நிற்காதே ஓடு!

நிற்காதே ஓடு!

நகரில் இருந்து சற்று ஒதுங்கி கடற்கரை ஓரமாக  இருந்தது அந்த ரிசார்ட். ஆங்காங்கே தனித் தனி குடில்கள். அனைத்திலும் சகலவிதமான வசதிகளுடன் கூடிய அறைகள். டிவி. வைஃபை, ஏசி, ப்ரிட்ஜ் என அனைத்தும் அங்கே வாங்கும் பணத்திற்கேற்ப வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. சமூகத்தின் பிரபலங்கள் ரிலாக்ஸ் தேடி அந்த குடில்களில் தஞ்சம் புகுவது வழக்கம். உடன் குடியும் கும்மாளமும் சேர்ந்திருக்கும்.

அப்படி ஒரு குடிலுக்குத்தான் வந்திருந்தாள் மேகலா. மேகலா யார் என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் டிவி சீரியல்கள் பார்க்காத விநோத ஜந்துவாக நீங்கள் இருக்க வேண்டும். பிரபல டிவிக்களில் வீஜேவாக இருந்து இப்போது சீரியல் கதாநாயகியாக ப்ரமோட் ஆகியிருந்தாள். அஜய் டீவியில் அவள் கதாநாயகியாக நடிக்கும் “ஆண்டவன் ஸ்டோர்ஸ்” டி.ஆர்.பி யில் எகிறிக்கொண்டிருந்தது. ஆண்டவன் ஸ்டோர் அமுதா என்றே எல்லோராலும் அறியப்பட்டிருந்தாள் மேகலா.

மேகலா சாதாரணமான பெண் இல்லை! துணிச்சல் மிக்கவள். சிலம்பம் கராத்தே என்று பழகியிருந்தாள். மூன்று மொழிகளில் பேசுவாள். டான்ஸ் ஓவியம் என்று எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸ் அதிகம் அவளிடம் இருந்தது. இந்த விஷயமே அவளை டிவி விஜேவாக ஆக்கியிருந்தது. மருத்துவம் படித்துக்

கொண்டிருந்தவள் படிப்பு முடிந்த்தும் அவளுக்கு பிடித்த விஜே தொழில் செய்யப்போவதாக சொல்லி ஒரு சின்னஞ்சிறு சேனலில் நுழைந்தாள். இரண்டே வருடங்களில் ஏகப்பட்ட வளர்ச்சி! இதோ அஜய் டீவியில் ஒரு முக்கிய ஆங்கராகவும் சீரியல் கதாநாயகியாகவும் அசத்திகொண்டிருக்கிறாள்.

அன்று சீரியல் ஷூட்டிங்கில் இருக்கையில்  ஒரு போன் கால் வந்தது. அந்தக் கால் தான் இந்த ரிசார்ட்டுக்கு அழைத்து வந்தது. ஷூட்டிங் ப்ரேக்கில் தான் அந்த காலை அட்டெண்ட் செய்தாள் அவள். “ஹலோ மேகலா மேடமா?”

”ஆமாம்! நீங்க யாரு?”

”நான் யாருங்கிறது முக்கியம் இல்லே! நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியமானது!”

”அப்படி என்ன முக்கியமான விஷயம்!”

”நீங்களும் ராம்நாத்தும் கல்யாணம் பண்ணிக்கப் போறதா கேள்விப் பட்டேன்! உண்மையா?”

”ஆமாம்! அதுக்கென்ன?”

”ராம்நாத் நல்லவன் கிடையாது!”

”இதை நீ ஏன் பொறாமையாலே சொல்லக் கூடாது?”

”பொறாமையா? எனக்கா? உங்க மேலேயா?”

”ஏன் இருக்கக் கூடாதா? நான் ஒரு பிரபல விஜே! என் மேலே உங்களுக்கு பொறாமை ஏற்பட்டு எனக்கு நல்ல வாழ்க்கை அமையக் கூடாதுன்னு நீங்களா எதாவது கதை கட்டி விடலாம் இல்லையா?”

”நான் யாருன்னு தெரிஞ்சா நீ இப்படி பேசியிருக்க மாட்டே?”

”நீங்கதான் அதைச் சொல்ல மாட்டேங்கிறீங்களே?”

”ஹாஹாஹா! இப்படி சாமர்த்தியமா பேசி என்னை யாருன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ண வேணாம். உன்னை விட அதிக புகழ்வெளிச்சம் பார்த்தவள் நான். உன் வருங்கால புருஷனாகப் போற ராம்நாத் எனக்கும் வலைவிரிச்சுப் பிடிச்சு ஏமாத்திட்டான். நான் மட்டும் இல்லே.. இன்னும் சிலபேர் அவன் வலையிலே விழுந்து ஏமாந்து போயிருக்காங்க! உனக்கு நம்பிக்கை இல்லேன்னா ஒரு விடியோ க்ளிப்பிங் அனுப்பறேன் பாரு! அப்புறமா இன்னிக்கு ஓல்ட் மஹாபலிபுரம் ரோட்ல இருக்கிற ஸீ ஷோர் ரிசார்ட்டுக்கு வந்து  ஏ 87 ஹட்டுக்கு வந்து பாரு..!”

பேசியவள் போனை வைத்துவிட்டாள். அடுத்த சில நொடிகளில் ஒரு விடியோ வாட்சப்பில் வர ஓப்பன் செய்தாள். அதில் மங்கலான வெளிச்சத்தில் ராம்நாத் அரைகுறை ஆடையுடன் ஒருபெண்ணுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தான்.

 ” சே… ”அவள் முகம் கோபத்தால் துடித்தது.

இவ்வளவு மோசமானவனா இந்த ராம்நாத்! எப்படியெல்லாம் சுற்றிசுற்றி வந்தான். வீட்டுக்கே வந்து உங்கள் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பெற்றோரிடம் கண்ணீர் விட்டு அழுதான்.

 ஒரு சாதாரண அரசு உத்தியோகம் பார்த்து ரிட்டையர்ட் ஆன அப்பாவிற்கு ராம்நாத்தின் பணக்கார பவிசு சுத்தமாக பிடிக்கவில்லை! உங்கள் தகுதிக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை என்று எத்தனையோ விதமாகச் சொல்லிப் பார்த்தார். ஆனாலும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு ஷூட்டிங்க் ஸ்பாட்டிலும் கையில் ஒரு ரோஜா பூங்கொத்தோடு காத்திருப்பான். தினம் தினம் வாட்சப்பில் டெக்ஸ்ட் செய்வான். கவிதை மழை அதில் பொழிவான்.

அவனது பெற்றோர் கோயிலுக்குப் போனால் அங்கே அவர்களுக்கு முன்னால் பக்திப்பழமா காத்திருப்பான். அவளது ஓவ்வொரு அசைவையும் அவன் பின் தொடர்ந்தான்.

பலமாத நச்சரிப்புக்கு பின் போன மாதம்தான் மேகலாவின் பெற்றோர் அவனுக்கு தலை அசைத்தார்கள். சிம்பிளாக ஒரு நிச்சயதார்த்தம் செய்து மொதிரம் மாற்றிக் கொண்டார்கள். அதன் பின் ரொம்பவும் உரிமை எடுத்துக் கொண்டான்.” இனி நீ எனக்கு மட்டும் சொந்தம்.  இந்த டிவி சிரியலில் நடிப்பதை எல்லாம் விட்டுவிடு. என் பொண்டாட்டி மற்றவர்களை தொட்டு நடிப்பது எனக்குச் சுத்தமாக பிடிக்காது! எனக்கு நீ உனக்கு நான்”! என்றான்.

மேகலா முதலில் அதிர்ந்து போனாள். அவளுடைய ஆம்பிஷனே ஆங்கரிங் அவளுக்குப் பிடித்த தொழிலையே இவனை மணப்பதற்காக விட்டுவிட வேண்டுமா? ”நோ! முடியாது ”என்றாள்.

”என் கனவு! என் லட்சியம் எல்லாம் டிவி ஷோ காம்பியரிங்கும் ஓர் ஆர்ட்டிஸ்டா வாழணுங்கிறதுதான்! அதுக்காக நான் படிச்ச படிப்பையே தூக்கிப் போட்டுட்டு இந்த பீல்டுக்கு வந்தேன். உங்களுக்காக இதெல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது. நான் என் தொழில்லே சுதந்தரமா இருக்கலாம்னு நாம லைப் பார்ட்னராகலாம்! முடியாதுன்னா இப்பவே நம்ம எங்கேஜ்மெண்ட்டை கேன்சல் செய்துக்கலாம்” என்று முகத்தில் அடித்தார் போல சொல்லிவிட்டாள்.

ராம்நாத்துக்கு  ஆத்திரம் அதிகமாக இருந்தது.” நான் யார் தெரியுமா? என் பேங்க் பேலன்ஸ் ஸ்டேட்டஸ் தெரியுமா? என்னோட வைஃப்  ஆயிரத்துக்கும் ஐநூறுக்கும் காம்பியரிங் செய்தா எனக்கு எவ்வளோ பெரிய அவமானம் தெரியுமா?” என்றான்.

