புண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்!

  புண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்!

தமிழ் மாதங்களில் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். பெருமாளுக்கு உகந்த கிழமை சனி. கிரகங்களில் ஒன்றான சனிபகவானும் புரட்டாசிமாதத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. புரட்டாசிமாதம் எமனின் கோரைப் பற்களுள் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.


   புரட்டாசி சனிக்கிழமை விரதம் பெருமாளுக்கு உரியது. பாவங்களை போக்கி புண்ணியங்களை தரக்கூடியது. காக்கும் கடவுளாம் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த கிழமையான சனிக்கிழமை விரதம் இருப்பதால் எமபயம் விலகி அல்லவைகள் நீங்கி நல்லவைகள் கூடும் என்று நம்பிக்கை. அதுமட்டும் அல்லாமல் சனிபகவானின் தீய பார்வை விலகி கெடுபலன்கள் குறையும்.


    புரட்டாசி சனிக்கிழமைகளில் நீராடி திருமண் என்று சொல்லப்படும் திருநாமம் அணிந்து உபவாசம் இருந்து விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று நல்லெண்ணை தீபம் எற்றி துளசிமாலை சார்த்தி திருமாலின் அஷ்டாட்சர மந்திரம் ஆகிய  “ஓம் நமோ நாராயணா” என்று நூற்றெட்டு முறை ஜபித்து வந்தால் நம்மை பிடித்த துன்பங்கள் விலகும். நல்லவை நடக்கும். ஆழ்வார்கள் பாடியருளிய  திருப்பாவை, திருவாய்மொழி போன்ற பாசுரங்களையும் மனமுருக பாடி பெருமாளை சேவிக்கையில் நம் கவலைகள் எல்லாம் பறந்தோடிவிடும்.


 புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்ய தேசங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவமும் திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். சிலர் புரட்டாசி மாதத்தில்தான் தங்கள் நேர்த்திக் கடன்களையும் குலதெய்வ வழிபாடுகளையும் நிறைவேற்றுவர்.வீடுகளில் விரதம் இருப்பவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு, மாவிளக்கேற்றி, வடை பாயசத்துடன் அமுது சமைத்துப் படையலிட்டுப் பூஜையை நிறைவேற்றுவர். சிலர் தங்கள் குடும்ப வழக்கப்படி தங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் மடியேந்தியோ, உண்டியல் குலுக்கியோ தானம் பெற்று அதில் கிடைக்கும் அரிசியில் பொங்கலிட்டு வழிபடுவர்.


இந்த சனிக்கிழமைகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்துவது நல்லது. நெற்றியில் திருநாமம் இட்டுக்கொள்வது அவசியம். “”கரையாத நாமக் கட்டியும் புரட்டாசியில் கரைந்துவிடும்” என்பார்கள். காலை முதல் மாலை வரை பெரியவர்கள் பழம், பால் சாப்பிட்டும், குழந்தைகள், நோயாளிகள் இட்லி முதலான எளிய உணவு வகைகளைச் சாப்பிட்டும் விரதமிருக்க வேண்டும். மாலை ஐந்து மணிக்கு, மஞ்சள் தடவிய ஒரு பித்தளைச் செம்பில் அரிசி எடுத்து, அதை பெருமாள் படம் முன் வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த அரிசியை வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கலாக சமைத்து, பெருமாளுக்கு நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசிமாலை அணிவித்து வணங்கி வர வேண்டும். பின்பு, பெருமாளுக்கு படைத்த பொங்கலைச் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். அன்று முழுக்க மனதுக்குள் “கோவிந்தா ஹரி கோவிந்தா, கோகுல நந்தன கோவிந்தா’ என்று சொல்லிக் கொண்டே நம் அன்றாடப்பணிகளைத் தொடர வேண்டும். மாலையில் கூட்டாக குடும்பத்துடன் அமர்ந்து “ஸ்ரீ வெங்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே’ என்ற மந்திரத்தை 108முறை ஜெபிக்கலாம். “”வெங்கடேசா! உன் திருவடிகளைச் சரண அடைகிறேன்” என்பது இதன் பொருள்.


