சார்பட்டா பரம்பரை- திரை விமர்சனம்.

A.G. சிவக்குமார்

May be an image of 6 people, beard and text

சார்பட்டா 2.5/5தலைவரை வைத்து காலா எனும் ஃப்ளாப் படத்தை தந்த ரஞ்சித் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கோதாவில் குதித்துள்ளார். முதலில் இக்கதை சூர்யாவிற்கு சென்று ஓகே ஆனது என்றார்கள். ஆனால் ஏனோ அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. ரஞ்சித்திடம் இணைய வேண்டும் என்பது ஆர்யாவின் நீண்ட நாள் விருப்பம். அது தற்போது நிறைவேறியுள்ளது.

ப்ளஸ்:* முதல் பாதிவரை ஹாலிவுட் ஸ்போர்ட்ஸ் படத்திற்கு இணையான படத்தை பார்த்த பிரமிப்பு.* ஆர்யா, பசுபதி, வேம்புலி, ராமன், ராமனின் மாமா, டான்சிங் ரோஸ் ஷபீர், அவரது தாயாராக வரும் அனுபமா, டாடி ஜான் விஜய், கலையரசன், அவரது மனைவி, பழைய ஜோக் தங்கதுரை, பீடி ராயப்பன் என பொருத்தமான காஸ்டிங். அதை எந்தளவிற்கு கச்சிதமாக பிரதிபலித்தார்கள் என்பது பின்வரும் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. *

ஒளிப்பதிவு, கலை, இயக்கம், சண்டைப்பயிற்சி, காஸ்ட்யூம், சிகை மற்றும் மேக்கப் என முக்கியமான தளங்கள் சிறந்த தரம்,* முதல் பாதி திரைக்கதை மற்றும் வசனங்களில் ரஞ்சித்துடன் இணைந்து எழுத்தாளர் தமிழ்ப்பிரபா சிறந்த பணியை ஆற்றியுள்ளார். ‘பொல்லாதவள் ஆகி என்ன பண்ணிடுவ?’ எனும் வசனம் ஒரு சோறு பதம்.* ஹாலிவுட் இசையை அலேக்காக தூக்கி இங்கே இயக்கியுள்ளார் சந்தோஷ். ஓவராக வாசிக்காமல் இருந்திருப்பது பெரிய ஆறுதல்.*

தேவையற்ற கிளைக்கதைகள், ஆர்யாவுக்கென லவ் டிராக் என தடம் மாறாமல் பாக்சிங் ரிங்கை சுற்றியே களமாடி இருப்பது மகிழ்ச்சி.* பூலோகம், இறுதிச்சுற்று உள்ளிட்ட மொக்கை பாக்சிங் படங்களை ஒப்பிடுகையில் சார்பட்டா பல அடி மேலே இருக்கிறது.* ரஞ்சித் இயக்கிய ஒரு படம் கூட சாதிய, ஏற்றத்தாழ்வுகளை அடித்து பேசியதில்லை. எல்லாமே ஈயப்பூச்சுகள்தான். ஒன்று.. இங்கு நடைபெறும் அவலங்களை அடித்துப்பேச வேண்டும் அல்லது மையக்கதையை நோக்கி பயணிக்க வேண்டும். இம்முறை ஓரிரு இடங்களில் இப்படியான வசனங்களை வைத்துவிட்டு கதையில் மட்டுமே கவனம் செலுத்தி இருப்பது சிறப்பு.

மைனஸ்:* பிரமாதமான முதல் பாதிக்கு பிறகு ஜவ்வு மிட்டாய் போல நகர்கிறது. திரைப்படமாக வந்திருந்தால் அரைமணிநேரம் ட்ரிம் செய்திருப்பார்கள். OTT என்பதால் மூன்று மணிநேர படத்தை அப்படியே இறக்கி விட்டார்கள். முடியல சாமி!!* ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல.. கேரக்டர்களுக்கான நடிகர்கள் அனைவரும் சிறந்த சாய்ஸ். அதேநேரம் சிலரது நடிப்பு அதீதமாகவும், குறைவாகவும் இருந்தது. சென்னை வட்டார வழக்கு பேசத்தெரியாத ஆர்யா, நெத்திலி மீன் போல துள்ளிக்கொண்டே இருக்கும் அவரது மனைவி, எம்.ஆர்.ராதாவை காப்பி அடிக்கும் ஜான் விஜய், சற்று அதிகமாக டான்ஸ் ஆடிய ரோஸ்.