”நான் காம்பியரிங் செய்யறது பிடிச்சுத்தானே என்னை பெண் கேட்டு வந்தீங்க? ”

”இட்ஸ் ஓக்கே! நீ காம்பியரிங் வேணா பண்ணு! ஆனா சீரியல் பண்ணாதே!”

”ஸாரி மிஸ்டர் ராம்நாத்! எங்கேஜ்மெண்ட் ஆனவுடனேயே உங்க சுயரூபத்தை காட்டினதுக்கு நன்றி! உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது! இந்தாங்க நீங்க போட்ட ரிங்! ”என்று கழட்டி எறிந்த மேகலா விறுவிறுவென வெளியேறினாள்.

அதற்கப்புறம் ஒருவாரம் ராம்நாத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை! ஷுட்டிங் ஸ்பாட்டிலும் எந்த தொந்தரவும் இல்லை! நேற்று இரவுதான் டெக்ஸ்ட் பண்ணினான். ”மன்னித்துவிடு! கொஞ்சம் பொசஸ்ஸிவா நடந்துகிட்டேன்! காம்பியரிங் உன் ஆம்பிஷன்னு புரிஞ்சுகிட்டேன்! உன் தொழில்ல நான் இடையூறு செய்ய மாட்டேன்! எனக்கு நீ வேணும்! ”என்றான்.

”யோசிக்கிறேன்!” என்று பதில் அனுப்பி போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டாள் மேகலா

இன்று அதைத்தொடர்ந்து வந்த இந்த போன்காலால் ஸீ ஷோர் ரிசார்ட்டிற்கு தன்ன்ந்தனியாக  வந்திருக்கிறாள். அதோ ஏ 87 ஹட். வேகமாக நடக்கிறாள் மேகலா.

 கதவு பூட்டியிருக்க திறந்திருந்த ஜன்னல் வழியே  எட்டிப் பார்க்கிறாள். உள்ளே..

ஒரு பெண் அலறும் சத்தம். அவளை பலவந்தம் செய்து கொண்டிருக்கிறான் ராம்நாத்.அவன் பிடியில் இருந்து நழுவ அந்தப் பெண் முயற்சித்துக் கொண்டிருக்க அவள் கரங்களை பிடித்து இழுத்து படுக்கையில் சரித்துக் கொண்டிருந்தான் ராம்நாத். “யூ ராஸ்கல்!” விடுடா அவளை இல்லேன்னா போலிஸை கூப்பிடுவேன்…!”

ஜன்னலுக்கு வெளியே இருந்து குரல் கொடுத்தாள் மேகலா

திடீரென மேகலாவைப் பார்த்ததும் அதிர்ச்சியான ராம்நாத்தின் பிடி நழுவ அந்தப் பெண் கதவைத்திறந்துகொண்டு ஓட

“ஏய்! நீ எப்படி இங்கே வந்தே…! அவ போனா என்ன? உன்னை என்ன செய்யறேன் பார்…!”

ஓட ஆரம்பித்தாள் மேகலா..!

”ஏய் நில்லுடி! இது என்னோட ஏரியா! தப்பிக்கவே முடியாது..!”

ஓடிக்கொண்டே தன் அண்ணனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள் மேகலா.

ரிசார்ட்டுக்குள்ளே அது என்ன?  ஒரு கல்லறை மாதிரி இருக்கிறதே..!

மூச்சிறைக்க ஓடி ஒரு கல்லறையின் பின் ஒளிந்தாள்.

பின்னாலேயே துரத்திவந்த ராம்நாத்தால் அவளை பிடிக்க முடியவில்லை!  பின்னே சும்மாவா? மேகலா ஒரு ரன்னிங் சேம்பியனும் கூட.

மூச்சிறைக்க கல்லறைத்தோட்டத்தில் நுழைந்த ராம்நாத்தை வரவேற்றான் கோவிந்தன்.

“என்னங்க சார் இப்படி ஓடியாறீங்க?”

”மண்ணாங்கட்டி! எனக்கு முன்னாடி இங்கே ஒரு பொண்ணு ஓடியாந்தா! நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே?”

”அப்படி யாரும் வரலீங்களே…!”

”அப்ப நான் பொய் சொல்றேனா?”

”இந்த கல்லறை தோட்ட்த்துக்குத்தான் அவ ஓடியாந்தா? மீடியா பொண்ணு! அவ தப்பிச்சிட்டா நம்ம கதை க்ளோஸ்!”

”சார்! அப்படியெல்லாம் நம்மகிட்டேயிருந்து தப்பிக்க முடியுமா? இங்கே எத்தனை பொண்ணுங்களை சமாதி ஆக்கியிருக்கோம்! இது நம்ம கோட்டை! இங்கே இருந்து ஒரு ஈ எறும்பு கூட வெளியே போக முடியாது!”

”இப்படி வாய் கிழிய பேசு! ஆனா காரியத்துலே கோட்டை விட்டுரு! அவ இந்த வழியாத்தான் வந்தா? அவளை பிடிக்காம கோட்டை விட்டுட்டியே!”

”சார்! நான் அவசரமா ஒண்ணுக்கு இருக்கப் போயிருந்தேன்! அப்பத்தான் அந்தப் பொண்ணு உள்ளே நுழைஞ்சிருக்கணும்! இப்ப ஒண்ணும் ஆகிப்போயிடலை! இந்த கல்லறைதோட்ட்த்துக்கு இது ஒண்ணுதான் வழி! அப்படியே வெளியே போயிட முடியாது! நாலா பக்கமும் காம்பவுண்ட் போட்டிருக்கு! தாண்டி குதிச்சு போக முடியாத உயரம். எப்படியும் இந்த பக்கம் வந்துதான் ஆகணும் பிடிச்சிரலாம்.”

”ஏய் நீ நினைக்கிற மாதிரி பொண்ணுல்லே அவ! அத்லெடிக் கேர்ள். என்னாலே அவ ஓட்டத்தை பிடிக்க முடியலை!  அவ தாண்டிக் குதிச்சு கூட ஓடிருவா! ”

”இன்னிக்கு அவளா நானா பார்த்துடறேன் சாமி!”

”இந்தா பிடி! இதை உன் செலவுக்கு வைச்சுக்க! எனக்கு அவ உயிரோட வேணும்!” சில ஐநூறு ரூபாய் தாள்களை நீட்டினான் ராம்நாத்.

அப்போது அங்கேயிருந்த ஒரு கல்லறைக்குப் பின்னால் அசைவு தெரிந்தது.

”டேய்! அவ அங்கேதான் ஒளிஞ்சுகிட்டிருக்கா..போலிருக்கு! அசைவு தெரியுது..”

”வாங்க சாமி! போய் புடிப்போம்…!”

இருவரும் ஒரு அடி முன் வைக்க,

”ஹாஹாஹா! ”என ஓர் பேரிரைச்சல் ஒலிக்க அதிர்ந்து வானை நிமிர்ந்து நோக்கினர்

ஒரு பெண்ணின் முகம் மட்டும் கண்களில் தீ கக்கிக் கொண்டு ஆக்ரோஷமாக அங்கே உயர்ந்து நின்றது..

 ” நீ… நீ..? “

”யாருன்னு மறந்து போச்சா ராம்நாத்?”

”க… கல். கல்பனா…!”

”பரவாயில்லையே…! பத்துமாசம் ஓடிப்போயும் மறக்காம நினைவுல வைச்சிருக்கியே..!”

வியர்த்து வழிந்தான் ராம்நாத். கோவிந்தன் பேச்சு மூச்சுவரமால் சிலையாக நிற்க

”ஏய் கோவிந்தா! ஏண்டா அப்படியே நிக்கறே..! ஏதாவது செய்யுடா! இது  கல்பனாவோட ஆவி… ”

  ”ஆவிகளை எல்லாம் என்னாலே கட்டுப்படுத்த முடியாது சார்!” குரல் நடுங்கியபடி கோவிந்தன் சொல்ல…

  ஓட ஆரம்பித்தான் ராம்நாத்..

”ஓடாதே…! நில்லு…! ” கல்பனா ஆவேசமாக குரல் கொடுக்க

”இ.. இல்லே.. ”என்று அலறியபடியே ராம்நாத் ஓடவும் வாசலில் போலிஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

மேகலாவின் அண்ணன் எஸ்.ஐ சரவணன் ஜீப்பில் இருந்து இறங்க இரண்டு கான்ஸ்டபிள்கள் ஓட முயன்ற ராம்நாத்தை  பிடித்துவந்தனர்.

கல்லறை தோட்டத்தில் இருந்து கல்பனா வேடத்தை கலைத்தபடி வெளியே வந்தாள் மேகலா.

ராம்நாத்தின் முகம் இன்னமும் வெளிறிப் போனது!” நீ மேகலாவா? கல்பனா இல்லையா?”

”அதிர்ச்சியா இருக்கா ராம்நாத்?”

”கல்பனா யாரு தெரியுமா?”