பெருமாளுக்கு மண்சட்டியில் நிவேதனம்
பெருமாள் கோயில்களில் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது திருப்பதி தலம். அத்திருத்தலத்துக்கு அருகில் முன்னொரு காலத்தில் பீமன் என்னும் குயவர் வாழ்ந்துவந்தார். அவர் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனியும் விரதம் இருப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். தொடர்ச்சியான வேலைகளால் விரதம் இருக்க முடியவில்லை. கோயிலுக்குச் சென்றாலும் நின்று நிதானித்து வழிபட மாட்டார். சம்பிரதாய முறைப்படி வழிபடுவதும் அவருக்குத் தெரியாது. ‘பெருமாளே நீயே எல்லாம்’ என்பதை மட்டும் மந்திரம் போல உச்சரித்துவிட்டு வந்துவிடுவார்.


நாட்கள் செல்லச் செல்ல கோயிலுக்கும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை. அதனால் பெருமாளை வீட்டுக்கே அழைத்து வழிபடுவது என்று பீமன் முடிவு செய்தார். அவர் குயவர் என்பதால் களிமண்ணால் பெருமாள் சிலையை வடித்தார். பெருமாளுக்கு அலங்காரம் செய்யவோ, ஆபரணங்கள் வாங்கவோ அவரிடம் பொருள் இல்லை. அதனால் களிமண்ணையே சிறு சிறு உருண்டைகளாக்கி அவற்றை மாலைபோல் தொடுத்துப் பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.அந்த ஊரின் அரசன் தொண்டைமானும் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் விரதமிருந்து பெருமாளுக்குத் தங்க மாலை அணிவித்து வழிபடுவார். ஒருநாள் காலை அவர் கோயிலுக்குச் சென்றபோது தங்க மாலை மறைந்து, மண் மாலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். என்ன தவறு நிகழ்ந்திருக்கும் என்ற யோசனையுடனேயே உறங்கினார். கனவில் தோன்றிய பெருமாள், பீமன் குறித்தும் அவருடைய பக்தியைக் குறித்தும் அரசனுக்கு அறிவித்தார்.


பீமனின் பக்தியைப் பெருமாள் வாயாலேயே கேட்டறிந்த மன்னன், பீமனின் குடிசைக்குச் சென்றார். அவருக்குப் பொன்னும் பொருளும் வாரிவழங்கினார். ஆனால் அந்தப் பொருட்களில் எல்லாம் மயங்காமல் இறுதிவரை பெருமாளையே துதித்து, முடிவில் வைகுண்டப் பதவி அடைந்தார். பீமன் என்னும் அந்தக் குயவனின் பக்தியைப் பறைசாற்றும் வகையில் இன்றுவரை பெருமாளுக்கு மண்சட்டியில்தான் திருவமுது படைக்கப்படுகிறது.


பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை கடைபிடித்து பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருளினை பெற்றுய்வோமாக!
(இணைய தளங்களில் படித்து தொகுத்தது) 

அம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!

அம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!

ஆடிமாதப் பிறப்பு தட்சிணாயின புண்ணிய காலம் என்று போற்றப்படுகின்றது. சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் இந்தக் காலம் தேவர்களின் இரவுப் பொழுது என்று சொல்லப்படுகின்றது. ஆடி மாதம் துவங்கினாலே அம்மன் கோயில்கள் களைகட்டும். அம்மன்களுக்கு விஷேச பூஜைகள், திருவிழாக்கள் எல்லாம் அமர்க்களப்படும்.

   விவசாயத்திற்கும் ஆடி மாதம் உகந்த மாதமாகும். ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் உண்டு. ஆடிமாதத்தில் வாழை வைத்தால் நன்றாக விளையும் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்த மாதத்தில் சூரியனும் தன்னுடைய கடும் வெப்பம் தணிந்து அவ்வப்போது தூறல் மழை பொழிய ஆரம்பிப்பார்.

