வாசகர் மேஜை!

வாசகர் மேஜை!

அன்பார்ந்த வாசகர்களே இது உங்களுக்கான பக்கம்! இதில் நீங்கள் உங்கள் அக்கம் பக்கத்தில் ரசித்த நிகழ்வுகள், உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் மற்ற வாசகர்களுக்கு உதவும் வகையில் உள்ள நிகழ்வுகளை எழுதலாம். வாருங்கள்! களம் புகுங்கள்!

 டீக்கடை வைத்து அசத்தும் இளைஞர்!

எங்கள் ஊரில் படித்த இளைஞர் ஒருவர் பி.வி.சி பைப்கள் ஏஜென்சி எடுத்து குழாய்க் கிணறுகள் அமைப்போருக்கு பிவிசி குழாய்களை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். மிகச்சிறிய அளவில் இவர் செய்து வந்தபோது. பி.வி.சி பைப் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அதே பகுதியில் பெரிய அளவில்  ஒரு எஜென்சியை துவக்கி சலுகை விலையில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தது.

இதனால் இளைஞரின் வியாபாரம் படுத்துப்போனது. ஆனாலும் மனம் தளராத இளைஞர் எலக்ட்ரானிக் பொருட்கள் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். அதுவும் சில மாதங்களில் சரியில்லாமல் போனது. பெரிய கடைகள் நிறைய இருப்பதால் இவருக்கு வியாபாரம் ஆகவில்லை.

இவர் கடை வைத்திருந்த பில்டிங்கின் சொந்தக்கார்ரும் இடத்தை காலி பண்ணும்படி வற்புறுத்தவே கடையை காலி செய்துவிட்டார். அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கையில்  அடுத்த வாரத்திலேயே தான் வியாபாரம் செய்த இடம் அருகிலேயே சிறிய அளவில்  ஒரு இடம் வாடகைக்கு எடுத்து  டீக்கடை ஒன்றை துவக்கினார். படித்துவிட்டோம் டீ ஆத்த மாட்டோம் என்று நினைக்காமல் தானே டீ போட்டு வியாபாரத்தை துவக்கினார்.

 அது பேருந்து நிறுத்தப் பகுதியானதால் வாடிக்கையாளர்கள் பெருகினர். இன்று நல்ல வியாபாரம் நடக்கிறது.  தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் புதிய உத்திகளை கையாண்டு எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்ற அந்த இளைஞரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடம்.

எஸ்.பிரேமாவதி, நத்தம் .

இப்படியும் யூஸ் பண்ணலாம் மொபைலை!

  சமீபத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது இரண்டு குழந்தைகளும் மொபைல் போனை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தன.

நண்பரிடம் உரையாடுகையில் குழந்தைகளிடம் மொபைல் போனை அதிகம் கொடுக்காதீர்கள் அது கண்களை பாதிக்கும். சதா விளையாடுவதால் மூளைத்திறன் பாதிக்கும் என்றார்.

நண்பர் சிரித்தபடியே கூறினார். நீ கூறுவது சரிதான். ஆனால் என் குழந்தைகள் மொபைலில் பாடம் படிக்கின்றனர். தீக்‌ஷா என்றொரு  ஆப் உள்ளது. அதில் இந்திய அரசாங்கத்தின் அனைத்து பாட்த்திட்டங்களும் பதிவேற்றியுள்ளார். எல்லா வகுப்பு பாடங்களும் கிடைக்கின்றது. அதை தரவிறக்கிக் கொடுத்துள்ளேன்.

தினமும் ஒரு மணி நேரம் இந்த ஆப் மூலம் பாடங்களை பயில்கின்றனர் என் பிள்ளைகள். டியுசன் செலவு மிச்சம் ஆவதுடன் நாமும் குழந்தைகளுடன் கொஞ்சம் நேரம் செலவிட்டு அவர்கள் படிப்புக்கு உதவ முடிகிறது. என்றார்.

நானும் என் குழந்தைகளுக்கு தீக்‌ஷா ஆப் தரவிறக்கித் தர வேண்டும் என்று முடிவு செய்து அவரை பாராட்டிவிட்டு வந்தேன்.

துர்காபிரசாத், பொன்னேரி.

பூ விற்கும் ஆட்டோ டிரைவர்!

எங்கள் பகுதியில்  லாக்டவுன் சமயத்தில்  மல்லிகைப் பூ விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். பார்த்த முகமாக இருக்கிறதே என்று யோசிக்கையில் சார் மல்லி வேணுமா? பத்து ரூபா தான் என்று அவர் அருகில் வந்து கேட்டார்.

   உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே? என்று அவரிடம் கேட்டேன். சார் நான் ஆட்டோ டிரைவர். நம்ம ஏரியா ஆட்டோ ஸ்டாண்டில் பார்த்திருப்பீர்கள். என்றார்.

  என்னப்பா பூ விற்கிறே? தோட்டம் இருக்கா என்றேன். இல்லை சார்! லாக் டவுன் போட்ட்தில் இருந்து பிழைப்பு இல்லை! ஆட்டோ ஓடலை! எவ்வளவு நாள் வீட்டுல சும்மா இருக்கிறது! ஏதாவது செய்யலாம்னு யோசிச்சு  இப்ப பூ விற்கிறேன். பக்கத்து ஊரிலே இருக்கிற மல்லி தோட்ட்த்துலே போய் மொத்தமா பூ வாங்கி வந்து விக்கறேன். ஆட்டோவில வந்த வருமானம் வரலேன்னாலும் ஏதோ ஒரளவு கிடைக்குது. ஜீவனம் நடக்கணும்ல என்றார்.

தொழில் முடங்கிவிட்டதே என்று முடங்காமல் வேறுவழியில் பிழைப்பைத் தேடிக்கொண்ட   அவரைப் பாரட்டிவிட்டு கொஞ்சம் பூவாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

எஸ்.எஸ். பாபு, பஞ்செட்டி.

ஏழை மாணவர்களுக்கு உதவும் நண்பர்!

சமீபத்தில் நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அவரது மேசைமீது ஒரு உண்டி ஒன்று இருந்தது. என்ன இது நண்பா! உன் பசங்க சேமித்து வைக்கிறார்களா? என்று கேட்டேன்.

 இல்லை நண்பா! நான் தான் சேமிக்கிறேன் என்றார்.  அவசர செலவுக்கு உதவும் என்று உண்டியலில் சேமிக்கிறாயா என்றேன்.

 இது அவசர செலவுக்காண உண்டி இல்லை நண்பா. இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக  வைத்திருக்கும் உண்டியல். இதில் நானும் என் மனைவியும் என் பிள்ளைகளும் தினமும் ஒரு குறிப்பிட்ட  அளவு காசை இதில் போட்டு வைப்போம். நானும் என் மனைவியும் தினமும் இருபது ரூபாய் இதில் போட்டால் என் பிள்ளைகள் அவர்கள் பாக்கெட் மணியில் ஒரு குறிப்பிட்ட தொகை ஒரு ரூபாயோ அல்லது அஞ்சு ரூபாயோ எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு போடுவார்கள்.

மாத இறுதியில் சேரும் தொகையை  ஏதாவது ஒரு ஏழைக்கு உணவுச் செலவுக்கோ அல்லது உடையாகவோ வாங்கிக் கொடுத்துவிடுவோம். தினமும் நாம் தேவையில்லாது எவ்வளவோ பணத்தை வீணடிக்கிறோம். அந்த பணத்தில் கொஞ்சம் இப்படி சேமித்து இல்லாதவர்களுக்கு உதவி செய்வதில் ஒரு மனமகிழ்ச்சி கிடைக்கிறது என்றார். அவரது நல்ல உள்ளத்தை பாராட்டி வந்தேன்.

வி. கண்ணன். சென்னை.21

பாசம் நிறைந்த வீடு!

செந்தில்குமார் அமிர்தலிங்கம்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் சென்னை கிளையில் மேலாளராகப் பணிபுரிகிறான் சந்தோஷ். வேலை விசயமாக மும்பை, பெங்களூரு, கேரளா என அடிக்கடி பறந்துக்கொண்டிருப்பவன்.

எப்போதும் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருப்பவன்
எனவே மன உளைச்சலில் கடுகடுப்பாய் இருப்பான்.
மேலிடத்துப் பிரஷர் அதை வீட்டிலும் வெளிப்படுத்திவிடுவான்.அதனால் இவனது அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் என யாரும் இவனிடத்தில் நெருங்குவதில்லை. இவனும் அவர்களிடம் நெருங்குவதில்லை.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் நண்பர்களுடன் ரிலாக்ஸ் செய்ய விரும்பி பீச், சினிமா என்று சென்றுவிடுவான்.இல்லையென்றால் லேப்டாப்பை நோண்டிக்கொண்டிருப்பான்.

எனவே இவனிடம் பேசவே வீட்டிலுள்ளவர்கள் பயப்படுவார்கள்.இவனும் குழந்தைகள் ஏதேனும் சிறு தவறு செய்தாலும் அடித்துவிடுவான்.அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்றுகூட இவன் நினைவில் இருப்பதில்லை.எல்லாமே மனைவி சுகந்திதான் கவனித்துக் கொள்கிறாள்.