”யாரு? அவளும் ஒரு டீவி ஆர்ட்டிஸ்ட்தானே..!”

”ஆமா! ஆனா அவ கோவிந்தனோட பொண்ணுன்னு உனக்குத் தெரியாது..!”

”இந்த ரிசார்ட்டை கட்டி உன் லீலைகளை நடத்தி பல பெண்களை சீரழிச்சி கொன்னு இங்கே புதைச்சிருக்கே! கல்பனா உன் வலையிலே விழுந்து செத்தப்புறம் உன்னை பழிவாங்கறதுக்காகவே இங்கே வேலையிலே சேர்ந்திருக்கார் கோவிந்தன்.”

”உன்கூட எனக்கு எங்கேஜ்மெண்ட்னு நியுஸ் வந்த்தும் என்னோட தீவிர ரசிகரான அவர் நானும் பாதிக்கப் படக் கூடாதுன்னு எனக்கு போன் செய்தார். அவர் சொன்ன விஷயங்களை முதல்லே நான் நம்பலை! அப்புறம் வீடியோ ஆதாரத்தோட அனுப்பவும் தனியா வந்து சந்திச்சேன். உண்மைகளை தெரிஞ்சுகிட்டேன்.  உன்னை கையும் களவுமா பிடிக்கணும்னு திட்டம் போட்டோம்.”

”இன்னிக்கு நீ அந்த பொண்ணை கூட்டிக்கிட்டு ரிசார்ட் வரப்போறதை மேசேஜ் பண்ணிட்டார் கோவிந்தன். நான் உடனே வந்து உன்னை பிடிக்கப் போட்ட நாடகம்தான் இந்த பேய் வேஷம்.”

”இந்த பேய்வேசத்தாலே உன் வேஷம் கலைஞ்சு போச்சு! இனிமேலாவது பெண்களை போகப் பொருளா நினைக்காம காமத்தோட பார்க்காம தெய்வமா நினைச்சு பழகுடா!”

மேகலா சொல்லி முடிக்கவும் மீடியாக்கள் வந்து சூழ்ந்து வெளிச்சம் போடவும் முகத்தை மூடிக்கொண்டான் ராம்நாத்.

 டிஸ்கி:  நண்பர் பாலகணேஷ் முகநூலில் வைத்த படத்திற்கு கதை எழுதும் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை.

சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?

#செவி வழிக்கதை.

நாடோடிக் கதைகள் வரிசையில் இதுவும் ஒரு சிறப்பான கதை! என்பாட்டி சிறிய வயதில் சொன்னது இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் இந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு. ஒரு நாள் அவரு காட்டுல நடந்து போயிகிட்டிருந்தாரு. நல்ல வெயிலானதால அவருக்கு ரொம்ப களைப்பு ஆயிருச்சு. ஒரு மரத்துக் கீழ அப்படியே படுத்து தூங்க ஆரம்பிச்சாரு. கண் அசருர சமையத்துல வெறுங்கொட்டையா அவரோட தலை மேல விழுந்துச்சு. ‘தலையில என்னடா இப்படி விழுதேன்னு’ மேல பார்த்தாரு.    ஒரு சின்ன சித்துண்ணி பறவை மரத்து பழத்தையெல்லாம் தின்னுட்டு கொட்டைங்களை கீழ துப்பிக்கிட்டு இருந்துச்சு. ராஜாவுக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. இவ்வளவு சின்ன பறவைக்கு அவ்வளவு திமிரா? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா நான் ஒரு ராஜான்னு கூட பார்க்காம என் தலைமேல கொட்டைய போடுவேன்னு அதட்டுனாரு.   ஆனா அது பயப்படாம அப்படியே உக்காந்துகிட்டு இருந்துச்சு!ராஜா அவசர அவசரமா மரத்துல ஏறினாரு சித்துண்ணி கழுத்தை பிடிச்சுதூக்கிக்கொண்டுபோய் சேறும் சகதியுமா இருந்த இடத்துல போட்டு காலால மிதிச்சாரு மிதிச்சுட்டு,  சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ? ன்னு கேட்டாரு.  “நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் சாப்பிட்டுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துஇப்ப சேத்துல உழுகிறேன்” அப்படின்னு சித்துண்ணி துடுக்கா பதில் சொல்லுச்சு.  உடனே ராஜா, இந்த சித்துண்ணிக்கு எவ்வளவு ஆணவம்? னு அங்க இங்க பார்த்தாரு பக்கத்துல சின்ன ஓடையில தண்ணி ஓடிகிட்டு இருந்துச்சுஅதுல கொண்டு போய் அந்த பறவையை போட்டு“சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?”ன்னு கேட்டாரு.“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுதுஇப்ப சின்ன ஆத்துல கால் கழுவறேன்” அப்படின்னு அது பாட்டா பாடுச்சு.  ராஜாவுக்கு கோபம் தாங்கலை! “உனக்கு இது சின்ன ஆறா? இதுல நீ கால வேற கழுவறீயா?ன்னு கேட்டுட்டு அதை தூக்கிக்கிட்டு கொஞ்ச தூரம் நடந்தாரு பெரிய ஆறு ஒண்ணு கண்ணுல பட்டது. அதுல சித்துண்ணிய தூக்கி போட்டாரு. இந்த ஆறு கண்டிப்பா அடிச்சிட்டு போயிடும்னு நம்பி “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?” ன்னு கேட்டாரு. ““நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுது சின்ன ஆத்துல கால் கழுவி

இப்ப பெரிய ஆத்துல குளிக்கிறேன்” அப்படின்னு சித்துண்ணி நிதானமா சொல்லுச்சு.  ராஜாவுக்கு கோபம் தீந்த பாடில்லை! அதிகமாகி ஆத்தங்கரையில் ஒரு பாறை இருந்துச்சு. வெயில் அடிச்சி சூடா இருக்கவும் இதுல தூக்கி போட்டா சித்துண்ணி செத்துடும்னு அதை பிடிச்சி பாறை மேல வீசி எறிஞ்சாரு. எப்பவும் போல கேட்கவும் செஞ்சாரு. “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?”
“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுதுசின்ன ஆத்துல கால் கழுவிபெரிய ஆத்துலகுளிச்சுஇப்ப கல்லுல துணி துவைக்கிறேன்”ன்னு சந்தோஷமா சொல்லுச்சு.
  “நீ துணி வேற துவைக்கிறயா? என்று கோபப்பட்ட ராஜா சித்துண்ணிய பிடிச்சு ஒரு முள்ளுக்காட்டுக்குள்ளே கொண்டுபோய் போட்டாரு. பிறகு “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?” ன்னு கேட்டாரு.
“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுதுசின்ன ஆத்துல கால் கழுவிபெரிய ஆத்துலகுளிச்சுகல்லுல துணி துவைச்சுஇப்ப முள்ளுல காயப்போடுறேன்”ன்னு அலட்சியமா பதில் சொல்லுச்சி அந்த சின்ன சித்துண்ணி குருவி.
  சித்துண்ணி சொன்ன பதில் கேட்டு ராஜாவுக்கு கோபம் உச்சிக்கு ஏறிடுச்சு. ஆத்திரத்துல மூக்கு சிவக்க  சித்துண்ணிய எரியற அடுப்பில கொண்டு போய் போட்டாரு போட்டுட்டு வழக்கம் போல “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?” ன்னு கேட்டாரு. அதுக்கு சித்துண்ணி,   “நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுதுசின்ன ஆத்துல கால் கழுவிபெரிய ஆத்துலகுளிச்சுகல்லுல துணி துவைச்சுமுள்ளுல காயப்போட்டு இப்ப அடுப்பிலகுளிர் காயறேன்” அப்படின்னு சொல்லுச்சு.
 ராஜாவுக்கு ஆத்திரம்னா அப்படி ஒரு ஆத்திரம் என்ன செய்யறதுன்னே தெரியலை அதை பிடிச்சு கொண்டு போய் காத்துக்கூட போக முடியாத ஒரு பெட்டியில போட்டு மூடி “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?” ன்னு கேட்டாரு.
    “நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுதுசின்ன ஆத்துல கால் கழுவிபெரிய ஆத்துலகுளிச்சுகல்லுல துணி துவைச்சுமுள்ளுல காயப்போட்டு அடுப்பில குளிர் காய்ஞ்சுஇப்ப பொட்டிகுள்ள உட்கார்ந்துபொட்டு இட்டுகிட்டு இருக்கேன்அப்படின்னுகொஞ்சம் கூட பயப்படாம சொல்லுச்சு.
“நீ அடங்கவே மாட்டியா?”ன்னு ராஜா சித்துண்ணிய தூக்கிட்டு ரொம்ப தூரம் போனாரு. “இனி இத விடக்கூடாது”ன்னு வைராக்கியத்தோட போனாரு.    அங்க ஒரு பெரிய அரிசி ‘மில்’ இருந்துச்சு. “சித்துண்ணிய இந்த மில்லுல போட்டு பொடிப்பொடியா அரைச்சிட வேண்டியதுதான்!” ன்னு அதுல போடப் போனாரு.  போடற சமயத்துல அது ‘விர்ரு’ண்ணு பறந்து போய் மில்லு கூறை மேல உட்கார்ந்துகிச்சு! ராஜா அங்க இங்க தேடிப்பார்த்துட்டு பரிதாபமா மீண்டும் கேட்டாரு “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?”
  “நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுது

சின்ன ஆத்துல கால் கழுவிபெரிய ஆத்துலகுளிச்சுகல்லுல துணி துவைச்சுமுள்ளுல காயப்போட்டு அடுப்பில குளிர் காய்ஞ்சு பொட்டிகுள்ள உட்கார்ந்துபொட்டு இட்டுகிட்டு இப்பஜாலியா சுதந்திரமா பறந்து போறேன்! இனிமே உன்னால என்ன ஒண்ணும் செய்யமுடியாது”
  அப்படின்னு சொல்லிட்டு பறந்தே போயிடுச்சு. ராஜா ரொம்ப ஏமாந்து போய் பேசாம அவரு ஊருக்கே திரும்பி போயிட்டாரு.