    கடும் வெப்பம், அதற்கு பின் மழை என்பதால் உடல் சீதோஷ்ணம் பாதிக்கும். அதனால் நோய்களும் தாக்கும். இதனாலேயே ஆடிமாதங்களில் வீடுகளில் வேப்பிலைத் தோரணங்கள் அம்மன் வழிபாடு,கூழ்வார்த்தல் போன்றவை நம் மக்கள் அக்காலத்திலேயே தோற்றுவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். தெய்வ வழிபாடும் ஆயிற்று. உடல்நலமும் சீராகிறது என்ற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறித்து இருக்கிறார்கள்.

  ஆடிமாதப்பிறப்பன்று தட்சிணாயின புண்ணிய காலம் என்பதால் நதிக்கரைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும். இம்மாதத்தில் வரும் ஆடி அமாவாசை தினம் முன்னோர்களுக்கு மிகவும் உகந்த தினமாகும். பொதுவாக அமாவாசை தினம் நிறைந்த அமாவாசை என்று சுபகாரியங்கள் செய்கின்றார்கள். அமாவாசை தினம் முன்னோர்கள் வழிபாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்ட நாளாகும். இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதற்கு மட்டுமே உகந்தது. அமாவாசை தினம் அம்மன் கோயில்களில் வழிபாடு நடக்கும்.அமாவாசை தவிர்த்து பிரதமை தினம் அம்பாளுக்கு உகந்த திதியாகும்.

 ஆடி வெள்ளியில் அம்மனை தரிசிப்பது சிறப்புக்குரியது. சகல பாக்யங்களையும்அள்ளித்தர வல்லது. விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனைவழிபட்டால், பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். கன்னிப்பெண்களுக்கு சிறந்தவரன் அமையும்.

• ஆடி மாத சுக்ல தசமியில் திக்வேதா விரதம் கடைப்பிடித்து, திக்தேவதை களை அந்தத் திசைகளில் வழிபட்டால் நினைத்தது தடையின்றி நடைபெறும். 

• ஆடி மாத வளர்பிறை துவாதசி நாளில் விரதத்தை தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை துளசி பூஜை செய்து வந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடுவதுடன் வளமான வாழ்வு கிட்டும். 

• ஆடி மாத சுக்ல துவாதசியில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வ வளம் பெருகும். 

• ஆடி மாதம் வெள்ளிக்கிழமை விரமிருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். 

• ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் விரமிருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். 

• ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். 

பொதுவாகவே ஆடிமாதம் அம்மனை வழிபட சிறந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி,ஆடி செவ்வாய், ஆடிப்பதினெட்டாம் பெருக்கு, ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடிமுளைக்கொட்டுவிழா. ஆடி அமாவாசை, ஆடி ஞாயிறு ஆகியவை அம்மனுக்கு உகந்த நாளாக உகந்த பண்டிகை தினங்களாக கொண்டாடப்படுகின்றன. இது தவிர முருகருக்கு உகந்த கிருத்திகை நாளும் ஆடி மாதத்தில் விஷேசமாகும்

.

ஆடிமாத செவ்வாய்க்கிழமைகளில் ஔவையார் நோன்பு கடைபிடிக்க படுகின்றது. இந்த நோன்பில் ஆண்கள் கலந்து கொள்ள முடியாது. அரிசிமாவு வெல்லம் கலந்த கொழுக்கட்டை செய்து கன்னிப்பெண்கள் வழிபடுவர். இந்த நோன்பு கடைபிடிப்பதால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை உண்டு.

அம்மனுக்கு உகந்த இந்த ஆடிமாதத்தில் காலையில் நீராடி அருகில் உள்ள அம்மன் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவோம்! அம்மன் அருளினை பெற்றிடுவோம்!

மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்!

மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்!

  ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் இருந்து குண்டூர் செல்லும் வழியில் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மங்களகிரி என்னும் வைணவத்தலம். இந்த தலத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மராக ஸ்ரீதேவியை இடது மடியில் அமர்த்திக்கொண்டு அருள்புரிகிறார் மகாவிஷ்ணு. இக்கோயிலுக்கு அருகில் மலை மீதுள்ள குகை ஒன்றில் ஸ்ரீ நரசிம்மர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரே ஸ்ரீ பானக நரசிம்மர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

    பாரதத்தில் உள்ள மலைகள் மகேந்திரம், மலையம், ஸஹ்யம் சுக்திமான், ருக்ஷம் விந்தியம் பாரியாத்ரம் என்ற சப்த குல பர்வதங்கள் என்று விஷ்ணுபுராணத்தில் கூறப்படுகிறது. ஸ்ரீ தேவியாகிய மகாலட்சுமி அமிர்தத்தை விஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில் நின்றதன் காரணமாக பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது. ஹஸ்தகிரி, தர்மாத்ரி, தோத்தாத்ரி, முக்தியாத்ரி, சபலதா என்பவை அதன் மற்றபெயர்களாகும்.

   மங்களகிரி மலையில் மேய்ந்துவந்த பசு ஒன்று தினமும் மாலையில் பால் இல்லாமல் திரும்பியதை கண்ட பசுவின் சொந்தக்காரன் சந்தேகித்து பசுவை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தான். அச்சமயம் ஒருநாள் இரவும் பகலும் கூடும் அந்தி வேளையில் நிழல் உருவம் ஒன்று அப்பசுவின் பாலை அருந்திவிட்டு அருகிலிருந்த குகையில் சென்று மறைவதைக் கண்டான்.

    அன்று இரவு அவனது கனவில் ஸ்ரீ மகாலட்சுமி சமேதராய் ஸ்ரீ நரசிம்மர் காட்சி தந்து தான் நொமுச்சி என்ற கொடிய அசுரனுக்காக குகையில் மறைந்திருப்பதாக கூறி மறைந்தார். மறுநாள் அவன் அந்த குகைத் துவாரத்தில் பசுவின் பாலை ஊற்றினான்.  ஆனால் அதிலிருந்து வழிந்துவிட்ட பாதி பாலை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச்சென்றான்.

   அந்தப் பகுதியை ஆண்டுவந்த அரசன் இதைக் கேள்விப்பட்டு ஸ்ரீ நரசிம்மருக்கு குகைமீது கோயில் எழுப்பியதாக மங்களகிரி தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

   கொட்டைப்பாக்கில் செலுத்திய ஊசிமுனையில் ஒற்றைக்கால் கட்டை விரலில் சூரியனை நோக்கி நின்று பிரம்ம தேவனை தியானித்து தவம்புரிந்தவன் கொடிய அரக்கன் நொமூச்சி. அவனுக்கு காட்சி தந்த பிரம்ம தேவன் எந்த மானிடனாலோ, ஆயுதத்தினாலோ நொமூச்சிக்கு மரணம் ஏற்படாது என்ற வரத்தை கொடுத்துவிட அரக்கன் தேவர்களை துன்புறுத்த அவர்கள் மஹாவிஷ்ணுவை சரணடைந்தார்கள் அதையடுத்து மஹாவிஷ்ணு நரஸிம்ம மூர்த்தியாக மங்களகிரி குகையினுள் நொமூச்சியின் வருகைக்காக காத்திருந்தார். இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை தன் விரல்களில் ஏற்றுக்கொண்டு குகையருகில் நொமூச்சியை சம்ஹரித்தார் என்று பிரம்மவைவர்த்த புராணத்தின் சங்கரகீதை கூறுகிறது. ஸ்ரீ நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாக இதன் காரணமாக கருதப்படுகிறது.

   கிருத யுகத்தில் அவ்வாறு அமிர்தத்தை அருந்திய நரசிம்மர், திரேதாயுகத்தில் பசுநெய்யையும் துவாபர யுகத்தில் பசுவின் பாலையும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி அருள் பாலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

   மங்களகிரி மலை எண்ணூறு அடி உயரம் கொண்டது. நானூறு படிகள் ஏறினால் நரசிம்ம தரிசனம் கிடைக்கும். அடிவாரத்தில் பிரம்மராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும் அருகில் உள்ள கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு மலை ஏறத் தொடங்கலாம்.

