மீண்டும் நான் துவக்க வீரராக சிறப்பாக விளையாட காரணம் இதுதான் – கே.எல் ராகுல் ஓபன்டாக்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ராகுல் தொடக்க வீரராக மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.எல் ராகுல் ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அதன்பிறகு பார்ம் அவுட் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியதற்கு பின்னர் மாயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கில் போன்ற பல வீரர்கள் துவக்க வீரருக்கான இடத்திற்கு வந்ததால் மீண்டும் தனது இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தொடக்க வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாமல் போன பட்சத்தில் மீண்டும் இந்திய அணிக்கு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு ராகுலுக்கு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திய ராகுல் இந்திய அணியின் வீரர்கள் தடுமாறியபோது சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரராக திகழ்கிறார். 84 ரன்கள் அடித்தது இக்கட்டான நிலையில் இந்திய அணியை விடாமல் தாங்கிப் பிடித்துள்ளார்.

இரு அணிகளுமே இந்த மைதானத்தில் ரன் குவிக்க தடுமாறிய நிலையில் 29 வயதான ராகுல் தனது அட்டகாசமான பேட்டிங்கின் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்டில் 149 ரன்கள் குவித்த ராகுல் மீண்டும் ஒருமுறை அதே போன்று ஒரு கிளாஸ் இன்னிங்சை இங்கு விளையாடி உள்ளார்.

இந்நிலையில் தான் சிறப்பாக விளையாடியதற்கு காரணம் என்ன என்று தற்போது பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தாலும் பிளேயிங் லெவனில் விளையாடவில்லை. இந்த இடைவெளியில் நான் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். மேலும் பல்வேறு துவக்க வீரராக மட்டுமன்றி எந்த இடத்தில் இறங்கினாலும் விளையாடுவதற்காக என்னை தயார் செய்து கொண்டேன். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தி வருவதில் மகிழ்ச்சி.

நன்றி: https://crictamil.in/

யுவராஜ் சிங்!  இந்திய கிரிக்கெட்டின் இளவரசன். இறுதிப் பகுதி

யுவராஜ் சிங்!  இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்.

“அது ஓர் அழகான கதை. ஆனால் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது… போராடுவது, வீழ்வது அந்த வீழ்ச்சியிலிருந்து எழுந்து மீண்டும் முன்னேறி நடப்பது எப்படி என்பதை இந்த விளையாட்டு எனக்குக் கற்றுத்தந்துள்ளது”. ஓய்வு முடிவை அறிவித்த யுவராஜ் உதிர்த்த வார்த்தைகள் இவை. 

 ஆம் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை ஓர் போர்க்களம் போலத்தான் இருந்தது.  கிரிக்கெட் வாழ்வின் உச்சத்திற்கு சென்ற அவர் விடைபெறுகையில் அதள பாதாளத்திற்கு சென்றிருந்தார்.

உலக கோப்பை முடிந்தவுடன் ஒரு செய்தி அடிபடத்துவங்கியது. யுவராஜ் சிங் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் அது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முதலில் இதை நம்பத் தயாராக இல்லை. ஆனால் உண்மை அதுதான். யுவராஜ் சிங் புற்றுநோயால் தாக்கப்பட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு நெஞ்சை உலுக்கும் சம்பவமாக அமைந்தது.   இதுவரை எத்தனையோ பவுலர்களின் பந்துகளை தாக்கிய அவரது தன்னம்பிக்கை இப்போதும் புற்றுநோயை எதிர்த்து தாக்க ஆரம்பித்தது. இது குறித்து யுவராஜ் கூறுகையில்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காலகட்டம் என் வாழ்நாளில் இருண்ட நாள்கள் என்றார். இதுகுறித்து ஒரு முறை மனம் திறந்த யுவராஜ், “ஒரு விளையாட்டு வீரனாக இதை ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாக இருந்தது. தினமும் 6- 8 மணி நேரம் விளையாடிக்கொண்டிருக்கும் போது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் நம்ப முடியுமா. நான் இதிலிருந்து தப்பித்து மீண்டும் கிரிக்கெட் விளையாடவே விரும்பினேன். ஆனால் மருத்துவர்கள் என்னை எச்சரித்தனர்     .   நீங்கள் இதை       அலட்சியமாக எடுத்துக்கொண்டால் நீங்கள் பிழைப்பதே கடினம் என்றனர்.

வேறு வழியின்றி சிகிச்சைக்குத் தயார் ஆனார் யுவராஜ் சிங்.   

 இதற்காக அமெரிக்காவுக்கு சென்று சில சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு மன தைரியத்துடன் போராடி   புற்றுநோயில் இருந்து விடுபட்டார். இதன் காரணமாக இவர் கிரிக்கெட்டை விட்டு ஓராண்டு காலம் விலகி இருந்தார். பின்னர் புற்று நோயால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ விரும்பி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ” யூ வி கேன் ” (YOU WE CAN) – ஐ நிறுவினார்.

 ஓராண்டு காலம் கிரிக்கெட்டை விட்டு விலகியிருந்த யுவராஜ் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். 2012ல் நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் களம் இறங்கினார். ஆனால் சூழ்நிலை அவருக்கு சாதகமாக அமையவில்லை. அணி முற்றிலும் மாறி இருந்தது. அவர் உட்கொண்டிருந்த மருந்துகள் அவர் உடலை பருமனாக ஆக்கியிருந்தது. முன்பு போல துடிப்பாக பீல்டிங் செய்ய இயலவில்லை. பேட்டிங்கிலும் தடுமாறினார். அணியிலும் அவரது இடம் தடுமாற்றத்துக்கு உள்ளானது.

ஆஸ்திரேலியா- மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வியடையவே தோனியின் கேப்டன்சியும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் டெஸ்ட் கேப்டன்ஷிப்பை துறந்தார். அணியில் இரு கேப்டன்கள் உருவானார்கள். இதுவும் யுவராஜுக்கு பாதகமாகிப் போனது.

இதற்கிடையில் யோக்ராஜ் சிங் தோனிதான் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை குலைத்துவிட்டார் என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். ஆனால் இது பற்றி கூறிய யுவராஜ் இது ஒரு தந்தையின் ஆதங்கத்தின் வெளிப்பாடு என்றார். மீண்டும் தோனியுடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன் என்றார்.

    2013ல் ஒரு டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. மூன்றுவிக்கெட்களை இழந்து இந்தியா தத்தளித்தபோது களம்புகுந்த யுவராஜ் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தூசாக்கினார். 35 பந்துகளில்   77 ரன்கள் குவித்து இந்தியா வெற்றிபெற உதவினார்.  ஆனாலும் அவரால் முன்பு போல தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 2014ல் வங்கதேசத்தில் நடைபெற்ற டி 20 உலக்கோப்பை போட்டிகளில் இடம்பெற்ற அவர் இறுதி போட்டியை வாழ்வின் கசப்பான இன்னிங்ஸாக  கருதுகின்றார். அந்த போட்டியில் 21 பந்துகளை சந்தித்த அவர் ஒரு  பவுண்டரி கூட அடிக்காமல் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். இலங்கையின் பந்துவீச்சை ஆடமுடியாமல் தடுமாற அவரது கிரிக்கெட் கேரியரில் பெரும் சரிவு தொடங்கியது. இந்தியா அந்த உலக கோப்பையை இலங்கையிடம் இழந்தது.

மீடியாக்கள் கடும் விமர்சனம் செய்தன. யுவராஜ்சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. இன்னும் கொஞ்சநாள் ஆடலாம் என்று நினைத்தார். கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டார்.மீண்டும் அணியில் இடம் கிடைத்தது.2017ல்

   இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் தோனியுடன் இணைந்து ஒரு சதம் அடித்தார்.256 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.  பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் அரைசதம் அடித்தார். ஆனாலும் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் எடுக்கத் தவறினார். அதே சமயம் இளைஞர்கள் இந்திய அணியின் வாய்ப்பை ஐ.பி.எல் மூலம் தட்டத் துவங்கினர். யுவராஜுக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டது.

யுவராஜ் சிங் இதுவரை பைக் ஓட்டியது இல்லையாம். அவரது தாய் ஷப்னம் சிங்கிற்கு பைக் என்றால் பயமாம். அதனால் யுவராஜிடம் பைக் ஓட்டக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம். அதனால் இதுவரை பைக் ஓட்டியது இல்லையாம். ஆனால் விதவிதமான கார்களை வாங்கி நிறுத்தியுள்ளார். தாய் சொல்லை தட்டாத தனயனான யுவராஜ் ஒரு ப்ளே பாயாகத்தான் மீடியாக்களால் சித்தரிக்கப் பட்டார். பாலிவுட் நடிகைகள் மாடல்கள் பலரோடும் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். கிம்ஷர்மா, தீபிகா படுகோனே, ரியாசென்,ப்ரீத்தி ஜிந்தா, லீபாக்‌ஷி போன்றோருடன் அவர் இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனாலும் அதுகுறித்து வெளிப்படையாக யுவராஜ் கருத்து ஏதும் தெரிவித்தது இல்லை.