நீதி: சிறுவர்களின் குறும்பை பெரிது படுத்தக் கூடாது!

தேன்சிட்டு இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!

பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் இட்டுச் செல்லுங்கள்!

தொடர்ந்து தேன்சிட்டு இணைய தளத்திற்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!

உங்களின் படைப்புகளையும் தேன் சிட்டு இணைய இதழில் வெளியிடலாம். உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்! நன்றி!

தேன்சிட்டு டிசம்பர் மாத மின்னிதழ்.

https://online.fliphtml5.com/gtanu/ekaj/ தேன்சிட்டு டிசம்பர் மாத இதழை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

தேன்சிட்டு இணைய தளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!

தொடர்ந்து வருகை தந்து ஊக்கப்படுத்துங்கள்!

இந்தப் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

உங்கள் படைப்புகளை தேன்சிட்டு இணைய இதழுக்கு அனுப்பி வையுங்கள்! நன்றி!

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே! வணக்கம்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! சென்ற மாத இணைய இதழை வாசித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். தொடர்ந்து பி.டி.எஃப் வடிவிலேயே வெளியிடுமாறு சிலர் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான்.

பி.டி.எஃ வடிவில் தயாரிப்பது தனி ஒருவனாக எனக்கு மிகுந்த சிரமம் தருகின்றது. அதோடு மட்டுமில்லாமல் தகுந்த சாப்ட்வேர் இல்லாமல் வேர்ட் பைலாக தயாரிக்கையில் கண்ணை உறுத்தும் வகையில் இருப்பதாக சிலர் சொல்கின்றனர். கடந்த இரண்டு வருஷங்களாக இந்த பி.டி.எஃ இதழை நடத்தி வருகிறேன். போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. விளம்பரங்களோ சந்தாக்களோ இல்லாமல் எந்தவித பிரதிபலனும் இல்லாமல் என்னுடைய உழைப்பு வீணானதோடு கண்பார்வையிலும் குறைபாடு ஏற்பட்ட்தால் தற்சமயம் பி.டி.எஃ இதழை வெளியிட இயலாது.

ஆனால் உங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியாக தீபாவளிக்கு முன்பாக சுமார் 80 பக்கத்தில் ஒரு தீபாவளிமலரை பி.டி.எஃ ஆக தனி இதழாக வெளியிடும் ஒரு யோசனை இருக்கிறது. நவம்பர் 14க்கு முன்னரோ அல்லது நவம்பர் 14 அன்றோ அந்த இதழ் நமது இணையதளத்தில் வெளியிடப்படும். ஆனால் இந்த மாத இதழை தொடர்ந்து இணைய இதழாகவே நடத்துவதாக திட்டமிட்டுள்ளேன்.

தீபாவளிமலருக்கான உங்கள் படைப்புகளை வெகுசீக்கிரம் அனுப்பி வைக்கலாம். மலரில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஜோக்ஸ் நிறைந்திருக்கும். சிறுவர்களுக்கான பக்கங்களும் உண்டு. எனவே அதற்கேற்றார் போல உங்கள் படைப்புகளை நவம்பர் 5ம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள். அதற்கு பிறகு வரும் படைப்புகள் ஏற்கப்பட மாட்டாது.

மேலும் தேன்சிட்டு இதழுக்கு படைப்புகளை மெயிலில் மட்டுமே அனுப்ப வேண்டும். வாட்சப் மூலம் வரும் படைப்புகள் இனி தேர்ந்தெடுக்கப்பட மாட்டாது. தேன்சிட்டு இணைய இதழில் என்னென்ன மாற்றங்கள் புதுமைகள் செய்யலாம் என்பதை தெரியப்படுத்துங்கள்! தேன்சிட்டு என்றும் உங்களோடு சிறகடிக்க உறுதுணையாக இருங்கள். நன்றி. அன்புடன். நத்தம். எஸ்.சுரேஷ்பாபு.

தேன்சிட்டு இணைய இதழ். நவம்பர்- 2020

கூடு 2 தேனி- 3

கதைகளில் வரும் இடங்கள், சம்பவங்கள், பெயர்கள் அனைத்தும் கற்பனையே!

படைப்புகளை சுருக்கவும் திருத்தவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு.

உங்கள் படைப்புகளை thalir.ssb@gmail.com என்ற மின்ன்ஞ்சலுக்கு பிரதிமாதம் 10ம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள்.

படைப்பு தேர்வானால் பிரசுரமாக ஒருமாதகாலம் வரை பொறுத்திருக்கவும்.

தேன்சிட்டுக்கு அனுப்பும் படைப்புகளை மற்ற மின்னிதழ்களுக்கோ அச்சிதழ்களுக்கோ ஒரு மாதம் வரை அனுப்பவேண்டாம். படைப்பு தேர்வானது குறித்த தகவல் அனுப்ப இயலாது. நீங்கள் படைப்பு அனுப்பி ஒருமாதம் வரை உதாரணமாக அக்டோபர் 10ம் தேதி அனுப்பிய படைப்பு நவம்பர் 10வரை பிரசுரம் ஆகவில்லையெனில் தேர்வு பெறவில்லை என்று கருதவும்.

படைப்பு அனுப்பி விட்டு வாட்சப், முகநூல், அலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரிப்பதை தவிர்க்கவும்.

தற்சமயம் தேன்சிட்டில் பிரசுரமாகும் படைப்புகளுக்கு சன்மானம் எதுவும் வழங்க இயலா நிலையில் உள்ளோம். சன்மானம் எதிர்பார்ப்பவர்கள் படைப்புகளை அனுப்ப வேண்டாம்.

மெயிலில் மட்டுமே படைப்புகளை அனுப்ப வேண்டும். வாட்சப், மெசெஞ்சர் போன்றவற்றில் வரும் படைப்புகள் நிராகரிக்கப்படும்

ஆசிரியர்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

வடிவமைப்பு: எஸ்.எஸ்.பி.  வடிவமைப்பில் உதவி: எஸ்.ஏ.ராதா.

முகவரி: தேன்சிட்டு மின்னிதழ். 73. நத்தம் கிராமம், பஞ்செட்டி அஞ்சல், பொன்னேரி, வட்டம், அ.கு.எண். 601204

அலைபேசி: 9444091441

வாசகர்களின் விருப்பத்திற்காக இந்த இதழ் பிடிஎஃ  வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

ரீடர்ஸ் மெயில்!

பெரிய பத்திரிகை க ளு க் கே ச வா ல் வி டு ம் அள வில் வ டி வ மைப் பி லு ம் ப டை ப் பு த் தேர்வு க ளி லு ம் தே ன் சி ட் டு ஒ ளி ர் கி ற து. சி று க தை க ள்,  சி ன் ன ஞ் சி று க தைகள்,  ந கை ச் சு வை, க வி தை, கு று ம் பா என வ ரி சை கட் டி  ர சி க்க வை க் கி ற து., தே ன் சி ட் டு செ ப்டம்பர் இதழ்.  நத்தம் சு ரே ஷ் எ ன் னு ம் த னி நபர் சா த னை.  பா ரா ட் டு க ள். 

இளவல் ஹரிஹரன்  மதுரை.

அட்டைப்படம் அருமை..

ஓவியம் உயிரோட்டம்..

ராஜேஷ் குமார் பதிலில் இரத்த வகை OH என்ற வகை அரிய தகவல்..

பம்பாயில் அதிகமாம்..

அவரது கேள்வி பதில் அசத்தல்..

நகைச்சுவையும் அருமை..

கதைகள் படிக்க வேண்டும்..

வாழ்த்துக்கள்👌👌👌

வீ. காசிநாதன், சிங்கப்பூர்.

செப்டம்பர் மாத தேன்சிட்டில் வந்த ஒருபக்க கதைகள் அனைத்தும் சிறப்பு. வாழ்த்துகள்!

எஸ். எழில்வாணி, மந்தைவெளி.

கவிதைகள் அனைத்தும் சிறப்பு. புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்!

செந்தில்குமார், துறையூர்.