   ஐம்பது படிகள் ஏறியதும் பால்செட்டு வெங்கடேஸ்வர சுவாமியைத் தரிசிக்கலாம். ஒரு சமயம் சர்வ சுந்தரி என்ற அப்சரஸ் பெண் கொடுத்த சாபத்தினால் நாரத மஹரிஷி பாலவிருட்சமாக மாறி நின்றார். வேங்கடேஸ்வர சுவாமி அருகே வளர்ந்த அந்த பால்செட்டு செடி பிற்காலத்தில் மலையடிவாரத்தில் கருடாழ்வார் சன்னதி அருகில் நடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

  புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் இந்த பால் விருட்சத்தை வலம் வந்து பழங்களை வினியோகித்தால் அவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கை இங்கு காணப்படுகிறது

     நரசிம்மர் சிலை அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. பெரிய சட்டிகளில் பானகம் தயாரித்து வைத்துள்ளனர். இதில் நான்கைந்து சட்டி பானகத்தை நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றுகிறார் அர்ச்சகர். அப்போது மடக் மடக் என மிடறல் சத்தம் கேட்கிறது. குறிப்பிட்ட அளவு குடித்ததும் சத்தம் நின்று விடுகிறது. சட்டியில் இருக்கும் மீதி பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுகிறார். சில சமயங்களில் நரசிம்மர் வாயில் இருந்து பானகம் வெளியேயும் வருகிறது. இந்த வழிபாட்டுக்கு கட்டணம் ரூ.45.  கோயிலிலேயே பானகம் கிடைக்கிறது. இந்த மலை முன்பு  எரிமலையாக இருந்ததாம். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், வெல்லமும், பானக நீரும், தேங்காய் உடைத்த தண்ணீரும் கொட்டிக்கிடந்தாலும், நரசிம்மர் சன்னதியில் ஒரு ஈயோ எறும்போ பார்க்க முடியாது. சர்க்கரையும், எலுமிச்சையும் சேர்ந்த கரைசல் இந்தப்பாறையில் படும்போது, அதன் சூடு தணிந்து, எரிமலை வெடிக்கும் வாய்ப்பு குறைவதற்காக இவ்வாறு செய்யும் பழக்கம் வந்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. நமது முன்னோர் எவ்வளவு பெரிய விஞ்ஞான ஆர்வலர்கள் என்பதற்கு இதுவே சான்று.

   கிருதயுகத்தில் தாங்கள் செய்த நன்மைக்காக சொர்க்கத்தை அனுபவித்த உயிர்கள் மீண்டும் பிறப்பை சந்திக்க காத்திருந்தன. மீண்டும் பூலோகம் செல்ல வேண்டியிருந்ததை எண்ணி வருந்தி இந்திரனிடம் முறையிட்டன. இந்திரன் அவற்றிடம், பூலோகத்திலுள்ள மங்களகிரிக்கு சென்று நரசிம்மரை யார் வழிபடுகிறாரோ, அவர் மீண்டும் சொர்க்கம் பெறுவார், என்றான். அதுபோல, திரேதாயுகத்தில் உயிர்கள் செய்த பாவமும் மங்களகிரி வந்ததால் நீங்கி, பிறப்பற்ற நிலை பெற்றனர். இந்த ஊர் அஞ்சனாத்ரி, தோட்டாத்ரி, முக்தியாத்ரி, மங்களகிரி என்ற பெயர்களால் யுகவாரியாக அழைக்கப்பட்டிருக்கிறது.

முக்தி அளிக்கும் ஸ்ரீ பானக நரசிம்மரை ஒருமுறை சென்று வழிபடுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்!

சகல நன்மையும் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு!

சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக வழிபாடு செய்யப்படுவது பிரதோஷ வழிபாடு ஆகும். பிரதோஷத்தில் சனிப்பிரதோஷத்திற்கு மிகவும் சிறப்பு உண்டு. பாற்கடலை கடைகையில் ஆலகால விஷம் வெளிப்பட்டதை சிவனார் உண்ட தினம் சனிக்கிழமை என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளதால் சனிப்பிரதோஷம் சிறப்பு அடைகின்றது.

பொதுவாக பிரதோஷம் நித்ய பிரதோஷம் மாதப்பிரதோஷம், மஹா பிரதோஷம் என மூன்று வகைப்படும்.

நித்ய பிரதோஷக்காலம்: தினமும் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4 நாழிகை பின் 3 3/4 நாழிகை சேர்ந்த 7 1/2 நாழிகை.

மாத பிரதோஷகாலம்: பிரதிமாதம் வளர்பிறை,மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை.

மஹா பிரதோஷம்: இவை மூன்று வகைப்படும் உத்தமம், மத்யமம், அதமம்.

உத்தம மஹாபிரதோஷம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில் வளர்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

மத்யம மஹாபிரதோஷக்காலம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில்தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

அதம மஹாபிரதோஷ காலம்:மேற்கூறிய நான்கு மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் வரும் வளர்பிறை தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

பிரதோஷ காலத்தில் எல்லா தெய்வங்களும் சிவாலயத்தில் வந்து சேர்ந்து வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே பிரதோஷ காலத்தில் மற்ற சன்னதிகளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை வழிபாடு செய்வதில் பலனில்லை. ஏனெனில் அங்கிருக்கும் தெய்வங்கள் சிவாலயத்திற்கு வந்து விடுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தோமானால் எல்லா தெய்வங்களின் அருளும் ஒருசேர கிடைக்கும்.

சனிப்பிரதோஷ வேளையில் சிவனாருக்கு திலான்னம் என்னும் எள்ளுச்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதால் சனிக்கிரக பாதிப்புக்கள் விலகும். சிவன் எல்லா கோள்களுக்கும் அதிபதி. எனவே சனிப்பிரதோஷ வழிபாடு செய்கையில் நவகிரக தோஷங்கள் நிவர்த்தி அடையும்.

பொதுவாக பிரதோஷ பூஜையில் சிவனுக்கு நிவேதனம் முக்கான்னம் என்னும் மிளகுப் பொங்கல்( வெண்பொங்கல்) உகந்தது ஆகும். ஆலகாலத்தை உண்டவர் சிவபெருமான். மிளகு விஷத்தை போக்கும் குணம் உடையது. எனவே வெண்பொங்கல் நிவேதனம் சிறப்பு ஆகும்.

சோமசூக்தபிரதட்சணம்: முதலில் நந்தியை தரிசித்து அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் வரைசென்று அங்கு திரும்பி பிரதட்சணமாக வழியில் நந்தியை தரிசித்து கோமுகியை அடையவேண்டும் மீண்டும் திரும்பி வந்து நந்தியைதரிசித்து சண்டிகேஸ்வரரயை அடையவேண்டும்.மீண்டும் பிரதட்சணமாக வந்து நந்தியை தரிசிக்காமல் கொமுகியைஅடைந்து திரும்பி நந்தியைதரிசிக்காமல்சண்டிகேஸ்வரரை தரிசித்து பின்னர் பிரதட்சணமாகவந்து நந்தியை தரிசித்து பின்னர்,நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் சிவனை தரிசித்து வழிபட வேண்டும்.இப்பிரதட்சணம் செய்து வழிபட்டால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்… சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. தூய்மையான ஆற்றுநீர், கிணற்றுநீர் அபிஷேகத்திற்கு முதன்மையானதாகும். கொண்டுவந்த திருமஞ்சனத்திற்குரிய நீரில் பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலிய மணமுள்ள பொருள்களை இடவேண்டும். விளாமிச்சை எனப்படும் வெட்டிவேர், தீர்த்தப்பொடிகள் இடவேண்டும்.