இறுதியில் ஹசீல் கீச் என்ற மாடலும் நடிகையுமானவரை மணம்புரிந்துகொண்டார். குழந்தைகள் இல்லை.

யுவராஜ் சிங்கின் லக்கி நம்பர் 12 அவர் தனது கையில் ரோமன் எழுத்தாலான 12 என்பதை டாட்டூவாக வரைந்து கொண்டுள்ளார். 12 வருடங்கள் ஐ.பி.எல் களத்தில் ஆடியுள்ளார்.

2008ல் ஐபிஎல் போட்டிகள் துவக்கப்பட்டபோது ஐகான் வீர்ர்களாக ஐவர் இருந்தனர். மும்பைக்கு சச்சின், பெங்களூருவுக்கு டிராவிட், கொல்கத்தாவிற்கு கங்குலி பஞ்சாபிற்கு யுவராஜ். அப்போது தோனி கூட ஐகான் வீர்ர் அல்ல. யுவராஜ் ஐகான் வீர்ராக இருந்தார்.

 . அதில் பெங்களூர் மற்றும் டெக்கான் சார்ஜர் அணிக்கு எதிராக ஒரு ஹாட்ரிக் சாதனையும் எடுத்தார். ஆனால் பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குச்செல்லவில்லை. துவக்கத்தில் யுவராஜ் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினாலும் அணி முன்னேற்றம் காணவில்லை. அதனால் அணித்தலைவர் பொறுப்பிலிருந்தும் அணியிலிருந்தும் விலக்கப்பட்டார்.

2014ல்ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 கோடி ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் அது யுவராஜ் கேன்சரில் இருந்து மீண்டுவந்த காலம். முன்பு போல அவரால் விளையாட முடியவில்லை. தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாமல் அவர் திணறினார்.. அடுத்த வருடம் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். அப்போதும் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை  2016ல் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். ஏழு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது அந்த அணி அந்த வருடம் அந்த அணி டைட்டில் வென்றது ஆனால் அடுத்த வருடம் யுவராஜை கழட்டிவிட்டது.. 2018ல் பஞ்சாப் அணி அவரை அடிப்படை விலை 2 கோடி ரூபாய்க்கு எடுத்த்து. அந்த தொடரிலும் மோசமாக ஆட  2019ல் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. பின்னர் மும்பை அணி 1 கோடி ரூபாய் அடிப்படை விலையில் அவரை எடுத்தது. அந்த தொடரில் சென்னை அணி யுவராஜை ஏலத்தில் எடுக்கும் என்று சொல்லியிருந்த்து. ஆனால் எடுக்கவில்லை. ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்த ஐ.பி.எல் தொடரிலும் யுவராஜ் சரியாக ஆடவில்லை.  ஐ.பி. எல் லில் அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

 2019 உலக கோப்பை போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தார். ஆனால் இந்தியா ஒரு வித்தியாசமான அணியை தேர்வு செய்தது. கோஹ்லியின் முட்டாள்தனமான கணிப்புகளால் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த அம்பதி ராயுடு, ரஹானே போன்றவர்கள் வாய்ப்பிழந்தனர். அப்படியிருக்கையில் ஆடாமல் இருந்த யுவராஜுக்கு வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியில் அவர் 2019;ல் தனது ஓய்வை அறிவித்தார்.

வீழ்ச்சிகளை சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கை ஒர் பாடம். ஒரு கிரிக்கெட் வீரனின் பிள்ளையாக இந்திய அணியில் நுழையவில்லை. போராடி நுழைந்து இடம் இழந்து மீண்டும் இடம் பிடித்து சாதனைகள் படைத்து இந்தியாவின் கனவான உலக்கோப்பையை பெற்றுத் தந்த யுவராஜ் சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் பெரிதாக கவுரவம் எதுவும் செய்துவிடவில்லை. அவரை அணியில் இருந்து நீக்கப்போகிறோம் என்று கூட சொல்லவில்லை.

“கேன்சரில் இருந்து நான் மீண்டு வந்த பின்னர், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். உள்ளூர் தொடர்களில் சரியாக ரன்களைக் குவிக்க முடியாமல் இரண்டு வருடங்களாகத் தடுமாறினேன். அந்தச் சூழலில் கடுமையாக உழைத்தேன். அதன் பலனாக மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினேன். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், எனது அதிகபட்ச ரன்களைக் குவித்தேன். அது மிகப்பெரிய சாதனை. ஆனால், அதன் மறுபக்கம் மிகவும் வேதனையானது. நிர்வாகத்திடம் இருந்தோ அல்லது அதைச் சுற்றியிருந்த மக்களிடம் இருந்தோ எந்த ஆதரவும் இல்லை. எனக்கு அந்த ஆதரவு கிடைத்திருந்தால் உலகக் கோப்பையில் ஆடியிருப்பேன்.

  அந்தக் காலத்தில், திடீரென யோ-யோ டெஸ்ட் இந்திய அணியில் அறிமுகமானது. என்னுடைய தேர்விலும் அது ஒரு திருப்புமுனையாக மாறியது. 36 வயதில் யோ-யோ டெஸ்ட்டுக்காகக் கடுமையாக உழைத்தேன். என்னால் அதில் தேர்ச்சிபெற முடியாது என்றே நினைத்தார்கள். யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சியடைந்தேன். மீண்டும் உள்ளூர் தொடர்களில் விளையாட அறிவுறுத்தப்பட்டேன். ஏற்கெனவே, அதைத்தான் செய்துகொண்டிருந்தேன். யோ-யோ டெஸ்ட்டில் தேர்வாக மாட்டேன் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். ஏனெனில், அது சற்று கடினமானதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், நான் அதில் தேர்ச்சிபெறவில்லை என்றால், என்னிடம் எளிதாகத் தெரிவித்துவிடலாம் என நினைத்திருக்கலாம். சர்வதேச கிரிக்கெட்டில் 15 முதல் 17 வருடங்கள் விளையாடிய ஒரு வீரரை எதற்காக ஒதுக்குகிறீர்கள் எனக் கூற வேண்டும். நீங்கள் அவருடன் அமர்ந்து காரணத்தை விளக்க வேண்டும். யாரும் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.  இப்படி ஒரு பேட்டியில் யுவராஜ் கூறியிருப்பது இந்திய கிரிக்கெட்டின் நிலையை தோலுரித்து காட்டுவதாக அமைந்துள்ளது.

  யார்க்‌ஷையர் அணிக்காக டெண்டுல்கருக்கு அடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே வீரர் யுவராஜ் சிங்.

 உலக்கோப்பை  டி 20 யில் ஒரு போட்டியில்  ஆறு சிக்சர்களை ஒரே ஓவரில் அடித்த வீர்ர்.

அண்டர் 19  மற்றும் டி-20- மற்றும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளின் தொடர் நாயகன்.

உலகின் தலைச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர்.

உலகின் தலைச்சிறந்த மேட்ச்வின்னர்களில் ஒருவர்

இப்படி ஒரு சாதனையாளர். இதையெல்லாம் மீறி  கேன்சர் என்னும் கொடிய நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்து  கெத்து காட்டியவர். இப்படி பல சாதனைகளை  செய்த மனிதரை  ஒரு விளக்கம் கூட கொடுக்காமல்  ஓரங்கட்டி அனுப்பி வைத்ததுதான் இந்திய கிரிக்கெட்  அவருக்கு செய்த  வெகுமதி.

ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் மனதில் யுவராஜுக்கு என்று ஒரு தனிப்பட்ட இடத்தை  என்றும் வைத்திருப்பார்கள். கிரிக்கெட் உள்ளவரை யுவராஜ் சிங்கின் புகழ் இருக்கும். இந்திய கிரிக்கெட்டில் என்றுமே அவர் இளவரசன் தான்!

முற்றும்.

யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்! பகுதி 4

யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்!

ஓவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். வெற்றி பெறும்வரை அந்த கனவைத் துரத்திக் கொண்டிருக்க வேண்டும். யுவராஜ் சிங்கிற்கும் ஒரு கனவு இருந்தது. இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் என்பதுதான் அது. ஆனால் அது நிறைவேறாத கனவாகவே போய்விட்டது.