* சிறுவயதில் ரங்கன் வாத்தியாரை கண்டு அசந்து போனவன் கபிலன். பாக்ஸர் ஆக வேண்டும் என ஆசை அவனுக்குள் உள்ளூர அதிகமுண்டு. ஆனால் தாயார் அதை விரும்பவில்லை. சாதாரண தொழிலாளியாக மாத சம்பள வேலைக்கு செல்கிறான். திடீரென ஒருநாள் சிறந்த பாக்ஸர் ஒருவரை வீழ்த்துகிறார். ரங்கன் வாத்தியார் அசந்து போய் இவனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்கிறார்.காதுல பூ சுத்துறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா? கபிலன் எப்படி இவ்வளவு பெரிய பாக்ஸர் ஆனான்? யார் அவனுக்கு கோச்சிங் தந்தது? சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு வேலைக்கு செல்கிறான்.

இதெல்லாம் இவனது அம்மாவிற்கு தெரியாமலா போனது?இந்த இடைப்பட்ட வளர்ச்சி குறித்து நம்பத்தகுந்த காட்சிகளை வைக்காமல் விட்டது மெகா சறுக்கல்.* 1976 இல் கருணாநிதியின் ஆட்சி நள்ளிரவில் கலைக்கப்பட்டது. அந்நேரமே மக்களிடம் தகவல் பரவிவிட்டது. ஆனால் பகலில் மேட்ச் நடக்கும்போதுதான் இத்தகவல் அனைவருக்கும் தெரிகிறது. அதுவும் ரங்கன் போன்ற உடன்பிறப்புகள் பலர் அங்கிருந்தும்? * அம்மாவும், மனைவியும் ஆர்யாவை திட்டுவது, திடீர் சாராய வியாபாரியாக மாறுவது, தைரியம் இருந்தா மோதிப்பார் என யாராவது சவால் விட்டுக்கொண்டே இருப்பது, எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் என கடும் களைப்பை தருகிறது இரண்டாம் பாதி

.* தலித் மக்களின் எழுச்சி நாயகனாக பேசப்படுபவர் ரஞ்சித். இவரது சீடர் மாரி செல்வராஜ் எடுத்த பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தில் மாஞ்சோலை போஸ்டர், 1996 முன்பு, பின்பு போன்ற காமடிகள் நடந்தன. * சார்பட்டா ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனால் போஸ்ட் புரடக்சன் வேலைகள் அதன் பின்புதான் துவங்கும் என்பது பலரும் அறிந்தது.திமுக உறுதியாக ஆட்சிக்கு வரும் என நம்பி பாக்ஸர்கள் அணியும் மேலாடையில் உதயசூரியன் சின்னத்தின் க்ளோஸ் அப், திமுக கரைவேட்டி, துண்டுகள் என அருமையாக பிளான் பண்ணி எடுத்துள்ளார் ரஞ்சித்

.* ‘நான் கழக உடன்பிறப்பு. கைதுக்கு பயப்பட மாட்டேன்’ என முழங்குகிறார் பசுபதி.* வடசென்னையில் பாக்சிங் பிரபலமாக இருந்தபோது திமுகவினர் பலர் அதில் அங்கம் வகித்தனர் என்பது உண்மை. ஒருவேளை அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்திருந்தால் இதே வசனம், காட்சிகளை ரஞ்சித் வைத்திருப்பாரா என்பதுதான் கேள்வி. ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால்…. அனைத்தும் நறுக்கப்பட்டிருக்கும் என்பதே நிஜம்.* ஆர்யா தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அப்போது ஜான்விஜய் பேசுகிறார் இப்படி: ‘எமர்ஜன்சி போட்டுவிட்டார்கள். கருணாநிதியின் மகன் ஸ்டாலினை கூட மிசாவில் அரெஸ்ட் செய்து விட்டார்கள். பாவம்’இந்த வசனம் வரும்போது ஜான் விஜய்யின் முகம் இல்லை. கருணாநிதியின் அரசியல் க்ளிப்பிங் கருப்பு வெள்ளையில் ஓடுகிறது. ஆகவே திமுக ஆட்சி அமைந்த பிறகு போஸ்ட் புரடக்சனில் டப்பிங் மூலம் இந்த வசனத்தை சேர்த்திருப்பதாக தெரிகிறது