நல்லெண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன் கரும்பின் சாறு, பழவர்க்கம், இளநீர், வாசனைச் சந்தனம் சிருங்கநீர், தாராநீர், ஸ்நபனநீர், சங்காபிஷேகம் ஆகியனவற்றை வரிசையாகச் செய்யவேண்டும். விபூதி, அன்னம், கும்பநீர், அர்க்கிய தீர்த்தம் இவற்றாலும் அபிஷேகம் செய்யவேண்டும்.

சகலாகம சங்கிரகம் என்னும் நூலில் கீழ்க்கண்ட முறை கூறப்பட்டுள்ளது:- 1. எண்ணெய், 2. பஞ்சகவ்யம், 3. மாவு, 4. நெல்லிமுள்ளி, 5. மஞ்சள் பொடி, 6. பஞ்சாமிருதம், 7. பால், 8. தயிர், 9. நெய், 10. தேன், 11. கரும்பின் சாறு, 12. பழரசங்கள், 13, இளநீர், 14. அன்னம், 15. சந்தனம், 16. ஸ்நபனநீர்.

அறுகு, சண்பகம், புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்பை ஆகிய எட்டும் அஷ்ட புஷ்பங்கள் எனப்படும். பிரதோஷ தினத்தில் இவற்றை சிவபெருமானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்தல் சிறப்பாம்.

அபிஷேக பலன்கள்:

அபிஷேகத்தூள் – கடன் தொல்லை தீரும்

பஞ்சாமிர்தம் – நீண்ட ஆயுள் கிடைக்கும்

பால் – பொறுமை, சாந்த குணம் உண்டாகும்

தயிர் – உடல் ஆரோக்யம் சிறக்கும்

எலுமிச்சை – திருஷ்டி விலகும்

தேன் – கல்வி, கலைகளில் சிறக்கலாம்

இளநீர் – புத்திர பாக்கியம் கிடைக்கும்

விபூதி – அறிவு பெருகும்

மஞ்சள் – சகல சௌபாக்கியமும் கிடைக்கும்

பச்சரிசி மாவு – கடன் வசூலாகும்

நெய் – எதிரிகள் நண்பர்கள் ஆவர்

சந்தனம் – பக்தி பெருகும்

பன்னீர் – நினைத்த காரியம் கைகூடும்

நல்லெண்ணெய் – சுக வாழ்க்கை அமையும்

பஞ்ச வில்வங்கள்

முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா ஆகியன. இவை சிவபெருமானுக்கு மிகவும் உகந்தவை பிரதோஷ பூஜையில் இவற்றினால் அர்ச்சனை செய்தால் சிவபெருமானுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நமக்கு நன்மைகள் உண்டாகும்

மிகவும் புண்ணியமான இந்தநேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடிமடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.

ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறைஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழுதலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள்அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணானஅபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்தமந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும்ஜபிப்போம்.

நந்திகேச மஹாபாக சிவத்யான பராயண:
உமாசங்கர ஹேவார்த்தம் அனுஞ்ஞாம் தாதுமர்ஹஸி”

என்ற நந்தி ஸ்துதியாலும் வணங்கித் துதிக்க வேண்டும்.

`சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக’ என்பது இதன் பொருளாகும்.

பிரதோஷ வழிபாட்டினால், கடன், வறுமை போன்றவை விலகி மிருத்யு பயம் நீங்கி பிரம்மஹத்தி தோஷமும் விலகுகின்றது. பிரதோஷவழிபாடு செய்கையில் அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கின்றது.

இன்று சனிப்பிரதோஷம் எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்பர்கள் அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று தங்களால் இயன்ற அபிஷேகப் பொருள்கள் புஷ்பங்களை சமர்பித்து நெய்தீபம் ஏற்றி நந்தியெம்பெருமானையும் சிவபெருமானையும் வழிபாடு செய்து பிறவிப் பெருங்கடலை நீந்த அவனருள் வேண்டுவோமாக!