வயதான பெற்றோரிடம்கூட நின்று ஒருவார்த்தைப் பேசுவதில்லை அவன்.
அவனது அன்பிற்காய் ஏங்கியே அவர்கள் நொந்துகொண்டிருந்தார்கள்.ஏதாவது கேட்டால் இந்த சம்பளம் வேணும்னா இப்படிதான் வேலை பார்த்தாகனும் என்று எகிறுவான்.

ஆனால்…

தற்போது கொரோனா பாதிப்பால் இருபத்தொரு நாள் ஊரடங்கு உத்தரவு ஆதலால் வீட்டில் இருக்கிறான்.

காலை ஒன்பது மணி.
அப்போதும் லேப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.அருகில் அவனது மனைவி வந்து நின்றாள்.

” என்னங்க”

” என்ன?”

“சாப்பிட வாங்க”

“வரேன் நீ போ”

சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து நின்றாள்.

“என்னங்க”

“அதான் வரேன்னு சொல்றேன்ல…” என்று எரிந்துவிழுந்தான்.
அவள் போய்விட்டாள்.

இவன் எழுந்து டைனிங் டேபிளுக்குச் சென்றான். அங்கே இவனுக்காய் யாரும் சாப்பிடாமல் காத்திருந்தனர்.இவன் வந்தபின்தான் அவர்களும் சாப்பிட அர்ந்தனர்.

அவனது அம்மா “நேரத்துக்குச் சாப்பிடுப்பா” என்றார்.

“வீட்டிலிருக்கும் போதாவது உடம்ப பாத்துக்கப்பா.” என்றார் அப்பா.

அவனுக்கு இட்லியை வைத்துக்கொண்டே சுகந்தி கேட்டாள்.

“என்னங்க உங்களுக்கு நம்ம பசங்க என்ன படிக்குறாங்கன்னு தெரியுமா?” என்றாள்.

ம்…என்று யோசித்தவன்

“பையன் சிக்ஸ்த், பொண்ணு ஃபோர்த்” என்றான்.

அதற்கு” அது போன வருஷம்ப்பா..” என்றனர் குழந்தைகள்.

இவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

“இந்த அளவுக்கு குடும்பத்து மேல நினைப்பில்லாம வேலை வேலைனு சுத்துறீங்களே…இனிமேலயாவது எங்களையும் நினைச்சுப்பாருங்க” என்றாள் சுகந்தி.

“அவனுக்கு இன்னொரு இட்லி வைமா புதினா சட்னி அவனுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள் அம்மா.

“போதும்மா” என்றான்.

“சூடா வச்சிக்கப்பா” என்று அவனது அப்பாவே ஒரு இட்லியை எடுத்து அவன் தட்டில் வைத்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நிமிர்ந்து அவனது அப்பாவைப் பார்த்தான்.
அவர் முகத்தில் முதுமையும் பாசமும் நிறையவே தெரிந்தது.

அவனது அம்மா “இவனை இப்பவிட்டா இனி எப்போ பாக்குறது” என்பது போல அவனை முழுவதுமாக பார்த்துக்கொண்டிருந்தாள் விழிகள் கசிய.

சிறுவயதில் எப்படியிருந்தார்களோ அப்படியே இருக்கிறார்களே அதே பாசத்தோடு.. நான்தான் மாறிவிட்டேன் என்று மனதினுள் நினைத்துக்கொண்டான்.

சாப்பிட்டு முடித்ததும்
மகன் கேட்டான்.
“அப்பா போனவருடம் உங்க பிறந்தநாளுக்கு நாங்க ஒரு கிப்ட் வாங்கியிருந்தோம்.ஆனா நீங்க வீட்டுக்கே வரல.வெளியூர் போய்டிங்க.அதுக்கப்புறமும் நீங்க பிசியாவே இருந்திங்க கொடுக்க முடியல. இப்ப பாக்குறிங்களாப்பா?” என்றான்.

இவன் பாக்குறேன் என்று தலையாட்டினான்.

இருவரும் ஓடிச்சென்று ரூமிலிருந்து ஒரு சிறிய பாக்ஸ் ஒன்றை எடுத்துவந்து கொடுத்தனர்.

அதில் இவனுக்காக அவர்கள் வாங்கிய அழகிய வாட்ச் ஒன்று இருந்தது.

“லேசா ஒடஞ்சிட்டதுபா ஸாரிப்பா” என்றான் மகன்.