 யுவராஜ் சிங் அறிமுகம் ஆனபோது இந்திய டெஸ்ட் அணியில் டெண்டுல்கர், லஷ்மண், டிராவிட், கங்குலி என்ற நால்வர் அணி வலுவானதாக இருந்தது. எனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதற்கேற்பவே அவரது ஆட்ட ஸ்டைலும் இருந்தது. அவுட்ஸ்விங் பந்துகள் முரளிதரனின் பந்துகளில் திணறி இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். டெஸ்ட் போட்டியில் நிலைத்து ஆடும் தன்மை யுவராஜுக்கு இல்லை என்றே தேர்வாளர்கள் கருதினார்கள்.

2000 ஆண்டில் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனாலும் 2003ல் நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் முதல் டெஸ்ட் ஆட்டத்தை ஆடினார். மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகள் ஆடிய யுவராஜ் டெஸ்ட் போட்டியில் பெரிதாக சாதிக்க வில்லை. மூன்று சதங்கள்   பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்துள்ளார். ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் நீண்ட நேரம் நிலைத்து ஆடும் தன்மை அவரது பேட்டிங் ஸ்டைலில் இல்லை என்பதுதான். கங்குலி, லக்‌ஷ்மண், டிராவிட் ஓய்வு பெற்ற போதும்  புஜாரா, ரஹானே போன்ற வீர்ர்கள் அந்த இடத்தைப் பற்றிக் கொண்டனர். எனவே யுவராஜிற்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  ஆனாலும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான சென்னைப் போட்டி அவரது மறக்க முடியாத ஒன்றாகும்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 387 ரன்கள் இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்து இருந்தது. 4வது நாள் ஆட்டத்தின் போது வீரேந்தர் சேவாக் அதிரடி காட்ட இந்தியா 29 ஓவரில் 131 ரன்களை ஒருவிக்கெட்டை இழந்து எடுத்து இருந்தது.  இந்த போட்டி டிரா அல்லது இந்தியா தோற்கும் என்று எண்ணியிருந்தோரை சேவாக்கின் இந்த அதிரடி ஆட்டம் மாற்றி வைத்தது.

அடுத்த நாள் ஆட்ட்த்தை தொடர்ந்த இந்தியா ராகுல்டிராவிட் லக்‌ஷ்மண் விக்கெட்டை விரைவில் இழந்தாலும் டெண்டுல்கர் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய யுவராஜ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். இது அவரது வாழ்வில் மறக்க முடியாதஒரு ஆட்டமாக அமைந்தது. நான்காவது இன்னிங்சில் இத்தனை பெரிய இலக்கை சேஸ் செய்து சாதனை படைத்தது இந்தியா.

பாகிஸ்தானுக்கு எதிராகவே தனது மூன்று டெஸ்ட் சதங்களையும் எடுத்தார் யுவராஜ் சிங்.. டெஸ்ட் ஆவ்ரேஜ் ஒன்றும் மோசமானது அல்ல. ஆனாலும் அவர் வருவதும் போவதுமாகவே டெஸ்ட் அணியில் இருந்தார். ஓய்வு பெற்றதும் ஒரு பேட்டியில்  ரோகித் சர்மாவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று சொல்லியிருந்தார். ஒரு வீர்ருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டால்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்  

2011ல் இந்தியாவில் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றது. இந்திய பிட்ச்களில் யுவராஜ் சிங் ஸ்லோ பவுலிங் எடுபடும் என்று கேப்டன் தோனி கணித்தார். அது வீண் போகவில்லை. உலக கோப்பை நாயகனாக ஜொலித்தார் யுவராஜ் சிங்.

 லீக் போட்டிகளில் இரு அரைசதங்கள் விளாசிய நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதியில் இந்தியா 143 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தவித்துக்கொண்டிருந்த போது சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்து ஒரு சூப்பர் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த கூட்டணி இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. 65 பந்துகளில் 57 ரன்கள் எடுக்க இந்தியா அரையிறுதிக்கு பாகிஸ்தானுடன் மோத ரெடியானது. அரையிறுதியில் பேட்டிங்கில் சாதிக்காவிட்டாலும் தன் பந்துவீச்சில் மூன்றுவிக்கெட்கள் அதிலும் அபாய யூனுஸ்கான் விக்கெட் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற காரணமாக இருந்தார். இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கையை வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் யுவராஜுக்கு முன்னதாக தோனி களமிறங்கியது விமர்சனத்துக்கு உள்ளானது. அதைப்பற்றி தோனி கூறுகையில் முரளிதரன் பந்துகளை ஆடுவதில் தனக்கு சிரமம் இருப்பதாக யுவராஜ் சொல்லியிருந்தார். எனவே அந்த நேரத்தில் தான் களமிறங்கியதாக கூறினார்.

போட்டி முடிந்த்தும் இந்தியவீர்ர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர். ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து அழுதனர். யுவராஜ் சிங் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. அது 2003ல் தவறவிட்ட வெற்றியை  மீண்டும் திரும்பப் பெற்றதற்கான ஆனந்தக் கண்ணீர்.

அந்த தொடரில்  4 அரைசதங்கள் ஒரு சதம் உட்பட 362 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்த யுவராஜ் சிங்” தொடர் நாயகன் “ விருதை தட்டிச்சென்றார். இது ஒரு உலக சாதனையாகும்.

எந்த ஒரு ஆல்ரவுண்டரும் உலக கோப்பை தொடரில் 300 ரன்களும் 15 விக்கெட்களும் எடுத்தது இல்லை..

2011 உலககோப்பையின் பொது    ஒரு போட்டியில் யுவராஜ் பேட்டிங் செய்யும்போது ரத்த வாந்தியும் எடுக்க நேரிட்டது. அதன் காரணம் தெரிந்தபோது யுவராஜுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கலங்கிப் போயினர்.  அது… அடுத்த பகுதியில்

ராகுல் டிராவிட் இந்திய பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பில்லை!- ஆகாஷ் சோப்ரா

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக வாய்ப்பே இல்லை என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்

விராட் கோலி தலைமையிலான சீனியர் வீரர்கள் கொண்ட இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய முதல் தர இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது.

இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி தொடரையும் வென்றுள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத இளம் படை இலங்கை அணியை அசால்டாக துவம்சம் செய்து வருவது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைசிறந்த இளம் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு அடுத்தடுத்து கிடைத்து வருவதன் மூலமே இந்திய அணிக்கு இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது என்றால் அது மிகையல்ல.

இதனால், இளம் வீரர்கள் பலரை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்து வரும் ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற விவாதமும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “இந்திய அணியின் பயிற்சியாளருக்கான போட்டியில் ராகுல் டிராவிட் தன்னை இணைத்துக்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். ஒருவேளை அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பினால், அவருக்கு ஒரே போட்டி ரவி சாஸ்திரியாகத்தான் இருப்பார். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. ரவி சாஸ்திரியே தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பார் என்றே நினைக்கிறேன் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

நன்றி:https://tamil.sportzwiki.com/

யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்! பகுதி 3

யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்!

தமிழ் சினிமாக்களில்  ஹீரோ வில்லனிடம் அடிமேல் அடிவாங்கி சாகும் நிலைக்குப் போய்விடுவார். அப்புறம் ஆச்சர்யமாக ஒரு துளி மழைநீர் பட்டோ காதலியின் குரல் கேட்டோ சிலிர்த்தெழுவார். பின்னர் வில்லனை துவம்சம் செய்து வெற்றிக் கொடி நாட்டுவார். யுவராஜ் சிங்கும் அப்படித்தான்.

தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பலமுறை அதளபாதாளத்திற்கு சென்று மீண்டும் உயிர்த்தெழுந்து  இந்திய அணியை மீட்டிருக்கிறார். இந்திய அணியின் காப்பானாக ஜொலித்திருக்கிறார்.

யோக்ராஜ் சிங்கிற்கு தன் மகன் கிரிக்கெட்டில் இன்னும் நிபுணன் ஆக வேண்டும் என்ற ஆசை. புல்டாஸ் பந்துகளில் அவுட் ஆகிவிடுவதாக கூறி நவ்ஜோத் சித்துவை யுவராஜிற்கு பயிற்சி அளிக்கும்படி கூறினார். சித்துவும் யுவராஜிற்கு பயிற்சி அளித்தார். அவரது பயிற்சியும் நம்பிக்கை அளிக்கும் பேச்சும் யுவராஜிற்கு உத்வேகம் அளித்தது.