.* இதையெல்லாம் நம்ப முடியாது என்று நீல சங்கிகள்…. சாரி திடீர் உடன்பிறப்புகள் கூவலாம். அவர்களுக்கு ஒரு செய்தி.* மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை எனும் தகவல் ஓடிக்கொண்டு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

* காலத்திற்கு ஏற்ப கலர் மாற்றுவதுதான் அம்பேத்கரிஸமா?சார்பாட்டா மற்றும் இயக்குனர் ரஞ்சித் பற்றி மேலும் சில பல பதிவுகள் வரக்கூடும். நீல சங்கியாக இருந்து திடீர் உடன்பிறப்பாக மாறியவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எனது பதிவுகளை ஸ்கிப் செய்யுங்கள் அல்லது Unfriend/Block செய்து விடுங்கள்.மூன்று மணிநேரம் பார்க்கும் பொறுமை இருப்பவர்கள் பாருங்கள். இல்லாவிட்டால் முதல் ஒன்றரை மணிநேரம் பார்த்துவிட்டு க்ளைமாக்சிற்கு தாவி விடுங்கள்.

நன்றி: A.G.சிவக்குமார் முகநூல் பக்கம்.

காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்

காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்

தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி, BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்”.

உண்மையில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாகக் கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் T. சிவா, “தற்போது திரையுலகம் பலமுனைகளிலும் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா டிக்கெட் மீது ஏற்கெனவே அதிகப்படியான வரிவிதிப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசு மேலும் 8 சதவீத TDS வரி விதித்துள்ளது. நாங்கள் இப்போது மத்திய அரசிடம் இதனை முறையிட டெல்லி செல்லவுள்ளோம். 10 சதவீத படங்களில் மட்டுமே ஒரு வருடத்தில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. இன்று இங்கே தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல முயற்சியைக் கண்டுகொண்டு அதனை அடையாளப்படுத்தி மிகப் பெரிய அளவில் எடுத்து செல்கிறார். இது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்என்றார்.

நடிகர் மைம் கோபி, “உண்மையில் இப்படம் ஒரு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது . இயக்குநர் RDM மிக நுண்ணிய, இதயம் அதிரும் சம்பவத்தை அழுத்தமாகத் திரையில் தந்துள்ளார். அதில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து இரண்டாம் பகுதியில் முரட்டுத்தனமாக அவர் மாறுவதைக் கண்டு நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். ரவீனா மிக அழகானதொரு நடிப்பைத் தந்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும். இப்படத்தின் ஆக்ஷன் பெரிய அளவில் பேசப்படும். படத்தின் க்ளைமாக்ஸ் பலரையும் அதிரவைத்து, மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்என்றார்.

நாயகன் சுரேஷ் ரவி பேசியது, “நானும் இயக்குநர் RDM இருவரும் 8 வருடங்களாக இணைந்து படம் செய்ய வேண்டும் எனப் பேசிக் கொண்டிருந்தோம். இப்போது எங்கள் கனவு உண்மையாகியுள்ளது. எங்கள் படத்தை முன்வந்து வாங்கியதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. அவர் வெளியிட்ட பல படங்கள் தரமான கதையுடன், நல்ல பெயர் பெற்று வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் காவல்துறை உங்கள் நண்பன்படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றாது. காவல்துறை பற்றிய நல்லவற்றை பல படங்கள் சொல்லிய நிலையில் இப்படம் அதன் வேறொரு முகத்தைக் காட்டும். எல்லாத் துறையிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும் இதில் நாங்கள் காவல்துறையின் காட்டப்படாத பக்கத்தைக் காட்டியுள்ளோம்என்றார்.