ஜோக்ஸ் தேர்வில் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம். சிரிப்பு வர சிரமப்பட வேண்டியிருக்கிறது.

தியாகராஜன், அரசூர்.

பீட்ஸா சிறுகதை சிறப்பு. எழுத்தாளருக்கு பாராட்டுகள்!

தனபாலன், திண்டுக்கல்.

நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதைகளை வாசித்தேன். அனைத்தும் சிறப்பு. எழுத்தாளர்களுக்கு பாராட்டுகள்!

சரவணன், கும்ப கோணம்.

ஞாபகமறதி ஞானக்கண்ணு

ஞாபகமறதி ஞானக்கண்ணு

                         மலர்மதி

                                      மலர்மதி         வெகுஜனப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிக்கொண்டி ருந்த நான் சமீப காலமாக பல சிற்றிதழ்களிலும், மின்னிதழ்களிலும் எழுதி வருகிறேன். இதுவரை 450க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 2 நாவல்களும் படைத்துள்ளேன். “தேன் சிட்டு” மின்னிதழில் மட்டும் இதுவரையில் 18 சிறுகதைகள் எழுதியுள்ளேன்.                துபாய் மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நான், விரைவில் பணி ஓய்வுப் பெறப்போகிறேன்,                 என்னைப் போல் பல எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மிகச் சிறந்தப் பணியைச் செய்து வரும் ஆசிரியர் திரு. நத்தம் எஸ். சுரேஷ்பாபு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.                அவ்வப்போது இதுபோன்ற போட்டிகளை வைத்து எழுத்தாளர் களின் திறமைகளை வெளிக்கொணரும் மிகச் சீரிய இலக்கியப் பணிபுரியும் திரு. ப்ரணா போன்ற அறிஞர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.               “தேன் சிட்டு” மின்னிதழ் மேலும் பல சாதனைகள் படைத்து உச்சத்தைத் தொட வாழ்த்தி மகிழ்கிறேன்

 ஒவியம் : அ.செந்தில் குமார் 

  ஞானக்கண்ணுவுக்கு ஞாபக மறதி அதிகம். எந்தப் பொருளை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடிக்கொண்டிருப்பார். காலையில் என்ன டிபன் சாப்பிட்டோம் என்பது மதிய உணவு சாப்பிடும் நேரத்தில்கூட நினைவில் இருக்காது.

          ஒரு முறை தன் மூக்குக்கண்ணாடி காணாமல் ஒரு மணி நேரம் தேடோ தேடு என்று தேடியிருக்கிறார். அவர் மனைவி நளாயினி வந்து, “நாசமாப் போச்சு. மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டுத் தேடிய முதல் ஆள் நீங்களாகத்தான் இருக்கும்.” என்று டோஸ் விட்ட பிறகுதான் தடவிப் பார்த்து அசடு வழிந்தார் ஞானக்கண்ணு.

          “இந்தாங்க, போய் சர்க்கரை ஒரு கிலோ வாங்கிட்டு வாங்க.” என்று பையை அவர் கையில் திணித்தாள் நளாயினி.

          பையை வாங்கிக்கொண்டுக் கிளம்பினார் ஞானக்கண்ணு.

          வழியில் சிநேகிதர் ஒருவர் கிடைத்துவிட பேசிக்கொண்டே போனார். 

          பொங்கிய பாலை ஸ்டவ்விலிருந்து இறக்கிவைத்த நளாயினி, காபி பவுடரைக் கலந்து ரெடியாக வைத்திருந்தாள். சர்க்கரை மட்டும் கலக்கினால் காபி ரெடி.

          கடைத்தெருவிலிருந்து வீடு திரும்பிய ஞானக்கண்ணு, பையை மனைவி யிடம் நீட்ட, அதை வாங்கித் திறந்துப் பார்த்தவள், அதிர்ந்தாள்.

          அதில் சர்க்கரைக்குப் பதில் உப்பு இருந்தது.

          “நான் என்ன வாங்கிட்டு வரச் சொன்னேன்?”

          “ஒரு கிலோ உப்பு.”

          “சரியாப் போச்சு. சர்க்கரைதானே வாங்கிவரச் சொன்னேன்?”

          “வழியில என் ஃப்ரெண்டு ஒருத்தன் கிடைச்சானா, அவனோடு பேசிக்கிட்டே போனதுல மறந்துட்டேன்னு நினைக்கிறேன்.”

          “அப்படியா? இந்தாங்க, காபி.”

          நளாயினி கொண்டு வந்த காபியை வாங்கி ஆவலோடு உறிஞ்சிய அடுத்த நொடி, ‘சர்ர்ர்ர்ர்ர்…’ரென பீச்சி அடித்தார் ஞானக்கண்ணு.

          “என்ன இது காபி இப்படி உப்பு கரிக்குது?”

          “அதுவா, அது ஸ்பெஷல் உப்பு காபி. உங்களுக்காக ஸ்பெஷலா செஞ்சது.”

-2-

          ரியான நேரத்துக்கு அலுவலகம் சென்றுவிடுவார் ஞானக்கண்ணு.

நகைச்சுவை சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை

          அலுவலகத்தில் அவரை கண்டுகொள்ளாமல் அவர் போக்குக்கு விட்டுவிட் டால், எந்த வேலையானாலும் அதை கனகச்சிதமாக முடித்துவிடுவார். அவரிடம் மட்டும் தப்பித்தவறி ‘இதைச் செய், அதைச் செய்’ என்று உத்தரவிட்டால் அவ்வளவுத் தான், எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கும். அந்த வேலையை மறுபடியும் வேறு யாராவது செய்யவேண்டி வரும். அதனால் ஞானக்கண்ணுவை யாரும் கண்டுகொள்வ தில்லை. அரசு அலுவலகம் என்பதால் அவர் எக்கேடாவது கெட்டு போகட்டும் என்று விட்டுவிடுவார்கள்.

          அன்று அவராகவே அக்கௌன்ட்ஸ் ஃபைலை வீட்டுக்கு எடுத்து வந்தார். மறு நாள் சனி, ஞாயிறு என்பதால் வீட்டில் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ முடித்து மேனஜரிடம் நல்ல பேர் வாங்கணும் என்பது அவருடைய எதிர்பார்ப்பு.

           மெனக்கெட்டு ஃபைலை முடித்து திங்கட்கிழமை காலையில் மேனேஜர் டேபிள் மீது வைத்தார் ஞானக்கண்ணு.

           மேனேஜர் அப்ரிஷியேட் பண்ணுவார் என்று எதிர் பார்த்தால், அவர் விழுந்து, விழுந்து சிரித்தார்.

           “ஏன் சார் சிரிக்கிறீங்க?”

           “அபூர்வமா நீங்க பண்ற வேலையும் யூஸ்லெஸ்ஸாத்தான் முடியுது.”

           “எப்படி சார்?”

           “இது போன வருஷ ஃபைல். செத்த பாம்பை அடிச்சு என்ன பிரயோஜனம்?”

           ஞானக்கண்ணு அசடு வழிய அங்கிருந்து நழுவினார்.

           ளாயினிக்கு திடீர் கவலை தொற்றிக்கொண்டது. ஒரு வேலை கொடுத்தால் வேறு ஒன்று செய்கிறார். துணி துவைக்கச் சொன்னால், ஏற்கனவே துவைத்த துணிகளை மீண்டும் வாஷிங் மெஷினில் போட்டுவிடுகிறார். பாத்திரம் கழுவச் சொன்னால், கை-கால் கழுவிக்கொண்டு வந்து நிற்கிறார். பால் வாங்க அனுப்பினால், மோர் வாங்கி வருகிறார். இவரை இப்படியே விட்டால் ஞாபக மறதி என்கிற இந்த கொடிய நோய் இவரை எங்கு கொண்டுபோய் விடுமோ என பயந்துபோனவள், அவரை டாக்டரிடம் அழைத்துப் போனாள்.

           அவரைப் பரிசோதித்த டாக்டர், “உங்களுக்கு இந்த நோய் எத்தனை நாளா இருக்கு?” என்று கேட்டார்.

-3-

           “எந்த நோய் சார்?” என்று டாக்டரையே திருப்பிக் கேட்டார் ஞானக்கண்ணு.

           “பார்த்தீங்களா சார்? இப்படித்தான் சார் இவர் எல்லாத்தையும் மறந்துட றார்.” என்றாள் நளாயினி.

           “சரி, இப்போதைக்கு மருந்து எழுதி தர்றேன். ஒரு வாரம் கழித்து வாங்க கம்ப்ளீட் செக் அப் ஒண்ணு செஞ்சுருவோம்.” என்று டாக்டர் எதையோ கிறுக்கி ப்ரெஸ்க்ருப்ஷனை நீட்டினார்.

நகைச்சுவை சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை

           ஆனால், அந்த மாத்திரைகளை வேளா வேளைக்கு ஒழுங்காக ஞானக்கண்ணு சாப்பிட மறந்துபோனார். வீட்டில் இருக்கும்போது மட்டும் நளாயினி சரியான நேரத்துக்கு மாத்திரை கொடுத்துவிடுவாள். அலுவலகத்தில் ஒரு நாளும் ஞானக்கண்ணு மாத்திரை சாப்பிடவில்லை.