நாட்வெஸ்ட் டிராபி வென்றபிறகு சிலதொடர்களில் யுவராஜின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் கேப்டன் கங்குலி யுவராஜின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். விளையாடும் லெவனில் இருக்கும் வீர்ருக்கும் கேப்டனுக்குமான உறவு மிகவும் முக்கியம். ஒவ்வொரு வீர்ரின் தனித்திறமையை கேப்டன் உணர்ந்திருந்தால் அந்த வீர்ர் மட்டுமல்லாமல் அணியும் ஜொலிக்கும்.

இந்திய கேப்டன்களில் கங்குலி இந்தவிஷயத்தில் யுவராஜிற்கு மிகவும் உதவினார். இதையே யுவராஜும் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். கங்குலியுடன் விளையாடிய காலங்கள் மிகவும் பிடிக்கும்.அவர் எனக்கு உதவிகரமாக இருந்தார். என்று சொல்லியுள்ளார் யுவராஜ்.கங்குலி காலத்தில் ஆறாவது வீர்ராகத்தான் பெரும்பாலும் களம் இறங்குவார் யுவராஜ்.அந்த நிலையில் ஆடும்போது குறைந்த ஓவர்களைத்தான் பேஸ் செய்ய வேண்டியிருக்கும். குறைந்த பந்துகளில் நிறைய ரன்கள் எடுக்க வேண்டியிருக்கும். பந்தை தைரியமாக அடிக்கும் திறன் கொண்ட யுவராஜுக்கு இந்த இடம் சவுகர்யமாக அமைந்தது. இதை அமைத்துக்கொடுத்தவர் கங்குலி.

2007 ம்வருடம் இங்கிலாந்து –அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது இந்திய அணி. ஏழு போட்டிகள் கொண்ட தொடர் ஒரு போட்டி ரத்தாகி 3-2 என்று இந்திய அணி பின் தங்கியிருந்தது. கடைசிப்போட்டியில் வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற நிலையில் அந்த போட்டியில் 300க்கும் அதிகமாக ரன்கள் குவித்த்து இங்கிலாந்து.

குறிப்பாக யுவராஜ் சிங்கின் ஓவரில் இங்கிலாந்தின் மஸ்காரென்ஸ் அதிரடியாக 5 சிக்சர்களை தொடர்ந்து அடித்தார். அதைப்பார்த்த இந்தியர்களின் இதயம் நொறுங்கிப் போனது. நல்லவேளையாக அந்த போட்டியில் டெண்டுல்கர் சிறப்பாக ஆடி இந்தியா வெற்றிபெற உதவினார். இது யுவராஜின் மனதில் வடுவாக பதிந்துவிட்டது.

2007ல் முதல் முறையாக டி 20 உலகக்கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இந்திய அணியில் சீனியர்கள் விலகிகொள்ள தோனி தலைமையில் இளமையான ஒரு இந்திய அணி உருவாக்கப்பட்டது. யுவராஜ் சிங் துணைக்கேப்டன் ஆனார்.

 சீனியர் வீர்ரான யுவராஜிற்கு நியாயப்படி கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முன்கோபம் ப்ளேபாய் என்ற இமேஜ் சரிவுகள் யுவராஜின் கேப்டன்ஷிப் வாய்ப்பை தவிர்க்க வைத்தது.மேலும் டெண்டுல்கரின் சிபாரிசு தோனிக்கு சென்றதால் தோனி கேப்டன் ஆனார்.

முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் பவுல் அவுட்டில் வென்றுவிட்டது.இந்தியா. இரண்டாவது போட்டி நியுசிலாந்திடம் தோல்வி கண்டது. இங்கிலாந்தை வென்றே ஆகவேண்டிய சூழலில் களம் கண்டது. இந்தியா பேட்டிங் செய்கையில் முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்தது.பிளிண்ட் ஆப் வேறு இந்திய வீர்ர்களை சீண்டிக் கொண்டு இருந்தார். அப்போதுதான் களம் புகுந்தார் யுவராஜ். ஸ்டுவர்ட் ப்ராட் வீசுவதற்கு முந்தைய ஓவரை வீசிய ப்ளிண்ட் ஆப் யுவராஜை சீண்டினார். ஆடு பார்க்கலாம் என்று வெறுப்பேற்றினார்.

 வெறுப்பேற்றினால் வீறு கொண்டு எழுவதில் யுவராஜ் சிங்கம். சிங்கத்தை சீண்டிய இங்கிலாந்து சிதறிப் போனது.

ஸ்டுவர்ட் ப்ராட் வீசிய அந்த ஓவரின் அனைத்து பந்துகளும் மைதானத்தை தாண்டி வெளியே விழ அரங்கம் அதிர்ந்தது. ஒன்று இரண்டல்ல, ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர்கள். ஓர் உலக சாதனை சத்தமில்லாமல் நிகழ்ந்தேறியது. அரங்கம் கரகோஷத்தில் மிதக்க இந்திய அணியின் ஸ்கோர் இருநூறை தாண்ட இங்கிலாந்தின் பி.பி எகிற அதன் பின்னர் அவர்களால் மீண்டுவரவே முடியவில்லை. இது குறித்து யுவராஜ் கூறுகையில்

ஆறு சிக்சர்கள் அடித்த ஓவருக்கு முந்தைய ஓவரில் பிளிண்டாப் என்னிடம் சில வார்த்தைகளை உதிர்த்தார். நானும் சில வார்த்தைகளை உதிர்த்தேன். அந்த வார்த்தைகள் ஒரு உத்வேகத்தை என்னுள் எழுப்பின. அடுத்த ஓவரில் ஆறு சிக்சர்கள் பறக்கவிட்டு அசத்தினேன். அப்புறம் நான் முதலில் பார்த்தது பிளிண்ட் ஆஃபை, அப்புறம் மஸ்காரென்ஸை, அவர் என்னைப்பார்த்து சிரித்தார்.

போட்டி முடிந்த்தும் ஸ்டூவர்ட் பிராடின் தந்தையும் அம்பயருமான கிறிஸ் ப்ராட் என்னை பார்த்தார். “நீ ஏறக்குறைய என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவைத்துவிட்டாய்!” என்றார். இப்போது நீ அவனுக்கு உன் பனியனில் கையெழுத்திட்டு தருவாயா? என்று கேட்டார்.

அந்த பனியனில் எனது பந்தில் ஐந்து சிக்சர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த வேதனை எனக்குத் தெரியும்.இங்கிலாந்து கிரிக்கெட்டில் உனக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்று எழுதி கையெழுத்திட்டேன் என்றார்.

 யுவராஜின் வாக்கு பொய்க்க வில்லை! ஸ்டூவர்ட் ப்ராட் இன்று இங்கிலாந்தின் சிறந்த பவுலர்களில் ஒருவராக திகழ்கின்றார். இளமைப்பட்டாளம் இறுதிப் போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை வென்று உலக கோப்பையை வென்று வந்துவிட்டது. யுவராஜின் சிக்சர்கள் தான் உலகம் முழுவதும் பேசப்பட்டது. உலகமே கொண்டாடித் தீர்த்தது. ஆனாலும் யுவராஜுக்கு இன்னும் ஓர் கனவு இருந்தது.

 அது?   அடுத்தப் பதிவில்.

யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்! பகுதி 2

யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்!

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

சிறுவயதில் பள்ளியில் ரன்னிங் ரேஸில் வென்று கையில் ட்ராபியுடன் வீட்டுக்கு வந்து ஆவலாக தந்தை யோக்ராஜ் சிங்கிடம் காட்டினார் யுவராஜ். பாராட்டுவார் என்று பார்த்தால் அடிதான் கிடைத்தது.யுவராஜுக்கு!

கிரிக்கெட்டில் தான் விட்டதை மகன் பிடித்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் யோக்ராஜ் சிங்கிற்கு. யோக்ராஜ் சிங் வேகப்பந்துவீச்சாளர். கபில்தேவுடன் கிரிக்கெட் ஆடியவர். சிறந்த வீரரான இவருக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம். அப்போதைய கிரிக்கெட் அரசியலில் பலிகடா ஆக்கப்பட்டு காணாமல் போனார்.  தன் மகனை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்துவிடவேண்டும் அவனை சிறந்த கிரிக்கெட் வீரராக   காணவேண்டும் என்று விரும்பினார் யோக்ராஜ்.

  விளையாட்டுத்தனமாக இருந்த யுவராஜை கிரிக்கெட் என்ற ஒரே முனைப்பில் செலுத்தினார். அது நல்லவிதமாக சென்று இந்திய அணியில் 19 வயதிலேயே இடம்பிடித்தார் யுவராஜ். முதல் தொடரில் நன்றாக விளையாடினாலும் அதற்கடுத்த ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் யுவராஜ் சரியாக விளையாட வில்லை. சொல்லப்போனால் இந்திய மிடில் ஆர்டர் அப்போது மிகவும் பலவீனமாக இருந்தது. அதனால் கங்குலி பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தார். யுவராஜ் இந்த இரு தொடர்களில் சாதிக்காமல் போனதால் அவரது இடம் கேள்விக்குறி ஆனது. அடுத்த தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.