BR Talkies சார்பில் பேசிய தயாரிப்பாளர் B. பாஸ்கரன், “முதன் முதலாக இயக்குநர் RDM என்னிடம் கதை கூறியபோது எனக்கு பல இடங்களில் அதிர்ச்சியாக இருந்தது. சில ஆச்சர்யங்களும் இருந்தது. இந்தப் படம், பார்ப்பவர்களைப் பெரியளவில் பாதிக்கும் குறிப்பாக இறுதிக்காட்சி பெரும் அதிர்வை தரும்என்றார்.

நடிகர் ராம்தாஸ், “இயக்குநர் RDM ஒரு மினி மணிரத்னம் எனலாம். மிகவும் தெளிவான சிந்தனையுடன், குறைந்த பட்ஜெட்டில் நேர்த்தியாக, எந்தவித சமரசமுமின்றி படம் எடுக்க கூடியவர். இப்படத்தில் பங்கு கொண்டது மிகவும் மகிழ்ச்சிஎன்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் மொத்த நிகழ்வையும் அழகாகத் தொகுத்து வழங்கினார். அவர், “இப்படத்தைத் தமிழின் மிக முக்கிய இயக்குநர்களுக்குத் திரையிட்டுக் காட்டினோம். அனைவரும் படத்தை வெகுவாக ரசித்ததோடு இப்படத்தைத் தங்கள் படம் போல் கருதி விளம்பரம்படுத்தப் போவதாகக் கூறினார்கள். இப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்என்றார். http://ithutamil.com/

அய்யப்பனும் கோஷியும் விமர்சனம்

அய்யப்பனும் கோஷியும் விமர்சனம்

மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என எழுத்தாளர் ஜி. நாகராஜன் ஒரு வரியில் சொன்னதை மூன்று மணி நேரத் திரைப்படமாகக் கண்முன்னால் விரிய வைத்திருக்கிறார் இயக்குநர் சச்சி. முன்னரே பிரித்வி, பிஜூ மேனன் கூட்டணியில் லட்சத்தீவின் பின்னணியில் அனார்க்கலி என்ற சுவாரஸ்யமான காதல் கதையைச் சொன்ன, ‘ட்ரைவிங் லைசென்ஸ்’ திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய அதே சச்சிதான் இவர்.

உண்மையில் இது இரண்டு மனிதர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு சார்ந்த போராட்டம் என்பதுபோல தோன்றினாலும் அதனூடே உண்மையில் அதிகாரம் என்பது எப்படி எந்தெந்த வகையில் யார் யாருக்காகவெல்லாம் வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் பூடகமாக உணர்த்திச் செல்கிறது என்பதனால்தான் இந்தத் திரைப்படம் முக்கியமானதாகிறது.

பொதுவாக இந்தத் திரைப்படத்தை கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் தன்முனைப்பு போராட்டமாக மட்டுமே பலரும் அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால் மூன்றுவிதமான போராட்டங்கள் இந்தப் படத்தின் மூலமாக வெளிப்படுகின்றன. கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் சண்டைதான் பிரதானம் என்றாலும், கோஷிக்கும் கோஷியின் தகப்பனான குரியனுக்கும் இடையில் நடக்கும் போராட்டமும் மிக முக்கியமானது. இந்த இரண்டு போராட்டங்களுக்கும் நடுவில் அதிகார வர்க்கத்திற்கும்அதற்கு வளைந்து போகாத மனிதனுக்கும் இடையில் நடக்கும் போராட்டமும் சொல்லப்பட்டிருக்கிறது.

இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஹவில்தார் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கோஷியினுடைய கதாபாத்திரம் ஊசலாடும் தன்மையோடு படைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தனது தந்தை செய்யும் தவறுகளுக்கும் தான் விலை கொடுக்க வேண்டிய நிலை வரும்போது கோஷியின் மனம் தடுமாறுகிறது. அதுவே ஐயப்பனுக்கு எதிரான போராட்டத்தில் ஆங்காங்கே அவனை நிலைகுலைய வைக்கிறது. இறங்கி வர நினைக்கலாமென எண்ணும்போதே சூழல்கள் மீண்டும் கோஷியை நியாயப்படுத்தத் தூண்டுகின்றன.

ஐயப்பனின் கதாபாத்திரம் கொஞ்சம் மங்கலாக இருக்கிறது. ஏனெனில் சில விஷயங்கள் பூடகமாகச் சொல்லப்பட்டு விடுகின்றன. உதாரணமாக ஐயப்பனுக்கு நடந்த திருமணம் குறித்த பின்னணி ஓர் அவசரகதியில் அளிக்கப்பட்டு அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஐயப்பன் தான் எடுக்கும் முடிவுகளில் மிகத் தெளிவானவனாகவே இருக்கிறான். தன் பழைய சுபாவங்களிலிருந்து மீண்டு நேர்மையான காவல் அதிகாரியாக வாழ்பவனாக இருக்கிறான் ஐயப்பன்.

இப்படி, கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் வரையறைகள் மிகச் சிறப்பாக செய்து இருப்பதாலேயே ஊசலாடும் ஒரு மனநிலை உள்ளவனுக்கும், தெளிவான சிந்தனை கொண்ட ஒரு காவல்துறை அதிகாரிக்குமான மோதல் என்பதுஇருக்கை நுனிவரை நம்மைக் கட்டிப் போட போதுமானதாக இருக்கிறது.

காவல்துறை உதவி ஆய்வாளராக இருக்கும் ஐயப்பனுக்கும் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் இருக்கும் ஐயப்பனுக்கும் இடையிலான வேறுபாடுதான் திரைக்கதையின் மையச் சரடு. இந்தச் சரட்டை மிகப் பலமானதாக உருக்குக் கம்பி போல உருவாக்கி இருப்பதால்தான் அதைச் சார்ந்த கிளைச் சம்பவங்களை அடுத்தடுத்துச் சொல்வதென்பது குறிப்பாக அதிகாரவர்க்கம் தனக்கு வேண்டியவர்களுக்கு எப்படி எல்லாம் வளைந்து நெளிந்து கொடுக்கிறது திரைக்கதை ஆசிரியரான சச்சிக்கு இயல்பாகக் கைவந்திருக்கிறது.

அடுத்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கும் நேர்மையான காவல் அதிகாரியான ஐயப்பன், முதலமைச்சரிடமிருந்து பதக்கம் பெறவிருக்கும் நிலையில், உயர் அதிகாரியின் கட்டளைக்காக வேலை நேரத்தில் செய்த பிழைக்காக தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்படுகிறான். ஓர் உதவி காவல் ஆய்வாளரின் நிலை பணத்திமிரும் குடிவெறியும் கொண்ட சராசரி குடிமகன் ஒருவனால் பந்தாடப்படும் போது அதை எதிர்கொள்ள அவன் எப்படி ஆயத்தம் ஆகிறான் என்பதும் இந்தக் கதையின் நோக்கமென்றாலும், இறுதியில் அந்த நேர்மையான அதிகாரிக்கு எதிராக எவன் செயல்பட்டானோ, அவனே இறங்கி வந்து அவன் மூலமாகவே மீண்டும் காவல்துறை அந்த உதவி ஆய்வாளருக்குச் சீருடையைத் திரும்ப அணிய வைக்கும் சூழல்தான் அமைகிறது என்பதுதான் மிகப்பெரிய நகைமுரண். ஆனால் அதுவேதான் இந்தத் தேசத்தின் நிலையும், கூட வசதியும் வாய்ப்புகளும் இருப்பவர்களுக்கு சட்டம் நீதி எல்லாம் பணத்தின் மூலமாக சம்பாதிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது என்பதாகவும் கூட இந்தக் கதையை நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்தப் படத்தின் மிக முக்கியமான விஷயமாக நான் கருதுவது இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர்களின் அபாரமான நடிப்பாற்றல்தான். எப்போதுமே நான் வியக்கக்கூடிய ஒரு விஷயமும் கூட. இரண்டு நாயகர்கள் இரண்டு கதாபாத்திரங்கள் இதில் யாருக்கு பலம் அதிகம் என்ற தன்முனைப்பு இல்லாமல் தங்கள் கதாபாத்திரங்களில் தாங்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலமாக மட்டுமே தங்களது திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற எண்ணமும் ஆற்றலும் உறுதியும் தன்னம்பிக்கையும் மலையாள நடிகர்களுக்கு இருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற படங்களும் பாத்திரங்களும் மலையாளத் திரைப்படங்களில் சாத்தியமாகிறது. பிஜு மேனனும் சரி, பிரித்வி ராஜனும் சரி அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பிஜு மேனன் இடைவேளைக்குப் பிறகு மதம் கொண்ட யானையின் சீற்றத்தோடு நடத்தும் அடாவடித்தனங்கள் அத்தனையும் சபாஷ் போட வைக்கின்றன. பிஜு மேனனின் அந்த சுனாமியின் முன் பிரித்வி நீச்சல் போட்டதே பெரிய விசயம்தான்.