இவன் “பரவால்லடா” என்றபடி வாங்கிக்கொண்டு இருவரையும் கட்டிக்கொண்டான்.

அவனது அம்மாவும் அப்பாவும் ஒரு பையை எடுத்துவந்து அவனிடம் நீட்டினர்.

அதில் அவனுக்காய் கலர் கலராய் சட்டைத்துணிகள் இருந்தன. கூடவே இவனது சிறுவயது புகைப்படமும் இருந்தது.

அவர்கள் கண்ணீரோடு இவனைப்பார்க்க இவனும் அழுதேவிட்டான்.

இனி இந்த இருபத்தியொரு நாளும் லேப்டாப்பை மறந்து இவர்களோடே கழிக்க வேண்டுமென மனதில் எண்ணிக்கொண்டான்.

இவன் எண்ணியது போலவே இருபத்தியொருநாளும் குடும்பத்தோடே மகிழ்ச்சியாக இருந்தான்.இவனுக்குப் பிடித்ததையெல்லாம் சமைத்துக்கொடுத்து சந்தோஷப்பட்டாள் மனைவி.

கொரோனா அச்சத்தையே மறக்கும் அளவுக்கு அவர்களது அன்பிலே திளைத்தான் சந்தோஷ்.

இத்தனை நாள் இதையெல்லாம் இழந்ததை எண்ணி வருந்தினான்.

இருபத்தியோராவது நாள்.
தொலைக்காட்சியில் பாரத பிரதமர் தோன்றி “கொரோனா வைரஸ் முழுவதுமாக அழிந்தது.இனி அச்சப்படத்தேவையில்லை.இனி சகஜமான வாழ்க்கைக்கு அனைவரும் திரும்பலாம்” என மகிழ்ச்சிப்பொங்க கூறிக்கொண்டிருந்தார்.

அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியே என்றாலும் சந்தோஷ் மறுபடியும் பிசியாகிவிடுவானே என்ற கவலை தொற்றிக்கொண்டது.

ஆனால் சந்தோஷ் சந்தோஷமான ஒரு செய்தியைக் கூறினான்.

“நான் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு அப்பா முன்னாடி பார்த்த கார்மெண்ட்ஸ் வேலையவே தொழிலாக எடுத்து செய்யலாம்னு இருக்கேன்.நம்ம வீட்லயே உங்க கூடவே” என்றான்.

கொரோனா ஒழிந்து வாழ்வில் ஔி கொடுத்ததாய் உணர்ந்தனர் அனைவரும் மகிழ்ச்சியாக.

முற்றும்.

செந்தில்குமார்அமிர்தலிங்கம்.

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

ஸ்ரீ அருளானந்தர் சுவாமிகள்

1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்

4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .

5)கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .

6) கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .

7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .

8) உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .

9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்

1O) அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .

11)மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..

12) துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .

12)அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .

14) பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

15) குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .

16) கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .

17) அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .

18) இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .

19) கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .

2O) அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .

21) நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .

22) அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..

23) என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் …

24) காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .

24) பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது

25)சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .

26) குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .

27) ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .

28) சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .

29) அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .
எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .

3O) சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .

31) கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,

33) உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.

34) கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

35) தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .

36) பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .

♥இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .

♥மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .

♥நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..

♥மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ….

♥கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ….

♥நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .

♥இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .

♥(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.

♥தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.

♥சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .

♥உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

வணக்கம்

நன்றி: படைப்பு முகநூல் குழுமம்.

மகிழ்ச்சி தேநீர்! ( படித்ததில் பிடித்தது)

மகிழ்ச்சி தேநீர்

நாராயணன் இராமச்சந்திரன்

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள்.

காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.
அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள்.

பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள்.

அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை.

அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார்.

அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார்.

ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது.

பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.

அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன.

மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார்.

பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள்.

அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார்.

பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள்.

அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார்.

பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன.

விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள்.

அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள்.

அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான்.

ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது.

உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள்.

வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம்.

எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள்.

சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது.

இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள்.

இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

“சந்தோஷம் மற்றும் அமைதி” வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !

வாசித்ததற்கு நன்றி தொடர்ந்து வாசியுங்கள். உங்களுக்கு தெரிந்த அனைவரையும் முகநூலில் இணைத்து வாசிக்க சொல்லுங்கள். அன்புடன் முனைவர் நாராயணன் இராமச்சந்திரன்

நன்றி: facebook.