யுவராஜ் சோர்ந்துபோகவில்லை! மீண்டும் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டார். உள்நாட்டு தொடர்களில் கவனம் செலுத்தி இழந்த பார்மை மீட்டெடுத்தார். 2002ல் ஜிம்பாப்வே தொடரில் கடைசி இருபோட்டிகளில் இரு அரைசதங்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்-வெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வானார். இதுதான் அவரது வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

சிலரை  உசுப்பேற்றி கோபம் வரவைத்துவிட்டால் அவ்வளவுதான். இப்போதைய இந்தியகேப்டன் கோஹ்லியும் ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர். இதேபோல்தான் யுவராஜும். அப்போதைய கேப்டன் கங்குலியும் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் சிறந்தவர்கள். அப்போதெல்லாம்ஆஸ்திரேலிய அணி களத்தில் வீர்ர்களை சீண்டி கோபப்படுத்தி விக்கெட்களை எடுக்க முயலும். பதிலுக்கு இந்திய அணி எந்த பதிலடியும் தராமல் இருக்கும். நல்லப்பிள்ளைகளாக ஆடிவிட்டுப் போவார்கள் இந்திய வீரர்கள். கங்குலி இந்திய கேப்டன் ஆனபோது இந்த நிலை மாறியது. இந்தியர்களும் பதிலுக்கு ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

2002ல் இந்தியா வந்த இங்கிலாந்து ஆறு ஒருநாள் ஆட்டங்களில் ஆடியது. முதல் 4 ஆட்டங்கள் முடிவில் இந்தியா 3-1 என்ற முன்னிலையில் இருந்த்து. கடைசி இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது. அப்போது ஆண்ட்ரு ப்ளிண்ட் ஆப் தன் சட்டையை கழற்றி சுழற்றி ஆரவாரம் செய்தார். அது அப்போதைய கேப்டன் கங்குலிக்கு மிகவும் அவமானத்தை தந்திருக்க வேண்டும். ஒருவித வெறியோடுதான் இங்கிலாந்திற்கு பயணப்பட்டார்.

 நாட்வெஸ்ட் டிராபியின் லீக் ஆட்டங்களில் இந்தியாவில் இரண்டு புதிய வீர்ர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். மிடில் ஆர்டரில் இந்த கூட்டணி பல போட்டிகளை வென்று கொடுத்தது. பீல்டிங்கிலும் இந்தக் கூட்டணி ரன்களை கட்டுப்படுத்தியது. அவ்விருவர் யுவராஜ்சிங், மற்றும் முகமது கைப்.

நாட்வெஸ்ட் டிராபி பைனலுக்கு இந்தியா முன்னேறியது. இங்கிலாந்து 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்தியா இதை எட்டுமா? கோப்பையை கைப்பற்றுமா என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. அதற்கேற்பத்தான் இந்திய அணியின் ஆட்டமும் இருந்தது.146 ரன்கள் எடுத்து ஐந்து முக்கிய விக்கெட்களை இழந்து இருந்தது இந்தியா. அவ்வளவுதான்! வழக்கம் போல மற்றுமொரு தோல்வி. பைனல் பீவர் வந்துவிட்டது என்று ரசிகர்கள் எழுந்து போக ஆரம்பித்துவிட்டனர். பலர் டீவியை ஆப் செய்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டனர்.

 ஆனால் அன்று இந்திய கிரிக்கெட்டின் சரித்திரத்தை மாற்றி அமைத்தது யுவராஜ்சிங் முகமது கைப் கூட்டணி. யுவராஜ் உள்ளே இருக்க நுழைந்தார் முகமது கைப். அவர் யுவராஜிடம் கூறினார் ஆடுவோம் போட்டி இன்னும் முடியவில்லை! அவ்வளவுதான் ஆரம்பித்தது ருத்ர தாண்டவம். முதலில் நிதானமாக ஆடி பந்துகளை கணித்து பின்னர் அடிப்பதெல்லாம் யுவராஜுக்கு பிடிக்காது. அதற்கு நேரெதிர் குணம் கொண்டவர் முகமது கைப். இருவரும் அன்று இணைந்தனர். இங்கிலாந்தின் எல்லா பந்துவீச்சாளர்களும் அன்று யுவராஜால் தண்டிக்கப் பட்டனர். எப்படி போட்டாலும் பந்து பறந்தது. யுவராஜின் வேகம் கைஃபையும் தொற்றிக் கொள்ள இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர இங்கிலாந்தின் பி.பி எகிறத் தொடங்கி தவறு செய்ய ஆரம்பித்தார்கள்.

அது மேலும் இந்தியாவுக்கு சாதகம் ஆனது. இவர்கள் இணை 121 ரன்களை எடுக்க இந்தியா அபாயகட்ட்த்தை தாண்டியது. அப்போது 69 ரன்களில் யுவராஜ் ஆட்டம் இழந்தார். ஆனால் இங்கிலாந்தும் ஆட்டத்தை இழந்துவிட்டது. முகமது கைப் சதமடித்துக் கொடுக்க  இறுதிப்போட்டியில் இந்தியா வென்றது.

 சவுரவ் கங்குலி  மைதானத்தில் சட்டை கழற்றி பறக்க விட்டார். ப்ளிண்ட் ஆப் செய்த செயலுக்கு பழிக்குப்பழி. உள்ளே யுவராஜும் தன் சட்டையை கழற்றி பறக்கவிட்டாராம். ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.

அன்றுமுதல் யுவராஜ் இந்திய அணியின் அசைக்க முடியாத வீர்ராக உருவெடுத்தார். இந்திய அணியின் பினிஷராக மாறி புதிய அவதாரம் எடுத்தார்.  இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். லெப்ட் ஆர்ம் சுழல்பந்தும் மின்னல் வேக பீல்டிங்கும் அதிரடி ஆட்டமும் பந்தை கண்டு நடுங்காது தைரியமாக அடித்தாடும் திறனும் யுவராஜுக்கு கைவந்த கலையாக  ஆயிற்று.   கேப்டன் கங்குலியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தார் யுவராஜ். பல போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக்கொடுக்க துணைக் கேப்டனாகவும் ஆனார்.

2003 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது  அப்போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் பாகிஸ்தான் உடனான போட்டியில் டெண்டுல்கர் அமைத்த அடித்தளத்தை பயன்படுத்தி பாகிஸ்தானை வென்று கொடுத்தார். ஆனாலும் இறுதிப் போட்டியில் ஒரு பதட்ட சூழலில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது. ஆனாலும் அந்த உலக கோப்பைத்தொடரில் யுவராஜின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. இதையடுத்து  2007 டி20 உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணி ஒரு இளமையான அணியை உருவாக்கியது. இந்த போட்டியின் தொடர் நாயகனாக ஜொலித்தார் யுவராஜ். அதை நாளை பார்ப்போம்!

யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்! பகுதி 1

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

சிறுவயதில் பள்ளியில் ரன்னிங் ரேஸில் வென்று கையில் ட்ராபியுடன் வீட்டுக்கு வந்து ஆவலாக தந்தை யோக்ராஜ் சிங்கிடம் காட்டினார் யுவராஜ். பாராட்டுவார் என்று பார்த்தால் அடிதான் கிடைத்தது.யுவராஜுக்கு!

கிரிக்கெட்டில் தான் விட்டதை மகன் பிடித்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் யோக்ராஜ் சிங்கிற்கு. யோக்ராஜ் சிங் வேகப்பந்துவீச்சாளர். கபில்தேவுடன் கிரிக்கெட் ஆடியவர். சிறந்த வீரரான இவருக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம். அப்போதைய கிரிக்கெட் அரசியலில் பலிகடா ஆக்கப்பட்டு காணாமல் போனார்.  தன் மகனை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்துவிடவேண்டும் அவனை சிறந்த கிரிக்கெட் வீரராக   காணவேண்டும் என்று விரும்பினார் யோக்ராஜ்.

  விளையாட்டுத்தனமாக இருந்த யுவராஜை கிரிக்கெட் என்ற ஒரே முனைப்பில் செலுத்தினார். அது நல்லவிதமாக சென்று இந்திய அணியில் 19 வயதிலேயே இடம்பிடித்தார் யுவராஜ். முதல் தொடரில் நன்றாக விளையாடினாலும் அதற்கடுத்த ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் யுவராஜ் சரியாக விளையாட வில்லை. சொல்லப்போனால் இந்திய மிடில் ஆர்டர் அப்போது மிகவும் பலவீனமாக இருந்தது. அதனால் கங்குலி பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தார். யுவராஜ் இந்த இரு தொடர்களில் சாதிக்காமல் போனதால் அவரது இடம் கேள்விக்குறி ஆனது. அடுத்த தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.