ஐயப்பனின் மனைவியிடம் ஏகத்திற்கும் ஏச்சு வாங்கி கூனிக்குறுகி நிற்கும் பொழுதில் ஐயப்பன் கோஷியிடம் வந்து, “வயிறு நெறச்சு கிட்டியோ?” என்று கேட்கும்போது ஒரு அளவுக்குஎன்று பிரித்வி பம்மிப்பதுங்கும் காட்சி கொள்ளை அழகு (இப்படி ஒரு காட்சியில் எந்தத் தமிழ் முன்னணி நடிகரும் நடிக்க ஒப்புக்கொள்வார்களா என்பது வேறொரு கேள்வி). அந்த இடத்தில் கண்ணம்மாவாக நடித்திருக்கும் கௌரி நந்தாவின் வசன உச்சரிப்பும், ஆங்காரம் மிகுந்த உடல் மொழியும் வசனங்களும் வெகு கச்சிதம்.

வழக்கம்போலவே எந்த நடிகரும் சோடை போகவில்லை. குறிப்பாக பிரித்வியின் தந்தையாக வரும் இயக்குனர் ரஞ்சித் ஒரு ஆணாதிக்கவாதியான, பழம்பெருமை பேசக்கூடிய ஆணவ சாதிக்காரனைப் போல தன் பெருமை பேசிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு பழைய பூர்ஷ்வாத்தனத்தோடு நடக்கக்கூடிய பெரிய மனிதனின் உடல் மொழியை இயல்பாகக் கடத்தி இருக்கிறார். ஆய்வாளராக வரும் அனில் நெடுமங்காடு, காவலராக வரும் அனு மோகன் ஆகியோரும், பெண்காவலர் ஜெஸ்ஸியாக நடித்திருக்கும் தன்யாவும் தங்கள் பங்குகளைச் சிறப்புற செய்திருக்கிறார்கள்.

படத்தில் இயக்குநரான சச்சியே திரைக்கதையையும் அமைத்திருப்பது மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அதற்கு உற்ற துணையாக ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. அட்டப்பாடியில் இயற்கை வளம் சூழ்ந்த அத்தனை காட்சிகளையும் அழகுற உள்வாங்கியிருக்கிறது சுதீப்பின் கேமரா. கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகான சட்டகங்கள். குறிப்பாக, ஐயப்பன் ஒரு மரத்தினடியில் இருக்கும் பென்ச்சில் அமர்ந்திருக்கையில் ஓரமாகத் தூளியில் குழந்தை இருக்கும் அந்த ஒற்றைக் காட்சி.

