் ஒளிர்ந்தன

மரத்தில் மலர்கள்!

மின்மினி!


14. காய்த்தது

பழமானது

இனித்தது நட்பு!


15. காட்டிக் கொடுத்தாலும்

தூற்றப்படுவதில்லை!

கடிகாரம்!


16. சண்டையில் சிதறிய பருக்கைச்சோறு

பகிர்ந்து கொண்டன

எறும்புகள்!

ஹைக்கூ கவிதைகள்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

வெள்ளை அடிக்கையில்                         

அழுக்காகிப் போனது!

பக்கத்துவீடு!

கொளுத்தும் வெயில்

குடையாய் வந்தன

மரங்கள்!

பிம்பங்கள் பெரிதாகையில்

தொலைந்து போகின்றது!

நிஜம்!

தொட்டியில் அடைபட்டது

வாஸ்து மீனின்

சுதந்திரம்!

கண்டித்தாலும் விடுவதில்லை

குழந்தைக்கு

மண்ணாசை!

மேடு பள்ளங்கள்!

தடுத்து நிறுத்துகிறது

வாழ்க்கையின் ஓட்டத்தை!

   

விரல் அசைவில்

பிறக்கின்றன

எழுத்துக்கள்!

நினைவுகள் பூக்கையில்

வாசம் வீசியது

நட்பு.

இருள் கவ்விய சாலைகள்!

மிளிர்ந்தன

வாகன வெளிச்சம்!

அமாவாசை இரவு

நெருங்கி வந்தன

நட்சத்திரங்கள்!

விழித்து எழுந்ததும்

கலைந்து போனது

கனவு!

இலையுதிர்த்த மரங்கள்!

காணாமல் போனது

நிழல்!

கொட்டிக்கிடந்தது

பிச்சைக்காரர்களிடம்

சில்லறை!

தூரப் போகிறார் கடவுள்!

நீண்டு கொண்டே போகிறது!

தர்ம தரிசனம்!

விலை நிர்ணயம் ஆனதும்

உரிமை பறி போகிறது!

தேர்தல்!

நிறுத்தம் வந்ததும்

பிரிந்து போகிறது சிநேகம்!

பேருந்துப் பயணம்!

நாவில் கயிறு

வலியில் துடித்தது

கோயில் மணி!

கொள்ளைபோனது

புகார் இல்லை!

குழந்தையின் சிரிப்பு!

பருக்கைசோறு

பசியாற்றியது

பறிமாறியது குழந்தை!

ஈரமான கால்கள்!

உலர்ந்ததும் உதிர்ந்தன உறவுகள்!

மணல்!

குறும்பா கூடம்

1

கோவில் யானை

மதம் பிடித்து நகரும்

சாமி ஊர்வலம்

2

மயானத்தை கடக்கையில்

மேலும் கீழும் அசைகிறது

துறவியின் உதடுகள்!!!

3

இரவு காவலாளி

பகலில் குழந்தைக்கு சொல்கிறார்

நிலா கதைகள்

ஜீவா, கோவை.

இன்னும் நிமிர்ந்தபாடில்லை

கஜா புயல் சாய்த்துப் போட்ட

சவுக்கு விவசாயியின் வாழ்க்கை

மரமேறும் தொழிலாளரின் 

எதிர்காலம் குறித்த கேள்விக்குறியாய்

மரத்தில் கொத்திய அரிவாள்

வெளிச்சக் கோடுகள்

கிழித்து விளையாடுகிறது

மின்மினிப் பூச்சி

காற்றுவெளியில்
இசைக்குறிப்புகளை எழுதிச் செல்கின்றன
சிறகசைக்கும் பறவைகள்.

மகிழ்நன் மறைக்காடு

மழைமேகம்

வந்துகொண்டிருக்கிறது

துரத்திவிட காற்று

துளிப்பா எழுதுபவனின்
அப்பா ஆசிரியர் என்பதால்
எழுதினான் இன்று ஆசிரியப்பா.

சிறுவயசு முதலே

எனது விசிறி ஆனது

பனையோலை

காணவில்லை அறிவிப்பு சுவரொட்டி 

கண்களில் பட

மீண்டும் காணாமல் போகிறான்..