யுவராஜ் சோர்ந்துபோகவில்லை! மீண்டும் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டார். உள்நாட்டு தொடர்களில் கவனம் செலுத்தி இழந்த பார்மை மீட்டெடுத்தார். 2002ல் ஜிம்பாப்வே தொடரில் கடைசி இருபோட்டிகளில் இரு அரைசதங்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்-வெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வானார். இதுதான் அவரது வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

சிலரை  உசுப்பேற்றி கோபம் வரவைத்துவிட்டால் அவ்வளவுதான். இப்போதைய இந்தியகேப்டன் கோஹ்லியும் ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர். இதேபோல்தான் யுவராஜும். அப்போதைய கேப்டன் கங்குலியும் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் சிறந்தவர்கள். அப்போதெல்லாம்ஆஸ்திரேலிய அணி களத்தில் வீர்ர்களை சீண்டி கோபப்படுத்தி விக்கெட்களை எடுக்க முயலும். பதிலுக்கு இந்திய அணி எந்த பதிலடியும் தராமல் இருக்கும். நல்லப்பிள்ளைகளாக ஆடிவிட்டுப் போவார்கள் இந்திய வீரர்கள். கங்குலி இந்திய கேப்டன் ஆனபோது இந்த நிலை மாறியது. இந்தியர்களும் பதிலுக்கு ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

2002ல் இந்தியா வந்த இங்கிலாந்து ஆறு ஒருநாள் ஆட்டங்களில் ஆடியது. முதல் 4 ஆட்டங்கள் முடிவில் இந்தியா 3-1 என்ற முன்னிலையில் இருந்த்து. கடைசி இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது. அப்போது ஆண்ட்ரு ப்ளிண்ட் ஆப் தன் சட்டையை கழற்றி சுழற்றி ஆரவாரம் செய்தார். அது அப்போதைய கேப்டன் கங்குலிக்கு மிகவும் அவமானத்தை தந்திருக்க வேண்டும். ஒருவித வெறியோடுதான் இங்கிலாந்திற்கு பயணப்பட்டார்.

 நாட்வெஸ்ட் டிராபியின் லீக் ஆட்டங்களில் இந்தியாவில் இரண்டு புதிய வீர்ர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். மிடில் ஆர்டரில் இந்த கூட்டணி பல போட்டிகளை வென்று கொடுத்தது. பீல்டிங்கிலும் இந்தக் கூட்டணி ரன்களை கட்டுப்படுத்தியது. அவ்விருவர் யுவராஜ்சிங், மற்றும் முகமது கைப்.

நாட்வெஸ்ட் டிராபி பைனலுக்கு இந்தியா முன்னேறியது. இங்கிலாந்து 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்தியா இதை எட்டுமா? கோப்பையை கைப்பற்றுமா என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. அதற்கேற்பத்தான் இந்திய அணியின் ஆட்டமும் இருந்தது.146 ரன்கள் எடுத்து ஐந்து முக்கிய விக்கெட்களை இழந்து இருந்தது இந்தியா. அவ்வளவுதான்! வழக்கம் போல மற்றுமொரு தோல்வி. பைனல் பீவர் வந்துவிட்டது என்று ரசிகர்கள் எழுந்து போக ஆரம்பித்துவிட்டனர். பலர் டீவியை ஆப் செய்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டனர்.

 ஆனால் அன்று இந்திய கிரிக்கெட்டின் சரித்திரத்தை மாற்றி அமைத்தது யுவராஜ்சிங் முகமது கைப் கூட்டணி. யுவராஜ் உள்ளே இருக்க நுழைந்தார் முகமது கைப். அவர் யுவராஜிடம் கூறினார் ஆடுவோம் போட்டி இன்னும் முடியவில்லை! அவ்வளவுதான் ஆரம்பித்தது ருத்ர தாண்டவம். முதலில் நிதானமாக ஆடி பந்துகளை கணித்து பின்னர் அடிப்பதெல்லாம் யுவராஜுக்கு பிடிக்காது. அதற்கு நேரெதிர் குணம் கொண்டவர் முகமது கைப். இருவரும் அன்று இணைந்தனர். இங்கிலாந்தின் எல்லா பந்துவீச்சாளர்களும் அன்று யுவராஜால் தண்டிக்கப் பட்டனர். எப்படி போட்டாலும் பந்து பறந்தது. யுவராஜின் வேகம் கைஃபையும் தொற்றிக் கொள்ள இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர இங்கிலாந்தின் பி.பி எகிறத் தொடங்கி தவறு செய்ய ஆரம்பித்தார்கள்.

அது மேலும் இந்தியாவுக்கு சாதகம் ஆனது. இவர்கள் இணை 121 ரன்களை எடுக்க இந்தியா அபாயகட்டத்தை தாண்டியது. அப்போது 69 ரன்களில் யுவராஜ் ஆட்டம் இழந்தார். ஆனால் இங்கிலாந்தும் ஆட்டத்தை இழந்துவிட்டது. முகமது கைப் சதமடித்துக் கொடுக்க  இறுதிப்போட்டியில் இந்தியா வென்றது.

 சவுரவ் கங்குலி  மைதானத்தில் சட்டை கழற்றி பறக்க விட்டார். ப்ளிண்ட் ஆப் செய்த செயலுக்கு பழிக்குப்பழி. உள்ளே யுவராஜும் தன் சட்டையை கழற்றி பறக்கவிட்டாராம். ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.

அன்றுமுதல் யுவராஜ் இந்திய அணியின் அசைக்க முடியாத வீர்ராக உருவெடுத்தார். இந்திய அணியின் பினிஷராக மாறி புதிய அவதாரம் எடுத்தார்.  இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். லெப்ட் ஆர்ம் சுழல்பந்தும் மின்னல் வேக பீல்டிங்கும் அதிரடி ஆட்டமும் பந்தை கண்டு நடுங்காது தைரியமாக அடித்தாடும் திறனும் யுவராஜுக்கு கைவந்த கலையாக  ஆயிற்று.   கேப்டன் கங்குலியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தார் யுவராஜ். பல போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக்கொடுக்க துணைக் கேப்டனாகவும் ஆனார்.

2003 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது  அப்போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் பாகிஸ்தான் உடனான போட்டியில் டெண்டுல்கர் அமைத்த அடித்தளத்தை பயன்படுத்தி பாகிஸ்தானை வென்று கொடுத்தார். ஆனாலும் இறுதிப் போட்டியில் ஒரு பதட்ட சூழலில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது. ஆனாலும் அந்த உலக கோப்பைத்தொடரில் யுவராஜின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. இதையடுத்து  2007 டி20 உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணி ஒரு இளமையான அணியை உருவாக்கியது. இந்த போட்டியின் தொடர் நாயகனாக ஜொலித்தார் யுவராஜ். அதை நாளை பார்ப்போம்!

இந்திய கிரிக்கெட் நினைவலைகள்! -2

இந்திய கிரிக்கெட் நினைவலைகள்!

சுதந்திர தினக்கோப்பை- 1997-98- தாகா.

இரண்டுநாளாய் எதுவும் எழுதவில்லை! கிரிக்கெட் நினைவலைகளில் எதை எழுதலாம் என்று யோசித்தேன். 1987- 90 காலகட்டங்களில் நடந்த பல போட்டிகள் நினைவுக்கு வந்தாலும் 1997-98ல் சச்சின் தனது கேப்டன் பதவியை இழந்து மீண்டும் அசாருதின் கேப்டன் ஆனதும் வங்கதேச சுதந்திர தினவிழா கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிபெற்றது அப்போது பெரிதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அது டிரை சீரீஸ் போட்டி. இந்தியா-பாகிஸ்தான் வங்க தேசம் தொடரில் கலந்து கொண்டது இந்தியா லீக் போட்டியில் பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் வென்று பைனலுக்கு வந்தது. பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்று வங்கதேசத்தை வென்று பைனலுக்கு வந்தது. அப்போது இந்திய அணியில் சில புதுமுகங்கள் இடம்பெற்று இருந்தனர். அதில் குறிப்பிடதக்கவர் ரிஷிகேஷ் கனிட்கர். பைனல் நாயகன் இவர்தான். இவரை அப்போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் உண்மையான வெற்றிக்கு காரணம் சச்சினின் அதிரடி 41 ரன்களும் கங்குலி- ராபின் சிங் பார்ட்னர் ஷிப்பும்தான்.  30 வயதைக் கடந்து அணியில் அறிமுகம் ஆன ராபின் சிங். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசியதுடன் 83 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். கங்குலி சிறப்பாக விளையாடி 124 ரன்கள் குவித்தார். ஆனாலும் ரிஷிகேஷ் கனிட்கர் கடைசி நேரத்தில் பதட்டம் அடையாமல் அப்போதைய பாகிஸ்தானின் சிறந்த லெக் ஸ்பின்னர் ஷக்லைன் முஸ்டாக்கின் பந்துவீச்சில் நான்கு ரன்களை விளாச ஒரு பந்து மீதம் இருக்கையில் த்ரில் வெற்றியை பெற்றது இந்தியா.