அட்டப்பாடி என்பது ஆதிவாசிகள் பெருமளவில் வசிக்கும் பகுதி. அவர்களது நிலங்களைப் பெருமுதலாளிகள் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாராயம் கொடுத்து அவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால் அந்தப் பகுதியில் சாராயம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது. என்ற போதும் கூட இந்தப் பகுதியில் ஆதிவாசிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் கூட ஒரு ஆதிவாசியை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற செய்தியை பார்த்து நாம் பதறி இருக்கிறோம். ஆகவே அட்டப்பாடியின் பின்னணியில் நடக்கக்கூடிய இந்தக் கதையில் அட்டப்பாடி ஆதிவாசிகளின் மலையாளமும் தமிழும் கலந்த ஒரு வினோத மொழியில் அவர்கள் பாடுகின்ற நாட்டுப்புற பாடல்களை மிக அழகாகவும் செய்நேர்த்தியோடும் மிகச் சரியான இடங்களில் புகுத்தி இருப்பதன் மூலம் தனது பின்னணி இசைக்கு புதிய பரிமாணத்தை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய். இதுவரை கேட்டறியாத நஞ்சியம்மை என்ற ஆதிவாசிப் பெண்ணையே அவர் எழுதிய பாட்டை படத்தில் உபயோகப்படுத்தி இருப்பதன் மூலம் மிக முக்கியமான காட்சிகளில் அதன் தரத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர். மிகுந்த பாராட்டுக்குரிய செயல் இது.

மலையாள சினிமா ஏன் தனித்துவம் பெறுகிறது என்பதற்கு இத்திரைப்படத்தில் பல காட்சிகள் சான்று பகர்கின்றன. கண்ணம்மா காவல் நிலையத்தில் காவலர்களுடன் பேசுகின்ற காட்சியும் சரி, அதைப்போலவே ஐயப்பனும் கோஷியும் தனியாக வனப்பகுதியில் பேசிக்கொள்ளும் காட்சியும் சரி முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கின்றன. திரைப்படத்தில் பட்டுத்தெறித்தாற் போல் வருகின்ற வசனங்களில் கூர்மை மீண்டும் மீண்டும் நம்மை வியப்புக் கொள்ளவும், அதே நேரத்தில் வென்று வாய் பிளக்கவும் வைக்கின்றன.

மூன்று மணி நேரம் படம் என்பது மட்டுமே மிகப்பெரிய குறை என்று சிலர் அலுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மூன்று மணி நேரம் இருக்கையிலேயே சுவாரசியம் குறையாமல் நம்மைக் கட்டிப் போடுவது என்பது ஒரு மிகப்பெரிய கலை. ஆனால் படத்தில் ஒரு முக்கியமான குறை இருக்கிறது. உயர் அதிகாரி சொன்னார் என்பதற்காக, காவல் நிலையத்தில் வைத்தே ஐயப்பன் கோஷிக்காக மது ஊற்றிக் கொடுக்கும் போது, அதை கோஷி அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுக்கிறார். எதிரில் இருப்பவனைப் பற்றித் தெரிந்திருந்தும் ஐயப்பன் அஜாக்கிரதையாக அதைக் கவனிக்காமல் விட்டுவிடுவதுதான் அந்தக் குறை. ஆனால் அது இல்லாவிட்டால் மூன்று மணி நேர சுவாரஸ்யம் இல்லாமல் போயிருக்குமே!?

மசாலாப் படங்கள் என்றால் நான்கு பாடல்கள், ஐந்து சண்டை, பஞ்ச் டயலாக், அதிநாயகத் தன்மைகள் என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் மசாலா பட இயக்குநர்கள், ஒரு மசாலா படத்தையே எப்படி ரசிக்கும் விதமாக அழகுற மசாலா தூக்கலாக இல்லாமல் மிகச் சிறப்பாகத் தரமுடியும் என்பதை கற்றுக்கொள்ள இந்தத் திரைப்படம் அருமையானதொரு வாய்ப்பு.

ஆசிப் மீரான்

http://ithutamil.com/—————————————————————————————————————-