           முழு பரிசோதனையும் செய்து பார்த்துவிட்டார் டாக்டர்.

           “டாக்டர்.. டெஸ்ட் ரிப்போர்ட் என்ன சொல்லுது?” என்று கேட்டாள் நளாயினி.

           டாக்டரோ குழப்பத்தின் உச்சியில் இருந்தார். அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி பாஸ் ஆனவர். அவருக்கு ரிப்போர்ட் எல்லாம் நார்மலாகவே வந்தது பார்த்து குழப்பம் ஏற்பட்டது. ரிப்போர்ட் என்றால் ஏதாவது ஒரு குறை இருக்கணும் என்பது அவர் எதிர்பார்த்த ஒன்று. அப்படி ஒன்றும் இல்லாததால்தான் இந்தக் குழப்பம்.

          நீண்ட நாட்களுக்குப் பின் தன் பால்ய சிநேகிதர் பலராமனைச் சந்தித்தார் ஞானக்கண்ணு.

          ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அருகில் இருந்த பூங்காவில் காற்று வாங்கப் போயிருந்தார் ஞானக்கண்ணு. அங்கு வைத்துத்தான் பலராமனைப் பார்த்தார். அவர் கவிதை வாங்க வந்திருந்தார். அதாவது பலராமன் ஒரு கவிஞர்.

          டைரியில் கவிதை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும்போது, “ஹாய்.. பலராமா… எப்படியிருக்கே? பார்த்து ரொம்ப நாளாச்சே.” என்றார் ஞானக்கண்ணு.

          “அடடா… ஞானக்கண்ணா? உனக்கு ரெண்டு கண்ணும் நன்றாகத்தானே இருக்கு?” என்று கேட்டார் பலராமன்.

          “ஆமாம். ஏன் கேக்கறே?”

          “இல்லை. கண்ணாடி போட்டிருக்கியே அதனால கேட்டேன். கல்லூரியில் படிக்கும்போது நீ எப்படி ஹீரோவாட்டம் இருப்பே. இப்ப கிழவனா மாறிட்டிருக்கியே.”

          “வயசாகுது இல்லையா? என்றும் இளமையாகவா இருக்கமுடியும்?”

-4-

          “மனசுதான் காரணம். அது சரி, உனக்கு அரசு உத்தியோகம். என்ன கவலை? என்னைச் சொல்லு.” என்று நொந்துகொண்டார் பலராமன்.

          “நீ இப்பவும் அந்த தனியார் நிறுவனத்துலதான் குப்பைக்கொட்டறியா?”

          “ஆமாம்பா. அலுவலகம் முழுக்க கூட்டிப் பெருக்கி குப்பையைத் தொட்டியில கொட்டிக்கிட்டுத்தான் இருக்கேன்.”

          “கவிதை எழுதறதை மட்டும் நிறுத்தலைன்னு சொல்லு.”

          “அது மட்டும் என்னால நிறுத்தவே முடியாதுப்பா.”

          “சரி, உன்னுடைய கவிதை திறமைக்கு அண்ணி ஒத்தாசையா இருக்காங்களா?”

          “மண்ணாங்கட்டி.”

          “மண்ணாங்கட்டியா ஒத்தாசையா இருக்கு? ஆச்சரியமா இருக்கே?”

          “சும்மா வெறுப்பேத்தாதே ஞானக்கண்ணா.”

          “அட, ஏம்பா கோபப்படறே?”

          “கோபப்படாம வேறு என்ன பண்ண?”

          “ஏம்பா?”

நகைச்சுவை சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை

          “கொஞ்சங்கூட கற்பூர வாசனை அறியாத கழுதையா வந்து வாய்ச்சிருக்கா என் பொண்டாட்டி.”

          “ரச கற்பூரமா வாங்கிப் பாரேன்.”

          “என்னடா இது, கணவர் எவ்வளவுப் பெரிய கவிஞரா இருக்காரேன்னு பெருமைப்படாம, ஒரே டார்ச்சர்.”

          “அப்படி என்னத்தான் செய்யறாங்க?”

“அலுவலகத்திலிருந்து வந்ததும் வீட்டு வேலை கொடுத்துடறா. சமைக்க றது, துணி துவைக்கறது, ஸ்திரி போடறது, கடைக்குப் போய் மளிகை, காய் கறி வாங்கி வருவது எல்லாமே நான்தான். கிடைக்கிற கொஞ்ச நேரத்துல கவிதை ஒண்ணு எழுதலாமுன்னு பார்த்தா, ‘தே, சதா என்ன இது கிறுக்கிக்கிட்டு? போய் கரண்ட்டு பில்லு கட்டிட்டு வாங்கன்’னு துரத்தறாப்பா. தாங்க முடியலை. அதனால்தான் இப்படி பூங்காவுக்கு ஓடி வந்துட்டேன்.”

          கேட்கவே பரிதாபமாக இருந்தது.

          “ஆமாம், வீட்டு வேலை எல்லாத்தையும் நீயே செஞ்சுட்டா, அப்புறம் அண்ணிக்கு என்ன வேலை?”

          “டிவி சீரியல் ஒண்ணுவிடாமப் பார்க்கறதுதான் அவளோட ஒரே வேலை.” என்றவர், “அது சரி, உனக்கு இது போன்ற தொந்தரவெல்லாம் இல்லையா?” என்று கேட்டார் பலராமன்.

-5-

          “இல்லேப்பா. ஆஃபீஸ் ஆகட்டும், வீடாகட்டும் எனக்கு அந்த மாதிரியான தொந்தரவெல்லாம் கிடையாது. கிடையாதுன்னு சொல்றதைவிட அவை வராம நான் பார்த்துக்கிட்டேன் என்பதுதான் உண்மை.” என்றார் ஞானக்கண்ணு.

          “வராமப் பார்த்துக்கிட்டாயா? எப்படி? உன் ஞானக்கண்ணாலயா?”

          குழப்பத்துடன் கேட்டார் பலராமன்.

          “சரி, உனக்கு அந்த ரகசியத்தைச் சொல்றேன். ஆஃப்ட்ரால் நீ என் சின்ன வயசு நண்பன்.”

          “சின்ன வயசா? அம்பத்திரெண்டு ஆகுதப்பா.”

          “சரி, கேள். எதையும் ஆரம்பத்துலேயே சரியாக்கிடணும். தவறவிட்டா, உன்னப்போல்தான் கஷ்டப்படணும்.”

          “அட, விஷயத்தைச் சொல்லுப்பா?”

          “ஒண்ணுமில்லை அலுவலகத்துலயேயும் சரி, வீட்டிலேயும் சரி, எனக்கு ‘ஞாபக மறதி ஞானக்கண்ணு’ன்னு பேரு.”

          “அப்படியா? ஏன்?”

          “ஏன்னா, எனக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை.”

          “அப்படி ஒண்ணுமில்லையே. நீ காலேஜ்ல படிக்கறச்சே நல்லாத்தானே இருந்தே?”

          “அது அப்ப. இப்ப நிலைமையே மாறிடுச்சு.”

          “நான் இதை நம்பமாட்டேன்.”

நகைச்சுவை சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை

          “எனக்குத் தெரியும், நீ நம்பமாட்டாய்ன்னு. அதாவது, நான் வேணுமின்னே ஞாபகமறதிக்காரனா நடிச்சுக்கிட்டிருக்கேன்.”

          “ஏன்?”

          “எல்ல வேலைகளிலிருந்தும் விடுபட்டு ஜாலியாக இருக்கத்தான்.”

          “எப்படி?”

          “வீட்டில சர்க்கரை வாங்கி வர அனுப்பினா வேணுமின்னே உப்பு வாங்கி வரணும். ஒண்ணு சொன்னா, வேறு ஒண்ணு செய்யணும். எல்லா விஷயங்களும் மறந்துவிடுவதா நடிக்கணும். அதனாலத்தான் ஆஃபீஸ்லேயும் எனக்குத் தொந்தரவு இல்லை. வீட்டிலேயும் தொந்தரவு இல்லை. நான் பாட்டுக்கு ஃப்ரீயா இருக்கேன். லைஃப் ஜாலியா ஓடிக்கிட்டிருக்கு எந்தவித டென்ஷனும் இல்லை.”

           “அடப்பாவி… அண்ணியையே ஏமாத்தறியா? நீ ஹாய்யா இருக்க, நான் மட்டும் கஷ்டப்படணுமா? இரு, இரு… இப்பவே போய் அண்ணிகிட்ட உன் வண்டவாளத்தைத் தண்டவாளத்துல ஏத்தறேன். நீயாவது ஜாலியா இருக்கப்போறதாவது…”

-6-

           ஆவேசமாய் எழுந்தார் பலராமன்.

           “அப்படி என்னத்தைச் சொல்லப்போறே என் பெண்டாட்டிக்கிட்ட?” என்று கேட்டார் ஞானக்கண்ணு.