 அதுவும் முழுமையான 50 ஓவர் மேட்ச் அல்ல 48 ஓவர் மேட்ச். 48 ஓவரில் 314 ரன்களை சேஸ் செய்வது என்பது அப்போது பெரிய சாதனை. அதை அப்போதிருந்த வீரர்களை கொண்டு செய்தது பெரிய விஷயம்.

இந்தியா டாஸில் வென்று முதலில் பீல்ட் செய்தது. இந்திய அணியில் ஸ்ரீநாத்தை தவிர பெரிய பவுலர் கிடையாது, ஹர்வீந்தர் சிங் என்ற புதிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் சுழல்பந்தில் ராகுல்சங்வி என்ற அறிமுக பந்துவீச்சாளர்.  பாகிஸ்தானில் உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் ஷாகித் அப்ரிடியும் சையத் அன்வரும் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். ஆனாலும் ஹர்வீந்தர் சிங்கிற்கு அதிர்ஷ்டம் அவ்வப்போது விக்கெட் எடுத்தார். ஆனாலும்  சையத் அன்வர் சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய இஜாஸ் அகமதும் சதம் விளாசினார். இதனால் 48 ஓவர்களில் பாகிஸ்தான் 314 ரன்கள் குவித்தது.

 இந்திய அணி ஆட்டத்தை துவக்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் சச்சின். பந்துகள் பவுண்டரி நோக்கி செல்ல அவருக்கு எப்படி போடுவது என்று நொந்து போயினர் பாகிஸ்தான் பவுலர்கள். மறுமுனையில் தாதா கங்குலியும் வேடிக்கைப்பார்த்து நிற்கும் படிதான் இருந்தது. ஐந்து ஓவர்களில் ஐம்பது ரன்களை கடந்தது இந்திய அணி. 9வது ஓவரில் அப்ரிடியின் பந்துவீச்சில் அசார் முகமதுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சச்சின் அப்போது ஸ்கோர் 71 சச்சின் 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இருந்தார். அவர் அவுட்டானதும் கோப்பை வென்றமாதிரி குதூகலித்தனர் பாகிஸ்தானியர்.

 வழக்கத்துக்கு மாறாக ராபின் சிங் ஒன் டவுனாக களம் இறக்கப்பட்டார். அவரும் கங்குலியும் சச்சின் கொடுத்த அடித்தளத்தை  கட்டிட்டமாக மாற்றத்துவங்கினர். இவர்களை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் பிரயத்தனப்பட்டும் முடியவில்லை. ஒன்றிரண்டு ரன் அவுட் வாய்ப்புகள் இருந்தும் வீணாகின. படாத பாடுபட்டனர். ரன்கள் சீராக சென்றது. 38 ஓவர்களில் 250 ரன்களை கடந்தது இந்தியா. பாகிஸ்தான் களை இழந்து போனது. அப்போது வெற்றி இந்தியாவுக்கு அருகில் இருந்தது.39வது ஓவரின் முதல் பந்தில் ராபின் சிங் அவுட்டானார்.  உள்ளே வந்த அசாருதீன் ரன் அவுட் வாய்ப்பில் தப்பி பிழைத்தார். ஆனால் பந்துகளை வீணடித்தார்.

 கங்குலியும் தசைப்பிடிப்பில் அவதிப்பட்டார், அந்த சமயம் அசாருதின் ஷக்லைன் முஸ்தாக் பந்தில் ஆட்டமிழந்தார்.  உள்ளே சித்துவந்தார்.  அப்போது கங்குலியால் ஓட முடியாமல் பை-ரன்னராக அசாருதீன் வந்தார். பந்துகள் குறைந்து ரன்கள் எண்ணிக்கை கூட பாகிஸ்தானியர்கள் துல்லியமாக வீச ஆரம்பித்தனர். சவுரவ் கங்குலியும் 42வது ஓவரில் ஆட்டமிழக்க ஸ்கோர் 274 ரன்கள் அடுத்த ஓவரில் சித்துவும் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்கள் சோர்ந்தனர். உள்ளே புதியவர் கனிட்கரும் ஜடேஜாவும் பந்துகளை தட்டிவிட்டு ஒன்றிரண்டாக சேர்க்க ப்ரஷர் கூடியது. 46வது ஓவரில் ஜடேஜாவும் அதன்பின் வந்த மோங்கியாவும் 47வது ஓவரில் ஆட்டமிழக்க கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது

  உள்ளே  கனிட்கர் கடைசி ஓவரை வீச வருகிறார் ஷக்லைன். கனிட்கர் தேர்ட் மேன் திசையில் அடித்து ஒரு ரன். ஸ்ரீநாத்துக்கு அடுத்த பந்தை ஷக்லைன் வீச ஸ்ரீநாத் தூக்கி அடித்து இரண்டு ரன்களை பெறுகிறார். அடுத்த பந்து மிட் ஆனில் தூக்கி அடிக்கிறார் ஸ்ரீநாத் பீல்டர்கள் பந்தை பிடிக்க ஓடிவருகிறார்கள் யார் கையிலும் சிக்காமல் கீழேவிழுகின்றது பந்து அதற்குள் இரண்டு ரன்கள் கிடைத்து விடுகிறது. நான்காவது பந்தில் ஒரு ரன் ஸ்ரீநாத் அடிக்க கடைசி ரெண்டு பந்தில் மூன்று ரன்கள். அரங்கமே திக் திக்கென்றிருக்க ஸ்ரீநாத்- கனிட்கரிடம் ஏதோ பேசுகிறார். ஷக்லைனிடம் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் ஆலோசனை சொல்கிறார். ஐந்தாவது பந்து ஷக்லைன் வீச  தூக்கி அடிக்கிறார் கனிட்கர் மிட் ஆப் திசையில் பந்து பவுண்டரியை கடக்க  மைதானமே கரகோஷத்தில் அதிர்கிறது. இந்தியா வெற்றி பெற்றதை நம்ப முடியாமல் சோகத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறுகின்றனர் பாகிஸ்தான் வீரர்கள்.

   வெற்றிக்கோப்பையை அசாரூதின் வாங்குகிறார். சச்சினிடம் அந்த மைதானம் பற்றி வர்ணனையாளர் கேட்க இது பேட்ஸ்மேன்ஸ் பேரடைஸ் என்று புகழ்கின்றார். கங்குலியை பற்றி புகழ்ந்து பேசுகின்றார். எனக்குத் தெரிந்து இந்த தொடரின் போதுதான் கங்குலி ஓப்பனிங் ஆடினார் என்று நினைக்கிறேன். அப்புறம் கங்குலி- சச்சின் இணை பல சாதனைகளை படைத்தது. அதற்கடுத்த வந்த ஆஸ்திரேலிய தொடரிலும் கனிட்கர் சில அரைசதங்கள் விளாசினார்.

   ஆனால் அப்புறம் காணாமல் போனார். ஆனால் அப்போதைய ஊடகங்களில் ரிஷிகேஷ் கனிட்கர் ஓர் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். மிகவும் சுவாரஸ்யமான மேட்ச் இது.

  ஆனாலும் இதில் ஒரு சந்தேகம் எனக்கு வந்தது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த மைதானம் 38வது ஓவரில் ராபின் சிங் அவுட்டானதும் எப்படி பவுலர்களுக்கு சாதகமாக மாறியது. அசாருதீன் –ஜடேஜா – மோங்கியா உள்ளிட்டவர்கள் ஆட தடுமாறியது போன்றவை சந்தேகத்தை கிளப்பின. போதிய வெளிச்சம் இல்லை. ஆட்டத்தை நிறுத்திவிடலாம் என்று அசாருதீன் கூறியதாகவும் அப்போது செய்திகள் பரவின. இதற்கெல்லாம் அப்புறம் கிளம்பிய சூதாட்ட ஊழலும் இந்திய வீர்ர்களின் டிஸ்மிஸும் பதில் கூறின.