காணாமல் போனவன்

புது வண்டி ரவீந்திரன்

கொட்டும் பனி
மேசைமீது குளிர்காய்கிறது
கோப்பை நிறைய தேநீர்.

ச. கோபிநாத் …

கடுங்குளிர்
சுருட்டும் படுக்கைவிரிப்புக்கடியில்
கலைந்தோடும் எறும்புகள்!
@
நீலவானம்
எட்டிப்பார்த்ததும் உடைந்துபோகும்
நீர்க்குமிழிகள்!
@
உதிர்ந்த பூக்களை
உதட்டில் வைக்கிறேன்
அப்போதும் இனிக்கும் தேன்!
@
அந்தரத்து வானம்
தேங்கும் அணைக்கட்டில் துள்ளும்
மீன்கள்!
@
காலி மதுப்புட்டிகளைப்
பொறுக்கும் சிறுவனின் வீட்டில்
வீட்டுப்பாடம் எழுதும் அம்மா!

ஹைக்கூ உமா.

நிறைந்த குளத்தில்
மூழ்கிக் கிடக்கிறது
குன்றின் நிழல்

கலாராணி லோகநாதன்

வானவில் கவிதை
நாளிதழில் வெளியானது
கறுப்பு வெள்ளையில்…

காகிதத்தில் கவிதை
கடற்கரை மண்ணில் புதைந்திருக்கும்
கவிஞனின் பெயர்…

தண்ணீர் தேசம்
புத்தகத்தைப் படிக்கும் போது
இடியுடன் மழை…

வானவில் வரைந்த மகள்
நனைந்தபடி இருக்கிறாள்
மழைநீரில்…

ஒரு கட்டத்தில்
நான்கு முக்கோணங்கள் தெரிய
ஒரு சிலுவை வரைகிறேன்…

மகளெழுதிய தேர்வு தாளில்
தவறான பதில் அனைத்திலும்
சிலுவை…

ஸ்.டென்னிஸ்
மதுரை

குறும்பா கூடம்!

குறும்பா கூடம்!

தோகை விரித்தாடும் மயில்

நின்று ரசிக்கின்றன

சூழ்ந்த மழை மேகங்கள்.

சாளரத்தின் அருகே

தொட்டிச் செடிகள்

தேடி வந்தது மழைச்சாரல்.

உருண்டோடும் கூழாங்கல்

திசையெங்கும் கேட்கிறது

நதியின் பாடல்.

கண்ணாடி முன்நின்று

சிரிக்கும் குழந்தை

பிரதிபலித்தது உற்சாகம்.

பள்ளி சுவரெங்கும்

வண்ண வண்ண ஓவியங்கள்

திசைதிரும்பியது வண்ணத்துப்பூச்சி.

ச. கோபிநாத்  சேலம்

உடைந்த பொம்மை 

ஏக்கத்தோடு பார்க்கும் 

தாயில்லா குழந்தை 

உடைந்த மண் சட்டி

பாதி நிறைந்த நீரிலும் 

முழு நிலா 

தொலை தூரம் 

பறந்து வந்த பறவை

நின்றது சோதனைச் சாவடியில் 

ஓங்கி அடித்துவிட்டு 

பின்வாங்கும் கடல் அலைகள் 

என்ன தவறு செய்ததோ கடற்கரை 

கவிஞர் மீன்கொடி.

வெளியே போனதால்
உள்ளே வந்தது
கொரோனா !

அரசனையும் ஆண்டியையும்
ஒன்றே என்றது
சமத்துவ கொரோனா !
 

கற்றல் தடைபடவில்லை
விடுமுறையில் வேலை
வாழ்க்கைப் பாடம் !

 ச.கிறிஸ்துஞானவள்ளுவன்.வேம்பார்

வறண்ட நதி

கடந்து செல்லுகின்றது 

வயிறு நிறைந்த லாரி 

வறண்ட நதியில் 

நீச்சல் கற்கிறது 

பறவையின் நிழல் 

பனை மரம் 

ஆடிக்கொண்டே இருக்கிறது 

குருவி கூடு 

பாண்டியராஜ்.