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 17

உங்கள் ப்ரிய “பிசாசு”

முன்கதை சுருக்கம்:

தன் நண்பன் ரவியை குணப்படுத்த அவனை திருப்பதி அழைத்துவருகிறான் முகேஷ். ஆனால் வழியில் ரவி காணாமல் போகிறான். திருப்பதியில் முகேஷை அவனது சித்தப்பா ஒரு ஆட்டோ டிரைவரை விட்டு தன் இருப்பிடத்திற்கு அழைத்துக் கொள்கிறார். அன்று இரவு அவனை ஏதோ பிடித்து இழுக்கிறது.

கொண்டபள்ளி ஒரு டிபிகல் ஆந்திர கிராமம். மலையடிவாரத்தில் பல குடிசைகள் சில கான்க்ரீட் வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக மாடு இருந்தது. ஆனாலும் விவசாயம் படுத்து விட்டதால் இப்போது பலர் பக்கத்து கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். பேய்,பிசாசு, காத்து கருப்பு இவை மீது மிகுந்த நம்பிக்கையும் பயமும் அந்த மக்களுக்கு உண்டு.

பேய் அடித்துவிட்டது! பிசாசு மிரட்டிவிட்டது என்று எப்பொழுதும் சுவாமிஜியிடம் திருநீறு மந்திரித்து தாயத்து கட்டிச் செல்வார்கள். சுவாமிஜியும் நேரம் காலம் பார்ப்பது இல்லை! எப்பொழுது யார் அழைத்தாலும் கிளம்பிச் சென்று விடுவார். அதனால் அந்த பகுதியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. சுவாமிஜி சுவாமிஜி என்று உயிரையே விடுவார்கள். இவரும் அந்த மக்களுக்கு ஒன்றினைந்து இருந்தார்.

சுவாமிஜியின் பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் அவர் சின்ன வயதிலேயே கொண்டபள்ளிக்கு வந்துவிட்டதாக கூறுவார். சிறுவயதில் தந்தையிடம் கோபித்துக் கொண்டு திருப்பதி வந்த அவர் அங்கு சில இடங்களில் வேலை செய்தார். எதுவும் சரிபட்டு வராத நிலையில் ஒரு நாள் இந்த குஹாத்ரி மலைக்கு வந்தவர் இங்கேயே தங்கி தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

இந்த மலையில் ஒரு குகை அங்கே பாறையில் ஒரு எந்திரம் எழுதப்பட்டிருக்கும். அது சக்தி வாய்ந்த சுப்ரமண்யர் எந்திரம். மலைகளில் சுற்றி வந்த சுவாமிஜி தற்செயலாக இதை கண்டுபிடித்தார். அந்த எந்திரம் அவரை வசீகரித்தது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த யாரோ எழுதிய எந்திரம் அது. ஆனால் அது அவரை ஈர்த்தது. என்னை பூஜியேன் என்று அழைப்பது போல அவரது காதில் ஏதோ ஒலித்தது.

அங்கேயே தங்கி சுப்ரமண்யரின் மூல மந்திரத்தை இடைவிடாது ஜபிக்கத்துவங்கினார். இத்தகைய மந்திரங்களை ஜபித்தால் ஒரு கட்டத்தில் அந்த மந்திரத்திற்குரிய தேவதை எதிரில் பிரசன்னமாகும். அப்போது பயங்கர பிரகாசமாக தெரியும் அந்த தேவதையை கண்டு நாம் மிரளக்கூடாது. அப்படி மிரண்டு போனால் நமது புத்தி பேதலித்துவிடும். அதனால்தான் எதையும் குரு உபதேசத்துடன் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.

சுவாமிகள் இவ்வாறு சுப்ரமண்ய மந்திரம் ஜபித்து வர அவருக்கு முருகர் அருள் சித்தியாயிற்று. அதன் பின்னர் அவர் நினைத்த காரியம் கை கூடியது. இதனால் அவர்சொன்ன வாக்கு பலித்தது. தீராத நோய்கள் தீர்ந்தது.இப்படி இங்கு வந்த சுவாமிகள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து இன்னும் பல சித்து வேலைகள் கற்றுக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். இது அவருக்கு பல எதிரிகளையும் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனால் அதற்கெல்லாம் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

அன்றும் அப்படித்தான்! குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதும் அவர் கிளம்பி போய்விட்டார். முகேஷ் முதலில் தைரியமாக இருந்தாலும் அந்த இடத்தின் அமைதி அவனை என்னவோ செய்தது. இருப்பினும் எப்படியோ மெல்ல உறங்கி விட்டான்.