           “ஞாபகமறதிக்காரனா நீ நடிச்சுக்கிட்டிருக்கிற ரகசியத்தைத்தான்!”

           “ரகசியமா? உனக்கு எப்படித்தெரியும்?”

           “இப்ப நீதானே உன் வாயாலச் சொன்னே?”

           “சரியான அண்டப்புளுகனா இருக்கியே? நான் எப்ப அப்படிச் சொன்னேன்?”

           ஞானக்கண்ணு அவ்வாறு சொன்னதும், பலராமன் ‘பல’ ராமனாய்ச் சிதறிப்போனார்.

           ழக்கம்போல் உப்பு வாங்கிவரச்சொன்னாள் நளாயினி.

           சொல்லிவைத்தாற்போல் சர்க்கரை வாங்கி வந்தார் ஞானக்கண்ணு.

           “அப்பாடா… ரொம்ப சந்தோஷம்.” என்றாள் நளாயினி.

           “எதுக்கு சந்தோஷம்?” – குழப்பமாய்க் கேட்டார் ஞானக்கண்ணு.

           “உண்மையில் எனக்கு சர்க்கரைதான் தேவை. அதை மாத்திச் சொன்னேன். சரியா வாங்கி வந்துட்டீங்க. இனிமேல் மாத்தி, மாத்தித்தான் சொல்லப் போறேன். அப்பத்தான் எனக்குத் தேவையான பொருளுங்க கரெக்ட்டா கிடைக்கும்.”

           ‘அடிப்பாவி…. இப்படி ஒரு வழி இருக்கா?’ என்றவர், உண்மையப் போட்டு உடைக்க, நளாயினியும் தன் தவறை உணர்ந்து, இனி வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்த பிறகுதான் டி.வி. பார்ப்பதாக வாக்களித்தாள்.

அம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!

அம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!

ஆடிமாதப் பிறப்பு தட்சிணாயின புண்ணிய காலம் என்று போற்றப்படுகின்றது. சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் இந்தக் காலம் தேவர்களின் இரவுப் பொழுது என்று சொல்லப்படுகின்றது. ஆடி மாதம் துவங்கினாலே அம்மன் கோயில்கள் களைகட்டும். அம்மன்களுக்கு விஷேச பூஜைகள், திருவிழாக்கள் எல்லாம் அமர்க்களப்படும்.

   விவசாயத்திற்கும் ஆடி மாதம் உகந்த மாதமாகும். ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் உண்டு. ஆடிமாதத்தில் வாழை வைத்தால் நன்றாக விளையும் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்த மாதத்தில் சூரியனும் தன்னுடைய கடும் வெப்பம் தணிந்து அவ்வப்போது தூறல் மழை பொழிய ஆரம்பிப்பார்.

    கடும் வெப்பம், அதற்கு பின் மழை என்பதால் உடல் சீதோஷ்ணம் பாதிக்கும். அதனால் நோய்களும் தாக்கும். இதனாலேயே ஆடிமாதங்களில் வீடுகளில் வேப்பிலைத் தோரணங்கள் அம்மன் வழிபாடு,கூழ்வார்த்தல் போன்றவை நம் மக்கள் அக்காலத்திலேயே தோற்றுவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். தெய்வ வழிபாடும் ஆயிற்று. உடல்நலமும் சீராகிறது என்ற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறித்து இருக்கிறார்கள்.

  ஆடிமாதப்பிறப்பன்று தட்சிணாயின புண்ணிய காலம் என்பதால் நதிக்கரைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும். இம்மாதத்தில் வரும் ஆடி அமாவாசை தினம் முன்னோர்களுக்கு மிகவும் உகந்த தினமாகும். பொதுவாக அமாவாசை தினம் நிறைந்த அமாவாசை என்று சுபகாரியங்கள் செய்கின்றார்கள். அமாவாசை தினம் முன்னோர்கள் வழிபாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்ட நாளாகும். இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதற்கு மட்டுமே உகந்தது. அமாவாசை தினம் அம்மன் கோயில்களில் வழிபாடு நடக்கும்.அமாவாசை தவிர்த்து பிரதமை தினம் அம்பாளுக்கு உகந்த திதியாகும்.

 ஆடி வெள்ளியில் அம்மனை தரிசிப்பது சிறப்புக்குரியது. சகல பாக்யங்களையும்அள்ளித்தர வல்லது. விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனைவழிபட்டால், பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். கன்னிப்பெண்களுக்கு சிறந்தவரன் அமையும்.

• ஆடி மாத சுக்ல தசமியில் திக்வேதா விரதம் கடைப்பிடித்து, திக்தேவதை களை அந்தத் திசைகளில் வழிபட்டால் நினைத்தது தடையின்றி நடைபெறும். 

• ஆடி மாத வளர்பிறை துவாதசி நாளில் விரதத்தை தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை துளசி பூஜை செய்து வந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடுவதுடன் வளமான வாழ்வு கிட்டும். 

• ஆடி மாத சுக்ல துவாதசியில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வ வளம் பெருகும். 

• ஆடி மாதம் வெள்ளிக்கிழமை விரமிருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். 

• ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் விரமிருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். 

• ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். 

பொதுவாகவே ஆடிமாதம் அம்மனை வழிபட சிறந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி,ஆடி செவ்வாய், ஆடிப்பதினெட்டாம் பெருக்கு, ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடிமுளைக்கொட்டுவிழா. ஆடி அமாவாசை, ஆடி ஞாயிறு ஆகியவை அம்மனுக்கு உகந்த நாளாக உகந்த பண்டிகை தினங்களாக கொண்டாடப்படுகின்றன. இது தவிர முருகருக்கு உகந்த கிருத்திகை நாளும் ஆடி மாதத்தில் விஷேசமாகும்

.

ஆடிமாத செவ்வாய்க்கிழமைகளில் ஔவையார் நோன்பு கடைபிடிக்க படுகின்றது. இந்த நோன்பில் ஆண்கள் கலந்து கொள்ள முடியாது. அரிசிமாவு வெல்லம் கலந்த கொழுக்கட்டை செய்து கன்னிப்பெண்கள் வழிபடுவர். இந்த நோன்பு கடைபிடிப்பதால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை உண்டு.

அம்மனுக்கு உகந்த இந்த ஆடிமாதத்தில் காலையில் நீராடி அருகில் உள்ள அம்மன் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவோம்! அம்மன் அருளினை பெற்றிடுவோம்!

தித்திக்கும் தமிழ்!

தித்திக்கும் தமிழ்! எங்கே இடம்?

தமிழர்களின் உபசரிக்கும் பண்பே அலாதியானது. அறிமுகம் இல்லாத ஒருவர் திடீரென்று இல்லத்திற்கு வந்தால் கூட வாங்க என்று அழைப்பர்! இல்லத்தின் உள்ளே அழைத்துச்சென்று நாற்காலியிலோ சோபாவிலோ அமர வைப்பர். மின்விசிறி போட்டு களைப்பாறச் சொல்லி நீரோ, குளிர்பானமோ, காபியோ ஏதாகிலும் தந்து உபசரிப்பர். பின்னர்தான் அவர் வந்த வேலையைக் கேட்பர். அது இயலுமாயின் செய்து கொடுப்பர் இது தமிழர் உபசரிப்பு. 

  இந்த உபசரிப்பு இன்று உருமாறிப் போய் அவலநிலையில் இருக்கின்றது. வாசல் வரை வந்தவரை அங்கேயே சென்று பேசி அப்படியே ஒன்றும் கொடாமல் திருப்பி அனுப்புவர். காலம் மாறிக்கிடக்கிறது. கள்வனும் உள்ளே வரக்கூடும் என்று எப்போதும் கதவுப் பூட்டிக் கிடக்கிறோம் இன்று. இன்னும் சிலரோ வீட்டில் இருந்தாலும் வெளியில் தலைகாட்ட மாட்டார். துணைவியிடமே வீட்டில் ஆள் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடச் சொல்வார்.

   இன்று அவரவர் பிழைப்பதே பெரும்பாடாக கிடக்கிறது. இதில் அடுத்தவரைக் கூப்பிட்டு உபசரிக்கவோ நன்கொடை அளிக்கவோ யாருக்கும் நேரமும் இல்லை விருப்பமும் இல்லை. இப்படி ஒரு வகையினர்.   இன்னும் ஒரு வகையினர் இருக்கின்றனர். விருந்தினர் வீட்டினுள் வந்தபோது, வாங்க வாங்க! சவுக்கியமா? உக்காருங்க! என்பர் அங்கே உட்கார இடம் இருக்காது. சோபாவில் பழைய துணிமணிகளும் பிள்ளைகள் இறைத்த புத்தகங்களும்  அடைத்துக் கிடக்கும். அதை அப்புறப் படுத்தாமலே, நிற்கறீங்களே உக்காருங்க! என்று சொல்லிவிட்டு இவர் பாட்டுக்கு தொலைக்காட்சியிலே கவனம் செலுத்த ஆரம்பிப்பார்.  