கடவுளின் கருணை.

சிக்கவேயில்லை

சிலை திருடன்.

முத்தங்களை

மிஸ் செய்கின்றன குழந்தைகள்

கொரோனா காலத்தில்.

புது வண்டி ரவீந்திரன்

கடும் கோடை

படிப்படியாக உயரும்

குளத்தின் ஆழம்

பசிக்கும் நேரம்

சுத்தமாக வைத்துள்ளார்

பிச்சைப் பாத்திரம்….

தட்சணா மூர்த்தி

சுவரில் மரங்களை வரைந்ததும்

ஆச்சிரியமாக இருக்கிறது

திடீர் கோடை மழை…

மழை நின்றதும்

மரம் வரைந்த சுவரில்

ஆங்காங்கே நீர்த்துளிகள்…

குளத்துநீரில் கால்களை கழுவ

தெறிக்கும் நீர்த்துளிகள்

தாமரை இலையில் மிதக்கின்றன…

பாதரசமில்லாத கண்ணாடி தான்

உருவத்தை காட்டுகிறது

தெளிந்த நீர்.

..

வண்ணத்துப்பூச்சி அமர்ந்தது

இந்த ரோஜாவுக்கு பிடிக்கவில்லையோ

ஒரு இதழை உதிர்த்து விடுகிறது.

..

நண்பனைப் பார்த்ததும்/

கடவுள் பெயரை உச்சரிக்கிறான்/

நார்த்திகவாதி..

 எஸ்.டென்னிஸ்.

நகரும் மேகங்கள்

நிழல் தேடி அமர்கிறான்

விறகு வெட்டி!!!

ஜீவா

சுமையேற்றிச் செல்லும்

வாகனத்தின் பின்புறத்தில்

தொங்கியபடிக் கோவைக்கொடி.

ச.ப. சண்முகம்

காதலியின் பேச்சால்

ஏறிக் கொண்டே போகிறது

சர்க்கரையின் அளவு

இளவல் ஹரிஹரன், மதுரை

கைக்கு எட்டியது

வாயிக்கு எட்டவில்லை

பசியோடு பரிமாறும் சிறுவன்!

படிப்பில்

முத்திரை பதித்தான்

அஞ்சல் வழிக்கல்வி!

யானைக்கும் அடி சறுக்கியது

பிதுங்கிய நெடுஞ்சாலை!

டென்டர் முறைகேடு!

 கோவை.நா.கி.பிரசாத்

மரண வீடு

வாசல் மிதியடியில்

நல்வரவு!

பதிவாகாது

எந்த ட்ரோன் கேமராக்களிலும்

பசி!

 தக்ஷன், தஞ்சை.

பட்டக்கடன்

அடிக்கடி பதறவைக்கிறது

அழைப்பு மணி…

குதிரையின் குளம்படி சத்தம்

இனிமையாக இல்லை

லாடங்களின் வடுக்கள்…

தூர் வாரிய குளம்

நாற்றம் எடுக்கிறது

ஊழல்…

நுனிப்புல் மேய்ந்த நாளை

அசை போடுகிறதோ?

பசித்திருக்கும் மாடு…

கரை ஏறுவதற்காக

கடலில் இறங்குகிறான்

வலை வீசுபவன்…

மீன்கள் துள்ளுவதால்

கலங்குகிறது குளம்

வலை விரித்திருக்கிறார்களே!…

சுவற்றில் பால் கணக்கு

அழியாமல் இருக்கிறது

அம்மாவின் நினைவுகள்…

ஐ.தர்மசிங்

1.

மணிச் சத்தம் கேட்கிறது

நான் மட்டும் தனியே

வண்டி மாடுகள்

போன பாதை.

*

2.

ஓர் இலை துளிர்க்கிறது

ஒரு குயில் கூவுகிறது

அமைதியாக மூச்சுவிடுகிறது வனம்.

3.

மூக்கின் பிராப்தம்

கண்களுக்கில்லை

எங்கிருக்கிறது அந்த மலர்?

*

4.

மாடு மேய்கிறது

வெட்டுக்கிளி கத்தரிக்கிறது

புல் வளருகிறது.