திடுமென அவனை ஏதோ பிடித்து இழுப்பது போல தோன்ற அவன் காலை உதறினான். ஆனால் காலை அசைக்கவே முடியவில்லை. சித்தப்பா! சித்தப்பா! என்று அவன் கத்த முயன்றான். ஆனாலும் அவனால் வாய்திறக்க முடிந்ததே தவிர சத்தம் வரவில்லை! சில நிமிடங்கள் மரண அவஸ்தையில் இருந்தான் முகேஷ். இது அவனுக்கு புது அனுபவம். இப்படி எதுவும் அவன் வாழ்க்கையில் நடந்ததே இல்லை! எனவே மிகவும் மிரண்டு போய்விட்டான். இனி அவ்வளவுதான் என்று அவன் நினைத்த சமயம். வாசல் கதவு திறந்தது.

உள்ளே சித்தப்பா நுழைந்தார்.முகேஷ் இப்படியும் அப்படியுமாக புரண்டு படுப்பதையும் முனகுவதையும் பார்த்த அவர் நொடியில் தன் மேல் போட்டிருந்த துண்டினை எடுத்து அப்படியே குழந்தைகள் அந்த காலத்தில் சோடா கார்க்கில் நூலினை விட்டு சுழற்றி விளையாடுவார்களே அப்படி அந்த துண்டினை இரு கரங்களில் பிடித்து சுழற்றினார். அந்த சுழற்றல் வேகமாக அந்த துண்டு அப்படியே முறுக்கு போட அதை அப்படியே முடிச்சிட்டார். அவர் முடிச்சிட்ட நொடி முகேஷ் தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல எழுந்து உற்காந்தான்.

மாதறசத்! என்கிட்டேயே விளையாடறியா? என்று அந்த துண்டின் மீது தன் இடுப்பில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு துளி விபூதியை எடுத்து போட்டார் பின்னர் அப்படியே சுருட்டி அதை அங்கிருந்த ஒரு பானையில் போட்டு மூடினார்.

நடப்பது எல்லாவற்றையும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் முகேஷ்.

என்ன முகேஷ்! பயந்துட்டியா!இதெல்லாம் ஜுஜுபி! இதுக்கெல்லாம் பயப்படாதே! எப்படி வேர்த்து வழியுது உன் முகம்! இந்தா துண்டு துடைச்சிக்கோ! என்று ஒரு துண்டினை தந்தார்.

சித்தப்பா! இங்கே என்ன நடந்தது! என்னை எதுவோ இழுத்தது! நான் கத்தினேன்! ஆனா சவுண்டே வரலை! திடீர்னு நீங்க வந்தீங்க! ஒரு துணியால ஏதோ மாஜிக் பண்ணீங்க! எல்லாம் சரியாயிடுத்து!

ஒண்ணுமில்லே முகேஷ்! இது என்னோட கட்டுப்பாட்டில் இருக்கிற ஏரியா! அப்படின்னு சொன்னேனே தவிர என்னை ஏமாத்தி சில துர் ஆவிகள் இங்க உலாத்தி வரும்! அதுங்கள்ள ஒண்ணோட சேஷ்டைதான் இது! நீ சின்னை பையன் அது உன்கிட்ட விளையாடி பார்க்குது! விளையாடிச்சா? இதுவா விளையாட்டு!

ஆமாம்! ஆவிகளுக்கு நம்மை துன்புறுத்தி இன்புறுதல்தான் விளையாட்டு! நீ படற அவஸ்தை அதுக்கு மகிழ்ச்சி!

அப்பாடா! எப்படியோ நீங்க வந்து என்னை காப்பாத்திட்டீங்க! இல்லேன்னா நான் செத்திருப்பேன்!

அப்படியெல்லாம் நடக்காது! சாதாரணமா ஆவிங்க யாரையும் கொல்லாது!

அப்ப ஆவி அடிச்சிட்டதா சொல்றாங்களே!

அது நம்ம பலகீனம்! அதை பார்த்து பயந்து அந்த அதிர்ச்சியிலே உறைந்து உயிரை விட்டுடறவங்களும் இருக்காங்க!

சித்தப்பா! ஆவிங்கன்னா என்ன? செத்து போனவங்க எல்லாம் ஆவிங்களா உலாத்துவாங்களா?

இந்த அர்த்த ராத்திரியிலே இந்த கேள்வி தேவையா? நீ நிம்மதியா படுத்து தூங்கு! நானும் தூங்கறேன்! நாளைக்கு காலையில இதுக்கு விளக்கம் சொல்றேன்.

அதுவும் சரிதான்! ஆனா எனக்குத்தான் தூக்கம் வருமான்னு தெரியலை!