வந்தவரால் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலை! வெளியே செல்லவும் முடியாது. என்னங்க! வந்தீங்க! அப்படியே கிளம்பிட்டீங்களே! என்று கேட்பார் இவர். அவர் பாவம் தவித்துப்போய் ஒரு வாய் தண்ணீர் கிடைக்குமா என்று எண்ணி கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என்று கேட்க இவரோ இருந்த இடத்தை விட்டு அசையாமல் உள்ளே குரல் கொடுப்பார். “ஏம்மா! ஒரு சொம்பு தண்ணி கொண்டுவா!”    உள்ளேயிருந்து குரல் வரும், ”நான் வேலையா இருக்கேன்! நீங்களே வந்து எடுத்துப்போங்க!”  வந்தவருக்கு தர்ம சங்கடமாகிப் போகும்.

இப்படி நமது உபசரிப்புக்கள் மாறிப் போய்விட்டன. இப்போது அந்த காலத்தில் ஒளவையாருக்கு நடந்த உபசரிப்பைப் பார்ப்போமா?     ஒரு சமயம் சோழன் தமிழறிஞர்களை புலவர்களை மிகவும் ஆதரித்து வந்தான். அவன் ஒருநாள் காவிரி வளம் கண்ணுற்று வந்தபோது காவிரிக்கரையோரமாக சங்கு ஒன்று வாய் திறந்தபடி இருப்பதைக் கண்டான். அதே சமயம் அங்கிருந்த ஒரு பூவிவிலிருந்து சிறு துளி தேன் ஒன்று அந்த சங்கின் வாயில் விழுந்தது. இதைக் கண்டு மகிழ்ந்த சோழன் இயற்கையின் அதிசயத்தை வியந்து அதே சிந்தனையில் இருந்தான்.   இதே சிந்தனையில் அவன் அவையில் இருந்தபோது அவ்வையார் அங்கே வந்தார்.

மன்னன் அவ்வையைக் கண்டு, வாருங்கள், அமருங்கள் என்று சொன்னான். ஆனால் அங்கே அவ்வையார் அமர இருக்கை ஏதும் இருக்கவில்லை! இதைப்பற்றி அவையில் இருந்தோரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.   ஔவையாரோ நெடுந்தொலைவு நடந்து வந்தவர், மிகுந்த பசியோடும் தாகத்தோடும் இருந்தார். சோழனின் இந்தச் செயல் அவரை ஒரு கவிபாட வைத்தது.


  கால்நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன்யான் வந்ததூரம் எளிதன்று –கூனல்கருந்தேனுக் கங்காந்த  காவிரிசூழ் நாடாஇருந்தேனுக் கெங்கே இடம்?


காவிரிக் கரையோரம்  செழித்து வளர்ந்து பூத்துச்சொரியும் சோலைகளிடையே கிடக்கும் சங்கானது பூக்களில் சுரந்து வழியும் மிகுதியான தேனைப் பருகுவதற்காக வாயைப்பிளந்து இருக்க கூடிய காவிரி சூழ்ந்த வளம் மிக்க சோழநாடா! உன்னைக் காணும் ஆர்வத்தால்  விரைந்து வழியெல்லாம் நடந்து என் கால் நோவுற்றேன்! நான் கடந்து வந்த தூரம் குறைவான தூரம் அல்ல! எளிதில் அடைய முடியாத நெடுந்தூரம். அவ்வாறு நடந்து வந்து உன் அவையினுள் நின்றிருக்கும் எனக்கு அமர்வதற்கு எங்கு இடம்?


 என்று பொருள் படும்படி பாடினார்.   சோழன் அசந்து போனான். தான் கண்ட காட்சியை பாடிய ஔவை இறையருள் பெற்ற புலவர் என்று எண்ணினான். தன் தவறுக்கு வருந்தினான். உடனே இருக்கை தந்து உபசரித்து பரிசுகள் தந்து வழியனுப்பினான். 

இதில் கூனல் என்பது, சங்கு, அல்லது, நத்தை, அல்லது ஆமை என்று பொருள் கொள்ளலாம்.   ஒரு நத்தைக்கும் தேன் கிடைக்கும் இந்த சோழ நாட்டில் எனக்கு அமர்வதற்கு ஓர் இடமும் கிடையாதோ?  என்று பாடியது உன் அன்புப் பரிசும் கிடையாதோ என்று பொருள் உணர்த்தும்.

என்ன ஒரு அருமையான பாடல்! படித்து ரசியுங்கள்! மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! நன்றி!

தேன்சிட்டு மின்னிதழ்- தஞ்சை ப்ரணா இணைந்து நடத்தும் மாபெரும் நகைச்சுவை சிறுகதைப்போட்டி!

தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து       நடத்தும்

மாபெரும்நகைச்சுவைசிறுகதைப்போட்டி-

மொத்தப்பரிசு ரூபாய்- 8000

முதல் பரிசு_ 3000- இரண்டாம்பரிசு ரூ 2000. மூன்றாம் பரிசு ரூ 1500

மேலும் மூன்று ஆறுதல் பரிசுகள் தலா.ரு 500.

போட்டிக்கான கதைகள் வந்து சேர கடைசி நாள்: 31-5-2020

முடிவுகள் ஜூலை 2020 இதழில் வெளியாகும்.

பரிசுபெற்ற கதைகள் தொடர்ந்து தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் தேன்சிட்டு இணையதளத்தில் பிரசுரமாகும்.

போட்டிக்கான விதிமுறைகள்:

கதைகள் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்க   வேண்டும்.

கதைகள் 800 முதல் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கதைகள் இதற்கு முன்னர் எந்த இதழிலும் ஊடகத்திலும் மின்னிதழ், இணையதளங்களில் பிரசுரம் ஆகாதவையாக இருத்தல் வேண்டும். படைப்பாளி இது தமது சொந்த படைப்பு வேறு எங்கும் பிரசுரம் ஆகவில்லை என்று சான்றளித்து கையோப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.

கதைகளை எம்.எஸ்.வேர்டில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டி குறித்து கடிதத்தொடர்போ போன் செய்து விசாரிப்பதை தவிர்க்கவும்.

போட்டியில் பிரபலமான எழுத்தாளர்கள் கலந்து கொள்வதை தவிர்க்கவும்.

போட்டிக்கான கதைகள் நடுவரால் பரிசீலிக்கப்பட்டு தேன்சிட்டு மின்னிதழில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

 .அனுப்பவேண்டிய மின்னஞ்சல் : thalir.ssb@gmaiil.com.   

  போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!

சின்ன சின்ன குறிப்புகள்!

சின்ன சின்ன குறிப்புகள்!

சொத்தைப் பல் உள்ளவர்கள் கிராம்பை தூள் செய்து கொண்ட பின் கற்பூரத்தையும் சிறிது சேர்த்து சில துளிகள் துளசிச் சாறில் குழைத்து சொத்தை பல்லின் மீது பூசி வந்தால் பல் வலி குறையும்.

சிறு குழந்தைகள் மண்ணில் விளையாடி விட்டு அப்படியே விரல் சூப்பும் இதனால் கிருமிகள் தொற்றும் வயிற்றில் பூச்சிகள் உண்டாகும். இந்த பூச்சிகளை ஒழிக்க வசம்புவை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும் இந்த பொடியை தேனில் குழைத்து கொடுத்து வர குழந்தைகள் மலம் கழிக்கையில் பூச்சிகள் வெளியேறிவிடும்

.

கடலைமாவு, அரிசி மாவு, கோதுமை மாவு இவற்றில் வண்டுகள் வராமல் இருக்க உப்புத் தூளை சிறு துணியில் முடிந்து போட்டு வைக்கலாம்.

செருப்பு ஷூ போன்றவை மழையில் நனைந்து ஈரமாகிவிட்டால் கழற்றி வைக்கையில் நியுஸ் பேப்பரை அதில் திணித்து வையுங்கள். நியூஸ் பேப்பர் ஈரம் உறிஞ்சியவுடம் வெயிலில் காய வைத்து சிறிது டால்கம் பவுடரை தூவி வைத்தால் துர்நாற்றம் வராது.

மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் பாலில் மஞ்சள்தூள், சுக்குத்தூள் சிறிதளவு போட்டு குடித்துவர மூட்டுவலி குணமாகும்.

மாதவிடாய் வயிற்றுவலி பிரச்சனை உள்ளவர்கள் மாதவிடாய் ஆவதற்கு ஒருவாரம் முன்பிருந்து தினமும் காலையில் வெறும்வயிற்றில் வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து விழுங்கினால் வயிற்றுவலி பிரச்சனை வராது,

சிங்கில் பாத்திரங்களை தேய்க்கும் போது நாளடைவில் அந்த இடம் சொரசொரப்பாகிவிடும். இதை தவிர்க்க அங்கு ரப்பர் ஷீட் போட்டு அதன் மீது பாத்திரங்களை வைத்து துலக்கினால் சத்தமும் வராது. இடமும் தேயாது.

சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும் போது மஞ்சள் வாழைப்பழத்தை சேர்த்து பிசையவும். சப்பாத்தி மிருதுவாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.