*

5.

நிழல் தராத

பனை மரம்

நுங்கு தருகிறது.

  • பிருந்தா சாரதி.

எத்தனை கண்கள்

விரித்த தோகை மீது

ஆடும் மயில்!

பூவை புறந்தள்ளி

இலையில் அமர்கிறது

முட்டையிடும் வண்ணத்துப்பூச்சி.

தலைக் கனம்தான்

அதிக ஆட்டமில்லை

ஈச்சமரம்.

தன் கால்களைப் பற்றி

மேலேறுகிறது

கண்ணாடியில் எறும்பு.

 எண்ணத்துவங்குகிறாள் சிறுமி

நேற்று விட்ட இட்த்திலிருந்து

நட்சத்திரங்களை

நீண்டநாள் கழித்து வருகிறேன்

ஓடிவந்து கால்களைத் தழுவுகின்றன

கடலலைகள்.

   மகிழ்நன் மறைக்காடு.

குடியிருப்பு அகற்றம்

வேதனையில் எறும்பு!

விரிசலில் பூச்சு!

பற்றிய கால்கள்

விட மறுத்தது

ஈரநிலம்!

சேரும் இடத்தின் சிறப்பை

தனதாக்கிக் கொண்டது!

தண்ணீர்!

வீசப்படும் எச்சில் இலை!

காத்திருக்கும் நாய்கள்!

தட்டிப்பறிக்கிறது காற்று!

பலமுறை படித்து முடிக்கையில்

காணாமல் போய்விடுகிறது!

புத்தகத்தின் புது வாசனை!

 இருண்ட வீடு!

விளக்கேற்றின மின்மினிகள்!

மரங்கள்!

 தளிர் சுரேஷ்

கவிஞர் முத்து ஆனந்த் துளிப்பாக்கள்

கவிஞர் முத்து ஆனந்த் துளிப்பாக்கள்

 காரணம்!

சுற்றுச்சூழல் மட்டுமல்ல

மனசுகளும் மாசுபட

மனிதர்களே காரணம்!

         புரட்சி!

அடுத்தவர்களுக்கு

நடக்கும்போது மட்டுமே

ரசிக்கப்படுகிறது புரட்சி!

           கல்!

கல்கூடக் கரைந்து விடுகிறது

ஆனால் மனசுகள்தான்

கரைவதேயில்லை!

 காற்று!

காதலிக்க

ஆரம்பித்துவிட்டால்

காற்று (ம்) கூடக் கவிதையாகும்!

    ஆட்சி!

உன்னைப் பார்த்த பின்

என் மனமெங்கும்

காதல்தான் ஆட்சி புரிகிறது!

      விருந்து!

இனிப்பும் கசப்பும்

கலந்த விருந்து

காதல்!

ஜி. அன்பழகன் கவிதைகள்!

ஜி. அன்பழகன் கவிதைகள்!

01

கட்டடங்களுக்கு நடுவே

எதிரொலித்து ஓய்கிறது

குயிலின் பாட்டு.

02

அலைபேசி கோபுரத்தில்

ஏறி இறங்குகிறது

பசியெடுத்த பாம்பு.

03

சத்தமிடும் தவளை

விடியல் நோக்கி நகருகிறது

நனைந்த இரவு.

04

குளத்தை வரைத்ததும்

தூரிகைக்கு ஓய்வளிக்கின்றன

ஆழம்போன மீன்கள்.

05

பாலருந்த முடியாது

படுக்கையில்  கிடக்கிறது

வைக்கோல் கன்று.

கோவை. நா.கி. பிரசாத் கவிதைகள்!

கோவை. நா.கி. பிரசாத் கவிதைகள்!

நின்றுபோன வாகனத்தில்
விரைகிறது
எரிபொருள் விலை!

சுவர் பிடித்து
எழுந்து நிற்கிறது
நிழல்!

  •  

சமரசம் பேச
சாமரம் வீசும் யானை
காதருகே எறும்பு!

கொடூர விலங்குகள்
அழிந்து வர
அச்சத்தில் காடு!

  •  

அச்சுஅசல் மாறவேயில்லை
அடுத்தவர் படைப்பில்

வெளியான புத்தகம்!