அப்படியா? நான் உனக்கு தூக்கம் வரவழைக்கிறேன்! எங்கே என் கண்ணையே கொஞ்ச நேரம் பாரு! ஆங்! அப்படியே பாரு அப்படியே பாரு! அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே முகேஷ் கண் சொக்கி அப்படியே படுக்கையில் விழுந்தான். சித்தப்பா சிரித்தபடியே அவனுக்கு போர்த்தி விட்டு பக்கத்தில் படுத்து உறங்கிப் போனார்.

மறுநாள் அதிகாலை அடிவாரத்து கோயிலில் சுப்ரபாதம் ஒலிக்க முகேஷ் கண்விழித்தான். சித்தப்பா எப்போதோ எழுந்து விட்டிருந்தார். முகேஷ் தன் பையில் இருந்த பேஸ்ட் பிரஷ் எடுத்துக் கொண்டு பல் துலக்கி முடித்தான். சித்தப்பா அதற்குள் குளித்து முடித்து அந்த குகையில் இருந்த முருகருக்கும் எந்திரத்திற்கும் பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவர் உச்சரிக்கும் மந்திர உச்சாடனம் மிகத்தெளிவாகவும் சத்தமாகவும் வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. முகேஷ் பல்விளக்கியதும் காபி சாப்பிடவேண்டும் போல உணர்ந்தான். ஆனால் இது அவனது வீடு அல்லவே! குஹாத்ரி மலை! காபி பால் என்றால் கீழிருந்துதான் மேலே வரவேண்டும். பொழுது விடிந்து சில மணி நேரங்கள் கழித்துதான் அவை வந்து சேரும். எனவே முகேஷ் அங்கிருந்த தொட்டி தண்ணீரில் குளித்தான். மலைப் பிரதேசமானதால் தண்ணீர் சில்லென்று இருந்தது. குளித்து முடித்ததும் அவனது காபி தாகம் இன்னும் அதிகரித்தது.

பூஜை முடித்துவிட்டு சித்தப்பா உள்ளே வந்தார். என்ன முகேஷ் ஒரு மாதிரி இருக்கே! ஓ! காபி வேணுமா? இன்னும் பத்து நிமிசத்துல பால் வந்திரும்! காபி கலந்திடலாம். அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு அதிசயம் காண்பிக்க போறேன் வா!

என்ன சித்தப்பா! என்ன அதிசயம்?

வா! வந்து பாரு! நீ அசந்து போயிருவே!

அப்படி என்ன அதிசயம்?

நீ வா! என்று அவனை குடிலை விட்டு வெளியே அழைத்து வந்தார் அவனது சித்தப்பாவான சுவாமிஜி!

அங்கே!

ரவி நின்று கொண்டிருந்தான்.

(மிரட்டும் 17)

பாடல்கள் பலவிதம்!

ப்ரணா

அந்த காலம் தொட்டு இன்றுவரை பற்பல கவிஞர்கள் ஒரே கருத்துள்ள பாடல்களை தம் மொழி நடையில் தம் பாணியில் சிறப்பாக சிந்தித்து படைத்து வந்துள்ளனர். கவிஞர் ப்ரணா கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து மூவருக்கும் உள்ள ஒற்றுமையான பாடல்களை தொகுத்து தருகிறார். வாசித்து மகிழுங்கள்!

மகளிர் கிரிக்கெட்டின் புதிய நட்சத்திரம்! ஷபாலி வர்மா!

மகளிர் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை செய்துள்ளார் 16 வயது இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிரடியில் கலக்கும் அவர் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீராங்கனை என்ற சாதனையை செய்துள்ளார். இவரால் தான் மகளிர் கிரிக்கெட் மாறப் போகிறது என்றும், இவர் ஒருவரே ரசிகர்களை மகளிர் கிரிக்கெட்டை பார்க்க தூண்டுவார் எனவும் இப்போதே அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த செப்டம்பர் 24, 2019 அன்று தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தன் 16 வயதில் அறிமுகம் ஆனார் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா. அப்போது முதல் மகளிர் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக பார்க்கப்படுகிறார்.

அவரது சிறப்பே அதிரடி ஆட்டம் தான். பொதுவாக மகளிர் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் என்பது, ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக இருக்காது. அதிக சிக்ஸர்களை பார்க்க முடியாது. சில வீராங்கனைகள் சில போட்டிகளில் அப்படி அதிரடி ஆட்டம் ஆடுவார்கள்.