மீண்டும் ஒரு சுவாரஸ்ய மேட்ச் நினைவலைகளோடு உங்களை சந்திக்கிறேன்! நன்றி!

இந்திய கிரிக்கெட் நினைவலைகள்!

இந்திய கிரிக்கெட் நினைவலைகள்!

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. எனக்கு ஓரளவு கிரிக்கெட் அறிமுகம் ஆன 1986ல் இருந்து நான் பார்த்து ரசித்த கிரிக்கெட் போட்டிகள் பற்றி இந்த தொடரில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். தகவல்கள் என் நினைவுகளில் இருந்து எடுப்பதால் துல்லியமாக இருக்காது. சில தகவல்களை கூகுளில் தேடி எடுத்து தருகிறேன்! நன்றி இனி தொடருக்குள் செல்வோம்!

இந்தியா- ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி, சேப்பாக்கம், சென்னை. 18-22 செப்டம்பர்-1986  “டை” ஆன இரண்டாவது போட்டி

இன்று இந்திய கிரிக்கெட் பெருமளவு வளர்ந்து பெரும் வணிகமாக மாறிவிட்டிருக்கிறது. ஆனால் அன்றைய கிரிக்கெட் மிகவும் அழகாக இருந்தது. எனக்கு நினைவு தெரிந்து 1986 சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிதான் நான் பார்த்த ஊகும் கேட்டு ரசித்த முதல் கிரிக்கெட் போட்டி. அந்த போட்டியின் சுவாரஸ்யம் என்னை கிரிக்கெட் ரசிகனாக மாற்றிவிட்டது.

 அது 1986ம் வருடம் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வுகள் முடிந்து   விடுமுறை விடப்பட்டிருந்த சமயம். நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. பெரும்பேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் காலாண்டு தேர்வு எழுதிவிட்டு வயல் வரப்புகளில் நடந்து ஆசானபூதூருக்குச் செல்லும் சமயம் நண்பன் இளங்கோ என்ற ”செல்லா” தான் இந்த கிரிக்கெட் போட்டி நடப்பது பற்றி சொன்னான். நாளைக்கு  மெட்ராஸ்ல கிரிக்கெட் மேட்ச் நடக்க போவுது! ரேடியோவில வர்ணனை பண்ணப் போறாங்க! செம இண்ட்ரஸ்டா இருக்கும் கேட்டுப் பாரு!

மறுநாள் மாமாவிடம் அனுமதி வாங்கி ரேடியோவை ஆன் செய்த போது போட்டி துவங்கிவிட்டிருந்தது. கபில்தேவின் பந்துகளை பூனும் மார்ஷும் விளாசுவதை அப்துல் ஜப்பார், சிவராமகிருஷ்ணன், கூத்தபிரான் போன்றவர்கள் வர்ணனை செய்வதை கேட்பது அலாதி சுகம்.

அப்போதைய வயதில் பீல்டிங் கட்டுப்படுகள், விதிகள் ஏதும் தெரியாது. மொகிந்தர் அமர்நாத்துக்கு கண் தெரியாது. தடவுவான் என்று நண்பன் கூறியதை அப்படியே நம்பி வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தேன்.

1986ல் நடந்த இந்த டெஸ்ட் மேட்ச்  உலக வரலாற்றில் இரண்டாவது முறையாக  டை ஆன டெஸ்ட் மேட்ச். அதற்கப்புறம் இதுவரை எந்த டெஸ்ட் மேட்சும் டை ஆனதா தெரியவில்லை.

 முதல் இன்னிங்க்ஸில் அப்போதை ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரராக உருவெடுத்துவந்த டீன் ஜோன்ஸ் இரட்டை சதம் விளாச பூன் மற்றும் ஆலன் பார்டர் சதங்கள் எடுக்க 574 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா.

 அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ரீகாந்த், ரவிசாஸ்திரி, அசாருதின் அரைசதம் அடிக்க கபில்தேவ் சதம் விளாச 397 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் க்ரெக் மேத்யூஸ் ஐந்துவிக்கெட்கள் வீழ்த்தினார்.

இதற்கே மூன்றரை நாட்கள் ஓடிவிட ஆஸ்திரேலிய அணி நான்காவது நாளில் மதியம் மட்டும் விளையாடி 49 ஓவர்களில் 170 ரன்கள் அஞ்சு விக்கெட் இழந்து எடுத்து டிக்ளேர் செய்தது.

ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை துவக்கியது இந்திய அணி, முதல் இன்னிங்க்ஸில் சரியாக விளையாடாத கவாஸ்கர் சிறப்பாக ஆட அதிரடியாக ரன் குவித்த  ஸ்ரீகாந்த்  39 ரன்களில் விரைவில் நடையை கட்டினார். ஒன் டவுனாக வந்த மொகீந்தர் அமர்நாத் அரைசதம் கடக்க அவுட் ஆனார். அசாரூதின்  சந்திரகாந்த் பண்டிட் ஓரளவுக்கு ரன்கள் சேர்க்க வெற்றியை நெருங்கியது இந்தியா.

 அப்போதுதான் ஒரு டிவிஸ்ட் நடந்தது.மேத்யூஸின் வேகத்தில் பண்டிட் போல்டாகி செல்ல உள்ளே வந்த கபில்தேவ் ஒரே ரன்னில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும் அப்போதைய ஹீரோ ரவிசாஸ்திரி சில பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாச வெற்றியை நெருங்கியது இந்தியா. அப்போது சேதன் சர்மா ஆட்டமிழக்க பின்னே வந்த கிரன் மோரே டக் அவுட் ஆக பவுலர்கள் சிவ்லால் யாதவ் மணிந்தர் சிங்குடன் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ரவிசாஸ்திரிக்கு. சிவ்லால் யாதவ் எட்டு ரன்களில் ஆட்டமிழக்க மணிந்தர் சிங்கை வைத்து 346 ரன்கள் வரை கொண்டு வந்துவிட்டார் ரவிசாஸ்திரி  இன்னும் நான்கு ஓவர்கள் இருக்க 87வது ஓவரை மாத்யூஸ் வீச வருகிறார் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்துவிடுகிறார் சாஸ்திரி அடுத்த பந்தை சந்திக்கும் மணீந்தர் சிங் எல்.பி. டபிள்யூ ஆக ஒரு ரன்  எடுக்க முடியாமல் மேட்ச் டை ஆகிறது.

 வர்ணனையாளர்களுக்கு அப்போது “டை” என்று ஒன்றிருப்பதே தெரியவில்லை!  இது தோல்வியா? டிராவா என்று விவாதித்துக் கொண்டிருக்க அந்த ட்ராமா மேட்ச் முடிவில் “டை” என்று முடிவானது. வெற்றியை நெருங்கி கோட்டைவிட்டாலும் இந்திய வரலாற்றில் முதல் டை ஆன மேட்ச் என்ற சாதனை படைத்தது. மணீந்தர் சிங் அப்போது மிகத்திறமையான சுழல் பந்துவீச்சாளராக இருந்தாலும் மட்டை வீசுவதில் மிகவும் திறமையற்றவர். மேத்யூசின் முதல் பந்திலேயே அவர் அவுட்டானதால் இந்தியா வெற்றிவாய்ப்பை இழந்தது. இந்த போட்டியை நேரில் பார்க்காவிட்டாலும் வானொலியில் வர்ணனைகளை கேட்டு ரசித்தது. அப்போதைய நண்பர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தது நினைவில் இருக்கிறது. இந்த போட்டிக்கு பின் எனது கிரிக்கெட் ஆர்வம் வளர்ந்து நண்பர்களுடன் நானும் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தேன்.  இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சுவாரஸ்யமான போட்டி இது. இப்போட்டி பற்றி உங்கள் நினைவலைகளை கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஒரு நாள் போட்டியில் பத்துவிக்கெட்டுகள் வீழ்த்திய இளம் வீராங்கனை

சண்டிகரை சேர்ந்த இளம்பெண் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த 19 வயதினருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் வீராங்கனை காஷ்வி கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

சண்டிகர்-அருணாச்சல பிரதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் களமிறங்கிய சண்டிகர் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி காஷ்வி கவுதமின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 25 ரன்களுக்குள் சுருண்டது.

அபாரமாக பந்து வீசிய காஷ்வி கவுதம் மொத்தம் உள்ள பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்து சாதனை படைத்தார்.

காஷ்வி கவுதம் மொத்தம் 29 பந்துகளை வீசினார். அவர் வீசிய 29 பந்துகளில் ஆறு டாட் பந்துகள், மீதமுள்ள 23 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அருணாச்சல பிரதேசத்தின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

நன்றி: புதிய தலைமுறை செய்திகள்