அன்பார்ந்த வாசகப்பெருமக்களே!

அன்பார்ந்த வாசகப்பெருமக்களே! வணக்கம்! இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்! உலகம் முழுவது கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டு ஊரடங்கில் இருந்துவரும் வேளையில் தேன்சிட்டு இவ்வுலகை  மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர இறைவனை பிரார்த்தித்துகொள்கிறது.

இந்த வைரஸ் நமக்கு கற்றுத்தந்த பாடங்கள் ஏராளம். ஒவ்வொரு பேரழ்ழிவின் போது நாம் படிக்கும் பாடங்கள் ஏராளம். அப்போது அதை பிரமாதப்படுத்துவதும் பின்னர் அதை கை கழுவிவிடுவதும் சகஜம். கை கழுவச்சொல்லும் இந்த வைரஸும் அப்படித்தான். இந்த இருமாத கால ஊரடங்கு நமக்கு கொடுத்திருக்கும் படிப்பினைகளை நாம் தொடர்ந்து கடைபிடிக்கப் போகிறோமா என்பதில்தான் நமது வருங்காலம் இருக்கிறது.

  தவறு என்பது தெரியாமல் செய்வது! தப்பு என்பது தெரிந்தே செய்வது! இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றும் மருத்துவர்களையும் சுகாதாரப்பணியாளர்களையும் தெய்வமாக வழிபட வேண்டிய நேரத்தில் அவர்கள் இறந்து போனால் இடுகாட்டில் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ இடம் கொடாது கொடுஞ்செயல்களை சிலர் செய்துவருவது கண்டிக்கத்தக்கது. ஒருசிலரின் இந்த பாதகமான செயல்களால் ஒட்டுமொத்த மனிதர்களுமே மனிதம் மறந்தவராக சித்தரிக்கப்படுவது வருந்தக்கூடியது.

ஊடகங்களும் திரித்துக்கூறுவதும் பழித்து பேசுவதுமான போக்குகளை கைவிடவேண்டும். எதிர்கட்சிகளும் ஆளும் கட்சியுடன் இணைந்து இந்த வைரஸ்பாதிப்பில் இருந்து தமிழகம் மீள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  .தமிழகவரலாற்றில் இது போன்ற கடும் நிகழ்வுகள் நிறைய முறை நடந்திருக்கலாம். அதிலிருந்து மீண்டு வந்த்து போல தமிழகம் புதிய எழுச்சியுடன் மலர்ந்து வரும் என்று நம்புவோம்.

தேன்சிட்டு வழக்கம்போல பழமையும் புதுமையும் கலந்து உங்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. நகைச்சுவை சிறுகதைப்போட்டி குறித்த அறிவிப்பும் வந்துள்ளது. உங்கள் பங்களிப்பை படைப்புகளாகவும் விமர்சன்ங்களாகவும் வழங்குங்கள்! தேன்சிட்டு சிறகடித்து உங்கள் மனதை மகிழ்விக்கும். நன்றி!  அன்புடன். நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. ஆசிரியர்,