இது வரை எந்த வீராங்கனையும் ஒரு மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் தொடாத ஸ்ட்ரைக் ரேட்டை தொட்டு மிரட்டல் சாதனை செய்துள்ளார். 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் 172.72 ஸ்ட்ரைக் ரேட்டில் 114 ரன்கள் குவித்துள்ளார். இது உலகக்கோப்பை சாதனை ஆகும்.

ரீடர்ஸ் மெயில்!

தேன்சிட்டு பிப்ரவரி காதலர் தின ஸ்பெஷல் மிகவும் அருமை! முத்து ஆனந்த் தின் கவிதைகள் கலக்கலாக இருந்தது. தேன்சிட்டு சிறகடிக்க வாழ்த்துக்கள்!

வில்வமணி, பொன்னேரி.

ஒவ்வொருமாதமும் தேன்சிட்டு தேன்சிந்துகிறது! கதைகளும் கவிதைகளும் தகவல் தொகுப்புக்களும் மிகவும் சிறப்பாக அமைந்து அட்டகாசமாய் சிறகடிக்கிறது தேன்சிட்டு.

டி,சுந்தரமூர்த்தி, ஆசானபூதூர்.

காது கொஞ்சம் நீளம் பகுதியின் உரையாடல்கள் அனைத்தும் கலகல! வாழ்த்துகள்!

எஸ்.பத்மாவதி குரோம்பேட்டை

சென்ற இதழில் வெளியான ஒருபக்க கதைகள் அனைத்தும் சிறப்பு! தை கிருத்திகை எங்கள் ஊர் கோயில் பற்றி எழுதியமைக்கு நன்றி! தேன்சிட்டு ஒவ்வொரு பக்கமும் தேன்சொட்டாய் திகழ்கிறது.

ஏ.சுந்தரம். ஆண்டார்குப்பம்.

சிரிப்பா சிரிக்குது காதல் ஜோக்ஸ்! சிரிப்புவெடி கொஞ்சம் சிரியுங்க பாஸில் நிறையவே சிரித்து மகிழ்ந்தோம்!

எஸ்.பிரகாஷ் காஞ்சிபுரம்.

கண்ணாமூச்சி ரே ரே கதை அந்தக் கால சினிமாவை நினைவூட்டியது. அழகான காதல் கதை! எழுதியவர் யாரென்று போடவில்லையே! வாழ்த்துகள்!

மாதவன், மாநெல்லூர்.

ஒன்பது மணி நேரத்தில் இதழ் வடிவமைப்பு என்பது அசாத்திய திறமைதான்! வடிவமைப்பாளருக்கு ஒரு ஷொட்டு! திருஷ்டி சுத்திப் போடுங்கள்! கே. ஜெயேந்திரகுமார், சென்னை.

பாரியன்பன் அவர்களின் கவிதைகள் அனைத்தும் மிகச்சிறப்பு! வாழ்த்துகள்!

ஆனந்தகுமார், குடியாத்தம்.

வெங்கட நாகராஜின் ஷிம்லா ஸ்பெஷல் பயணக்கட்டுரை மிகப்பிரமாதம்! படங்கள் அனைத்தும் அழகு! இவ்வளவு சீக்கிரம் தொடர் முடிந்தது ஏமாற்றத்தை தந்தது.

எஸ்.எழில்வாணி, மந்தைவெளி.

குறும்பா கூடத்தில் புதுவண்டி ரவீந்திரனின் குறும்பாக்கள் அனைத்தும் மனதை கொள்ளை கொண்டது. மற்ற ஹைக்கூக்களும் நேர்த்தியாக இருந்தது. வாழ்த்துகள்!

ஆர்.குமரன், நத்தம்.

பேய்கள் ஓய்வதில்லை திகில் தொடர் படித்து தூக்கம் கெட்டுப் போகிறது! பேய் பிடித்துக்கொள்கிறதோ இல்லையோ பயம் பிடித்துக்கொள்கிறது.

எம். தனலட்சுமி, நத்தம்.

ப்ரணா அவர்களின் பாடல்கள் பலவிதம் நல்ல தொகுப்பு! ஒரே கருத்தை கவிஞர்கள் தங்கள் மொழிநடையில் படைக்கும் பாடல்கள் ரசிக்க வைத்தன

அருணகிரி, கொளத்தூர்.

சித்தமருத்துவர் ஆதவன் சின்னையாவின் மருத்துவ குறிப்புகள் சிறப்பு. திருமாளம் பழனிவேல் அவர்களின் போட்டோடூன் செம நக்கல்!

டி.சரண்யா, பொன்னேரி.

சின்னஞ்சிறு கோபு எழுதிய வாசகர் கடிதம் பிரமிக்க வைத்தது. இது போன்ற கடிதங்கள் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும். அன்பழகன், புழல்.