வானவில் மழை
சாயம் போகும்
குடைக்கடை!

  •  

அடுத்தவர் தடம் பதிக்க
அமோக வெற்றி
செருப்புக்கடை!

பிறர் காலை பிடித்ததில்
மூக்குடைந்து போனது
முள்!

குடும்ப ரத்தம்
குடிக்கும் அட்டை
குடிகார அப்பன்!

சரியான சட்டமின்றி
மாட்டி வைக்கப்படுகிறது
சாதாரண மக்கள்
புகைப்படமாய்

ஜவஹர் ப்ரேம்குமார் கவிதைகள்!

ஜவஹர் ப்ரேம்குமார் கவிதைகள்!

1.
பாசம் உடுத்திய
தண்ணீருக்கு மேல் நனையாத..
அல்லிமலர்..!

#2.
புழுதி போர்த்திய
சாலை எங்கும் உதிர்ந்த
சருகுகள்..!

#3.
ஆபரணம் அணிந்த குழந்தை.. வலியுடன் தொட்டுப் பார்க்கும்
காதுகளை..!

#4.
அலை ஆடையெங்கும்
மொய்த்து ஊர்கின்றன
கட்டுமரங்கள்..!

#5.
உடுத்திய ஆடைகளை
ஊதிக்களைகிறாள் அடுப்படியில்
பொங்கும் பாலில்..!

தேங்கிய தண்ணீரில்

அசையவே இல்லை!

நினைவுகள்!

கி.ரவிக்குமார் கவிதைகள்!

கி.ரவிக்குமார் கவிதைகள்!

எந்தக்குழந்தை அழுததோ
இந்த உடம்பில் இறைவன்
காற்று ஊதிக் கொடுக்க!

சிரிக்க சிரிக்க
கன்னம் உப்புகிறது
வளர்பிறைக்கு!

எனக்கு முன்னால் விழித்து
இன்றும் காத்திருந்தது
ஒரு பகல்

தேன்சிட்டு ஆகஸ்ட் 2020 இதழ் நகைச்சுவை சிறப்பிதழ்  

காலையில் அந்த வீட்டுக்குள்ளும்

மாலையில் இந்த வீட்டுக்குள்ளும்
இருக்கிறது மதில்சுவரின் நிழல்.

குழந்தைகளின் ஓவியங்களில்
மரங்கள் இருக்கும் வரை
உயிர்ப்புடன் இருக்கும் பூமி!

புலம் பெயர்ந்த
சாலைகள் எங்கும்
கிருஷ்ண பாதங்கள்.

 தூங்குவதற்கும்
விழித்திருப்பதற்கும்
இடைப்பட்ட போராட்டமாக
வாழ்க்கை!

சு. கணேஷ் குமார் கவிதைகள்!

சு. கணேஷ் குமார் கவிதைகள்!

முகம் நடுங்கும் காதலி

சுண்டல் மடித்த காகிதத்தில்

‘ஆணவக் கொலை’ குறித்த செய்தி!

கதவுக்குப் பின்னே

கூடு கட்டுகிறது குளவி

நெருக்கத்தில் போகி!

  •  

பனிக்காலம்

கோமுகியில் துளிர்த்தெழுந்த ஆலவிதை

வெந்நீர் அபிசேகத்தில் கடவுள்!

  •  

நெய் காய்ச்சிய பாத்திரம்

ஆழ்ந்து நுகர்கிறாள்

வேலைக்காரச் சிறுமி!

 கட்சி துவக்குகிறார் நடிகர்

அடகுக்கு தயாராகிறது

ரசிகன் வீட்டுத் தாலி!

பனித்துளிகள் ருசிக்கின்றன

அதிகாலை நீ போட்டுவைத்த

மார்கழிக் கோலம்

குடிசை வீட்டில் நசுங்கிய பாத்திரங்கள்

உணர்த்திக்கொண்டிருக்கின்றன

குடிகாரன் இருப்பை!

பாரதியின் சிலைமீது

எச்சமிடும் பறவைகள்

‘காக்கை குருவி எங்கள் சாதி!’